பணத்தைக் கொட்டிக் கொடுத்து, தனியார் பள்ளிகளில் சேர்ந்து படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும் என்ற மாயை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் வாழும் மக்களின் மனங்களில் படிந்திருக்கிறது. மாயை நீண்ட காலத்திற்கு நிலைக்காது என்ற உண்மை இந்த ஆண்டு வெளியாகியுள்ள 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் இருந்து மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. 

பொதுபுத்தியில் மக்களின் மனவெளியில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மாயையை நெல்லை மாநகராட்சி பள்ளி மாணவி ஜாஸ்மின் தகர்ந்தெறிந்திருக்கிறார். ”கறுப்பு வானில்’’ வெள்ளி மீனாய் வெளிப்பட்டு ஜொலிக்கும் இந்த ஜாஸ்மின் வாழ்ந்திருக்கும் வாழ்வையும், அவரது குடும்பச் சூழலையும், அவர் நிகழ்த்திருக்கும் சாதனையையும் ஒருசேர வைத்துப் பார்த்தால் சமூகத்தில் புரையோடி கிடக்கும் பல வினாக்களுக்கு அவர் விடையளித்திருக்கிறார். 

Jasmin_with_motherஆண்டுதோறும் 10-ஆம் வகுப்பு தேர்வு நடக்கும், மாணவர்கள் எழுதுவார்கள், அதில் ஒருவர் முதலிடம் பிடிப்பார். இது ஆண்டுதோறும் நடப்பதுதானே? அது போலவே மாணவி ஜாஸ்மினும் பள்ளி இறுதித் தேர்வில் முதலிடத்தை பிடித்திருக்கிறார் அவ்வளவே, என்று பலரும் நினைக்கக் கூடும். அப்படி யாராவது நினைத்தால் அது பேதைமைத்தனம். அவர்கள் சமூகத்தையும் மக்களின் பொதுபுத்தியையும் அறியாதவராக இருப்பார்கள்! 

‘வக்கற்ற ஏழைகள் சும்மா படிப்பதற்குதான் அரசு பள்ளிகள். அதில் படித்தால் உருப்பட முடியாது என்று பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் எண்ணுகிறார்கள். பொட்டப்புள்ளை படிச்சி என்ன பண்ண போகுது... என்று பேதம் பார்க்கும் பல வீடுகளும் இருக்கின்றன. பொருளாதாரத்தில வசதியில்லாததால சரியாக படிக்க முடியல... அவங்க அப்பா - அம்மா படிச்சவங்க; அதனால அவங்களால நல்ல மதிப்பெண் வாங்க முடிஞ்சது’ என்று காரணம் சொல்லும் மாணவர்களும் இருக்கிறார்கள். படிப்பெல்லாம் நம்ம புள்ளைகளுக்கு வராது அதெல்லாம் இரத்தத்துல ஊறுனது... என்று தங்களை தாழ்வாகக் கருதி சிலரை மேல்நிலையில் வைத்து கொண்டாடி வெறும் வாயை மெள்ளுகிறவர்கள் நம்பில் ஏராளமாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட வினாக்களோடு மதம், சாதி, பொருளாதாரம், பால் ஆகியவற்றால் வேற்றுகளை நிறைந்து பிளவுபட்டு கிடக்கின்ற நம் சமுதாயத்தில் மாணவி ஜாஸ்மின் நிகழ்த்திருக்கும் சாதனை ஒன்றல்ல; பல. 

அரசு - மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சரியாக சொல்லித் தருவதில்லை என்றும், அங்கு சரியான வசதிகள் இருப்பதில்லை என்றும் சொல்லியே அரசு பள்ளியை பற்றி தாழ்வான நிலைப்பாட்டை மக்களின் மனங்களில் உருவாக்கி வைத்திருக்கும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் கொள்ளை லாபம் அடைந்து வந்தன. அவர்களுக்கு முதல் அடியை ஜாஸ்மின் கொடுத்திருக்கிறார். அதாவது அரசு - மாநகராட்சி பள்ளியில் படித்து முதலிடத்தை பெற்று அரசு பள்ளிகள் ஒன்றும் குறைந்ததில்லை என்று பறைச்சாற்றிருக்கிறார். 

அதோடு நில்லாமல், அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் எல்லோரும் கூலிக்கு மாரடிப்பவர்கள்; கடமையை ஒழுங்காக ஆற்றாதவர்கள் என்று பல முனைகளில் இருந்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது குற்றச்சாற்றுகளை அள்ளித்தெளிக்கும் சூழலில் சாதனை ஜாஸ்மின், முதலிடத்தை பிடித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் மீதான களங்கத்தைப் போக்கி மாறுபட்ட உரையாடலை தொடங்கி வைத்திருக்கிறார். 

