கீற்றில் தேட...

வினைஞர் கூடி சுரண்டலுக் கெதிராய்
முனைந்து ஒன்றாய் எதிர்த்த போதெலாம்
திறனின்றி மடிந்தனர் சுரண்ட லாளர்
மறந்தனர் வினைஞர் கடமை தன்னில்
நன்கலம் தந்த தண்கமழ் தேறல்
பொன்செய் புனைகலத்து ஏந்தி நாளும்
ஒண்தொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து
உண்ட அரசர் போலவும் மேலும்
களியிலும் செருக்கிலும் மயங்கும் ஆள்வோர்
தெளிந்திடும் காலம் தெரியா நிலையில்
புவிவெப்ப உயர்வால் அழிந்திடும் உலகைக்
காத்திட வேண்டின் வினைஞரே திரள்வீர்
சமதர்மம் சமைக்கும் கடமை முடிப்போம்

(உழைக்கும் வர்க்கத்தினர் ஒற்றுமையுடன் கூடி சுரண்டலுக்கு எதிராகப் போராடிய போதெல்லாம் (அவர்களை) எதிர்க்கும் திறன் இல்லாமல் சுரண்டலாளர்கள் மடிந்து போயினர். இப்பொழுது உழைக்கும் வர்க்கத்தினர் (சுரண்டலுக்கு எதிராக ஒற்றுமையுடன் போராட வேண்டிய) கடமையை மறந்து உள்ளனர். (இந்நிலையில்) பல்வேறு இடங்களில் இருந்து கெண்டு வரப்பட்ட மதுவைப் பொற்கலன்களில் நாள்தோறும் இளமகளிர் வார்த்து ஊட்ட, உண்டு மகிழ்ந்த (பழங்காலத்து) அரசர்களைப் போலவும், அதைவிட அதிகமாகவும் களியாட்டங்களிலும் (தங்களை எதிர்க்கும் வலிமை யாருக்கும் இல்லை) என்ற செருக்கிலும் மயங்கிக் கிடக்கும் ஆளும் (சுரண்டல்) வர்க்கத்தினர், என்று தெளிவார்கள் என்று தெரியவில்லை. இந்நிலையில், புவி வெப்ப உயர்வால் அழிவுப் பாதையில் சென்று கொண்டு இருக்கும் உலகைக் காப்பாற்ற வேண்டும் என்றால், உழைக்கும் வர்க்கத்தினரே! ஒன்று திரளுங்கள். சோஷலிச சமுதாயத்தைக் கட்டி அமைக்கும் கடமையைச் செய்து முடிப்போம்.)

- இராமியா