இதைத்தவிர
இங்கே எல்லாமே
வேறுதேவைகளுக்கே பயன்படுகிறது.

தெருவிலே
நிறுத்திய தலைவர் சிலைகூட
காக்கைகள் ஏறி ஆனந்தமாக
ஆய் போவதற்கும்...

மின்சாரம் இல்லாத காரணத்தினால்
எடிசன் கண்டுபிடித்த
மின் குமிழ் கூட
மண்எண்ணை விளக்காகவும்...

மின் கம்பிகள் என்பதிங்கே
தாய்மார்களின்
சலவைத்துணிகள் காய்வதற்கும்... 

தண்டவாளங்களிலே
இரயில் வந்து கனகாலமாயிற்று
என்பதினால்
கத்தி தீட்டுவதற்கும்
குந்தி இருந்து சலம் கழிக்கவுமே
பயன்படுகிறது.

தெருவிளக்குகள் கூட
குருவிகள் வந்து
கூடுகட்டுவதற்குத்தான்

இப்படி ஏதெதுக்கோ
செய்ததெல்லாம்
எதுக்கோ பயன்படுகையிலே

வயிறு முட்ட
வெடிமருந்துத் தீனியோடிருக்கும் .
பீரங்கிக் குழாய்கள் மட்டும்
இன்னும்
உயிர்களைத் தின்னுவதற்கே இங்கே
பயன்படுகிறது ....?

- மட்டுவில் ஞானக்குமாரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It