அடுத்து, ஜாஸ்மினின் குடும்பம் நடுத்தர குடும்பம். அவரின் தந்தை சேக்தாவூத் கடந்த 17 ஆண்டுகளாக துணி வியாபாரம் செய்து வருகிறார். பொருளாதார வசதியில்லாத அவர் மிதிவண்டியில் துணிகளை வைத்து ஊர் ஊராக சென்று விற்று வருபவர். தான் பெரிய அளவில் படிக்காததால் தனது குழந்தைகளை நன்கு படிக்க வைத்து அவர்களை சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பெண் பிள்ளையான ஜாஸ்மினுக்கு படிப்பதற்கான எந்த தடையையும் விதிக்கவில்லை என்பது பாராட்டுதலுக்குரியது. காரணம், இசுலாமிய சமுதாயத்தில் பெண்களுக்கென ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. பெண்கள் வெளியில் வரவே கூடாது; வீட்டுக்கு உறவினராக ஆண்கள் வந்தால் உள் அறைகளில் பதுங்கிக் கொள்ள வேண்டும். அப்படியே வந்தாலும் கறுப்பு பர்தாவை அணிந்து உடல் முழுவதையும் மறைத்துக் கொண்டுதான் பொதுவெளிக்கு வரவேண்டும். பெரும்பாலான பெண்களுக்கு மேல்படிப்பு படிக்க ஆர்வம் இருந்தாலும், அதை குழிதோண்டி புதைத்து விட வேண்டும். இப்படிப்பட்ட ஒடுக்கப்படும் நிலைகளையெல்லாம் கடந்து, அடக்குமுறைகளைத் தகர்த்து கறுப்பு பர்தாவில் ஒளிக்கீற்றாய் ஜாஸ்மின் வெளிப்பட்டிருக்கிறார். 

இன்னும் சொல்லப்போனால், தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களில் - பையன் தேர்வுக்கு படிக்கட்டும், அவனை தொந்தரவு செய்யாதே... பொட்ட புள்ள வீட்டு வேலையெல்லாம் செய்துவிட்டு அப்புறம் படிக்கட்டும்... அது படிச்சி என்ன செய்ய போகுது? என்று சொல்லும் குடும்பங்கள்தான் ஏராளம். இப்படி பெண் பிள்ளைகளை பாவிக்கும் பெற்றோர்களின் மன நிலையை மாற்ற ஜாஸ்மினின் ஒற்றை வெற்றி பயன்படக்கூடும். 

நடுத்தர குடும்பத்தில் பிறந்த தனக்கு கிடைத்தவற்றை பயன்படுத்திக் கொண்டு படித்து முதலிடத்தை பிடித்திருப்பதன் மூலம் ஏழ்மையைக் காரணமாகக் காட்டும் பிள்ளைகளுக்கு ஜாஸ்மின் ஒரு பெரும் பாடத்தையும் கற்பித்திருக்கிறார். 

அது மட்டுமல்லாமல், ஆண்டுதோறும் வெளியாகும் 10-ஆம் வகுப்பு தேர்வில் முதலிடத்தை பிடிப்பவர் வித்யாலயா என்ற பெயர்களை தாங்கியுள்ள தனியார் பள்ளிகளில் ஒரு பள்ளியைச் சேர்ந்தவராக இருப்பார். அவரின் நிழற்படத்தை பார்த்தோமானால் நெற்றியில் மெல்லிய நாமம் இருக்கும். மேம்படுத்திக் கொண்ட சமுதாயத்தை சேர்ந்தவராக இருப்பார். தொடர்ச்சியாக இந்த நிலையை காணும் ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நம் பிள்ளைகளுக்கு இந்தளவுக்கு படிப்பு வராது என்று கருதிக் கொண்டு படிப்பதற்கு தேவையானதைக் கூட வாங்கித் தராமல் அசட்டையாக புறக்கணிப்பார்கள். 

அவர்களின் எண்ணங்களை அடித்து தும்சம் செய்துள்ள ஜாஸ்மின் சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களில் பிறந்த பிள்ளைகளும், சமுதாயத்தில் காலங்காலமாக புரையோடி கிடக்கும் கற்பிதங்களையும் கட்டுப்பாடுகளையும் தகர்த்தெறிந்து வெல்ல முடியும் என்று டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோர் காண விளைந்த கனவை மெய்ப்பித்து அவர்கள் நல்கிய உழைப்புக்கு மதிப்பளித்திருக்கிறார். அந்த சமூக வரலாற்றை ஜாஸ்மினுக்கு யாரும் சொல்லித் தராமல்கூட இருக்கலாம். ஆனாலும், ஜாஸ்மினின் இந்த எழுச்சிக்கு அந்த இருபெரும் தலைவர்களின் பாடு இருந்ததை யாரும் மறுப்பதற்கில்லை. 

