கடந்த 26ம் தேதி மான்கிபாத் நிகழ்ச்சியில் பேசிய மோடி “கொரோனா வைரசுக்கு எதிரான போரை மக்கள் ஏற்று நடத்தினால் மட்டுமே இந்த நாடு பெருந்தொற்று நோயிலிருந்து மீண்டு வர முடியும்” என்று கூறினார். அது உண்மைதான். ஆனால் பட்டினியில் கிடக்கும் ஒருவனிடம் எதையுமே தராமல் நிராயுதபாணியாய் சென்று போர் புரியுமாறு நிர்பந்திப்பது போர் தர்மத்திற்கே எதிரானதாகும். மக்கள் மோடியின் வாயில் இருந்து ஏதாவது நிவாரணம் தொடர்பான அறிவிப்பு வருமா என்று ஒவ்வொரு முறையும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். ஆனால் மோடியோ எந்தக் கொடும் சூழ்நிலையிலும் தன்னுடைய இயல்பை மாற்றிக் கொள்ளாமல் ஒவ்வொரு முறையும் வெறும் அறிவுரைகளை மட்டுமே வழங்கி மக்களின் செவிகளை புண்ணாக்குகின்றார்.
மக்கள் மோடியின் வெற்று அறிவுரைகளைக் கேட்கும் நிலையில் இன்று இல்லை. அவர்களது சிந்தனை முழுவதும் அடுத்த வேளை உணவைப் பற்றியதாகவே உள்ளது. ஆனால் மூன்று வேளையும் வயிறு புடைக்கத் தின்பவர்களுக்கு அதைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லை. அவர்களின் சிந்தனை வேறு ஒரு திசையில் பயணப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. அது கொரோனாவால் இழப்பை சந்தித்து இருக்கும் முதலாளிகளை எப்படி மீட்டெடுப்பது, வரிச்சலுகை தரலாமா, மானியம் தரலாமா, தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகப்படுத்தலாமா, குறைந்த பட்ச ஊதியத்தை குறைக்கலாமா, மக்கள் மீது இன்னும் வரி போடலாமா - இப்படித்தான் அவர்கள் காலை எழுந்தது முதல் இரவு படுக்கப் போகும் வரை சிந்திக்கின்றார்கள். அவர்களின் கனவுகளில் தோன்றும் முதலாளிகள் எப்போதும் பணத்தை கொட்டிக் கொண்டே இருக்கின்றார்கள்.
உலகில் தினமும், 82.10 கோடி பேர் இரவில் உணவு கிடைக்காமல் தூங்கச் செல்கின்றனர். அதாவது 10 பேரில் ஒருவர் பட்டினி கிடக்கின்றனர். இது இந்திய அளவில் 12 கோடி பேர் அதாவது 10 சதவீதம் பேர். தற்போது, கொரோனா பாதிப்பு காரணமாக, மேலும், 13.50 கோடி பேர் பட்டினி கிடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதன் மூலம், இந்தாண்டு இறுதிக்குள் பட்டினியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 26.50 கோடியாக உயரும் என்றும், அவர்களின் உயிரைக் காக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த மூன்று மாதங்களில், தினமும் 3 லட்சம் பேர் பட்டினியால் இறக்கும் நிலை ஏற்படும் என்றும் ஐ.நா.,வின் உலக உணவுத் திட்ட இயக்குனரகம் எச்சரித்துள்ளது.
