தமிழின் தொல்பழம் இலக்கண நூலான தொல்காப்பியம் மாற்றுப் பாலியல் தொடர்பான செய்திகளைப் பதிவு செய்துள்ளது. உயர்திணை/அஃறிணை என பகுக்கும் முறை தொடங்கி மனித சமூக வாழ்நிலைகளை தொல்காப்பியம் நன்கு விளக்குகிறது. உயர்திணையில் மக்கள் சுட்டும் தொல்காப்பியம் இன்னும் மக்களுள் ஆண்/பெண் என இரண்டை சொல்கிறது. மனித படைப்புகளுள் ஆண்/பெண் என்கிற நிலை மட்டும் இல்லாது ஆண்/பெண் உடலுறுப்புகள் குறைந்தும் மாறுபட்டும் இருப்பதை நாம் காண்கின்றோம். கண்/காது/வாய்/கால் முதலான உறுப்புகள் குறைவுற்ற மனிதர்களை மாற்றுத் திறனாளிகள் என்று சொல்கிறோம். இதனை தொல்காப்பியர் சுட்டவில்லை. உற்பத்தி முறை சார்ந்து, ஆணாகவோ பெண்ணாகவே பிறந்து, குடும்ப அமைப்பில் வாழ்கிற ஆனால், குழந்தைப் பேறு பெறுதலுக்கு ஒத்துழைக்காத ஆண், பெண்களைத் தொல்காப்பியர் வகைப்படுத்துகிறார்.

பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்

ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்

தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்

இவ்வென அறியும் அந்தம்தமக்கு இலவே

உயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும்

(தொ.சொல்.நூ. 4)

என்கிற நூற்பாவில் ஆண்பால்/பெண்பால் என வகைப்படுத்துவதில் உயர்திணையாக தோற்றத்தில் இருக்கின்ற பெண்மை திரிந்த/ஆண்மை திரிந்த மக்களை இன்ன பால் இட்டு வழங்குவது என்பதனை விளக்குகிறார். இதற்கு உரை வகுத்தோர் பின்வருமாறு எழுதியுள்ளனர்.

இளம்பூரணர்

பேடி வந்தான், பேடி வந்தாள், பேடியர் வந்தார் என உயர்திணைப்பால் மூன்றனையும் குறிப்பிடுகிறார்.

நச்சினார்க்கினியர்

ஆண்மை திரிந்த என்பதிடைநிலை. இதன் பொருள் ஆண்பாற் குரியவாளுந்தன்மை, முற்பிறப்பிற்றான் செய்த தீவினையால் தன்னிடத் தில்லையான பெயர்ப் பொருள் என்க என்றது. நல்வினை செய்யாத பொருளென்றவாறு. இதற்குப் பெண்மை திரிதலும் உண்டேனும் ஆண்மை திரிதல் பெரும்பான்மை.

ஒருவன் உயர்திணையிடத்துப் பெண்பாற்குரிய அமைதித் தன்மையைக் கருதுதற்குக் காரணமான ஆண்பாற்குரிய வாளுந்தன்மை திரிந்த பெயர்ப்பொருளும் அலிஅன்று என்றற்கு பெண்மை சுட்டிய என்றார். பெண் அன்று என்றற்கு ஆண்மை திரிந்த என்றார்.

‘அந்தம் தமக்கில’ என்றதனான் நிரயப்பாலர், அலி, மகண்மா முதலியவற்றையும் இம்மூவிற்றின் என்பதனான் முடிக்க.

சேனாவரையர்

பேடி வந்தாள், பேடர் வந்தார், பேடியர் வந்தார் எனவும் அலிப்பெயரின் நீக்குதற்குப் பெண்மை சுட்டிய என்றும் மகடூஉப் பெயரின் நீக்குதற்கு ஆண்மை திரிந்த என்றும் கூறினார்.

