புனுகு தடவிய
புகழுரையால்
புல்லரித்துப் போகவில்லை
மையமான உன்
புன்சிரிப்பில் ஒளிந்திருக்கும்
நையாண்டியும் புதிதல்ல
நீயே விளம்பரப்படுத்திக்கொள்ளும்
உன் பாகுபாடற்ற தன்மையின்
போலித்தனத்தையும் நானறிவேன்
தொப்பியில் இறகைச் சொருகிவிட்டு
தலையைக் கொய்பவன் நீ
கூட்டணி அமைத்துக்கொண்டு
நீயடிக்கும் கும்மாளத்துக்கெதிரான
முதற்கேள்வி என்னுடையதாகவே இருக்கும்  
எதிர்வினையாய்
அகத்திலூறும் விஷத்தில் தோய்த்த அம்புகளாய்
நீ எரியும்
குற்றச்சாட்டு குறிப்பாணைகளை
புறங்கையால் ஒதுக்கிவிட்டு
என்றும் கண்ணியமாய்
கடமையாற்றுவேன்
உண்மைகள் போதும்
ஓலைகளுக்குப் பதிலெழுத
நிரூபணம் தேவையற்ற
என் நேர்மையினால்
நிதானமிழக்கும்  நீயோ
அதிகாரக் கொடுக்கினால்
முகத்திலறைவாய்
இறுதி அஸ்திரமாய்
நீ ஏவிவிடும்
இடைநீக்க உத்திரவையும்
தாயகத்துக்குப் போராடும் வீரனைப் போல
மார்பில் தாங்குவேன்.

- சிறி.ப.வில்லியம்ஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It