சுனாமியால் பாதிக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவக் குடும்பங்கள் எண்ணூர் அனல் மின் நிலையம் எதிரில் உள்ள தற்காலிகக் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மீனவப் பெண்களின் வறுமையையும் அறியாமையையும் பயன்படுத்தி ஏமாற்றி அவர்களின் சிறுநீரகங்கள் விலைக்குப் பெறப்பட்டுள்ளனன. கடந்த 12.01.07 லிருந்து ஊடகங்களில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து இத்தகவல் உண்மையானதா என்பதைக் கண்டறிய விளிம்புநிலை மக்கள் குரல் அமைப்பாளர் பிரிதிவிராஜ், பொறுப்பாளர்கள் ப. மெல்வின், கெஜபதியுடன் 18.01.07 அன்று காலை எண்ணூர் அனல் மின்நிலையம் எதிரில் போடப்பட்டுள்ள தற்காலிகக் குடியிருப்புப் பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டோம். உண்மையறியும் குழு விசாரணை அறிக்கையிலிருந்த பாதிக்கப்பட்ட திலகவதியுடனான உரையாடல் மட்டும் இங்கு பதிவு செய்யப்படுகிறது.

ஊழல் மன்னர்களும் முறையற்ற வழியில் பணம் சேர்க்கும் கொள்ளைக் கூட்டத்தினரும் தின்ன முடியாமல் ஆடம்பரமாகத் தின்றுக் கொழுத்து, தங்கள் சிறுநீரகங்களை பாழாக்கிக் கொள்கின்றனர்.

பிறகென்ன பணமிருந்தால் இந்தியாவில் எதுவும் மலிவாகவும் எளிதாகவும் கிடைக்குமே. கொழுத்தப் பணக்ககாரர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அப்பாவிப் பெண்களின் சிறுநீரகத்தை பறிக்கத் தொடங்கிவிட்டனர். ஏழைகளை குறிவைத்து ஒரு கொள்ளைக் கூட்டம் இந்தியா முழுதும் செயல்படுகிறது. இதில் ஒரு கண்ணிமட்டுமே இப்போது வெளியேப் பிடிபட்டுள்ளது. குடும்பம், குடும்பம் சார்ந்த உறவைப் பேண பெண் தன் உறுப்புகளையும் இழக்கத் தயாராகும் அளவுக்கு சமூகம் அவர்களை நிர்க்கதியாகத் தவிக்கவிட்டுள்ள அவலம். 60 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில்தான் குடும்பம் என்று வரிந்துகொண்ட சுமந்துகொண்ட உறவுகளுக்கான கடமையை செய்ய சிறுநீரகத்தையும் துறப்பாள் பெண் என்பது எவ்வளவு கொடிய உண்மை. திடீர் நகர் பள்ளத்தைச் சேர்ந்த திலகவதி வயது 30. கடந்த 2003-ல் கிட்னி தானமாகக் கொடுத்ததாகக் கூறினார். அவர் தன்னைப் பற்றியும் தன் துயரமான வாழ்க்கையையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.

நீங்க எங்க பிறந்து வளர்ந்தீங்க?
திலகவதி:

திடீர் நகர் பள்ளத்துல தான் நான் பொறந்து வளந்தது. நான் படிக்கல. 14 வயசுல என் சொந்தக்காரு மகேஷை காதலிச்சு கல்யாணம் செஞ்சுக்கிட்டேன். 15 வயசுல தாயானேன். இப்போ 15 வயசுல தேவி என்ற பொண்ணும் முருகா, மூர்த்தின்னு 11 வயசுல இரட்டபோரு ஆம்பளப்பசங்க இருக்காங்க. தேவியை நாலாவது வரை மட்டுந்தான் படிக்க வைக்க முடிஞ்சுது. பசங்க ரெண்டுபேரும் இப்போ ஐஞ்சாவது படிக்கிறாங்க.

உங்க கணவர் என்ன செய்றார்?
திலகவதி:

மீன் பிடிக்கத்தான் போவாரு. வூட்டுக்கு ஒழுங்கா காசு கொடுக்க மாட்டாரு. எல்லாத்தையும் குடிச்சிட்டு வந்துடுவாரு. அவரு குடிச்சி குடிச்சே செத்தாரு. 2000த்துல குடியிலேயே தூக்குப் போட்டுகினாரு. 24 வயசிலேயே விதவை யாயிட்டேன். மூனு புள்ளைவுள வைச்சிகினு குடும்பம் நடத்த ரொம்ப கஷ்டப்பட்டேன்.

