கடைத்திறக்கும் முன்

காத்திருப்பவர்களின்

அவஸ்தைகளைப் பொறுக்கமுடியாமல்

தள்ளாடுகிறது அத்தெரு.

இன்னமும் சில நிமிடங்களில்

நிகழக்கூடும்

போதையேறிவர்களின்

தடித்த சொற்களால்

மாதாகோவில் மணியின்

பேரோசைகளின் அதிர்வு

தனது மூச்சை நிறுத்திக்கொள்ள.

முப்பது ரூபாயைக் கையில் ஏந்தியவாறு

கூட்டுசேரக் காத்திருப்பவனின்

கண்களில் குடிகொண்டுள்ளது

போதையின் ருசி.

ஆனாலும்

மது ஊற்றப்பட்ட

பாத்திரங்கள் தள்ளாடுவதேயில்லை.

மது நாட்டுக்கும்

வீட்டுக்கும் கேடு.

சரி. . . அரசிற்கு?

2) பேரோசை நிகழ்த்திய மௌனம்

---------------------------------

மேய்ச்சலற்ற நிலங்களில்

படிந்துள்ள வெறுமையை

பசுமையென நினைத்து

சுவைக்கின்றன மாடுகள்.

நீர்ப்பரப்பில் அலையும்

விட்டிலின் அதிர்வுகளால்

விரியும் கோலவடிவம்

ஒரு பேரோசை நிகழ்த்திய

சுவடின்

மௌனத்தைப் போன்றுள்ளது.

யாருமற்ற வீதிகளில்

பயணிக்கும் மனிதனின்

உதடுகளிலிருந்து

உதிர்ந்து கொண்டிருக்கிறது

அவனுக்கான வார்த்தைகள்.

முன்னடி வைக்கும்

பாதங்களிடம் -நிழல்

ஏதோ ஒரு நாளில்

கேட்கக்கூடும்

என் தலையில் மிதிப்பதை

எப்போது நிறுத்தப்போகிறாய்?

- ப.கவிதா குமார்

Pin It