இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்ச்சிகளும் உண்டு; மறக்க முடியாத மனிதர்களும் உண்டு. இந்தத் தேசியத் தியாகத் தலைவர்கள் இல்லாமல் தொண்டர்களும் இல்லை; எழுச்சியும் இல்லை; போராட்டமும் இல்லை. இந்த விடுமுறைப் போராட்டக் களத்தில் வடக்கே பாலகங்காதர திலகரும், தெற்கே வ.உ.சிதம்பரம் பிள்ளையும் மறக்க முடியாதவர்கள். சுதந்திரப் போராட்டத்தில் தீவிரவாதியாகக் கருதப்பட்ட திலகரையே தலைவராக ஏற்ற தீவிரவாதி வ.உ.சிதம்பரம் பிள்ளை. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக காலியா, லாவா என்ற இரு கப்பல்களை ஓட்டிய தமிழனை மறக்க முடியுமா?

அவரை மையமாக வைத்து ஆக்கப்பட்ட காவியமே கப்பலுக்கொரு காவியமாகும். புலவர் வாய்மைநாதன் அவர்களால் படைக்கப்பட்ட இக்காவியம் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றுப் பாராட்டப்பட்டுள்ளது என்பதே அதன் சிறப்பை விளக்கும். நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இதனை வெளியிட்டுள்ளது. “இக்கவிதைக் காவியத்தை அமரர் நல்லாசிரியர் ‘வரலாற்று நாயகர் வ.உ.சிதம்பரனார்’ நூல் வடித்த கவிஞர், புலவர் ஆ.முத்துராமலிங்கம் பார்த்திருந்தால் உச்சிமோந்து உளம் நெகிழ்ந்திருப்பார். திருவள்ளுவரையும், தீந்தமிழையும் தன் இரு விழியாய்க் கொண்டு கோவில்பட்டியில் வெற்றி நடைபோடும் ‘வ.உ.சி. வாழ்க்கை வரலாறும், இலக்கியப் பணிகளும்’ எழுதிய அறிஞர் பேராசிரியர் அ.சங்கர வள்ளி நாயகம் விழியில் பதிந்திருந்தால் வாழ்த்துமலர் தூவி மகிழ்வார்...” என்று இளசை அருணா தனது அணிந்துரை யாகிய சொல்வருடலில் குறிப்பிடுகின்றார்.

இதன் மூலம் வ.உ.சி.யின் வரலாற்றை வடித்த இரண்டு பேரை அறிகிறோம். அவர்களது இரு நூல்களும் வரலாற்றுக்கு முன்னோடியாக அமைந்திருக்கின்றன. இந்தக் காவியத்துக்கும் முன்னோடியாகும். “அவருக்கு அகிம்சை வழிப் போராட்டம் உடன் பாடில்லை. நேதாஜி போல் படை திரட்டி ஆண்ட அந்நியருடன் மோதும் வாய்ப்பு வாய்க்கவில்லை. பகத்சிங் போல் தீவிரவாத முனைப்பும் அவர் முன் எதிர்ப்பட்டதில்லை. பகத்சிங் அரசியல் களத்திற்கு வருமுன் வ.உ.சி.யின் விடுதலை இயக்கப் பங்களிப்பு என்ற சூறாவளி அடித்து ஓய்ந்துவிட்டது. நேதாஜி இந்திய தேசியப் படை திரட்டும் சிந்தனை கொள்ளுமுன்பே வ.உ.சி.யின் வாழ்நாள் முடிந்திருந்தது என்றாலும் இம்மூவரிடையில் அகிம்சா போருக்கு வேறுபட்ட அணுகுமுறையில் ஓர் ஒற்றுமையை அதன் உள்ளடங்கிய வேற்றுமைகளுடன் கூடவே நாம் இனம்காண முடியும்...” என்று நூலாசிரியர் தமது முன்னுரையில் கூறியிருக்கிறார். சரியான ஒப்புமைதான்.

