அது ஒரு கொடுங்கனவு

ஆரியப் பெருமைகளுக்கு 

உரிமை கொண்டாடிவரும்

பாரதத்து அரை வெள்ளையர்களுக்கு

அவ்வப்போது வரும் கொடுங்கனவு

அந்தக் கருப்புக் கனவில்

வால்கா நதி தீரத்து

“தூய” ஆர்யர்கள்

இவர்களைப் பார்த்து

“நீயெல்லாம் வெள்ளை ஆர்யனா?” என

ஏளனமாய் சிரிக்கின்றனர்

அவர்களது குதிரைகளும் கிண்டலாய் கனைக்கின்றன

பதைபதைத்து விழித்துக் கொள்ளும்

இவர்களின் ஆரிய மனங்கள்

சுய இரக்கத்துடன் புலம்பத் தொடங்குகின்றன

“இந்த கருப்பு நிறம்

இது நிறமல்ல அ நிறம்

நிறங்கள் அனைத்தையும் துறந்துவிட்ட

நிறத்தின் தந்தையாம் ஒளியையும்

வீசி எறிந்துவிட்ட

இந்த கருப்பு

இந்த அநிறம்

எங்களை என்ன பாடுபடுத்திவிட்டது”

“ஒரு வரலாற்றுக் கலப்பால்

இது

எமது பொன்னிற கேசத்தோடு

வெண் சருமத்தையும் 

பிடுங்கிக் கொண்டது

எம் வெள்ளைப் பெருமைக்கு 

கறைசேர்த்து விட்டது”

“எமது கூரிய ஆர்ய மூக்கும்

தனது துல்லியத்தை இழந்துவிட

அரை வெள்ளையராய் 

அநாகரிக உடற்கூறுகளோடு

பரிதவித்து நிற்கும்படி செய்துவிட்டது”

“அதோடு நிற்கவில்லை இந்த கருப்பு துயரம்

அது

எமது வெள்ளை கடவுளர்களையும்

எம்மிடமிருந்து பறித்து கொண்டது

காலத்தின் ஓட்டத்தில்

ஆர்ய இந்திரனும் பிரம்மனும்

அநாதைக் கடவுளர்களாகிவிட்டனர்

என்னதான் நீலம்பூசி மறைத்தாலும்

மாலனும் சிவனும்

கருப்புக் கடவுளர்கள்தானே

மண்டை ஓட்டை 

மாலையாய் சூடிக்கொண்ட

காளியும் கருப்பிதானே”

“எம் ஆர்ய வெண்மைக்கு நேர்ந்த அவமானம்

இவற்றோடு முடிந்துவிடவில்லை

ஆர்ய வேதத்தை 

மீண்டும் அரியணையேற்றிய சங்கரனும்

ஒரு தெற்கத்தி கருப்பன்

எமது மகத்தான சனாதன மதத்தின்

இரு கண்களான

சைவத்தின் நாயன்மாரும்

வைணவத்தின் ஆழ்வாரும்

பொல்லாத அநிறத்தின் குழந்தைகள்

இராமானுஜன் மத்வன்

எவனும் தூய வெள்ளையனல்ல

எமது மகத்தான அரசியல்ஞானி

சாணக்கியனும் அரைக் கருப்பன் என்கிறார்கள்”

“கருப்பு பிராமணர்கள்…

கருப்பு ஷத்திரியர்கள்…

கருப்பு வைசியர்கள்…

ஐயகோ!

எமது மரபணுவுக்குள்ளும் அல்லவா

புகுந்துவிட்டது இந்த கருப்பு”

“நாங்கள் அரை வெள்ளையரானது போதாதென்று

பாரத தேஷத்தில் 

முழுக் கருப்பர்களோடும்

அரைக் கருப்பர்களோடும்

சேர்ந்து வாழும்படி ஆகிவிட்டது

கருப்பால் நிரம்பி வழியும்

தென்னகத்தையும் எம் நாடென

சொல்லிக்கொள்ளும்படி ஆகிவிட்டது

………….  ………….  ………….

அரை வெள்ளையர்களின்

இந்த அவலமான மனப்புலம்பல்கள்

உங்களுக்குக் கேட்கவில்லையா?

நன்றாக கூர்ந்து கேளுங்கள்

தெற்கத்தி கருப்பர்களுடன் சேர்ந்து வாழுகின்ற 

வெள்ளைப் பெருந்தன்மை பற்றிய

தருண் விஜய்களின் கூற்றுகளின் பின்னே

இந்த புலம்பல்கள் மறைந்து கொண்டிருக்கின்றன

இவர்களின் 

ஆரிய பெருமிதங்களும்

வேதங்கள் பற்றிய கதையளப்புகளும்

பார்ப்பனிய மேலாண்மைக்கான எத்தனிப்புகள் மட்டுமல்ல

அவை

அரை வெள்ளையர்களின்

கருப்புக் குற்றவுணர்வை

மறக்கடிக்கும் போதை மருந்துகளும் கூட

அது சரி…

கருப்பு, வெளுப்பு, மஞ்சள், மாநிறமெனக்

கிளைவிட்டுப் பரந்துள்ள

மானுடத்தின் மூல வித்து

ஒரு ஆப்பிரிக்க கருப்பிதானே!

இந்த அறிவியல் உண்மையை

எதைக் கொண்டு மறைப்பார்கள்

இந்த அரை வெள்ளையர்கள்

(16.04.2017)

Pin It