மயிலம்மா: போராட்டமே வாழ்க்கை, ஆசிரியர்: ஜோதிபாய் பரியாடத்து, தமிழில்: சுகுமாரன், எதிர் வெளியீடு, 305 காவல்நிலையம் சாலை, பொள்ளாச்சி - 642 001, பக்.95, விலை ரூ 55/-, டிசம்பர் 2006.

அண்மைக் காலத்தில் பெண்ணியவாதிகளும் சுற்றுச்சூழல்வாதிகளும் மிகவும் விதந்து பேசிய ஒரு பெண்மணி மயிலம்மா. இவர் ஓர் ஆதிவாசிப் பெண். 2007 ஜனவரியில் மறைந்துவிட்ட இவரது துணிச்சலான போராட்ட வரலாறு ஆதிவாசிகளின் போராட்ட வரலாற்றிலுங்கூட குறிப்பிடத்தக்க ஒன்றாக விளங்குகிறது.

இந்தியாவில் ஆதிவாசிகளின் போராட்டங்கள் குறித்து தமிழ்ச்சூழலில் அதிகம் பேசப்படவில்லை. ஜார்க்கண்ட் மாநிலத்தை உருவாக்குவதற்குப் பெரும்பாடுபட்ட பிர்சா முண்டா எனும் ஆதிவாதி பற்றிய நூல் மட்டும் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.

இந்நாட்டின் பூர்வகுடிகளாகிய ஆதிவாசிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அப்போராட்டங்களின் உள்ளீடு பல பரிமாணங்கள் கொண்டவை. 1778 முதல் 1971 வரை 70க்கும் மேற்பட்ட ஆதிவாசிப் போராட்டங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்ததை ராகவைய்யா காலவரிசைப்படி எழுதியுள்ளார். 1945ல் இந்தியாவில் மனிதன் (Man in India) என்னும் புகழ்பெற்ற மானிடவியல் ஆய்விதழ் ஆதிவாசிப் போராட்டங்கள் குறித்து ஒரு சிறப்பிதழையே வெளியிட்டது. தமிழில் ‘உழைப்பவர் ஆயுதம்’ பழங்குடி இனத்தவரின் வாழ்வுரிமைப் போராட்டத்தின் சிறப்பிதழ் சமீபத்தில் வெளியிட்டது. இந்திய மானிடவியல் மதிப்பாய்வகமானது (Anthropological) தற்போது இந்தியாவில் 36 ஆதிவாசிப் போராட்டங்கள் நடை பெற்றுக் கொண்டிருப்பதை கணக்கெடுத்துள்ளது.

இச்சூழலில் மயிலம்மா ஐந்து ஆண்டுகளாக முன்னின்று நடத்தி வந்துள்ள போராட்டமும் அவற்றுடன் இணைந்து அறியப்பட வேண்டிய ஒன்று. தேசிய அளவில் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்த ஒரு போராட்டமாக இது உருவெடுத்துள்ளது.

தமிழக - கேரள எல்லையோரத்தில் உள்ளது பாலக்காடு மாவட்டம். இம்மாவட்டத்தில் இயற்கைச் சூழலுடன் உள்ள ஒரு ஆதிவாதி கிராமமே பிளாச்சிமடை. கேரள அரசின் கணக்குபடி இந்த ஆதிவாசிகள் எரவாளர்கள் எனப்பட்டாலும் தாங்கள் மலைவேடர் பழங்குடியைச் சேர்ந்தவர்கள் என்று மயிலம்மா இந்நூலில் பதிவு செய்துள்ளார் (பக்.27). மக்களின் அடையாளத்தைத் துல்லியமாக அரசு கணக்கில் கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது.

மயிலம்மா ஒரு பன்னாட்டு நிறுவனத்தை எதிர்த்து நடத்திய போராட்டத்தை விளக்குவதே இந்நூல். உலக அளவில் ஏகபோக விளம்பரத்துடன் வியாபாரத்தைப் பெருக்கி வரும் கொக்கோகோலா கம்பெனி மலைவேடர் ஆதிவாசிக் கிராமம் பிளாச்சிமடையில் உற்பத்திச்சாலை ஒன்றை நிறுவ கேரள அரசிடமிருந்து 1996ல் அனுமதி பெற்றுவிட்டது. தொடக்கத்தில் பின்தங்கிய இப்பகுதிக்கு ஒரு விடிவுகாலம் வரப்போகிறது என்ற முன்னறிவுப்புடன் கட்டுமானப் பணிகளை இந்நிறுவனம் தொடங்கியது. ஜனவரி 2000ல் உற்பத்தியைத் தொடங்கிய பின்னரே அது அப்பகுதிக்குக் கேடு விளைவிக்கும் ஒரு நிறுவனம் என நிரூபணமானது.