நெல்லைச் சீமை விடுதலை வேட்கையை விதைத்த பூமி. வீரபாண்டிய கட்டபொம்மன் முதல் வ.உ.சி.சுப்பிர மணிய பாரதியார், சுப்பிரமணிய சிவா என இது விரியும். ஒட்டப்பிடாரத்தில் உலகநாதரின் மகனாகப் பிறந்து கல்வி கற்று வழக்கறிஞரானார். சட்டமும், நீதியும் அவரைத் தூத்துக்குடிக்கு அழைத்தது; அங்கே புகழ்பெற்ற வழக்கறிஞரான அவரைத் தொழிற்சங்கம் அழைத்தது தொழிற்சங்கத் தலைவரானார். பிறகு தேசம் தம் விடுதலைக்காக அவரை அழைத்தது. விடுதலைப் போராட்ட வீரரானார்.

ஆசியாவின் முதல் தொழிலாளர் சங்கம் எனப்படும் ‘சென்னைத் தொழிலாளர் சங்கம்’ 1918இல் தொடங்கப் படுவதற்கு முன்பே தூத்துக்குடி பவள ஆலைத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தைத் தலைமை தாங்கிச் சிறப்பாக நடத்தியவர் வ.உ.சி. தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும்போது அவர்களது குடும்பத்தையும் காத்தவர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இவர் அரசியல்வாதியாக மட்டுமில்லாமல் சிறந்த தமிழறிஞராகவும், படைப்பாளியாகவும், சிந்தனை யாளராகவும் விளங்கிய பன்முகம் கொண்ட மாமனிதர். சிறைக்கோட்டத்தில் செக்கிழுக்க வைத்து சித்திரவதை செய்யப்பட்ட கொடுமையை விட, சிறை வாழ்வுக்குப் பிறகு அவர் அனுபவித்த இன்னல்கள் கொஞ்சநஞ்சமா?

எந்த நேரத்திலும் யாருடனும் சமரசம் செய்து கொள்ளாத தனித் தலைவராகவே வாழ்ந்தார். காந்தியாரின் தலைமை அறிவித்த சில கட்டளைகளை அவர் ஏற்க விரும்பாததால் காங்கிரஸ் கட்சியை விட்டும் வெளியேறத் தயங்கவில்லை. விடுதலை பெற்ற பிறகும் அரசியல், சமுதாயம், சமயம் ஆகிய எல்லா இடங்களிலும் இறுதி வரை எதிர் நீச்சல் போட்ட வாழ்க்கை வரலாறு அவருடையது. இவரது தியாக வரலாற்றைக் காவியமாக்கியதே பாராட்டுக்குரியதுதான். மரபுக் கவிதையில் ‘எண்சீர் விருத்தங்கள் அழகு செய்கின்றன. நூல் முழுவதும் எளிமை, இனிமை, உவமைகள் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளன. எடுத்தால் படிக்கலாம்; படித்தால் முடிக்கலாம்.

காவியத்தை ஐந்து பாகங்களாகப் பிரித்திருக்கிறார். இளமை, இல்லறம், போர்க்களம், சிறைக்களம், எதிர்நீச்சல் என்பன அவை.

“குறிஞ்சிமுதல் ஐந்நிலமும் குலவும் பூமி

 குவியலாய்ப் பருத்திவிளை கின்ற பூமி                                  

 உறிஞ்சுகிற தன்னலத்தின் நிழல்ப டாத

 உழைப்பாளர் வியர்வையிலே தழைக்கும் பூமி

 அறிஞர்தம் ஞானத்தை விதைத்து நாற்றாய்

 அறிவையே சாகுபடி செய்யும் பூமி

 வறிஞரும்தம் மனநந்த வனத்திற் பூத்த

 மலர் அன்பால் வரவேற்கும் நெல்லை பூமி”

என்று காவிய நாயகர் பிறந்த பூமியை அறிமுகம் செய்வதே அழகு.

“பாஞ்சாலங் குறிச்சிக்குப் பக்கத் தூரில்

 பாட்டுக்கு மீசைவைத்த பார தித்தீ!

 ஊஞ்சலிட்ட எட்டயா புரத்தின் தெற்கே

 ஒட்டப்பி டாரத்தில் உதித்த தித்தீ!”

என்று காவிய நாயகனைப் புரட்சித்தீயாக உருவகம் செய்கிறார். இவர் மாஞ்சோலைக்குள் பாடும் குயிலாகவும், மானிடத்தை அடைகாத்த வெயிலாகவும் கவிஞர் பாடுகிறார்.