இப்படியாக, பொதுமக்களின் மனத்தில் தனியார் பள்ளிகள் உருவாக்கியுள்ள மாயையையும், ஒடுக்கப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பப் பிள்ளைகளால் சாதிக்க முடியுமா? என்ற வினாவையும் தகர்ந்து ஒளிக்கீற்றாய் பாய்ந்து விடை தந்துள்ள ஜாஸ்மினை வாழ்த்துவோம். ஜாஸ்மினுக்கு மட்டுமல்ல; ஒடுக்குமுறைகளை தகர்த்து கிளர்ந்தெழும் எல்லா பெண்களுக்கும் வாழ்த்து கூறி வரவேற்பது நம் கடமையாகும்..! 

- முருக சிவகுமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

7 comments

7
tamizhan
coarparatrion school na ilakaaramaa kaa ppaartha ovvaruvarukkum ithu oru nethi adi..

vaazhthukkal jaasmine...vaazhthukkal nellai corparation school team.
Santhana Murugan
எனது நண்பன் ஒரு முஸ்லிம், அவன் சொன்னதை இங்கே வைக்கிறேன். "இஸ்லாமிய மார்கத்தில் கல்வி கட்டாயம் என்று அவர்கள் நபி சொல்லியிருப்பதாகவும், முதன் முதலில் இறக்கப்பட்ட குர் ஆண் வசனமே "ஓதுவீராக" என்பது தான் என்றும் அதே சமயம் ஒழுக்கம் என்பது இஸ்லாமில் முதற்கண் முக்கியமான ஒன்று எனவும், பெண் சுதந்திரம் என்பதை இஸ்லாம் மறுக்கவில்லை, ஆனால் பெண் பாதுகாப்பு மிக முக்கியம் எனவும், மேற்கு நாடுகள் போல சுதந்திரம் என்ற பெயரில் உடைகளை களைவதை இஸ்லாம் ஒருபோதும் ஆதரிப்பது இல்லை. அனால் கல்விக்கு ஒருபோதும் குறுக்கே நிற்காமல் கட்டாயமாக கல்வி பயிலவேண்டும் என்பது இஸ்லாமிய நிலைபாடு" என்றான்.
akbarali_adirai
congratulates
keep it up...... like +2
raja
congrates sister Jasmine.May Allah gives you all thinks to u
ஐ.மனோகரன்
ஜாஸ்மின் சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள்.
தமிழ் சமுகம் நன்றி கடன் பட்டிருக்கிறது.
arun
Vazhthugal. Jasmine tamil vazhiyil padithu vetri kandathu kurithum, thaai mozhi vazhi kalviyin mukiyathuvum kurithum kooriyirukkalm
மால்கம் X இராசகம்பீரத்தான்
சகோதரி ஜாஸ்மின் இந்த தலைமுறையின் பென் இனத்தின் வெற்றி அடையாளம்.

வறுமை ஒரு தடையல்ல என நம்பிக்கை கொள்ள
தமிழக பெற்றோர்களுக்கும் சேர்த்து சகோதரி ஜாஸ்மினின் பெற்றோர்களும் இனி ஒரு நம்பிக்கையின் அடையாளம்.

கல்வியின் தரம் வசிகர கட்டிடதிலும் அதிகம் பணம் வாங்குவதாலும் வருவது இல்லை -அது ஓட்டு கூரை பள்ளியின் கரும் பலகையிலிருந்தும் ,அரசு சிருடையிலிருந்தும், அரசு புத்தகதிலிருந்தும் வரலாம் என்று இனி எங்கள் அரசு பள்ளிகள் பெருமிதம் கொள்ள -சகோதரி நீ பயின்ற கல்வி கூடம் இனி ஒரு அடையாளம்.

அப்துல் கலாம் தொடங்கி சகோதரி ஜாஸ்மின் வரைக்கும் மட்டுமல்ல இனி நூற்றாண்டுகள் கடந்தும்
நினைவு கூறப்படும் எங்களுக்கு கல்வி தந்த அரசு பள்ளி சரசுவதிகள் எங்கள் ஆசிரியர்கள்...அதுவும் சகோதரி ஜாஸ்மின் மூலமாக.

உன் வெற்றி இனி வரும் பல கோடி பெண்களுக்கு ஒரு ஒளிக் கீற்றுதான்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.