மத்திய அரசு கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தப் போவதாக தொடர்ந்து அறிவித்துக் கொண்டிருந்தது. அதைப் போலவே சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும் உயர்த்தப்போவதாக நீண்ட காலமாக மக்களை அச்சுறுத்தி வருகிறது. அறிவித்தபடியே பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.3 ம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2ம் உயர்த்தியுள்ளது. அரசின் வருடாந்திர நிகழ்வுகளில் பெட்ரோல் டீசல் விலையுயர்வு என்பது வாடிக்கையாகி விட்டது. இதற்கெதிராக எதிர்கட்சிகள் அல்லது இடதுசாரிகள் சடங்குரீதியான போராட்டத்தை மேற்கொள்வதும் அதனையடுத்து அரசு சில சில்லறை பைசாக்களை குறைப்பதும் வாடிக்கை. ஆனால் இம்முறை அதுபோல் எதுவும் நிகழவில்லை. எதிர்கட்சிகள் அல்லது இடதுசாரிகளின் கூச்சல்களுக்கு மன்மோகன் சிங் அரசு செவிசாய்க்கவில்லை என்பதோடு அவர்களின் எதிர்ப்பை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. பெட்ரோல் பொருட்களின் மீதான விலையுயர்வு சகல பொருட்களின் விலையுயர்வுக்கும் காரணமாக உள்ள நிலையில் சமீபகாலங்களில் பெருகியுள்ள விலையேற்றங்கள் அத்தியாவசிய பண்டங்களின் விலையை குறுகிய காலத்தில் பன்மடங்கு உயர்த்தியுள்ளது.

“இந்தியா தனது பெட்ரோல், டீசல் தேவையில் எழுபது சதவீதத்தை இறக்குமதி செய்யவேண்டியுள்ளது. எனவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயில் ஏற்படும் விலையுயர்விற்கு ஏற்ற வகையில் உள்நாட்டு விலையையும் உயர்த்துவது தவிர்க்கவியலாதது. இக்கட்டான சூழலிலேயே இவ்விலையுயர்வை அறிவிக்கிறோம்.” என மத்திய அரசு சொல்வது நகைப்பிற்குறியது என்பது மட்டுமில்ல மக்கள்விரோத அறிவிப்பிற்கு அப்பாவி முகமூடியை அணிய முயல்கிறது.

ongc_350பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மத்திய அரசு ஏப்ரல் 2002 இல் எண்ணெய் நிறுவனங்களுக்கே தாரை வார்த்துவிட்ட பின்னர்தான் இத்தகைய விலையுயர்வுகள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. உலகமயமாக்கத்திற்கு ஒப்புக் கொடுத்துவிட்ட இந்திய அரசு சுதந்திரமான சந்தையில் தன்னை அம்மணமாக்கிக் கொண்டே வருகிறது. அதற்கு உதாரணம்தான் எண்ணெய் நிறுவனங்களின் தற்போதைய நாட்டாமையும் நாசகார கொள்கையும். உலக வர்த்தகக் கழகத்தின் ஒப்பந்தப்படி இந்திய அரசு 2010க்குள் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு போன்றவற்றின்மீது வழங்கிவரும் குறைந்தபட்ச மான்யத்தையும் விலக்கிக் கொள்ளவேண்டும். ஏழைகள் பயன்படுத்தி வரும் மண்ணெண்ணைக்கு வழங்கப்பட்டுவரும் மான்யமான ரூ.9ஐ இனி மக்களே செலுத்த வேண்டும். வளைகுடா யுத்தத்திற்குப் பிறகு கச்சா எண்ணெயின் விலையில் பேரலுக்கு சுமார் 75 டாலர்களுக்கு மேல் உயர்ந்துவிட்ட நிலையில் விலையேற்றத்திலிருந்து நுகர்வாளர்களைப் பாதுகாப்பது இயலாது என மத்திய அரசின் பெட்ரோலியத் துறை பொய் செய்திகளை பரப்பி வருகிறது.