கம்பெனியின் கட்டுமானம் முடிந்து உற்பத்தி தொடங்கிய காலத்தில் பிரச்சனை ஏதுமில்லை என்று ஆதிவாசிகள் எண்ணினர். பல மாதங்களுக்குப் பின்னர் குடிநீர் கசக்க ஆரம்பித்தது. கம்பெனியைச் சுற்றியிருந்த ஆறு குடியிருப்புகளிலும் நீர்மட்டம் வற்றத் தொடங்கியது. கிடைத்த கொஞ்சம் தண்ணீரும் குடிக்கவோ சமைக்கவோ முடியவில்லை. குறுகிய காலத்திலேயே குளித்துமுடித்தபின் தலையைத் தடவினால் மயிரெல்லாம் ஒட்டிக்கொள்ளும். பாத்திரங்கள் கழுவினால் கையெல்லாம் நமைக்கும்ஙீ கூடவே எரிச்சலும் ஏற்படும். சாப்பாடு வயித்துக் குள்ளே போனதும் வெளிக்குப் போகத்தோணும். அது முடிந்தபின் நல்ல களைப்பும் மயக்கமும் தோணும். கண் ரப்பையில் வீக்கமாகும் (பக். 30-31). இத்தகு பிரச்சனைகளுக்கெல்லாம் சரியான காரணம் தெரியாமல் நெல்லிமேடு, நன்னியோடு, சித்தூர், பாலக்காடு ஆகிய ஊர்களுக்குச் சென்று மருத்துவம் பார்க்கத் தொடங்கினர். நாள் முழுவதும் உழைத்தால்தான் பிழைக்க முடியும் என்ற நிலையில் பல நாட்கள் மருத்துவம் பார்க்க ஓடியதால் பிழைப்பே கேள்விக்குரியாகிவிட்டது.

சுத்து வட்டாரத்தில் விவசாயிகளின் போர் பைப்பில் இரண்டு மணிநேரம் வந்த தண்ணீர் அரை மணி நேரமாகக் குறைந்து விட்டது. இதற்கெல்லாம் காரணம் கொக்கோகோலா கம்பனிதான் என்பதை உணரத் தலைப்பட்டனர். கூடவே இப்பகுதியில் இரண்டு கலர்வேஸ்ட் கம்பெனியிலிருந்து வந்த அழுக்குத் தண்ணீர் இரண்டு நிறம் கொண்டது. ஒன்று கருப்புஙீ மற்றொன்று வெள்ளை. நிறம்தான் வேறு. இரண்டுமே பிணம் நாத்தம் அடிக்கும். தின்னும் சோறு தொண்டையில் இறங்காது. வாந்தி வரும். இப்பிரச்சனைகள் எல்லாம் தீருவதற்கு ஒரேவழி போராட்டமே என்று தீர்மானிப்பதற்கே சில வருடங்கள் ஆகிவிட்டதை இந்நூல் மிக எதார்த்தத்துடன் சொல்லுகிறது. இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்த இந்த ஆதிவாசிகள் தங்கள் இயற்கை வீணாகிவிட்டதை எண்ணி வேகப்பட்டனர்.

அமைதியான வாழ்வைக் கொண்டிருந்த மலைவேடர்கள் ஒரு பன்னாட்டு நிறுவனத்தை எதிர்த்துப் போராட வேண்டிய சூழல் ஏற்படுமென்று கனவில்கூட எதிர்பார்த்தில்லை. பல நூற்றாண்டுக்காலம் காடுபடு பொருட்களைச் சேகரித்தும் மலை விவசாயம் செய்தும் பிழைத்த இவர்களுக்கு இப்போராட்டம் ஒரு பெரிய சவாலாக இருந்தது. அதிலும் மயிலம்மா முன்னின்று நடத்தி ஒரு தேசிய கவனத்தை ஈர்த்த ஒரு பெரும் போராட்டமாக உருவாகியது. உலகம் உற்றுப்பார்க்கும் ஒரு பெண்மணியாக மாறியதன் அனுபவங்கள் இந்நூலில் விரிந்து கிடக்கின்றன. ஒரு ஆதிவாதிப் பெண்ணின் எளிய மொழியில் அவரது அனுபவங்கள் போராட்டத்தின் பதிவேடாகவும் வரலாறாகவும் உருவெடுத்துள்ளது இந்நூல்.

இந்நூலை வாசிப்பதென்பது ஒரு பன்முக வாசிப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. நீர்வளமிக்க பிளாச்சிமடை ஆதிவாசிக் கிராமம் இரண்டே ஆண்டுகளில் சுடுகாடாக மாறிய கதை இதன் மைய விவரிப்பு என்றாலும், இந்த ஆதிவாதிகளின் நிலம், வாழிடம், மலை விவசாயம், பூப்பு சடங்குகள், திருமணம், குடும்ப வாழ்க்கை, உணவுமுறை, சமய நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள், காட்டு மூலிகைகளைக் கொண்டு செய்யும் மருத்துவ முறை போன்ற கூறுகளை விவரித்துச் செல்லும் ஒரு இனவரைவியல் விவரிப்பும் (Ethnographic description) இதனூடே இழையோடுகிறது. இதற்காக ஜோதிபாய் பாரியாடத்து அவர்களின் முயற்சியை வாசகர்கள் பெரிதும் பாராட்டுவார்கள். மலையாள சாயலுடன் ஒரு கிளைமொழி அனுபவத்துடன் பழகு தமிழில் மிக நேர்த்தியாக மொழியாக்கம் செய்திருக்கிறார் சுகுமாரன். சமூக அக்கறை கொண்டவர்களும், இயக்கவாதிகளும், வளர்ச்சித் திட்டங்களில் ஈடுபடுவோரும் மயிலம்மாவின் உள்ள உணர்வுகளை, அவர்கள்தம் மலைவேடர் ஆதிவாசி வாழ்வை அறிய வேண்டியது அவசியமாகும். ஆதிவாசிகள் மதிப்பிழந்த மக்களாக மாற்றப்படுவதை எண்ணிப்பார்ப்பதற்கு இச்சிறு இனவரைவியல் எடுத்துரைப்பு பெரிதும் உதவும்.

Pin It