lady eyeஅவள் ஒரு ராஜகுமாரி..
ஒன்றோடு ஒன்று பரீட்சயமில்லாத
கண்ணீர்த்துளிகள் சில உண்டு அவளிடம்..
காலங்கள் அத்தனையும் தனக்குச்
சொந்தமெனக் கொண்டிருந்த அவள்
தன் சேனைகளை மட்டும் இப்போது வரை
வசந்தங்களுக்குள் அனுமதித்ததில்லை..
முன்பொருமுறை கவனித்திருக்கிறேன்
கருநீலப் பருந்து ஒன்றினை
ஒத்திருக்கும் அவளது இடது கண்..
இரண்டாம் பிறை நள்ளிரவில்
தன் ஒற்றர்களுள் ஒருவனான 
முகமில்லாத துடுப்புக்காரன்
தந்து சென்றதென மாணிக்கக் கல்லையொத்த 
கல்லொன்றைக் காட்டியிருக்கிறாள் ஒரு முறை..
அவளின்னும் பாதுகாத்திருக்கும்
ஒற்றைத் துளையிட்ட விளக்கினொளி
மோதும்போது மட்டும் தான் 
அவளது கோட்டை வாயில் 
திறக்குமென்று எப்போதும் சொல்லுவாள்..
கடைசியாய் அவளது சிம்மாசனத்தில் 
அவள் அமர்ந்திருந்தபோது தான் 
அவளது சிரசு துண்டிக்கப்பட்டதெனச் சொன்னவளது 
கண்ணீர்த் துளிகள் சாம்பல் நிறப்
பாம்பு போல் நெளிந்துகொண்டிருந்தன.. அவை 
ஒன்றோடு ஒன்று பரீட்சயம் இல்லாதவை..
பின்பொரு நாளில் அவளறியாமல் கவனித்தேன் 
அவளது நகக்கண்களில் நெருப்புக் குறி இருந்தது..
ஆம்.. அவள் ஒரு ராஜகுமாரி..

- கிருத்திகா தாஸ்

More articles by கிருத்திகா தாஸ்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.