யார் எச்சரித்தால் என்ன? உழைக்கும் வர்க்கம் (சூத்திரர்கள்) ஆண்டைகளைக் காப்பதற்காக உயிரைவிட வேண்டும் என்பதுதான் பார்ப்பனிய தர்மம். கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே என்று கடவுளே கீதையில் உபதேசிக்கின்றான். அதனால் இனி நாம் மோடியைக் கேள்வி கேட்க முடியாது. அவர் ஏற்கெனவே சங்பரிவாரத்தால் கடவுளாக்கப்பட்டு விட்டார். கோயில் கூட கட்டப்பட்டு விட்டது. அப்படிப்பட்ட கடவுள் எதைச் செய்தாலும் அதற்கு ஓர் அர்த்தம் இருக்கும். கோடிக்கணக்கான மக்களை உணவுக்கு வழி இல்லாமல் மோடி கடவுள் தவிக்க விட்டாலும் உணவு தானியக் கிடங்கில் தானியங்களை அழியவிட்டு வேடிக்கை பார்த்தாலும் அதில் ஒரு பொருள் பொதிந்த அர்த்தம் இருக்கும்.
தொலைக்காட்சியில் வந்த இரண்டு செய்திகள் மனதை பதைபதைக்கச் செய்வதாய் இருந்தது. ஒன்று திருச்சி காவிரிப் பாலத்தில் மக்கள் உணவுக்காக பிச்சைக்காரர்கள் போல வரிசையாக பாலம் நெடுகிலும் கையில் தட்டுடன் அமர்ந்திருந்த காட்சி; மற்றொன்று சில அம்மா உணவகங்களில் இலவச உணவை வாங்க கட்டுக்கடங்காமல் ஏழை மக்கள் நின்றிருந்த காட்சி. அவர்கள் யாரும் கொரோனாவை நினைத்துக் கவலைப்படவில்லை. கூட்டமாக நிற்பதால் நோய்த் தொற்று ஏற்படும் என்ற அச்சம் அவர்களது முகத்தில் சிறிது கூட இல்லை. மாறாக வயிற்றைக் கவ்வி இழுக்கும் பசியின் களைப்பு மட்டுமே அவர்களின் முகத்தில் தெரிந்தது.
பட்டினியின் வலியைப் பற்றி மூன்று வேளையும் தின்று கொழுக்கும் கும்பலால் ஒரு போதும் புரிந்து கொள்ள முடியாது. உணவில்லை என்றால் ஒரு மனிதனால் சிந்திக்கவும் செயல்படவும் முடியாது. மோடி போன்ற சங்கிகள் பெரிதும் மதிக்கும் வேதங்களும், உபநிடதங்களும் கூட அதைத்தான் சொல்கின்றன.
சாந்தோக்கிய உபநிடதத்தில் உத்தாலக ஆருவி குருகுலத்துக்கு வேதம் கற்கச் சென்று வந்த தன் மகனிடம் உலகத்தில் உள்ள எல்லையே இல்லாத பல்வேறு வகைப்பட்ட பொருள்கள், விஷயங்கள் ஆகிய அனைத்திற்கும் அடிப்படையாய் அமைந்துள்ள மூலாதாரத்தைப் பற்றிக் கேட்கின்றார். ஆனால் மகன் சுவேதகேதுவுக்கு அதைப் பற்றி குருகுலத்தில் எதுவும் சொல்லித் தரப்படவில்லை. உத்தாலக ஆருவி தன் மகனிடம் உணவின் வெளிப்பாடே மனம் என்கின்றார். ஆனால் சுவேதகேதுவால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே அதைப் பற்றி மேலும் விளக்கும்படி கேட்கின்றார். அதனால் அதை ஒரு செய்முறை விளக்கமாக மகனுக்குப் புரிய வைக்க முயற்சிக்கின்றார். நல்ல ஆரோக்கிய நிலையில் ஒருவனின் மனத்திற்குப் பதினாறு பகுதிகள் இருப்பதாக வேதாந்தம் கூறுகிறது. ஒருவன் பதினைந்து நாட்கள் உண்ணாமாலோ, நீர் பருகாமலோ இருந்தால் இறந்து விடுவான். உண்ணாமல் இருந்தாலும், தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தால் அவன் பிழைத்திருப்பான். எனவே உத்தாலகர் தன் மகன் சுவேதகேதுவை அழைத்து "அன்பு மகனே, நீ பதினைந்து நாட்களுக்கு எதுவும் உண்ணாதே; ஆனால் விரும்பிய அளவு தண்ணீர் குடி" என்கின்றார். சுவேதகேதுவும் பதினைந்து நாட்களுக்கு எதுவும் உண்ணவில்லை. பின்னர் அவன் தந்தையை அணுகி "தந்தையே, நான் எதனை ஓத வேண்டும்?" என்று கேட்டான். அவர் ரிக், யாஜூர், சாம மந்திரங்களை ஓத வேண்டும் என்கின்றார். ஆனால் சுவதகேது "என்னால் எதையும் நினைவு கூர இயலவில்லை" என்று பதிலளித்தான்.
