இரவு வந்த மழை
எச்சில்படுத்தியிருந்தது
பூமியை...
சுத்தம்செய்யச்
சூரியனை அழைத்திருக்கிறோம்
00
இயற்கை தன்
காதலி பெயரை
வெளியெங்கும்
எழுதிவைத்திருக்கிறது
'குளிர்' என
00
குடையை விலக்கி
மழையை ரசித்தவள் மீது
தண்ணீர் தெளித்துக்
கோலமிட்டுச் சென்றது
சாலையிலொரு வாகனம்
00
மலர்களை
மலடுகளாக்குகிற
மழையறிவதில்லை
மகரந்தச்சேர்க்கை
00
மழையில் நனைந்தவன்
வீடெங்கும்
தேடியலைகிறான்
கவிதையெழுத
காகிதமொன்றை...
அவன் தேகம் சொட்டுகிறது
மழைக்கவிதை
00
மழையில் நனைந்ததும்
'மழை' என்ற சொல்லை
'மழை' என்று சொல்ல
முடியவில்லை...
மழலையாக்கிருந்தது என்னை
மழை
- நாவிஷ் செந்தில்குமார்
கீற்றில் தேட...
மழை...
- விவரங்கள்
- நாவிஷ் செந்தில்குமார்
- பிரிவு: கவிதைகள்