என்னைப் பற்றித் தான் உனக்குத் தெரியுமே..... நான் கால்க்குலேடிவ்...!
எத்தனை கால்க்குலேடிவ் என்றால்......நீ முத்தமிடும் போது கூட அதை எண்ணிக் கொண்டிருக்கும் அளவுக்கு. மலை ஏறும் எறும்பின் பித்து மனதை நீ உள்ளங்கையில் சுருட்டி வைத்துக் கொண்டு பூச்சாண்டி காட்டுவதை மற்றுமோர் தினமும் வேண்டி இருக்கிறேன்.
பனி பெய்யும் முன்னிரவுக்கு முத்தம் மட்டும் போதும். கடும் பனி பெய்யும் பின்னிரவுக்கு; இப்படித்தான், என் வாயைப் பிடுங்கிக் கொண்டே இருக்கும் உன் பார்வை. என் போர்வையை சுருட்டி அடி வயிற்றில் போட்டு படுத்துக் கொள்ளும் உன்னை முன்பெல்லாம் அனாயசமாக தூக்கி விடும் எனக்கு இப்போதெல்லாம் சற்றே மூச்சு வாங்குகிறது. காதலுக்கும் வயதாகிறது போல. நம் வயதெல்லாம் காதல் தானே பெண்மானே. மானென்றால் முன்பெல்லாம் துள்ளுவாய். இப்போதெல்லாம் கிள்ளுகிறாய். கிள்ளுவதும் துள்ளுவதும் மெல்லுவதும் அள்ளுவதும் கொடுங்கோல் கட்டில் ஆட்சி. இறுதியில் கொல்லுவதற்கும் கட்டிலே சாட்சி. கால் கொலுசின் சப்தங்களைக் கொண்டுதான் உன் பூனை நடை நடுராத்திற்கு இசை கூட்டும். எப்போதும் பருக இதழ் தரும் உனக்கு தொக்கி நிற்கும் கூந்தலை நானாகவே ஒதுக்க வேண்டும் என்ற கள்ளத்தனம் பூக்கள் நட்டது போல மொட்டு விட்டு நிற்கும். புறமுதுகை காட்டிக் கொண்டு, ' நீ கிறுக்கு' என்பதெல்லாம் எந்தவகையில் சேர்த்தி.
'ஆட்டோகிராப் போடு' என்று நீ காட்டும் இடமெல்லாம் அதகளம். காதலுக்கு வெட்கம் நாணம் அச்சம் எதுவும் இலை. மச்சம் மட்டுமே.
நீ மீசை திருகும் போதெல்லாம் எனக்கு தெரியும் அது ஆசை திருகி விடும் டெக்னிக். பேசிக் கொண்டிருக்கும் போதே படக்கென்று கண்ணடிக்கும் வரவேற்புரையை யாருக்கும் தெரியாமல் நிகழ்த்தி விடும் கைங்காரி, உன்னைத்தான் சுவாசித்துக் கொண்டிருக்கிறேன். இத்தனை பெரும்பாடு என்று தெரிந்திருந்தால் இந்தக் காதலை ஒரு போதும் நெருங்கி இருக்க மாட்டேன். அத்தனையும் குரும்பாட்டு ருசி எனும் போது முன்னமே நெருங்கி இருக்கலாம் என்ற வாக்கியம் முந்திக் கொண்டு மூளையில் உன்னை சமைக்கிறது.
வாசல் வரை வந்து விடும் உன் ஏக்கத்தை நான் அண்ணாச்சி கடையிலேயே கண்டறிவேன். மோப்பம் பிடிக்கும் திறமையை உன் முன் வயிறு தாண்டுகையில் கற்றுக் கொடுத்தவள் நீ தானே.
