அவர்களாகவே
சேர்த்துக் கொண்டார்கள்
அவர்களாகவே
பேசிக் கொண்டார்கள்
தொடர்ந்து தீரா
தாகத்தோடு விவாதித்துக்
கொண்டார்கள்
தங்களை முன்னிறுத்த
எழுதிக் கொண்டேயிருந்தார்கள்
தேடித் தேடி அதற்கான
புகைப்படங்களை அப்பினார்கள்
மூளையின் கடைசி துணுக்கையும்
சொரண்டி கவிதை செய்தார்கள்
மாற்றி மாற்றி புகழ்ந்து
கொண்டு புத்தி பேதலிக்கவில்லை
என்றார்கள்...
படிப்பவர் குறைந்தும்
படைப்பவர் நிறைந்துமிருந்த
நகை முரணோடு சாடியும்
கொண்டார்கள்
பசி கொண்ட பாம்பின் ஊர்தலோடு
இரை செய்தபடியே
விழித்தே கிடந்தார்கள்
முச்சந்தியில் ஆடை உருவுவது
போல, சிறு பிழைக்கும்
வியாக்கியானம் பேசினார்கள்
பின்னொரு நாளில்
குரூப்புக்குள் குரூப் பிரிந்தது
என்றெண்ணி போட்ட
சண்டையில் சிலரை குத்துமதிப்பாக
வெளியேற்றினார்கள்
எந்த சாமி புண்ணியமோ
என்னையும்
அதில் சேர்த்திருந்தார்கள்.

- கவிஜி

Pin It