முகம் மாற முடியையும்
மாற்றுகிறேன்
சிரிப்பை அளவாக்கி
சிந்தனையைக் கூட்டுகிறது உடல்

தொப்பை சகஜம் தான்
சப்பை கட்டு கட்டுவதில்
சாகாவரம் சராசரிக்கு

சரகமபத சரீர சல்லாபம்
சாலச் சிறந்தும்
சாணை பிடிக்க அலைகிறது

முணுக்கென
வரும் கோபங்களையும்
அடிக்கடி கிழிக்கும் முகத்திரையையும்
அச்சத்தோடு விரும்புகிறேன்

அங்கிள் என அழகி ஒருத்தி
அசை போடும் சொற்களை
மாடு போல மென்று பார்க்கிறேன்

அர்த்த ராத்திரி படக்கென
விடிந்து விடும் உலகம்
அதன்பிறகு ஜன்னல் வழிதான்
சுழலும்

கை நகம் பரவாயில்லை
கால் நகம் வெட்ட
நாக்கு தொங்க இரைக்கும் மூச்சை
நாசூக்காய் இழுத்துக் கொள்கிறேன்

மற்றவர்க்கும் சேர்த்து கண்ணாடி பார்க்கிறேன்
மாற்று வழியில் ஆண்களுக்கும்தான்
பெண்களுக்கு மட்டுமா என்ன மெனோபஸ்

Pin It