பணமும் பதவியும் கல்வியும் இருந்துவிட்டால், அத்தனை துயரங்களிலிருந்தும் ஒடுக்குமுறைகளிலிருந்தும் மீண்டு விடலாம் என்று நம்புகிறவர்கள் இங்கு அதிகம். ஆனால், பணமும் பதவியும் கல்வியும் புகழும் அதிகாரமும் பெற்றிருந்த இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் கே.ஆர். நாராயணன் அவரது மறைவுக்குப் பிறகும் கீழ்ஜாதிக்காரர்தானே! ‘நீ நாட்டுக்கே ராஜாவா இருந்தா என்ன... எங்களுக்கு கீழ்ஜாதிக்காரன்தான், தீண்டத்தகாதவன்தான்’ என்ற இந்து சமூகத்தின் கொக்கரிப்பு, ஜாதி இங்கு என்னவாக இருக்கிறது என்பதை ஆழமாகப் புரிய வைக்கிறது. ஒருவருடைய பணமோ, புகழோ, பதவியோ, அதிகாரமோ அவருடைய ஜாதியை ஒருபோதும் மாற்றி விடாது என்ற உண்மை இங்கு கோருவது ஒன்றைத்தான். அது சமூக மாற்றம். அப்படியானால் பொருளாதார முன்னேற்றம் தலித் மக்களைப் பதுங்கு குழிகளிலிருந்தும் படுகுழியிலிருந்தும் தூக்கிவிடாதா?
தீண்டாமையை எதிர்ப்பதற்கும், உரிமைகள் நசுக்கப்படும் போது போராடுவதற்கும், அப்படிப் போராடும்போது, வெளியேறு என்ற துரத்தல்களை எதிர்த்து முன்னேறுவதற்கும், சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் இருப்பதற்கும், வயிற்றுப் பசிக்காக அநீதியை சமரசம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கும் கல்வியும் காசும் மிக மிக அவசியம். பொருளாதாரம் ஒரு வலுவான மனோபாவத்தை தலித் மக்களுக்கு கொடுக்கக்கூடும். தாழ்வு மனப்பான்மையில் துவண்டு போன மனதை மீட்டெடுக்கும். அது சரி, ‘அப்பனும் ஆத்தாவும் பாட்டனும் பூட்டனும் சொத்தா சேர்த்து வச்சிருக்காங்க, எங்க போறது பொருளாதாரத்துக்கு?’ என்ற கேள்விக்கான பதிலாக இந்தக் கட்டுரை அமையக்கூடும்.
சமூக, பொருளாதார, கல்வி ரீதியாக இந்தியாவில் அதிகம் ஒடுக்கப்படுபவர்கள் தலித் மக்களே. சமூகத்தின் பல்வேறு தளங்களில் நியாயமாகக் கிடைக்க வேண்டிய உதவிகளும் நிவாரணங்களும் போய்ச் சேருவதற்கே பல முட்டுக் கட்டைகள் இருக்கும் நிலையில், அவர்களுடைய மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்டது தான் சிறப்பு உட்கூறுத் திட்டம். அதன் மூலம் தலித் மக்களுக்கு முறையாக வழங்கப்பட வேண்டிய பெரும் தொகையான நிதி, அதற்காகச் செலவிடப்படாமலோ அல்லது வேறு திட்டங்களுக்குத் திருப்பி விடப்பட்டோ வீணாகிறது!
நாட்டின் ஒரு பிரிவு மக்கள் இன்னொரு பிரிவினரைச் சுரண்டுவதும் மோசமாக நடத்துவதும் அநீதி. ஆனால் எல்லோரையும் சரிசமமாக நடத்துவோம் என்று அரசியல் சட்டத்தின் மூலம் சூளுரைக்கும் ஓர் அரசாங்கமே, அந்நாட்டு மக்கள் தொகையில் 25 கோடி வகிக்கும் தலித் மற்றும் பழங்குடி மக்களை அவர்களுடைய உரிமையைப் பறித்து ஏமாற்றும் கொடுமையை என்னவென்று சொல்வது? மக்கள் தொகையில் அய்ந்தில் ஒரு பங்கு வகிக்கும் இம்மக்களை இந்திய அரசும் மாநில அரசுகளும் அதிகார வர்க்கமும் ஏமாற்றுவது அப்படித்தான்.
கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்கு முன் ‘தலித் மக்களை முன்னேற்றுவோம்’ என்கிற கொள்கை முழக்கத்துடன் ஆரவாரமாக அறிவிக்கப்பட்ட சிறப்பு உட் கூறுத் திட்டம் நேர்மையுடனும், ஊழலற்றும் சரியான முறையில் நிறைவேற்றப்பட்டிருந்தால், இன்று தலித் மக்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றமும் முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கும். ஆனால், அரசியல் தரப்பிலும் அதிகார வர்க்கத் தரப்பிலும் தலித் மக்கள் மீது காட்டப்படும் பாரபட்சமான, சாதி வெறி பிடித்த புறக்கணித்தலால் அந்தத் திட்டம் இன்று திசையறியா திட்டமாக கேட்பாரற்றுக் கிடக்கிறது.
அண்மையில் ‘செட்யூல் காஸ்ட் சப் பிளான்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்தத் திட்டத்தில் முதலில் அறிவிக்கப்பட்டது என்னவென்றால், மத்திய அரசும், மாநில அரசும் தத்தம் தலித் மக்கள் தொகைக்கு ஏற்ப, தங்களின் பல்வேறு துறைகளுக்கு அளிக்கப்படும் நிதியிலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகித நிதியை பட்டியல் சாதி மக்களின் மேம்பாட்டுத் திட்டமான சிறப்பு உட்கூறுத் திட்டத்துக்கு ஒதுக்க வேண்டும் என்பதே. தலித் மக்களின் மேம்பாட்டுக்கு உண்மையிலேயே பெருமளவுக்கு உதவி செய்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக் கூடிய இந்தத் திட்டம், உறுதியளித்தபடி நடைமுறைப் படுத்தப்பட்டிருந்தால், தலித் மக்களின் பொருளாதார நிலை கண்டிப்பாக சீரடைந்திருக்கும். ஆனால் அறிவிக்கப்பட்டபடி திட்டத்துக்கு நிதியும் குவியவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைத்த நிதியும் தலித் மக்களுக்குப் போய்ச் சேராமல் வேறு எங்கெங்கோ போய் காணாமல் கரைந்து விட்டது.
"இன்று தலித் மக்கள் எப்படியெல்லாமோ போராடி பொறியியல், மருத்துவம், சட்டம், சிவில் சர்வீஸ் போன்ற பல துறைகளில் கால் பதித்து வந்தாலும், சிறப்பு உட்கூறுத் திட்டம் மட்டும் சரியாக நிறைவேற்றப்பட்டிருந்தால் அவர்களின் பொருளாதார, சமூக நிலை இன்னும் பத்து மடங்கு சிறப்பாக உயர்ந்திருக்கும்'' என்கிறார் கிருத்துதாஸ் காந்தி. சிறப்பு உட்கூறுத் திட்டத்தின்படி நிதி சரிவரப் போய்ச் சேர்ந்திருந்தால், கல்வி அறிவு மட்டும் உயர்ந்திருக்கும் என்பதல்ல கல்வி உதவித்தொகை, பெல்லோஷிப் போன்றவையும் அதிகமாகக் கிடைத்திருக்கும். அது மட்டுமின்றி, தொழில் உரிமையாளர்களாக தலித் மக்கள் வெகுவாக உயர்ந்திருப்பார்கள்.
அரசாங்க தொழில் துறைகளில் தலித் மக்களுக்கு ‘கான்ட்ராக்ட்’ வாய்ப்புகள் கிடைத்திருக்கும். தலித் மக்களாலேயே உருவாக்கி நடத்தப்படும் கல்விச் சாலைகளும் பெரும் தொழிற்சாலைகளும் உருவாகியிருக்கும். அரசாங்கத்தின் முக்கியத் துறைகளிலிருந்து நேரடியான பங்கு இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் என்பதால், பொருளாதார வளர்ச்சிக்கான அந்த முக்கியத் துறைகளிலும் தலித் மக்களுக்கான பங்களிப்பு அதிகமாகி, அவர்களின் பொருளாதார நிலை மேம்பட்டிருக்கும்.