குடும்பத்தை எப்படி பாத்துக்கிட்டிங்க?
திலகவதி:

கடலுக்குப் போய் மீனு வாங்கினு போயி தெரு மேல விப்பேன். நூறு அம்பது கிடைக்கும். சில நாளுள ஒன்னும் கெடைக்காது. நட்டமா போயிடும். இப்படியே தான் காலம் போவுது.

கிட்னியை விற்க எப்படி துணிஞ்சிங்க?
திலகவதி:

கடன் அதிகமாயிடுத்து. என் பொண்ணு வயசுக்கு வர்ற மாறி இருந்தா. அவளுக்கு மஞ்சாதண்ணி நடத்த பணம் வேணுமேன்னு கவல வந்துடுத்து; யான் வீட்டுக்குப் பக்கத்தில இருக்குற லஷ்மிக்கிட்ட (இவருக்கு முன் கிட்னி கொடுத்தவர்- தற்போது உயிருடன் இல்லை ஒரு விபத்தில் மரண மடைந்துவிட்டார்) என் பொண்ணு வயசுக்கு வந்துவிட்டா சடங்கு செய்ய பணம் வேணும், அதனால எனக்கும் ஒரு வழிகாட்டுன்னேன். லஷ்மிக்கு ஒரு பொண்ணும், ஒரு புள்ளையும் இருக்கு. லஷ்மிதான் புரோக்கர்கிட்ட பேசிவுட்டாங்க. புரோக்கர் கொருக்குப்பேட்டை கருப்பையாவும் பிரகாஷும் பென்சில் பேக்டரி கிட்ட வந்து பேசனாங்க. பேசும் போது 1.5 லட்சம் தர்றதா சொன்னவங்க டெஸ்ட்டுக்கெல்லாம் போய்வந்த பொறவு 80 ஆயிரம்தான் கிடைக்கும்னு சொல்லிவிட்டாங்க. என் குடும்ப நெலமை ஏதாவது கிடைச்சா போதும்னு சம்மதிக்க வைச்சுது. என் அம்மா புள்ளைவக்கிட்ட வீட்டு வேலைக்குப் போறதா சொல்லிட்டு யாருக்கும் தெரியாம மதுரைக்கு கருப்பையா கூட போனன்.

மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பித்திரிக்கு இட்டுக்கினு போன கருப்பையா, அங்க டாக்டர் கேள்வி கேட்டா எப்படி எப்படி பதில் சொல்லனு முன்னு சொல்லிக்கொடுத்துச்சி. நான் கிட்னி கொடுக்கப்போற முதலாளியோட மில்லில் என் புருஷன் வேலச் செய்றதாவும், முதலாளியின் குடும்பத்துல இருக்கவுங்க கிட்னி அவருக்கு பொருந்தலன்னு, இவ்வளவு காலம் என் குடும்பத்கு சோறு போட்ட முதலாளி உசுரு பொழைக்க வேணுன்னு அன்பால விருப்பப்பட்டு நான் தானம் கொடுக்க வந்தன்னு சொல்லச் சொன்னான். நானும் அப்படியே சொன்னேன். எங்கிட்ட ரேஷன் கார்டு இல்லை. கருப்பையா அவனுடைய ரேஷன் கார்டை கொடுத்து என்னுடைய புருஷன்னு டாக்டர் கிட்டச் சொன்னான். ஆஸ்பத்திரியில அவன் பொண் டாட்டிப் பேர என் பேரச் சொல்லச் சொன்னான். கணவன்னு சொல்லி கருப்பையாவே ஒப்புதல் கையெழுத்துப் போட்டான். நானும் டாக்டர் காட்ன எல்லாப் பேப்பர்லியும் ஒப்புதல் கையெழுத்துப் போட்டன்.

டாக்டரும் புரோக்கரும் ஒன்னா உங்கள ஏமாத்தனதா நினைக்கிறீங்களா?
திலகவதி:

டாக்டர்கள் என் தியாக குணத்தைப் பாராட்டனாங்க. ஒரு உயிரை காப்பாற்றுவது எவ்வளவு பெரிய காரியம். நீங்க கடவுள் மாதிரி. எங்களை விட நீங்கள்தான் உயர்ந்தவர் என்னு என்னை உற்சாகப்படுத்தி தட்டிக் கொடுத்தாங்க. அப்போ அத நான் ரொம்ப பெருமையா நெனைச்சேன். படித்த டாக்டர்களும் புரோக்கரும் சேந்து எங்களை எப்படி ஏமாற்றுகிறாங்க. எல்லாமே ஒரு கூட்டுக் கொள்ளன்னு இப்போத்தான் புரியுது.