இந்த விடுதலை வீரர் வழக்கறிஞராகிப் புகழ் பெற்றபோது திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. வள்ளியம்மை என்ற அந்த மணமகளை இப்படிப் பாடுகிறார்:

“புதுவானில் முழுநிலவு எழுந்தாற் போலும்

 பொய்கையில் செந் தாமரையே மலர்ந்தாற் போலும்

 மதுமலரின் மணம் நடந்து விரித்தாற் போலும்

 வைகையிலே புதுப்படகு தவழ்ந்தாற் போலும்

 மெதுவாக மயில்நடந்து வந்தாற் போலும்

 மின்னலொளி திரட்டிஉருச் செய்தாற் போலும்

 இதுவரைக்கும் சொல்லியபெண் இலக்க ணத்திற்

 கிலக்கியமாய் உருவெடுத்த சுவையின் செல்வி”

என்பது அந்த அழகிய பாடல்.

அக்காலம் ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டுக் கிடந்தது நாடு. அடிமை நாட்டிலும் ஆங்காங்கு சுதேசிப் பற்று உருவாகிக் கொண்டிருந்தது. சிதம்பரனாரின் மனதிலும் விடுதலைத் தீ புகைய ஆரம்பித்தது.

“இந்தியா எம்நாடு. அதனை வெள்ளை

 இனம்அடிமை கொள்கிறது. அடிமை என்ற

 பந்தத்தை அறுத்துவிடு தலைக்கோ வில்போய்ப்

 பண்புவளர் தாயகத்தை வணங்கல் வேண்டும்”

என்று இவர் சிந்தனை செய்கிறார்; செயல்படுத்துகிறார். வெள்ளையர்களுக்கு எதிராகக் கப்பல் ஓட்டவும் முடிவு செய்கிறார். கப்பல் வாங்குவது என்றால் அது எளிய செயலா, என்ன?

“பல்லாண்டு பிள்ளையின்றி வருந்தும் பெண்ணாள்

 பாங்காய் ஓர் மகப்பேற்றில் இரண்டு பிள்ளை

 சொல்லுபுகழ் மிகப்பெற்ற பெருமை போலச்

 சுதந்திரத்தில் வேட்கைகொண்ட இந்தி யத்தாய்

 நல்லகப் பல் காலியாவும் லாவோ வும் இஞ்

 ஞாலமே வணங்கவரும் காட்சி கண்டு

 சொல்லரிய ஆனந்த வயப்பட் டாளே

 தொழிலுரிமைத் தோற்றுவாய் நயப்பாட் டாலே!”

என்று இதனைப் பாடுகிறார்.

எட்டுத் திக்கும் கொடிகட்டி ஆளும் ஆங்கிலேயருக்கு எதிராகக் கப்பல் விடுவதா? ஆதிக்கம் இதனை அனுமதிக்குமா? சிங்கத்தைச் சிறைக்குள் தள்ளியது.

“அலைகளுக்கு விலங்குண்டா? அலையை மோதி

 அடிக்கின்ற காற்றுக்கு விலங்கும் உண்டா?

 உலைகொதித்தால் மூடிவைக்கும் விலங்கே உண்டா?

 உண்மைக்கு விலங்குண்டா? உயர்ந்தோர் நெஞ்ச

 நிலைதடுக்கும் விலங்குண்டா? அறிவே ஓங்கி

 நிமிர்ந்தெழுந்தால் விலங்குண்டா? அறத்தைத் தின்று

 கொலை வளர்க்கும் இலண்டன்வாழ் நரிக்கூட் டத்தின்

 கொடுமைகளா விலங்காகும் சிங்கத் திற்கே!”

என்று உவமைகளை அடுக்கிக் கேள்விக்கணை தொடுக்கிறார் கவிஞர்.

வீறுகொண்டு எழுந்துவரும் விடிவெள்ளியை மின்மினிகள் விலங்கிட்டுச் சிறையில் பூட்ட முடியுமா? நெல்லைச் சீமை புரட்சித் தீயால் பற்றி எரிகிறது. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தது வெள்ளை ஏகாதிபத்தியம். ஆங்கில அரசு சிதம்பரனாரைக் கைது செய்து, வழக்கு தொடுத்தது. அதன் தீர்ப்பு, சிதம்பரனாருக்கு 40 ஆண்டுகளும் சுப்ரமணிய சிவாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை. இதுபற்றிக் கவிஞர் பாடுகிறார்:

“அறைகுண்டத் தில்சீதை புகுந்த தேபோல்

 அடிவயிற்றில் கோடிமின்னல் செருகி னாற்போல்

 கனக்குகையில் நூற்றாண்டு இருள் சேர்ந் தாற்போல்

 கடல் அள்ளும் மனோவேகப் புயல்வீச் சேபோல்

 சினக்கூண்டாய்ப் புரண்டுபுவி கவிழ்ந்த தேபோல்

 திசைஎட்டும் இடிந்துதலை வீழ்ந்த தேபோல்

 வனக்காடு முற்றும்தீப் பற்றி னாற்போல்

 மாக்கடலெல் லாம்திரண்டு வந்த தேபோல்...”

