man calmஎங்கிருந்தாவது வந்து விடும்
மாற்றி யோசித்த பொழுதுகளில்
ஆணி பிடுங்கி எறிந்து விட்டு
தலை சிலுப்பி புரவி மீதேறி
புயலாய்
வந்து கொண்டிருந்த
"ஏசு"வை ஒரு கணம்
"சே" போலாக்கி விட்டுப் பார்த்தது
எனது தோட்டாவின் தேவைகளும்
துப்பாக்கியின் காரணங்களும்
பாவங்களின் சம்பளமும்.......

*****

உடல் திருப்ப முடியாத
கரப்பான் பூச்சியாய்
கிடக்கிறது நவீனம்...
கை கால் ஆட்டிக் கொள்கிறோம்
நாம்...!

*****

எங்கு சுற்றினாலும்
வந்து சேரும் புள்ளிக்குள்
பெரும் மனம் ஒன்றை
வளர்த்துக் கொண்டிருக்கிறேன்
ஞாபகப் பெட்டிகளை
சுமந்து சுமந்து
மனப் பரப்பில் மீண்டும் ஒரு
மடிப்பு அல்லது பிறழ்வு எனக்குள்...
நேரத்துக்குத் தகுந்தாற்
போல் மாறிக் கொள்ளும்
மனுசோந்தி நான்....
தள்ளி நில்லுங்கள்
உங்களை பூசிக் கொள்ளவும்
சுழலுகிறது என் புள்ளி....

*****

ஓவியம் ரசிக்கையில்
உள்ளிருந்து கை வருகிறது
கால் வருகிறது
முகம் வருகிறது
நாக்கு வருகிறது
பிதுங்கிய கொங்கை வருகிறது
வெறும் சுவர் கூட
சில சமயங்களில்....

*****

- கவிஜி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.