பதினோரு நாட்களாய்
நடந்து கொண்டிருக்கிறேன்,
இன்னும் அடையவில்லை
எனது ஊரை...

செலவு செய்வதற்கு என்னிடம்
இப்போது நம்பிக்கையைத் தவிர,
வேறொன்றுமில்லை...

கடைசியாக உணவு உண்டும்,
பார்த்தும்,
இரண்டு நாட்கள் கடந்து
போயிருந்தது....

வரும் வழியில் ஏதேனும்
உணவு கிடைக்குமா என
எதிர்பார்த்து பார்த்து
கண்கள் சோர்ந்து போயிருந்தது...

தண்ணீரும் நம்பிக்கையும் மட்டும்,
என் மரணத்தை கொஞ்சம்
தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறது...

எனக்கென இப்போது ஆசைகள்
எதுவுமில்லை...

எனக்காய் உணவு உண்ணாமல்
உறங்காமல்...
எப்படியும் வந்துவிடுவேன் என
என் வருகைக்காக
நம்பிக்கையோடு காத்திருக்கும்,
என் குடும்பத்தினரிடம் இருந்து
பூக்கும் ஒரு புன்னகையை இறுதியாய்
பார்த்திட வேண்டும் என்பதைத் தவிர!

- மு.முபாரக்

Pin It