தெய்வச் சிலையார்

ஆண்மை திரிந்த பெயராவது பேடி, அச்சந்தினாண்மையிற் றிந்தாரைப் பேடியென்ப வாகலான், ஈண்டு அப்பெயர் பெற்றது அலியென்று கொள்க. அலி மூவகைப்படும். ஆணுறுப்பிற் குறைவின்றி ஆண்டன்மை யிழந்ததூ உம், பெண் பிறப்பின் குறைவின்றிப் பெண் தன்மை யிழந்ததூஉம், பெண்பிறப்பிற் றோன்றிப் (பொருணாமத்திற்) பெண்ணுறுப்பின்றித் தாடிதோற்றி ஆண் போலத் திரிவதூஉமென. அவற்றுடம பிற் கூறியது ஈண்டு பேடி யெனப்பட்டது. என்று விளக்கம் கூறுகின்றார். அலி, பேடி என்கிற சொல் தொல்காப்பியரால் சொல்லப்படவில்லை. ஆண் தன்மையில் இருந்து பெண் தன்மைக்கு மாறுபடுபவர்களை அலி என்றும் பெண் தன்மையில் இருந்து ஆண் தன்மைக்கு மாறுபடு பவர்களைப் பேடி என்றும் உரையாசிரியர்கள் விளக்கம் தருகின்றனர்.

பேராசிரியர்

அணங்கென்பன : பேயும் பூதமும் பாம்பும் ஈறாகிய பதினெண்கணனும் நிரயப்பாலரும் பிறரும்... (தொ.பொ.மெய். நூ.8இன் உரை)

ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி

ஆண்மை யறிசொற் காகிட னின்றே (சொல். நு. 12)

இளம்பூரணர் : ஆண்மையின் திரிந்து பெண்மை நோக்கி நின்ற பெயர்ப் பொருள் ஆண்மகனை அறிவிக்கும் ஈற்றெழுத்தினால் சொலற்பாட்டிற்கு ஏலாது என்றவாறு, ஒழிந்த இரண்டு பெயர்க்கும் ஒக்கும் என்பதாம்.

சேனவரையர் : உயர்திணை மருங்கிற் பால் பிரிந்திசைக்கும் (சொல்.4) என்று மேற்கூறப்பட்ட ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி ஆரூஉவறிசொல்லோடு புணர்தற்குப்பொருந்தும் இடனுடைத்தன்று என்றவாறு.

ஆண்மையறிசொற் காகிடனின் றென்ற விலக்கு ஆண்மையறி சொல்லோடு புணர்தலெய்தி நின்ற பேடிக் கல்லதேலாமையின், அலிமேற் செல்லாதென்க.

தெய்வச்சிலையார் : ‘உயர்நிலை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும்’ என்று ஓதப்பட்ட பேடி யென்னும் பெயர்க்கண் நிற்கும் சொல் ஆண்மையறிசொற்கு ஆகும். இடன் இலது (என்றவாறு). எனவே பெண்மையறிசொற்கு ஆகும் என்றவாறாம்.

நச்சினார்க்கினியர் : ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி - உயர் திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கு மென மேற்கூறிய ஆண்மை திரிந்த பெயர்ச்சொல், ஆண்மை யறிசொற் காகிடன் இன்று - ஆடூ உவறிசொல்லோடு பொருந்து மிடனுடைத் தன்றென்றவாறு.

கல்லாடனார் : உயர்திணை யிடத்துப் பெண்மையைக் கருதவேண்டி ஆண்மைத் தன்மை நீங்கிய பேடி என்னும் பெயராற் சொல்லப்படும் பொருண்மை ஆண்மகனை அறியும் சொல்லாற் சொல்லுதற்காம் இடன் இல்லை என்றவாறு. எனவே பெண்பாலானும் பன்மைப் பாலானும் சொல்லுக என்றவாறு.

நன்னூல்

பெண்மைவிட் டாணவா வுவபே டாண்பால்

ஆண்மைவிட் டல்ல தவாவுவ பெண்பால்

இருமையு மஃறிணை யன்னவுமாகும்   (சொல். நூ. 7)

மயிலைநாதர்

பெண்ணியல்பினை நீங்கி ஆண்மையினை ஆசைப்படும் பொருள் ஆண் பாலனையவாம், ஆணியல்பினை நீங்கிப் பெண்மை யினை ஆசைப்படும்பொருள் பெண்பாலனையவாம். இருவரது தன்மையும் அஃறிணையைப் போலவுமாம். இவையும் மக்கட் கதியினவேனும் அத்தன்மை நிரம்பாமையின் இவ்வாறு முடிவு மென்க.

