மழை வரும்
நாட்களில் மட்டும்தான்
உன்னைச் சந்திப்பதென
முடிவெடுத்த பிறகு
வானம்
மேகமூட்டத்துடனேயே இருக்கிறது
மழைக்கான அறிகுறியுடன்..
-----------
ஆதி நாட்களிலும்
முந்தைய நாட்களிலும்
அதற்கு பிறகான நாட்களிலும் கூட
மாறாதிருக்கிறது
புழங்கப்படாத நேசத்தின்
மீதான வலி..
-------------
உன்னைப் பற்றி
எழுதுகையில்
தேர்ந்த வார்த்தைகளை
தேடுவதில்லை நான்..
உன்னை எழுதும்
எல்லா வார்த்தைகளும்
தேர்ந்தவையாகிவிடுகின்றன..
------------------------

நிறைத்திருக்கிறாய்
நிறைந்திருக்கிறாய்

காணக் கிடைக்கும்
அத்துணை காட்சிகளிலும்

கேட்கக் கிடைக்கும்
அத்துணை மொழியிலும்

பேசக் கிடைக்கும்
அத்துணை வார்த்தைகளிலும்

உணரக் கிடைக்கும்
அத்துணை உணர்வுகளிலும்
மட்டுமின்றி

உன்னைச் சந்திக்கக்
கிடைக்காத வாய்ப்புகளிலும் கூட..

- இவள் பாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It