kuthoosi gurusamy 268“கோர்ட்டார் அவர்களே! இதோ பிடித்திருக்கிறேனே இந்த நாய் தான் பிரதிவாதி. குப்பைத் தொட்டி அருகில் வந்து விழுந்த எச்சிக்கலை யருகே போய் அதையெடுத்து விரித்தேன்! 3-4 உருண்டைக்குமேல் சோறும், கொஞ்சம் காய்கறியும் இருந்தது. அந்தச் சமயத்தில் பிரதிவாதியாகிய இந்த நாய் என் பின்புறமாக வந்த என்னை முதுகில் கடித்தது. நான் திரும்பினேன். அந்தச் சமயத்தில் என் முன்பிருந்த எச்சிக்கலையை இழுத்துச் சோறு முழுவதையும் தின்று விட்டது. நான் உடனே இதைக் கைப்பிடியாகப் பிடித்துக் கொண்டு வந்து விட்டேன். எச்சில் இலைச்சோற்றைத் தின்கின்ற உரிமை மனிதப் பிறவியாகிய எனக்கா? அல்லது மிருகப் பிறவியாகிய இந்த நாய்க்கா? அப்படியாவது என்னைக் கடிக்காமல் கேட்டிருந்தால் ஏதோ கொஞ்சமாவது கொடுத் தாலும் கொடுத்திருப்பேனே! கடித்தது பலாத்காரமல்லவா? அரசியல் சட்டத்துக்கு விரோதமல்லவா? அதிகச் சம்பளம் கேட்ட சென்னை போலீஸ்காரனைத் தண்டித்தது போல், இந்த நாயையும் கடுமையாகத் தண்டிக்குமாறு கோர்ட்டாரவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.”

இது உயர்திரு. பிச்சைக்காரரான வாதியின் வேண்டுகோள்! இதைக்கேட்ட நீதிபதியானவர் ‘திருவாளர் நாய்’ அவர்களை நோக்கி “நீ என்ன சொல்கிறார்ய்? என்று கேட்டார்!

“ளொள்! ளொள்! ளொள்-ளொள் - ளொள்!!!”

என்று பதில் கூறினார், ஸ்ரீமான் நாயார்!

கோர்ட்டாரை அவமதித்ததாகக் கருதியும், தக்க சமாதானம் கூற முடியாமைக்காகவும், நாயார்தான் குற்றவாளி என்று கூறி, நான்கு பிரம்படி கொடுத்து விரட்டிவிட வேண்டுமென்று நீதிபதி தீர்ப்பளித்தார்!

அற்ப எச்சிக்கலைக்காக இந்த மாதிரி ஒரு வழக்கு நடந்தால் நீங்களெல்லாம் சிரிக்க மாட்டீர்களா? ஆனால் இதோ படியுங்கள்:-

ஸ்ரீரங்கத்திலே படுத்தருளியிருக்கின்ற (எழுந்து நின்றால் தானே எழுந்தருளியிருக்கின்ற என்று கூற வேண்டும்?) உலகளந்த பெருமாளான ஸ்ரீரங்கநாதருக்குத் தென்கலை சம்பிரதாயங்களைப் பின்பற்றுவதா, அல்லது வடகலை சம்பிரதாயங்களைப் பின்பற்றுவதா என்பது பற்றி, திருச்சியில் நடந்து வந்த வழக்கில் தீர்ப்புக் கூறி அடிஷனல் சப் ஜட்ஜ் ஹரி ஹரய்யர் என்பவர், “இனிமேல் தென்கலை சம்பிரதாயங்களைத் தான் பின்பற்ற வேண்டும்; அதற்கான ஆதாரங்கள் பலமாக இருக்கின்றன” என்று தீர்ப்பளித்து விட்டார்!

இக்கால இளைஞர்களிற் சிலர், “தென் கலையாவது, வடகலையாவது, ஒன்றுமே விளங்கவில்லையே!” என்று கூறலாம்.

எச்சிக்கலையைத் தவிர வேறு எந்தக் கலையும் எனக்குத் தெரியாது,” என்று திருவாளர் பிச்சைக்காரர் என்று கூறலாம்.

தென்கலை என்றால் ‘லு’ மார்க்! வடகலை என்றால் ‘ரு’ மார்க்! அவ்வளவுதான்! சலவைத் தொழிலாளர் ஒவ்வொருவர் வீட்டுத் துணிக்கும் தனித் தனிக் குறி போடுவதுபோல, மதத்தலைவர்கள் தங்களைச் சேர்ந்த மக்கள் கூட்டத்தின் நெற்றியில் போட்ட குறிதான் இது! கடவுளுக்கும் இந்தக் குறிக்கும் கடுகளவு சம்பந்தமும் கிடையாது!

உலகளந்த பெருமாள் நெற்றியில் எந்தக் கலையைத் தீட்டுவது என்பது பற்றி ஹரிஹரய்யர் தீர்ப்பு! (அட! மானங்கெட்ட மத பக்தர்களா!)

1947 இல் இது பற்றிய வழக்கு ஒன்று இங்கிலாந்திலிருந்த ப்ரீவி கவுன்ஸில் வரையில் சென்று, தென்கலையார் சார்பில் கிறிஸ்துமத வெள்ளை நீதிபதிகளின் தீர்ப்புக் கிடைத்திருக்கிறது என்பது ஸ்ரீ வைஷ்ணவாளுக்கு மட்டுமல்ல; ஸ்ரீ ரெங்கநாதருக்கே பெருமைக்குடைய தல்லவா?

திருச்சி வழக்கில் இரண்டு “மார்க்” காரர்கள் தரப்பிலும் இரண்டு ஜோடி அய்யங்கார் வக்கீல்கள் வாதாடியிருக்கின்றனர்!

இந்த வழக்கைப் பற்றிக் கேள்விப்படுகின்ற உயர்திருவாளர் - பிச்சைக்காரர் என்ன நினைப்பார்?

“சாஸ்திர வல்லுநர்களான உயர் ஜாதிக்காரர்கள் வெறும் நெற்றிக் குறிகளான தென்கலைக்கும், வட கலைக்கும் வழக்குத் தொடரும்போது, நான் ஏன் உயிருக்குயிரான உணவுப் பிரச்னையில் எச்சிக்கலை உரிமைக்காக அந்தப் பயல் நாயார் பேரில் வழக்குத் தொடரக் கூடாது?”- என்று திரு. பிச்சைக்காரர் நினைக்க மாட்டாரா?

குத்தூசி குருசாமி (24-1-1953)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It