மறுபுறம் எண்ணெய் நிறுவனங்கள் ‘சுதந்திரமான சந்தை’யை ‘சுதந்திரமான கொள்கை’ என்று நிரூபித்து வருகின்றன. முண்ணனி எண்ணெய் நிறுவனங்களான ONGC, OIL, GAIL முதலியன கோடிக்கணக்காக வருமானத்தை குவித்து வருகின்றன. இவற்றின் இலாபவிகிதம் ஆண்டுக்கு ஆண்டு பெருகி வருகிறது. இதன் பலனாக மத்திய அரசுக்கு பெட்ரோலியப் பெருட்களின் மீதான வரி, பங்குத் தொகை, ராயல்டி என 2002 - 03 இல் ரூ.64,595 கோடி வருமானம் வந்துள்ளது. இதன் அளவு 2004 - 05 இல் ரூ.77,692 கோடியாக பெருகியது என்றால் 2010ஐ கணக்கிட்டால் ரூ.1,00,000 கோடியையும் தாண்டியிருக்கும். இவையனைத்தும் ஊரையடித்து உலையில் போட்ட பணம். ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வியர்வை, கண்ணீர் ஆகியவை அரசாங்க கஜானாவையும் எண்ணெய் நிறுவனங்களின் கஜானாவையும் நிரம்பி வழிய வைத்துள்ளது.

இந்திய அரசின் ஒட்டுமொத்த வரி வசூலில் பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரிவசூல் மட்டும் ஐந்தில் இரண்டு பங்காகும். இந்தியாவில் விதிக்கப்பட்டுவரும் பெட்ரோல் பொருட்களின் மீதான வரி அமெரிக்கா, கனடா, பாகிஸ்தான், நேபால், பங்களாதேஷ் மற்றும் போர் மேகம் சூழ்ந்த இலங்கையைக் காட்டிலும் அதிகமாகும். எனவே, மத்திய அரசு பெட்ரோல் பொருட்களின் மீதான வரியைக் குறைப்பதினால் பெரிய கேடு எதுவும் அதற்கு நிகழ்ந்துவிடப் போவதில்லை. ஒரு உத்தேச மதிப்பீட்டின்படி விலையேற்றம், விலை குறைப்பு போன்ற கூச்சல்களுக்கு நடுவிலும் கூட மத்திய அரசுக்கு பெட்ரோல், டீசல் மீதான வரிவிதிப்பின் மூலம் ரூ.5000 கோடிகள் வருமானம் வரும் என்பதில் மாற்றமில்லை.

பொருளாதார துறைக்கான கமிட்டியின் பரிந்துரைகளின்படி வரிவிதிக்கப்பட்டிருந்தால்கூட தற்போதைய பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைக் குறைத்திருக்க முடியும். ஆனால், பரிந்துரையின் அளவைவிட பெட்ரோலியத் துறை வரிவிதிப்பை கடமையாக்கியுள்ளது. எப்படியாகிலும், தற்போதைய விலையேற்றத்தை எண்ணெய் நிறுவனங்களோ, அரசோ நுகர்வாளர்களின் தலையில் சுமத்தப்படுவதைத் தவிர்த்திருக்க இயலும். தங்களுடைய சட்ட ரீதியான கொள்ளையில் சற்று விட்டுக் கொடுத்திருந்தாலே அது சாத்தியமாகியிருக்கும். ஆனால் உண்மையில் எண்ணெய் நிறுவனங்களுக்கோ, மத்திய மாநில அரசுகளுக்கோ அத்தகைய கருணை மனப்பான்மையோ கடமை உணர்ச்சியோ கிடையாது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை அல்லது விலையேற்றம் என்பதெல்லாம் செயற்கையாக உருவாக்கப்பட்டது அல்லது புனையப்பட்டதாக உள்ளதைக் காணலாம். உலகப் பங்குச்சந்தையின் சூதாட்டம், விலையேற்றத்தில் மிகப் பெரிய பங்கை வகித்து வருகிறது. உலக எண்ணெய்த்தேவையை பூர்த்தி செய்ய எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் உற்பத்தி போதாது என்ற புரளி பங்குச் சந்தைகளில் பல எண்ணெய் நிறுவனங்களின் பங்குகள் உயர்விற்கும், கள்ளச்சந்தையின் விரிவாக்கத்திற்கும் துணை நிற்கிறது. எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் (OPEC) முன்னேறிய நாடுகளுக்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையில் பாரபட்சமான வணிகத்தை திணித்து வருகின்றன. மூன்றாம் உலக நாடுகள் இந்தியா உள்பட விலையேற்றங்களை மட்டுமின்றி கூடுதலாக இறக்குமதி செய்யும் ஒவ்வொரு பேரலுக்கும் ஒரு டாலர் வீதம் என காப்பீட்டுத் தொகையையும் செலுத்த நிர்பந்திக்கப்படுகின்றன. ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இத்தகைய கட்டாயமில்லை. இன்னொரு புறம் அமெரிக்காவின் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பும் ஆக்கிரமிப்பும் எண்ணெய் விலையேற்றத்திற்கு முக்கியக் காரணங்களாகும்.

