அது விருப்பின் எதிர்மறை
என்று எனக்குத்தோணவில்லை.
அது விருப்பில் ஒரு நிலை
என்றே தோணுகிறது
இன்று வெறுத்து ஒதுக்கியது என்பது
என்றோ விரும்பியது மட்டுமே.

இதுவரை காணாததை,
அனுபவிக்காததை,கேட்டிராததை
என்னால் வெறுத்து
ஒதுக்க இயல்வதில்லை

விருப்பின் தெவிட்டு நிலையில்
வெறுப்பு தோன்றுகிறது
எனினும் நிலையெதிர் மாறாகத்
தோன்றுவதில்லை.

வெறுப்பின் உச்சத்தில் இருக்கும்போது
எனது முகம் இறுகி விடுவதை
என்னால் தவிர்க்க இயல்வதில்லை
முகத்தின் குருதி முழுதும் வடிந்து
தாடையை விட்டிறங்கி
நெஞ்சிலேயே தங்கி விடுகிறது

விருப்பிலிருந்து நழுவி
வெறுப்பிற்குச்செல்லுதல் என்பது
ஒரு பனிக்கட்டியின் மேல்
வழுக்கிச்செல்வதுபோல்
அவ்வளவு எளிதாயிருக்கிறது
அதுவே திரும்பும்போது
இருப்பதில்லை.

வாயின் வார்த்தைகளையும்
அது கட்டிப்போட்டு விடுகிறது.
என்னை அந்தச்செயலைத்தவிர
வேறேதையும் செய்ய விடாமல்
தடுத்தும் விடுகிறது.

அப்போதெல்லாம்
ஒரு அடிபட்ட மிருகத்தைப்போல
என்னை நான் உணர்கிறேன்
ஒரு குரல் எனக்குள் நடுக்கத்துடன்
களைப்புற்று ஹீனமாக ஒலிக்கிறது.

அதிலிருந்து விடுபட எத்தனிக்கும்
ஒவ்வொரு கணமும்
அதையும் விடவும் பல மடங்கு
வேகத்தில் என்னை
அது உள்ளிழுக்கிறது.
புதைமணல் போல.

என் கால்பாதங்களை
அருவிக்கொண்டு பின்
உடலெங்கும் பரவுகிறது ,
ஆகக்கடைசியில்
அது தன்னையே
மாய்க்கிறது எனக்குள்.

கீழிருந்து மேலாக
இந்தக்கவிதையை
சுவாசித்துக்கொண்டு சென்றால்
ஒருவேளை உங்களின்
அடிமனதில் இருக்கும்
விருப்பு வெளித்தெரியலாம்
நீங்கள் தொடர்ந்து
வெறுத்துக்கொண்டிருக்கும்
ஒரு விஷயத்தின் மேல்.

- சின்னப்பயல் ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

2 comments

2
கி.பிரபா
வெறுப்பு - இதில் "ற+உ=று" வல்லினம். விருப்பு - இதில் "ர+உ=ரு" இடையினம்.திடமான மனத்துடன் வெறுப்பை விருப்புடன் ஏற்றுக்கொள்ளுதலே சிறப்பு. யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல் - அதனின் அதனின் இலன் என வள்ளுவம் சுட்டியுள்ளது.அற்றது பற்றெனில் உற்றது வீடு." ஆசை" விருப்பத்தினால் ஆ..... என வாயைத் திறக்கின்றோம். அதனால் கேடு சூழும்போது தான் "சை" என வெறுக்கின்றோம்.ஒர் அளவு,எல்லை வைத்துக்கொண்டால் வாழும் வரை சிறப்பு.ஆசையால் வருவது இன்பம்;அதனால் பெருகுவது துன்பம்.ஆக ஆசையே துன்பத்திற்குக் காரணியாகும்.அண்ணன் இருக்க இளையோன் நாட்டை ஆளுவதா? சோதிடத்தைப் புறந்தள்ளிய இளங்கோ; அண்ணன் எவ்வழி அவ்வழி எனக்கும் எனப் பின் சென்ற பரதன் - விருப்பை விட்டுச் சென்ற பட்டியலில் பார்க்கலாம்.
Guest
நன்றி. என் மனதில் உள்ளதை வெளிப்படுதிய உணர்வு இக்கவிதையின் மூலம் கிடைத்தது.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.