வனத்தை இருகூறாய் பிளக்கின்றன
இரும்புமன இணைகோடுகள்
கூவென ஒலிக்கும் இரயிலின்
ஊதல்சத்தம் சங்கொலியாகவே
முறசெவிகளில் எதிரொலிக்கிறது
வனமளந்த தூண்கள்
பதற்றத்தில் இருப்புப்பாதையில்
இடறித் தவிக்கின்றன
இடித்துத் தள்ளும்
இரயில் எஞ்சின்களின்
இதயம் என்றும் இரும்பாலானவை
விபத்து எண்ணிக்கை
புள்ளிவிவரங்களோடு
அன்றைய நாள் முடிகிறது
தாயை இழந்த குட்டி யானை
இருப்புப் பாதையை
கண்டு பிளிறி அலறுகிறது
இரயில் பயணிகள்
அற்புத தருணமென
சிலாகித்து
அவசரமாக அலைபேசியில்
புகைப்படமெடுத்துத் தள்ளுகிறார்கள்
வழக்கம்போல் இரயில்கள்
அவ்விடத்தைக் கடக்கின்றன
கூடுதலாக ஓர் எச்சரிக்கைப் பலகை தென்படுகிறது
யானை நடமாடும் பகுதி கவனமென
இரயிலுக்கு எச்சரிக்கத் தான்
யானைகளுக்கு எவருமில்லை

- பா.சிவகுமார்

 

Pin It