சகல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் தீர்மானிக்கும் பெட்ரோல், டீசல் பொருட்களின் மீதான விலையேற்றத்திலிருந்து இந்திய மக்களைக் காப்பது ஒரு அரசின் கடமையல்லவா? இக்கடமையுணர்வு தற்போது நிலவும் மன்மோகன் சிங் தலைமையிலான அரசுக்கு உள்ளதா?

ஏனெனில், இன்றைக்கு ஆட்சிசெலுத்திக் கொண்டிருப்பவர்கள் எல்லோரும் பொம்மைகள். அவர்களின் கட்சி அவர்கள் வசமில்லை. பொம்மலாட்ட பொம்மைகளான இவர்களை இயக்கும் சூத்திரதாரிகள் மிட்டல், அம்பானி, டாட்டா, பிர்லா மற்றும் சுரிம்பிரேம்ஜி போன்ற தரகு முதலாளிகள். இத்தரகு முதலாளிகளின் நலன் சுதந்திரமான சந்தையில் அடையப்பட்டு வருகிறது. காட் ஒப்பந்தம், டங்கல் திட்டம், தற்போதைய உலக வர்த்தகக் கழகம் உள்ளிட்ட கொள்ளைத் திட்டங்களில் இந்தியா கையெழுத்திட்டது என்பது மேற்படி தரகு முதலாளிகளின் நிர்பந்தத்தில்தான். அனுமானின் நெஞ்சைக் கிழித்தால் இராமன் புலப்படுவதாகக் கூறுவது கட்டுக்கதை. ஆனால், மன்மோகன் சிங்கின் இதயத்தைக் கிழித்தால் மேற்குறிப்பிட்ட ஒரு கும்பலே தென்படும்.

இத்தகைய சூழலில் எதிர்கட்சிகளின் அல்லது இடதுசாரிகளின் போராட்டமென்பது கோமாளித்தனமானதாக மாறிவிட்டதோடு, அரச சபையில் ஒரு விதூசகனைப் போன்று அம்பானி, டாட்டாக்களுக்கு நடுவே குட்டிக்கரணமடித்து அவர்களை கிச்சுகிச்சு மூட்டி மகிழ்ந்து வருகிறது.

பக்தர்களை காப்பாற்ற பறந்து வரும் கடவுளர்களையோ, ரசிகர்களைக் காப்பாற்ற பாய்ந்து வரும் நடிகர்களையோ, தொண்டர்களைக் காக்க கடுகி வரும் கட்சித் தலைவர்களையோ, மக்களைக் காப்பாற்ற ஓடி வரும் காவலர்களையோ இனி நாம் எதிர்பார்க்க்க்கூடாது.

மக்கள் தங்கள் தேவைகளுக்கு, தங்கள் கஷ்டங்களுக்கு தாங்களே போராட முன்வர வேண்டும். விலையேற்றங்களுக்கு எதிரான போராட்டங்களை மட்டுமல்ல அனைத்து வாழ்வுரிமைப் போராட்டங்களையும் தெருவில் இறங்கி நிகழ்த்திக்காட்ட வேண்டிய காலம் இது. சுரண்டலுக்கும் மூலதனத்திற்குமுள்ள மாயக்கயிற்றை அறுத்தெறிய மக்கள் திரள வேண்டும். அது ஒன்றே மீட்சிக்கு வழி.

- இரா. பாலன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It