முகம் கூட காட்டாமல்
முகவரிகள் இல்லாமல்
தன் நகல்களைக் கொண்டே
அசல்களை ஆள முடிகிறது
எல்லாம் வல்ல
ஏகாதிபத்தியத்தால்..!

அவர்கள்
சென்று விட்டதாக
அறிவித்தார்கள்..!

அவர்களின் மொழி
நம்மை ஆட்சி செய்கிறது..!

அவர்களின்
உடை மட்டுமே
நமக்கு நாகரீகமானது..!

இறுதியில்
அவர்களின் மனமே
நமக்கு வாய்க்கப்பெற்றது..!

நிலத்தால்
ஆள வேண்டிய அவசியம்
அவர்களுக்கு இப்போது
நேரவில்லை..!

உயிர்களை அழிக்க..
உலக யுத்தம் கண்டுபிடித்த
இரசாயனங்களை எல்லாம்
நம் பயிர்களின் மீது தெளித்து
இப்போதும் அவர்கள்
படையெடுப்பை தொடர்கின்றனர்..!

விழித்துக் கொள்ள
வேண்டிய அவசியம்
நமக்கு இப்போதும்
நேரப்போவதில்லை..!

அவர்களின் கைகளால்
தயாரிக்கப்பட்ட மதுவே
நமக்கு போதையூட்டுகிறது..!

அவர்கள் தயாரித்த
தூக்க மாத்திரைகள்
விழுங்கிய பின்பே நாம்
உறங்கிப் போகிறோம்..!

அவர்களின்
மந்தையில் இருந்து
விலகிச் செல்ல
நாம் ஆடுகள் அல்ல..!
அவர்களால்
உருவாக்கப் பட்ட
குளோனிங் குழந்தைகள்..!

அவர்கள் உருவாக்கிய
வரலாற்றுப் பாதையில்
மிதமிஞ்சிய வேகத்தின்
விபத்துகள் நாம்..!

அவர்கள் அறிவித்த
முன்னேற்றம் என்பது
ஒரு வகை
அழிவின் சாட்சியம்..!

முறை தவறி
இடர்செய்யும்..
மூட மதங்களில் இருந்து
விழித்துக் கொண்டோம்
நம் இருப்பை
இல்லாமல் செய்யும்
அறிவியலின் கொடுங்கனவில்
அகப்பட்டுக் கொண்டோம்.!

ஒரு சிட்டுக்குருவியின்
மரணத்தின் வழியே
உயிரின் தொடர்ச்சியான
ஒரு கண்ணியை
தொலைத்துக் கொண்டிருக்கிறோம்..!

நதிகள் எப்போதும்
திரும்பிச் செல்வதில்லை..!
ஆனால் -
நாம் திரும்பிச்செல்லும்
காலம் வந்து விட்டது..!

முத்துக்களாய்
கொட்டிக்கிடக்கும்
நம் முன்னோர்களின்
வாழ்வின்
இரகசியங்கள் திறக்க
இயற்கைக்குள் திரும்புவோம்..!

நாம் புதைக்கப்பட இருக்கும்
பூமியின் கருப்பைக்குள்
இரசாயனங்கள் ஊற்றாமல்
பூக்கள் நிரம்பிய
ஆறுகளால்
ஈரப்படுத்துவோம்..!

நம்
வியர்வையின்
திசை பார்த்து
இப்புவியை நடத்துவோம்..!

- அமீர் அப்பாஸ்