கலைந்து கிடந்த
படுக்கையை செம்மைப்படுத்தி
மஞ்சளும், வெள்ளையுமாய்
அலரி மலர்கள் நிறைந்திருந்த
வேறொரு விரிப்பை விரித்திற்றேன்

அங்கொன்றும் இங்கொன்றுமாய்
வீசப்பட்டுக்கிடந்த உள்ளாடைகளை
கோதிப்புறக்கி கழுகிப் பிழிந்து
கொல்லைப்புறக் கொடியில் காயவிட்டேன்

யாரும் காணவில்லையென்பதை
பலமுறை உறுதிப்படுத்திட்டேன்
கடந்த சில மணிநேரங்களில்
நிகழ்ந்தவையெதையும் காண்பிக்கா
தடயங்களை ஒன்றொன்றாய் தேடியழித்தேன்

நறுமணம் கமழும் திரவியங்கள்
வாசனைவழியும் சவர்க்காரங்களால்
பூசிமெழுகி குளித்து
புத்துணர்வு பெற்றிட்டேன் நானும்

உணர்வுகள் மேலோங்கி அறிவு மயங்கி
நிகழ்ந்தது நெஞ்சை அறுக்கும்
துர்ப்பாக்கிய சம்பவமாயினும்,
எதுவித பிழையும் நிகழவில்லையென
என்னை நானே திடப்படுத்தினேன்
யாரும் எனைக் குற்றம் சொல்லொண்ணாதென
நெஞ்சை நிமிர்த்திக்கொண்டேன்

முழுதும் செப்பனிட்டு, அழகுபடுத்திய
அறைக்கதவை இழுத்துசாத்துகையில்
விசும்பல் கேட்டு அதிர்ந்தேன்
கழுவப்படாத என் ஆத்மா மீளாமல்
முனகிக் கொண்டிருந்தது இன்னும்….!!!

Comments

3 comments

3
Nalaaini
தரமான கவிதை. கடைசி வரிகள் நெஞ்சை பிசைவதாக உள்ளன. துணிச்சலான வெளிப்பாடு. படைப்பாளிக்கு எனது வாழ்த்துக்கள்.
Ashok Shanker
கவிதையின் முடிவு சிகரம்..... நல்லதொரு படைப்பாக்கம்.....
Guest
மனதில் ஏற்படும் குற்ற உணர்வுகளை இப்படியும் வெளிப்படுத்த முடியுமா ? கச்சிதம் ஆனால் பிரமாதம். படைப்பாளிக்கு என் பாராட்டுக்கள்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.