*
உதிர்ந்து விடுதல் குறித்து
தலைக் குடைந்து நீண்ட இரவை
உள்ளங்கையில் கட்டைவிரல் கொண்டு தேய்த்தபடி
அழியும் ரேகை நூலில்
ஆளற்ற ஒரு கப்பல் நின்றது

காற்று எழுதிய நெளி அலைகள் நிரம்பிய நிழல் மணல் வெளி
ஒட்டகக் கால் தடங்கள் குழிந்து குழிந்து
மனக் கிடங்கு வரை இழுத்துப் போயிற்று

துருவேறிச் சிவந்த இரும்புச் சுவர்களோடு
நின்ற கப்பலின் உள்ளே வெற்றிடமிருக்கிறது

தவிர
நினைவை ரீங்கரிக்கும் ஓர் ஈயும்

அதன்
மென் கண்ணாடிச் சருகின் இறகை ஊடுருவும் வெயிலென
பரவுகிறேன் அப்பாலையெங்கும்
உதிரும் பொருட்டு

******

--இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

2 comments

2
சோமா
வெற்றிடங்கள் அவ்வளவு எளிதில் எல்லோருக்கும் கிட்டி விடுவதில்லை....அது ஒரு நீண்ட தவம்..பயிற்சி.... வெற்றிடங்களின் ஆழத்திற்குச் சென்று பார்த்தால் ஒன்றுமே புலப்படாது.....உணர ஆரம்பிப்பதில் அமைதி நம்மைச் சூழ்ந்து கொள்ளும்...சாவை வரவேற்போம் நம் அறைக்கு....
இளங்கோ
*
இது அசைவற்ற ஒரு பயணத்தின் குறியீடு.
பயணத்தின் வடிவமோ அதன் திசையோ உள் மற்றும் வெளியைப் பிணைக்கும் அவசியத்தோடு தனித்துக் கிடக்கிறது.

வெற்றிடத்தின் பரிமாணம் அளவற்றது. ஒரு சட்டகத்துக்குள் அடங்க மறுக்கும் அது. அதனால் தான் அதற்கு சூன்யம் என்றொரு பெயர் ஏறிற்று.

அது உள்ளும் வெளியும் ஒற்றைத் தன்மையைக் கொண்டிருக்கிறது.

ஒரு சின்னஞ்சிறிய முற்றுப் புள்ளியைப் போல் இருந்த பிரபஞ்சம் இன்னும் விரிந்துக் கொண்டே இருப்பதை அறிந்து கொண்ட தரிசனத்தின் விளைவு அவ்வெற்றிடம்.

உங்கள் கோணத்தையும் ரசித்தேன்.
மகிழ்ச்சி..

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.