என்னை
செதுக்கிய
பள்ளியை
நான்
ஒதுக்கிய
நாட்களே
அதிகம்.

கனவுகளோடு
வரவேற்ற
என் பள்ளியை
கண்ணீரோடு
சந்தித்த
நாட்களே
அதிகம்.

எனக்கான
சூரியன்
மாலை வரை
உதித்ததே இல்லை
என் அம்மாவின்
முகம் காணும்
வரையில்...

பள்ளியும்
ஒரு விதத்தில்
சிறை தான்
அதன் வாசத்தை
முதலில்
அனுபவிப்பவர்களுக்கு...

தவறு செய்தவர்கள்
திருந்தச் செல்வது
அந்தச் சிறை
தவறு செய்யாமலிருக்க
கற்றுத் தருவது
இந்தச் சிறை

தற்காலிக விடுதலை
தினமும் நிகழும்
இந்தச் சிறையில்
மகிழ்ச்சியை விட
மன வருத்தமே
மிஞ்சும்
நிரந்தர விடுதலையில்...

PRE KG,LKG,UKG
போன்ற
KG-க்களை
தூக்காமல்
முதல் வகுப்பிலிருந்து
பயணப்பட்ட
காலம் அது!

நாத்திகனான எனக்கு
பிள்ளையார்
சுழி போட்ட
கோயில் அது!

அழகிய தமிழை
அழகாக எழுதக்
கற்றுக் கொடுத்த
முதலாம் வகுப்பு
சரஸ்வதி டீச்சர்.

லால் பகதூரைப்
பற்றிப் பேசிய
மூன்றாம் வகுப்பின்
என் முதல்
பேச்சுப் போட்டி.

இறை வணக்கத்தில்
உறுதி மொழி
நிகழ்த்திய
பெருமிதம்

மதிய உணவை
மற்றவர்க்கு
கொடுத்து
சத்துணவை
சுவைத்த
சந்தோஷம்

நட்பை
அறிமுகம்
செய்த என்
முதல் நண்பன்
தேவேந்திரன்

நாட்களை
ஏக்கத்தோடு
எண்ணவைத்த
கடினமான
கணக்குப் பாடம்

ஐந்து வருடம்
என் மனதில்
என்றும்
நைந்து போகாத
அந்த ஐந்து
வருடம்

மழைக்குக் கூட
நான்
பள்ளி
ஒதுங்கியதில்லை

சிலரின்
கூற்று
இது

மழைக்கு
ஒதுங்குவதற்கு கூட
இன்று
எங்கள்
பள்ளியின்
நிலை இல்லை!

ஆங்கில வழிக்
கல்வியின்
அதி நவீன
கரையான்களால்
அரிக்கப்பட்டது
அன்னைத் தமிழ்
மட்டுமல்ல
எங்கள்
அழகிய
பள்ளியும் தான்..

அடையாளங்களை
இழந்து கொண்டிருக்கும்
என் பள்ளிக்கு
நினைவுகளை
அடையாளமாக்கும்
நெஞ்சில் பதிந்த
அந்த ஐந்து வருடம்.

Comments

4 comments

4
சோமா
மாத்தியோசி பெயர் கொண்டவரே....பெயரோடு நிறுத்து விடாமல் சற்று செயலிலும் ஈடுபட்டால் அனைவருக்கும் நல்லது. பள்ளிக்கல்வி முடிந்த பின்னால் எத்தனைமுறை நாம் நம் பள்ளிகளுக்குச் சென்றிருக்கிறோம். நம் பள்ளிக்கு நன்றிக்கடனாகவோ ஆசிரியருக்கு நன்றி தெரிவித்தோ நாம் எதுவும் செய்யாது அரசைக் குறைகூறுவது நல்லவிசயமல்ல...தங்களது பள்ளிக்கு ஏதாவது செய்ய இயலுமா பாருங்கள்...கவிதை நன்று.
AMV maathiyosi
உங்களின் ஆதங்கம் எனக்கும் உண்டு... நான் 1 முதல் 5 வரை படித்த பள்ளி அரசாங்க உதவியோடு நடைபெறும் தமிழ் வழிப்பள்ளி,பல சந்தர்ப்பங்களை உருவாக்கி பல முறை பள்ளியை சந்தித்திருக்கிறேன்....சிந்தனை செயலில் இல்லாது ஆதங்கமாக மட்டும் இருந்தால் இந்த கவிதை எனக்கு வந்திருக்காது.கரையான்களின் படையெடுப்புக்கு முன் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதே ஆதங்கம்...யாரும் தமிழ் வழிக்கல்வி படிக்க வராததால் பள்ளியை இடிக்கப் போவதாக செய்தி.
சோமா
நண்பரே..தங்களது தொடர்பு எண்ணைத் தாருங்கள். நாம் சேர்ந்து மற்ற பள்ளிகளுக்கு ஏதாவது செய்ய முடியுமா என பார்ப்போம். என்னுடைய எண் 9865390696.
AMV maathiyosi
நன்றி. தற்பொழுது அமெரிக்காவில் இருக்கிறேன்.இது என்னுடைய அலுவுலக நண்பர் அரவிந்தனின் தொடர்பு எண் 9944318091. தற்பொழுது கொரட்டூரிலுள்ள ஒரு மிகவும் பின் தங்கியுள்ள அமைப்பிற்கு அந்த குழந்த்தைகளின் கல்விக்கு திட்டம் வகுத்து பணியாற்ற தொடங்கியுள்ளோம். உங்கள் எண்ணையும் அவருக்கு தருகிறேன். மற்ற அரசாங்க பள்ளிகள் பற்றியும் முடிவு செய்யலாம்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.