தீர்ப்பு கூறப்பட்டதாகக் கவிஞர் ஆற்றாமையால் பாடுகிறார். சிறையில் செக்கிழுக்க வைத்தபோது, செக்கடியில் நீதி செத்ததாகவே கவிஞர் மனம் துடிக்கிறது.

“தோளெல்லாம் சுமந்தவரை நுகத்த டிக்கே

 சுமக்கவிட்டார்! செக்கடியில் சாகும் நீதி!”

என்று பாடுகிறார்.

தேசத்துக்காகச் சிறை சென்று, செக்கிழுத்து, சித்திரவதைபட்டு விடுதலையான அவர், மறுபடியும் வாழ்க்கையிலும் வறுமைச் சிறையுள்ளே வதைபட்டார். வாழ முடியாமல் அவர் தவித்த தவிப்பையே ‘எதிர்நீச்சல்’ என்று கவிஞர் எழுதுகிறார்.

“அணையாத விளக்கொன்று அணைய, உள்ளம்

 அனைத்திலுமே துயர்பற்றி எரிய, இன்பம்

 இணையில்லா யாழொன்று முரிய, திக்கு

 எங்குமுள்ள இருள்வந்தே செறிய, வானில்

 துணையாகக் கதிர்மதியும் உதிர, நாக்கு

 சொல்லவரும் சொல்லங்கே உறைய, எங்கும்

 பிணையில்லாப் பறவைகளே புலம்ப இங்கு

 பேருயிரின் உள்மூச்சு வழிதப் பிற்றே”

என்று அந்த விடுதலை வேங்கையின் மரணத்தை வேதனையுடன் குறிப்பிடுகிறார். இறுதிப் பாடலில் ‘சிதம்பரனார் சாகவில்லை’ என்று முடிக்கிறார்.

“கவிதையை, ரசிப்பவனும் கவிஞனே!” என்ற இப்சன் மொழிபோல் உங்கள் 3632 வரிக் காவியக் கவிதைகளை ரசித்து ரசித்து வாசித்தேனே தவிர நடையில் துள்ளல், மொழியின் நளினம், நாட்டுப் பற்றின் ஆழம், தேச பக்தர்கள் மீதுள்ள பாசம், தமிழின் தாக்கம் பொங்கி வழிவதை அறிந்தேன் - என இளசை அருணா கூறும் அனுபவமே படிக்கும் எல்லோருக்கும் ஏற்படும்.

இது கப்பலுக்கு ஒரு காவியம் அல்ல; கப்பல் ஓட்டிய தமிழனுக்குத் தமிழ் கூறு நல்லுலகம் நன்றியுடன் படைத்தளித்துள்ள ஒரு காவியக் காணிக்கை.

கப்பலுக்கொரு காவியம்

(வ.உ.சி. வரலாறு - கவிதையில்)

ஆசிரியர் : வாய்மைநாதன்

வெளியீடு

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்.,

விலை : ரூ.90.00

Comments

1 comment

1
Pandian
நாட்டின் விடுதலை இயக்கத்திலே பெரும் பங்கேற்று செயலாற்றி வந்தவர் சிதம்பரம் பிள்ளை அவர்கள். வ.உ.சி என்ற மூன்றெழுத்து பெயர் பெற்றவர். வெள்ளையருக்கு எதிராக மரக்கலம் (கப்பல்) விடுக்க முன் வந்தவர். அதற்கு உரிய திட்டங்கள் தீட்டினார். அதை நிறைவேற்ற பெரும் பொருள் தேவையாக இருந்தது அவருக்கு.