உத்தாலகர் சுவேதகேதுவிடம் "ஒரு பெருநெருப்பில் மின்மிப்பூச்சியின் அளவிலேயான ஒரு கனல் மட்டுமே எஞ்சி இருக்குமானால், அந்தக் கனலால் அதைவிடப் பெரிய எதையும் எரிக்க இயலாது. நீ பதினைந்து நாட்களுக்கு எதுவுமே உண்ணாததால் உனது மனத்தின் பதினாறு பகுதிகளில் ஒரு பகுதி மட்டுமே இப்போது எஞ்சியுள்ளது. அதனால்தான் உன்னால் வேதங்களை நினைவுகூர இயலவில்லை. இனி போய் சாப்பிடு; நான் கூறுவதன் பொருளை அப்போது புரிந்து கொள்வாய்" என்கின்றார்.
உத்தாலகர் கூறியதை ஏற்றுக்கொண்டு சுவேதகேது சாப்பிட்டான். அதன் பிறகு உத்தாலகர் அவனிடம் எதை எல்லாம் கேட்டாரோ, அனைத்திற்கும் அவன் பதில் அளித்தான். உத்தாலகர், "அன்பு மகனே, நீ பதினைந்து நாட்கள் எதுவும் உண்ணாததால் உனது மனத்தின் பதினாறு பகுதிகளில் ஒரு பகுதி மட்டுமே எஞ்சியது. அதன் காரணமாக உன்னால் வேதங்களை நினைவு கூர இயலவில்லை. மீண்டும் உணவை உண்டபோது, அந்த ஒரு பகுதி வலுவூட்டப் பெற்றது. அதனால் இப்போது உன்னால் வேதங்களை நினைவுகூர முடிகிறது. இனியவனே, மனம் உணவைச் சார்ந்தது, பிராணன் தண்ணீரைச் சார்ந்தது, வாக்கு அக்கினியைச் சார்ந்தது." உத்தாலகர் கூறியதன் பொருளை சுவேதகேது அறிந்து கொண்டான்.(சாந்தோக்கிய உபநிஷதம்- அத்தியாயம் ஆறு ப.எண்: 477-512-வெளியீடு: ஸ்ரீராமகிருஷ்ண மடம்).
