உலுக்கிப் பார்க்க உள்ளம் கொட்டுகிறது
காய்த்த மரமில்லை இது
கவிதை மரம்

*
மாட்டுக்கறியில் குமட்டும் முகம்
பீப் பிரியாணியில்
கமகமக்கிறது

*
பீகார்காரன் என்ன தமிழ்காரன் என்ன
டாஸ்மாக் சந்தில் எல்லாரும்
பீர்க்காரன்தான்

*
சாத்தானிடம் கேட்பதற்கு நிறைய
கடவுளிடம் சொல்வதற்கு ஒன்றுதான்
கட உள்

*
சிற்பம் கண்ட காகம்
தேடியது
அழகுப் பாறை எங்கே

*
குயில் கூவுகிறதாம்
எவன் சொன்னது
மரம் தாவுகிறது சப்தம்

*
பனைமர உச்சியில்
விசிறி இருக்கிறது
காற்றடிக்கையில் கவனி

*
தலையாட்டுகிறது வாலாட்டுகிறது
உற்றுப் பார்
காற்றைத் தாலாட்டுகிறது இலை

*
சுள்ளி பொறுக்கி வரும் அம்மா முகத்தில்
வெள்ளி முளைத்திருக்கிறது
சுடுசோறு நிச்சயம்

*
வேப்ப மர நிழலில்
இளைப்பாறும் தெப்ப குளமும்

*
தோகை விரிக்கிறது மயில்
மாற்றுத் துணிக்கு ஏங்குபவள் கண்களில்
புது சேலை விரிகிறது

- கவிஜி

Pin It