கம்யூனிஸ்ட் எனப்படுபவர்கள் சிறைவாசம், துன்பம், போராட்டம் ஆகியவற்றை மட்டுமே அனுபவிப்பவர்கள் என்ற வரலாற்றுடன் அவர்கள் எத்தகைய பெருமைக் குரியவர்கள் என்பதை வரலாற்று நிகழ்வுகளுடன் எடுத்துகாட்டியுள்ள நூல் இது.

இயக்க இயல் பொருள் முதல்வாதம் இயற்கையை முன்நிறுத்தியது என்பதையும், இயக்க இயலை வரலாற்றுடன் இணைத்துப் பார்ப்பது வரலாற்று பொருள்முதல் வாதம் என்பதையும், உழைப்பின் சமூகத் தன்மை, மொழி, உற்பத்தி உறவு, தனி உடைமை, வர்க்கப்போராட்டம், வர்க்கப்பார்வை ஆகியவை பற்றிய சரியான புரிதல்களை விளக்கும் நூலாக இது விளங்குகிறது.

சுரண்டலுக்கு எதிரான போராட்டம், மனிதன் மேன்மையை அடையச் செய்ய வேண்டிய பணிகள், தவறுகள் திருத்தப்படுவதற்கு கடைபிடிக்கும் அணுகுமுறை, குடும்பத்தில் கம்பூனிஸ்ட் கடைபிடிக்க வேண்டிய ஜனநாயகம் ஆகியவற்றை அனைவரும் உணர்ந்து கொள்ளும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது.

கம்யூனிஸ்டாக இருந்து தியாகம் புரிந்த பல்வேறு தோழர்கள் பற்றிய விவரமும் நமது நாட்டில் மார்க்சிய தத்துவத்திற்கு பாடுபட்ட தோழர்கள் பற்றிய விவரமும் எளிமையான முறையில் விளக்கப்பட்டுள்ளது. இந்திய திரைப்படத்தின் முதல் கதாநாயகியாக நடித்த பால்ராஜ் சஹானியின் மனைவி தமயந்தி தனது சம்பளத்தை கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலர் ஜோஜியிடம் வழங்கியது, சுர்ஜித், இ.எம்.எஸ். போன்றவர்கள் தங்களது சொத்துக்களை கம்யூனிஸ்ட் கட்சிக்கு எழுதி வைத்தது ஆகியவைகள் கம்யூனிஸ்ட்டாக இருப்பதன் பெருமையை உணர்த்தும் நிகழ்வுகள்.

தமிழகத்தில் மட்டும் இன்று வரை 200க்கும் அதிகமானவர்கள் மார்க்சிய இயக்கத்திற்காக இன்னுயிர் ஈந்தவர்கள் என்பதைப் படிக்கையில் பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரவாத குழுக்களிடம் போரிட்டு அதிகமான தோழர்கள் வீரமரணம் எய்தினார்கள் என்ற செய்தியும் கண்களை கலங்கச் செய்கிறது. இதனை எதிர்த்து நாமும் பங்கேற்று வெகுஜன கம்யூனிஸட்டாக இருப்பதன் அவசியத்தையும், இதற்கு போராட்டமே இறுதி இலக்கு என்பதை உணரச்செய்கிறது.

கம்யூனிஸ்டாக இருப்பதன் நன்மைகள் ஏராளம் என்ற புரிதலை உருவாக்க இந்நூலை ஆழ்ந்து வாசிப்பது அவசியம்.

ஒரு கம்யூனிஸ்டாக இருப்பதன் நன்மைகள் | என். ராமகிருஷ்ணன் | சித்திரைப் பதிப்பகம் |மதுரை| ரூ.10

Pin It