woman weepingஎதிர்ப்பைக் காட்டாதே!
கண்டும் காணாதது போல்..
எல்லாவற்றையும்
கடந்து போகச் சொல்கிறாய்!

உனக்குத் தெரியுமா?
எத்தனையோ முறை
தலைகுனிந்து
கூனிக் குறுகிப் போயிருக்கிறேனென்று...

அலுவல் நிமித்தமாய்
தாமதமாய் வீடு நுழையும்
என்னை வினயமாய்
கேள்வி தொடுக்கும் பார்வையில்
வெப்பந் தாளாது கருகிப்போனேன்

ஆனால்
நண்பனின் பதவி உயர்வுக்கென
பார்ட்டி போய்க் குடித்து
தள்ளாடி தலை தொங்கி
வீடு வந்து சேர்ந்தாய்..

பிள்ளைகளின் கண்மறைத்து
படுக்கையில் கிடத்தி
வாய் பொத்தியழுதது
தெரிய வாய்ப்பில்லைதான்!

எதுவும் நடக்காதது போல்
மறுநாள் நீ
நடந்து கொண்டதுவும்
நெஞ்சில் கூரறுக்கத்தான்
செய்கிறது.

தாள முடியா
வயிற்றுவலித் தினத்தில்
வலுக்கட்டாயமாய்
வெளியில் அழைப்பாய்.

வலி மறைத்து
போலிப் புன்னகையோடு
புறப்பட்டுவிடுவேன்

வலியை விடக்
கொடியது
உன் வார்த்தைகள்
என்பதால்..

கோபம் குறைத்தேன்
வேகம் மறைத்தேன்
எதிர்ப்பைத் தவிர்த்தேன்
எதற்கும் பயந்தேன்

மகிழ்ச்சியாய்ப் போகிறது
வாழ்க்கை!
மற்றவர்களின் பார்வையில்...

- இசைமலர்