சங்கர நமச்சிவாயர் : பேடு, அழிதூஉ, அலி, மகண்மா என்பன ஒரு பொருட்கிளவி. அலி, மகண்மா என்பனவற்றை வேறு கூறுவாரும் உளர்.

அவிநயம் : அழிதூஉ வகையும் அவற்றின் பாலே.

இலக்கண விளக்கம்

தெய்வமும் மேபமா மவ்விது பகுதியு

மிவ்வென வறியுமந் தந்தமக் கிலவே

உயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும் (சொ. 7)

அகநானூறு (206 மருதம்)

வாயில் வேண்டிச் சென்ற விறலிக்குத்

தலைமகள் வாயில் மறுத்தது.

என்னெனப் படுங்கொல் தோழி நன்மகிழ்ப்

பேடிப் பெண்கொண் டாடுகை கடுப்ப

நகுவரப் பணைத்த திரிமருப் பெருமை

மயிர்க்கவின் கொண்ட மாத்தோல் இரும்புறம்

சிறுதொழில் மகாவுர் ஏறிச் சேனார்க்கே

துறுகல் மந்தியில் தோன்றும் ஊரன்

மாரி ஈங்கை மாத்தளி ரன்ன

அம்மா மேனி ஆயிழை மகளிர்

ஆரந் தாங்கிய அலர்முலை ஆகத்து

ஆராக் காதலொடு தாரிடைக் குழைய

முழவுமுகம் புலரா விழவுடை நகல்

வதுவை மேவல னாகலின் அதுபுலர்ந்து

அடுபோர் வேளிர் வீரை முன்துறை

நெடுவெள் ளுப்பின் நிரம்பாக் குப்பை

பெரும்பெயற்கு உருகி யாஅங்குத்

திருந்திழை நெகிழ்ந்தன தடமென்றோளே

- மதுரை மருதனிள நாகனார்

‘பேடிப் பெண் தன் அழகைக் கொண்டாடினாற் போல’ என்கிற தன்மையில் பேடி என்கிற சொல் இடம்பெற்றுள்ளது.

நாலடியார்

நுண்ணுணர்வு இன்மை வறுமை அஃதுடமை

பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம் - எண்ணுங்காம்

பெண்ணவாய் ஆணிழ்ந்த பேடியும் பூணாளோ?

கண்ணவாத் தக்க கலம் (251)

(தலையின்பவியல் - அறிவின்மை)

பெண்ணுக்குரிய அணிகளைப் பேடி அணிந்தாள், அழகும் இன்பமும் உண்டாகாமை போல அறிவுடையார் பெற்றுப் பயனடைதற்குரிய செல்வத்தை, அறிவிலார் பெற்றால் பெருமையும் பயனும் உண்டாகா என்க.

பதுமனார் உரை : பெண்ணை அவாவி ஆண் இழந்தபேடி முற்பிறப்பின் கண்ணே பிறர் மனையாளை அவாவி இப்பிறப்பின் கண்ணே ஆண் தகைமையை இழந்த பேடி என்றும் கூத்தாடி என்றுமாம்.

சிலப்பதிகாரம் : காம னாடிய பேடி யாடலும் (கடலாடு

காதை. 56)

அடியார்க்கு நல்லார் உரை : ஆண்மைத் தன்மையிற்றிந்த பெண்மைக் கோலத்தோடு காமன் ஆடிய பேடென்னுமாடலும், ஆண்மைத் தன்மையிற் திரிதலாவது விகாரமும் வீரியமும் நுகரும் பெற்றியும் பத்தியும் பிறவுமின்றாதல்; ஆண்மை திரிந்தவென்ப தனால் தாடியும் பெண்மைக் கோலத் தென்பதனால் முலை முதலிய பெண்ணுறுப்புப் பலவுமுடையது. ஆண்பே டென்று பெயர் பெறுமெனக் கொள்க; என்னை?