மருத்துவமனையில எவ்வளவு நாள் இருந்திங்க. ஆப்ரேஷனுக்கு பிறகு உங்களை சரியா மருத்துவர்கள் கவனிச்சாங்களா?
திலகவதி:

பெட்டுல 13 நாள் இருந்தன். ஆப்பரேஷன் பன்னறவரைக்கும் தெகிரியமா இருந்தன். ஆப்பரேஷன் முடிஞ்சதும் பக்குனு ஆயிடுச்சி. பயமாவும் இருந்துது. நான் உட்காரகூட முடியாம ரொம்ப கஷ்டப்பட்டன். டாக்டருங்க வந்து ஊசி போட்டு மருந்து கொடுத்தாங்க. தொணைக்குப் பார்த்துக்க கருப்பையா எங்கக்கூட அவன் ஊர்லயிருந்து ஒரு வயசான பொம்பளைய இட்டுன்னு வந்தான். அவுங்கள என்னோட தங்க வைச்சான். அவுங்கள புடிச்சி புடிச்சி நடந்து பாத்துரூம் போய் வந்தன்.

அப்புறம் வீட்டுக்கு எப்ப வந்திங்க. புரோக்கர் உங்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தான்?
திலகவதி:

13 நாள் கழிச்சு இங்க வந்து ரயிவே டேஷன்ல இறங்கறப்ப கருப்பையா 100 ரூபாய் கட்டு நாலு கொடுத்தான். 80 ஆயிரம் தரேன்னு சொல்லிட்டு நாற்பதுதான் கொடுக்கிறீங்கன்னு கேட்டதுக்கு, ஆஸ்பத்திரி ஆப்ரேஷன் செலவு 40 ஆயிரம் போக மீதி இதுன்னான். அப்புறம் என் கூடத் தங்கன ஆயாவுக்கு 1000 ரூயாயும் ரயில் செலவுக்கு 2000 ரூபாயும் கொடுன்னு 3000 ரூபாய் பிடுங்கிக் கொண்டான். என்னால பேசக்கூட முடியல்ல. அங்கேயே என்னை அடிச்சிபோட்டுட்டு 37 ஆயிரத்தை பிடிங்கிக்கினு போனாலும் போவான்னு பயம் வந்ததுடுத்து. உயிரோடு திரும்பினால் போதும்ன்னு ஆட்டோவப் பிடிச்சி அழுதுகினே வூடு வந்து சேர்ந்தன். என்ன இந்த கோலத்துலப் பாத்த என் அம்மாவும் புள்ளைவுலும் வுழுந்து அழுதாங்க.

அந்தப் பணத்த என்ன செஞ்சீங்க?
திலகவதி:

அந்தப் பணத்துல கடன 10 ஆயிரத்தை திருப்பி கொடுத்துட்டு, என் பொண்ணுக்கு ஒரு கொலுசு, ஒரு ஜதை கம்மல், ஒரு மூக்குத்தியும் எல்லாருக்கும் கொஞ்சம் புது துணிமணியும் வாங்கனன். மீதி சாப்பாட்டுக்கும் என் மருந்து செலவுக்கும் சரியாபூடுத்து. சில வூட்ல கிட்னி கொடுத்த பெண்ணோட புருஷங்காரன் அந்த பணத்தையே எடுத்துகினு போயி குடிச்சி அழிச்சிடுறானுவோ.

கிட்னி எடுத்த பிறகு உங்க உடம்பு எப்படியிருக்கு?
திலகவதி:

கிட்னி எடுத்த பெறகு தொடர்ந்து மீன் வியாபாரம் செய்ய முடியல்ல. 300 ரூபாய்க்கு மீன் வாங்கனா 50 அல்லது 100 கெடைக்கும். மீன் கெடைக்காதப்ப நெத்திலி, வாளை கருவாடு கிலோ 40/50க்கு வாங்கி விப்பேன். இப்போ வாரத்துக்கு ரெண்டு நாளு மீன் விக்கப் போறதே அதிகம். குனிஞ்சு நிமிர முடியல. வெயிட் தூக்க முடியல. எடது பக்கமா ஒருக்களிச்சுப் படுர்க்க முடியல. காலியா இருக்குற எடது பக்கம் குடலு சரிறமாதிரி இருக்குது. அதனால் வலது பக்கமாதான் ஒருக்களிச்சு தூங்க முடியுது. அடிக்கடி பயங்கரமா நடுமுதுகு வலிக்குது. வலி அதிகமானா மெடிக்கல்ல போய் 20 ரூபாய்க்கு மாத்திர வாங்கி போட்டுக்குவேன். மாதம் ரெண்டு தடவ இப்பிடி அதிகமா வலி வந்துடுது.