உபநிடதங்களில் மட்டுமல்ல உபநிடதங்களுக்கு முந்திய வேதத்தில் கூட உணவை போற்றிப் பாடும் பாடல்கள் இருக்கின்றன. ரிக் வேதத்தில் உணவைப் புகழும் ஒரு சிறு பகுதி “சுவையுள்ள உணவே, தேனாய் இனிக்கும் உணவே, உன்னை நாங்கள் வரவேற்கிறோம். எங்களைக் காக்க ஒன்றாக ஆகுக நீ. எங்களிடம் வருக. எங்களுக்கு நலம் தந்து உதவும் உணவே, மகிழ்வின் பிறப்பிடமே, அனைவராலும் நன்கு மரியாதை செய்யப்படுபவர்களின் நண்பா, பகையே இல்லாதவனே, உணவே, உன்னுடைய நறுமணம் காற்று விண்வெளி மூலமாகப் பரவுவது போல் எல்லா இடங்களிலும் வியாபித்துள்ளது. உன்னை விநியோகிப்பவர்கள் இனிய உணவே உன்னையும் உன் சாரமான சாறுகளையும் பரிமாறுகிறவர்கள் உன்னைப் போல நீளமான கழுத்துக்களுடன் வளர்கின்றனர். பலம் படைத்த தேவதைகளின் மனம், உணவே உன்னிடத்தில் உன்மீது பதிந்துள்ளது - மலையின் தொடர்புள்ள செல்வம் எல்லாம் உன்னையே வந்தடைந்தன. இனிய உணவே எங்கள் துதியைக் கேள் - நாங்கள் உண்பதற்கு அடையத்தக்கதாக இரு. ஜலங்கள் மற்றும் மரம் செடி கொடிகளின் செழுமையை நாங்கள் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறோம்; ஆதலால் உடம்பே நீ கொழுத்து வளம் பெறு; நாங்கள் சோமச் சாற்றைக் குடித்துக் களிக்கிறோம்; பாலுடனும் தானியத்துடனும் கலந்து அதைக் குடிக்கிறோம்; ஆதலால் எங்கள் உடம்பே நீ கொழுத்து வளம் பெறு” என்று உணவின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கின்றது.
ஆனால் தன்னை இந்து என்று பெருமையாக சொல்லிக் கொள்ளும் சங்கிகள்தான் இன்று இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்களை பட்டினி போட்டு கொல்வதற்குத் துணை நிற்கின்றார்கள். ஆனால் இதற்காகவெல்லாம் அவர்கள் கூச்சப்படுவதோ குற்ற உணர்வு கொள்வதோ கிடையாது. அதனால்தான் மோடி போன்றவர்களால் மான்கிபாத் போன்ற நிகழ்ச்சிகளை கூச்சமில்லாமல் பேச முடிகின்றது. மக்கள் ரொட்டி இல்லாமல் பசியால் வாடுகிறார்கள் என்ற தகவலை கேள்விப்பட்ட பிரெஞ்சு ராணி மேரி அன்டோனியெட், “ரொட்டி இல்லையென்றால் என்ன? அவர்களை கேக் தின்னச் சொல்லுங்கள்” என்று ஆணவமாகச் சொன்னது போல பட்டினி கிடக்கும் மக்களைப் பார்த்து போரை ஏற்று நடத்தச் சொல்கின்றார். மக்களுக்கு உணவளிக்க முயலாமல் "ஏழைகளுக்கு உணவு, மருந்துகள் வழங்கி பலரும் உதவுவது ஒரு மகா யாகத்துக்கு ஒப்பானதாகும்” என்கின்றார்.
நாடு முழுவதும் மக்களுக்குத் தரமான மருத்துவ வசதியை செய்து தர நிதி ஒதுக்காமல் அரசு மருத்துவமனைகளை எல்லாம் சிதைத்துவிட்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பாரம்பரிய யோகா, ஆயுர்வேதம் போன்றவற்றைப் பரிந்துரைக்கின்றார். மனித விழுமியங்கள் எதுவும் அற்ற நபர்களால் நாம் ஆளப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். சங்கிகள் வேண்டுமானால் மாட்டு மூத்திரத்தைக் குடித்து, சாணியைத் தின்று உயிர் வாழ்ந்து விடுவார்கள். ஆனால் உழைத்து வாழும் சாமானிய மக்களுக்கு குறைந்த பட்சம் அவர்களை உயிரோடு வைத்திருக்க உணவு அத்தியாவசியமாகும். உணவைப் போற்றி, உணவைக் கடவுளாக நினைத்த அவர்களின் முன்னோர்களின் வார்த்தைகளைக் கூட இந்த வீர இந்துக்கள் இன்று மதிப்பதாய் இல்லை.
- செ.கார்கி