சுரியற் றாடி மருள்படு பூங்குழற்

பவளச் செவ்வாய்த் தவள வொண்ணாக

ஒள்ளரி நெடுங்கண் தவள வொண்ணாக

ஒள்ளரி நெடுங்கண் வெள்ளிவெண் டோட்டுக்

கருங்கொடிப் புருவத்து மருங்குவளை பிறைறுதற்

காந்தளஞ் செங்கை யேந்திள வனமுலை

அகன்ற வல்கு லந்நுண் மருங்கம்

இகந்த வட்டுடை யெழுதுவரிக் கோலத்து

வாணன் பேரூர் மறுகிடை நடந்து

நீணில மளந்தோன் மகன்முன் னாடிய

பேடிக் கோலத்துப் பேடுகாண் குறரும்

(மணி : 3 : 116 - 25) என்றாராகலின்

(1968 : 191, 192)

இலக்கணம்/இலக்கியங்களில் மூன்றாம்பால் இனம் குறித்தப் பதிவுகள் இருக்கின்றன. திருநங்கைகள் என்று சொல்லப்படுகின்ற அவர்கள் அப்படி பிறப்பதற்கு கவனம் முந்தைய பிறவியில் செய்த வினையே என்கின்றனர். அழிதூஉ, மகண்மா, அலி, பேடி, பேடு, நிரயப்பாலர் என்கிற பெயர்களில் அழைக்கப்பட்டிருக்கின்றனர். இன்னும் நிகண்டுகள், பக்தி இலக்கியங்களிலும் திருநங்கைகள் பற்றியக் குறிப்புகள் தொகுக்கப்பட வேண்டும். கூத்தில் ஒரு வகையான பேடிக்கூத்து (பேடி போன்ற வேடம் இட்டு ஆடுவது) பரவலாக அறியப்பட்ட ஒரு நிகழ்த்து வடிவமாக இருந்திருக்கிறது. அலிக்கிரகம் என சனி, புதன் போன்ற கிரகங்களைச் சொல்கின்றனர். அலி நாள் என மிருகசீரிய சதய நட்சத்திரங்களைக் கூறுகின்ற நிலையும் காணப்படுகின்றது. அலிமரம் - வயிரம் இல்லாத மரம் இப்படிச் சொல்லப்படுகிறது. அலியெழுத்து என ஆய்த எழுத்தைக் குறிக்கின்றனர்.

மேலே தொகுக்கப்பட்டுள்ள செய்திகள் மூலம், தமிழ் இலக்கண இலக்கியப் பிரதிகளில் பாலினம் பற்றிய குறிப்புகளை அறிய முடிகிறது. ஆண், பெண் என்ற இருமை நிலை மட்டுமின்றி, அலி, பேடி என்ற பாலினப் பிரிவுகளை தொல்காப்பியத்திற்குப் பின்வந்த நூல்கள் பேசுகின்றன. தொல்காப்பியர் பாலின வேறுபாடுகளைக் காட்டியுள்ளார். ஆனால் அலி, பேடி போன்ற சொற்களுக்கு இணையாக ஆண்மை திரிந்த பெண்மை திரிந்த என்ற சொற்களைப் பயன்படுத்துகிறார். ஆனால், உரையாசிரியர்கள் காலத்தில் புதிதாக உருவாகும் சொற்களாக அலி, பேடி ஆகியவை உள்ளன. இச்சொற்களுக்கு, ஒருவகையான மதிப்பீடும் உருப்பெற்றதை உரையாசிரியர்கள் மூலம் அறிய முடிகிறது. தமிழ்ச் சமூக வரலாற்றில், இவ்வகையில் பாலின வேறுபாடுகள் பதிவாகியுள்ளன. உரையாசிரியர்கள் பதிவு செய்யும் முறையும் இலக்கிப் பிரதிகள் பதிவு செய்யும் முறையும் வேறுபட்டிருப்பதைக் காண்கிறோம். இன்றைய வரலாற்றுப் பின்புலத்தோடு, பழைய சொற்பொருள் உரையாடல்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

Pin It