எல்லாமே மாயை என்று சொல்லி ஜன்னலையும் திறந்து விடும் கூந்தல்காரி உனக்கு என்னிடம் மறைக்க ஒன்றுமேயில்லை என்பதை நான் அறிவேன். நான் மட்டுமே அறிவேன். படக்கென்று எழுந்து, "எஏன்ன் சிலுக்கு சட்டை... நீ வைட்ட்டுக்கட்டை" என்று தொப்பையை ஆட்டிக் கொண்டு நீ ஆடுவதெல்லாம்... வெறித்தனம் ஏற்றும் உச்சம். "தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு" என்று கிசுகிசுக்கையில்..."ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்" என்று கெட்டவார்த்தையை சத்தமிட்டு சொல்லிவிட்டு வாய் மூடி சிரிக்கையில்... "நாளைக்கு நான் ஆபீஸ்க்கு லீவு" என்று குறுஞ்செய்தி தட்டத் தோன்றும்.
இருவருக்கும் கவிதை பிடிக்கும்.... அது இயல்பானது. இருவருக்கும்... கவிதையை எழுதாமல் இருக்கவும் பிடிக்கும் என்பது தான் கண்ணாடி முட்டிக் கொண்டு நின்று எட்டிப் பார்க்கும் காலை நேர தீப்படிக்கும் உரசல். இட்லி பிட்டு வாய்க்குள் போடுகையில் எல்லாம் கன்னமும் கொஞ்சம் பிடுங்கி தின்னும் கான்னிபல் நான். 'இதை, இதையும் தின்னு' என்று காது மடல் காட்டும் உனக்கு எப்போதாவது காதல் மடல் எழுத வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். குடுகுடுப்பைக்காரன் நம்ம வீதிக்கே நல்ல காலம் பொறந்திருச்சு என்று சொல்லி போவதெல்லாம் உன்னையே சாரும். சாமி வீதி வலம் வருகையில் எல்லாம் உன்னால் பேய் பிடித்து போவதெல்லாம் காதல் கணக்கில் சேராதவை.
எப்போதாவது தான் அழுவாய். அப்போதெல்லாம் அழ விட்டு வேடிக்கை பார்ப்பது நன்றாக இருக்கும். சிறு பிள்ளையாக உதடு சுழித்து மூஞ்சி வீங்கி வந்து கட்டிக் கொண்டு மடி சாயும் அற்புத வேளை அதன் பின் கிடைக்கும் எனக்கு. சற்று நேரத்துக்கு கடவுளாகும் தருணம் அது. உன்னை மடியில் கிடத்தி தேத்துகையில் தேவதூதன் கெட் அப் என் மனதுக்குள். நுரை ததும்ப துவைப்பது ஒரு கலை. புறங்கை கொண்டு நெற்றி துடைப்பது பெருங்கலை. உனக்கு வாய்த்திருக்கிறது. மஞ்சள் பூசி பொட்டிட்டு மல்லிகை சூடி நீ வரும் நாளில் தான் வெள்ளிக்கிழமை பூக்கும் என்பது என் காலக்கணக்கு. நீ கோலமிடுவதும் அப்படித்தான். யோகமிடுவது போல.
"இந்தப்பூவுக்கு அந்த பேர்... அந்தப் பூவுக்கு இந்த பேர்..." நீ உளறிக் கொண்டே வருகையில்... உள்ளார உல்லாலா ரஜினி பாட்டு... ராட்சசன் இசையில் பியானோ வாசிக்கும். ரட்சிப்பு என்னவோ எனக்கு தான். எல்லாக் குடைகளையும் கண் சிமிட்டி மடக்கி விடும் சீர் மழை நீ. எல்லா மழைத்துளியையும் மார்போடு உரிந்துக் கொள்ளும் சிலை போல நீ. நீ சிணுங்குகையில் எல்லாம் தொட்டாசிணுங்கி வளர்க்கிறேன். நீ என்னை இணுங்குகையில் எல்லாம் தொட்டால் பூ மலரும் உணர்கிறேன். போகிற போக்கில் காலை சிமிட்டி விடும் உனக்கு இசைக்கத் தெரியாது என்றெல்லாம் இனியும் சொல்லாதே. அடித் தொண்டையில் குளோப் ஜாமுன் விழுங்கும் வித்தைக்கு மொழி ஏது...!
உன்னை ஒட்டாமல் ஒட்டும் பொட்டுக்களோடு நகர்வலம் வருமென் சட்டைக்குள் தான் நானும் இருக்கிறேன்...நம்பு...! உன் அன்புக்குள் தான் என் ஆதி வாசமும் இருக்கிறது.
- கவிஜி