“தேசிய இயக்கத்தில் ஈடுபட்ட வ.உ.சி. வெறும் பிரச்சாரத்தோடு நின்றுவிடவில்லை. அன்று தூத்துக்குடிக்கும் இலங்கையிலுள்ள கொழும்புவுக்கும் இடையே கப்பலை நடத்திக் கொண்டிருந்தது ஒரு பிரிட்டிஷ் கம்பெனி. அதற்கு போட்டியாக ஒரு கம்பெனியின் மூலம் கப்பல் ஓட்டவேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது வ.உ.சிக்கு

ஓட்டப்பிடாரத்தில் அவருக்கு ஒரு சிறிய பூமிதான் சொந்தம். அந்த நிலத்தை விற்று கிடைத்த தொகையை “சுதேசி ஸ்டீம் நாவிகேசன் கம்பெனி” என்ற கப்பல் கம்பெனியின் மூலதனப் பங்குகளாகப் போட்டார்” என்று “விடுதலைப் போரும் திராவிட இயக்கமும்” என்ற தமது நூலின் பக். 27 ல் தோழர் பி.இராமமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

இந்த உண்மையான செய்தியை(!) பின்பற்றி அறிஞர் பலரும் எழுதியுள்ளனர்.

அன்று சிறிய பூமியை விற்றதில் எவ்வளவு பணம் கிடைத்திருக்கும்? ஆயிரக்கணக்கான பணம் தேவையல்லவா?

வரலாற்றில் நடைபயின்று, தம் வாழ்க்கையையே நாட்டு வரலாறாக ஆக்கிக் கொண்ட தோழர் இராமமூர்த்தி அவர்கள் இளைய தலைமுறையினருக்கு உண்மை வரலாறுகளை எடுத்துக்காட்டும் வலிமையான ஊன்றுகோல் தான் இதுவா! ஊறுவிளைவிக்கும் கோலாகுமல்லவா!

தூத்துக்குடியில் சாதாரண வழக்குரைஞராக இருந்த வ.உ.சி. அவர்களுக்குப் பெரும் பொருள் தேடுவது எளிதாக இல்லை. அப்பொழுது, பாலவநத்தம் குறுநில மன்னர், செந்தமிழ்க் குரிசில் வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்களது கொடைச் சிறப்பினை அறிந்தார்.

1906ம ஆண்டு ஜூலைத் திங்கள் 25ம் நாள் முகவை சென்று வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்களைக் கண்டார். தமது எண்ணங்களைத் தெரிவித்தார். பொருள் உதவியும் வேண்டினார்.

தெய்வீகப் பற்றும் தேசிய உணர்வும் பொங்கிக் ததும்பி நின்ற வள்ளல் தேவர் அவர்கள் சிதம்பரம் பிள்ளை அவர்களது கருத்துக்களை முழுமையான ஏற்றுக் கொண்டார். அவரைப் பாராட்டி ஊக்குவித்தார். இரண்டு இலட்சம் வெண்பொற்காசுகள், கடனாக அல்ல, நன்கொடையாக வழங்கினார். இந்தக் கப்பல் கம்பனி மூலமாக கிடைக்கும் வருவாயை மதுரைத் தமிழ்ச் சங்கம் பெற ஏற்பாடுகளும் செய்திருந்தார். மேலும் தனது நண்பர்களை எல்லாம் பங்கு பெறச் செய்து பெரும் பொருள் உதவி செய்தார்.

“சுதேசி ஸ்டீம் நேவிகேசன் கம்பெனி” என்ற பெயரில் மரக்கலப்பணி உருவானது. வெள்ளையர்களுக்கு எதிராக எவரும் முன்வராது அஞ்சி நின்ற நிலையில், வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்கள் மரக்கால அணிக்குத் தலைமையும், செயலாளர் பொறுப்பும் ஏற்றுக் கொண்டார். 1906ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 16ம் நாள் கம்பனி பதிவு செய்யப்பட்டது. – “தேவர் முரசு”, செப்டம்பர் 1981.

(வள்ளல் பாண்டித்துரைத் தேவர் தான் 1911ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 14 ம் நாள் தமிழ்க்கோவில் என்னும் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் தோற்றுவித்தார். உக்கிரப் பெருவழுதி பாண்டியன் காலம் 3ம் தமிழ்ச் சங்கம் அழிந்தது. மீண்டும் உக்கிரப் பாண்டியன் என்ற வள்ளல் பாண்டித்துரைத் தேவரால் 4ம் சங்கம் தோற்றுவிக்கப் பட்டது.)