நீங்க இப்படி கஷ்டபடறத பார்த்த பிறகு எப்படி பெண்கள் கிட்னி கொடுக்க போறாங்க. உங்க பகுதியிலேயே 25 பெண்கள் கிட்னி கொடுத்துள்ளதாக ஊர் மக்கள் சொன்னாங்க?
திலகவதி:

நான் இப்படி ஏமாந்து, ஒடம்பு கெட்டு நிக்கறத பாத்தாலும், திரும்ப திரும்ப அவுங்க கிட்னி கொடுக்க போறது ரொம்ப கஷ்டமாயிருக்கு. இந்த மக்க புள்ளக்குட்டியக் காப்பாத்த முடியாம வேலை வெட்டி இல்லாம அந்த அளவு கஷ்டப்படுறாங்க. வறுமதான் இப்புடி துணிய வைக்கிது.

இந்த செய்தி முதல்ல எப்படி வெளிய தெரிய ஆரம்பிச்சுது?
திலகவதி:

முத முதல்ல (டெக்கான் கிரானிக்கல்) இங்கிலீஷ் பேப்பர்லத்தான் வந்து பேட்டி எடுத்தாங்க. நான் தைரியமாக பேட்டி கொடுத்தன். என் போட்டவ மொகம் தெரியாம போடுங்கன்னு கேட்டுகின்னேன். எப்படியாவது வெளி உலகுக்குத் தெரிஞ்ச புரோக்கர் பசங்க பயந்து இந்தப் பக்கம் வரமாட்டாங்கன்னு நெனைச்சேன். அந்த நிருபர் பையன் சொன்ன வாக்கை காப்பாத்தாம என் போட்டாவ பத்திரிக்கையில போட்டுட்டான். இதனால என்ன எல்லாரும் அடையாளம் கண்டுகினு கேவலாமாகப் பேசி அவமானப்படுத்துறாங்க. மீன் வாங்கவோ, மார்கெட்டுக்கு போகவோ வியாபாரம் செய்யவோ முடியவில்ல. சுத்தமாக வருமானம் இல்லாம இப்போ மொடங்கிக் கெடக்கறன்.

புரோக்கர் கருப்பையா கூட உங்கள மாதிரி எத்தன பேரு போயிருக்காங்க?
திலகவதி:

போன மாசம்கூட கருப்பையா இங்க வந்து கல்பனாவையும் இன்னொரு பெண்ணையும் இட்டுகினு போனான். கல்பனா இப்போ புரோக்கரா மாறி ஆள்பிடிச்சி தர்றா. இனிமேல் என் உயிரே போனாலும் பெண்ணுங்கக் கிட்டயிருந்து கிட்னி எடுக்க உடமாட்டேன். பிரபாவதிக்கு ரெண்டு பொம்பளப்புள்ளைவ இருக்கு. சீத்தாவுக்கு ஒரு பையனும் ஒரு பொண்ணும் இருக்கு. கிட்னி விற்க தயாராக இருந்த இவுங்கள ஊராருக்கிட்ட சொல்லி தடுத்து நிறுத்திட்டன்.

நீங்க உங்க பகுதி பெண்கனை புரோக்கர் கிட்டயிருந்து காப்பாத்த முடியம்னு நினைக்கிறீங்களா?
திலகவதி:

நான் கெட்டு அழிஞ்சு மோசம் போனது போதும். என் நெலம மத்த பொண்ணுங்களுக்கு வரக்கூடாது. நம்ம பொண்ணுங்க கிட்டயிருந்து இனிமே கிட்னி எடுக்க உடமாட்டன். ஒரு புரோக்கர் பசங்களையும் இனி குப்பத்துப்பக்கம் வராம பாத்துகறதுதான் என் வேல. வீடுவீடா போயி பொண்ணுங்க கிட்ட பேசுவேன். என் உசிரு இருக்கற வரைக்கும் இதான் என் வேல.

தொகுப்பு: மாலதி மைத்ரி
Pin It