ஒரு சொல்லை
எடுத்து வைத்திருந்தேன்.
அர்த்தங்களில்
வியந்து திரிந்தேன்.
சொல்லி மகிழ்ந்திருக்கையில்
எனக்குள்
நிரம்பிக்கிடந்தது அந்த சொல்.
அதன்
உட்பொருள்
மெத்தப் பிடித்ததெனக்கு.
அதை ஒவ்வொரு விதமாய்
கேட்கையிலெல்லாமும்
வேறுவேறாய்த்
தோன்றலாயிற்று.
நாட்பட்ட பரிச்சயத்தில்
எப்போதெனத்
தெரியாப்போழ்தில்
சலிக்கத் தொடங்கியது
அந்த சொல்.
பிறகு தவிர்க்க நேர்ந்தது.
பின்னால்
ஏதெனப்புரியாத
வெறுப்பொன்று
அச்சொல்லின் மீது
படிந்திருந்தது.
அனாதி மௌனக்காலத்தில்
மெல்ல
அந்த சொல்லுக்கும்
எனக்குமான
நீளங்களின் குறுக்குவெட்டில்
அதை
மறந்துவிட்டதை
உறுதிசெய்தேன்.
என்னவெல்லாம்
நிகழ்த்திவிடுகிறது
ஒற்றைச் சொல்
என்று
வியந்த கணமொன்றில்
எனக்குள்
மீண்டும்
நுழைந்துவிட்டதை
அறியாமல்.
கீற்றில் தேட...
சொல்
- விவரங்கள்
- ஆத்மார்த்தி
- பிரிவு: கவிதைகள்