எனக்கு கிடைக்கும் என சொல்லப்பட்டவைகளை நம்பியிருந்தேன்
என்னிடம் செய்து தரப்பட்டவைகளினின்றும்
நடைமுறை சாத்தியமற்ற
ஒவ்வொரு சத்தியத்தையும்
மறுவுரு ஒன்றை ஏற்படுத்திப்
பூட்டிவைத்துக்கொள்கிறேன்.

பால்யத்திலிருந்து வெளியேறும் பொழுது
கால்படும் கருங்கற்பாதைகளில்
கவனமாக நடப்பதற்கான
ஒத்திகைகள் செய்திருந்தேன்
பாதங்களுக்கு அணிவிக்கப்பட்ட
புதிய பூட்சுகளோடு.

கபடவினயங்களின் தார்ச்சாலையில்
கற்றுக்கொண்டும்
கற்பித்துக்கொண்டும்
நடந்து திரும்பினோம்
ஒருவருக்கொருவர் பொய்மைகளைப்
பரிமாறிக் கொண்டே.

கனவுகளில் எனக்குத் தரப்பட்ட
வேதனை ரணத்தை
அதன் கடிவாயினின்றும் வழிந்தோடக்
கூடிய குருதிச்சீழை
துல்லியமான எடைக்குறிப்புகளுடனே
கொண்டுவருகிறேன்
ஆட்டக்களங்களுக்கு.

முதுகிலேயோ
மார்புகளின் மத்திமத்திலோ
அன்றி புட்டத்திலும் பாய்ச்சிவிடக்கூடும்
ஆவேசவாளொன்றை
சம்மதிக்கிறேன்.
என் கரங்களுக்கும்
எனதான வாள்முனைக்குமான
நீளத்தின் ஆரத்துக்குள்
அகப்படாமல் எனை வீழ்த்திக்கொள்ளலாம்
என்று ஆர்ப்பரித்தபடி.

களத்தில் வீழ்ந்து கிடக்கையிலோ
அல்லது
வென்று வீடு செல்லும் பாதையிலோ
இன்னமும் வியப்புறுகிறேன்
மயிலிறகு குட்டி
போடும்
என்ற நம்பிக்கையின்
முழு இரவினையும்
சிதைந்த
மறு நாள் காலையையும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.