man face 400விமரிசையாய் திருமணம்
நடைபெறும்
மண்டபம் முழுக்க மனிதர்கள்.

யார்முகமும் பார்க்க இயலாது
விதவிதமாய் முகமூடிகள்
முகத்திலொன்றும், நிறைய
கைகளிலும், பைகளிலும்..

"எப்படி இருக்கறீங்க..?
வீட்ல சௌக்கியமா.?"
பரஸ்பரம் முகமூடியும் முகமூடியும்
சம்பிரதாயமாய் விசாரித்துக் கொண்டன
பதில் குறித்தொரு
எந்த அக்கறையுமில்லாது..

"பையன் இப்ப என்ன பண்றான்?"
முகமூடியொன்றின்
போகிற போக்கிலான கேள்விக்கு,
முகமூடியைக் கழற்றிக்
கையிலெடுத்துக் கொண்டு
சோகம் சொட்ட ஏதேதோ
புலம்புகிறது முகமொன்று..

பதிலில் கவனமின்றி
பார்வையை மண்டபம் முழுக்கப்
பரவவிட்டவாறே "உம்" கொட்டுகிறது
கேள்வி தொடுத்த முகமூடி

முகமூடி முகமூடியோடு உரையாடியது
முகம் முகமூடியோடு உரையாடியது
மணமக்களை வாழ்த்தி,
மதியம் கை நனைத்துத்
தாம்பூலத்தோடு கிளம்பும் வரையிலும்
காணக் கிடைக்கவேயில்லை..
முகத்தோடு முகம் உரையாடியது...!

- ஆதியோகி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.