என்றாலும், தொடர்ந்து இதர கம்பெனிகளுடன் போட்டியிட முடியா நிலையினாலும் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் இன்னல்களாலும் விரைவில் மூடப்பட்டது.

வெள்ளையர்களுக்குக் கட்டுப்பட்டிருந்த குறுநில மன்னர் வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்கள், அவர்களுக்கு எதிராகத் துவக்கப்பட்ட சிதம்பரம் பிள்ளை மரக்கலப்பணிக்கு உதவியதால், தலைமையும் ஏற்று தாமே ஏற்றுக் கொண்டதால் அடைந்த இன்னல்கள் ஏராளம், ஏராளம். எழுதத்தரமன்று அவையாவையும் இங்கே. பாலவநத்தம் ஜாமீனே அழிந்தது, என்பது எல்லாம் இங்கே மறைக்கப்பட்டு விட்டது ஏன்?

சிதம்பரம் பிள்ளை அவர்கள் நேரடியாக வள்ளல் தேவர் அவர்களைக் கண்டும் இரண்டு இலட்ச வெண்பொற்காசுகள் நன்கொடையாகப் பெற்றுக் கொண்டும், அவர்களே தலைமையாகவும் ஏற்றுக் கொண்டுள்ள ஒரு செய்தியை தோழர் இராமமூர்த்தி மறைப்பதன் நோக்கம் என்ன? ஏன்?

தேசியச் செம்மல்:

1901ம் ஆண்டு மே திங்கள் 21,22,23 ஆகிய நாட்களில் சென்னை மாகாண அரசியல் மாநாடு திரு . அனந்தா சாரலு தலைமையில் மதுரையில் நடைபெற்றது. வள்ளல் தேவர் அவர்கள் வரவேற்ப்புக் குழு தலைவராக இருந்து அரும்பணிகள் ஆற்றினார்கள். அம்மாநாட்டில் தாம், அறிவிக்கப்பட்ட படியே மதுரையில் தமிழ்ச் சங்கம் என்னும் தமிழ்க் கோவில் நிறுவினார்கள்.

இந்தச் தமிழ்ச் சங்கம் தான் வடக்கு வெளிவீதியில் கலையுலகு போற்றும் கன்னித் தமிழ் கோயிலாகக் காட்சி தருகிறது. தமிழ்க் கொண்டல் வள்ளல் தேவர் அவர்களது நூற்றாண்டு விழா நடத்தியும் மலர் ஒன்றும் வெளியிட்டது. (வள்ளல் பாண்டித்துரைத் தேவர் பைந்தமிழ் பேரவை, அதன் பொதுச் செயலாளர் தான், தமிழ்த் தொண்டன் வி.ஆ.ஆண்டியப்பத்தேவர் அவர்கள் இக்கட்டுரையின் ஆசிரியர்).

இதைப் பல அரசியல் கட்சிகளுடனும் தொண்டர்களுடனும் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த தோழர் இராமமூர்த்தி அறியாததா?

எந்த அடிப்படையில் எழுதினார்?

இளைய தலைமுறையினருக்கு வரலாறு எடுத்துக்காட்டும் முறையா? அவரது நினைவில் இல்லாமல் போய்விட்ட குறையா?

உண்மை வரலாறுகளை எடுத்க்காட்டத் தவறிவிட்டார் தோழர் இராமமூர்த்தி என்பதை சுட்டிக்காட்ட வேண்டியதிருக்கிறது.

(“செக்கிழுத்த செம்மல்” திரு.வ.உ.சி.அவர்களை குறைத்து மதிப்பிடும் நோக்கம் சிஞ்சிற்றும் இல்லாது இக்கட்டுரை இங்கே பதியப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம், உண்மை விளம்ப வேண்டுதாயும், மறைக்கப்பட்ட உண்மை வரலாறு எம் தமிழர் புரியவேண்டுமாயும் இக்கட்டுரை பதியப்படுகிறது)

எனவே, கப்பலோட்டிய தமிழன் யாரென்றால் சேதுநாடு, செந்தமிழ்க் குரிசில், பாலவநத்தம் குறுநிலமன்னர், வள்ளல் பொன். பாண்டித்துரைத் தேவர் அவர்களேயாவர் என்பதை இமயத்தின் உச்சியில் நின்று கூறலாம்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.