இதெல்லாம் நடந்திருந்தால் அது ஜனநாயகம். ஆனால் இங்கு எளியோரை வலியோர் ஏறி மிதிக்கும் இந்த நாட்டில் ஜனநாயகமென்பது ஒரு பெருங்கனவு. அவ்வளவே!
1965 மற்றும் 1971 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடைபெற்ற போர்களால் நாடு கடுமையான பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்திருந்தது. விலைவாசி ஏற்றமும் பண வீக்கமும் இந்தியாவை மூச்சுத் திணற வைத்தன. நாடே தடுமாறிய நிலையில் சமூகத்தின் அடி மட்டத்தில் வைத்து ஒடுக்கப்பட்டிருந்த தலித் மக்களின் அவல நிலையை எளிதாக ஊகிக்க முடியும். அப்போது பொருளாதார நெருக்கடியில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்காக 1979ஆம் ஆண்டு சிறப்பு உட்கூறுத் திட்டம் பரிந்துரைக்கப் பட்டது. அந்த நேரத்தில் தான் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு, பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டு வன்முறையும் ஏவப்பட்டது. எல்லா உரிமைகளும் உள்ளடங்கிக் கிடந்தன. அனல் போல் கனன்று கொண்டிருந்த தலித் மக்களின் கோபமும், ஆற்றாமையும் வெளிப்படையாக வெடித்த நேரம் அதுதான்.
1977ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தில், பெல்சி என்கிற இடத்தில் சாதி இந்துக்களால் 11 தலித் விவசாயத் தொழிலாளர்கள் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம், தலித் மக்கள் மீதான தொடர் வன்முறையை நாடு முழுக்கத் தொடங்கி வைத்தது. தலித் மக்கள் மீது வன்முறையை ஏவ ‘ரன்வீர்சேனா’ போன்ற தனியார் கொலைகாரப் படைகளும் உருவாக்கப்பட்டன. நாடெங்கும் தலித் மக்களின் மேல் ஏவப்பட்ட வன்முறையின் வீரியம், அடைத்துக் கிடந்த அரசின் காதுகளில் மெதுவாக விழுந்து ‘வேறு வழியின்றி’ தலித் மக்களுக்கான குழு ஒன்று 1978இல் உருவானது. தலித் மக்கள் மேம்பாட்டுக்கான திட்ட வரைவுகளை உருவாக்கும் இந்தக் குழுதான் சிறப்பு உட்கூறுத் திட்ட யோசனையை வெளியிட்டது. தொடக்கத்தில் எல்லாம் நன்றாகவே இருந்தது. ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படாமல் புறக்கணிக்கப்பட்டது. தலித் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் அந்தத் திட்டத்தின் விதி முறைகள் எங்குமே சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
ஆறாவது திட்டக் குழுவின் அறிக்கையே “சிறப்பு உட்கூறுத் திட்டத்தின் படி தலித் மக்களுக்குப் போய்ச் சேர வேண்டிய நிதி அவர்களைச் சென்றடையவில்லை. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான திட்டங்களுக்கு அதன் பெரும் பகுதி போய்ச் சேர்ந்து விட்டதாக” ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது. தலித் மக்களுக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு உட்கூறுத் திட்ட விதிகளின்படி அரசாங்கத் துறைகளிலிருந்தும் மத்திய, மாநில நிதிப் பங்கீடுகளிலிருந்தும் வர வேண்டிய நிதி வரவில்லை என்பதே உண்மை. ஆறாவது அய்ந்தாண்டுத் திட்டக் காலத்தில், இதைப் பற்றி ஆராய்ந்து சிறப்பு உட்கூறுத் திட்ட லட்சியங்களை நடைமுறைப்படுத்த, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் ‘ஸ்பெஷல் சென்ட்ரல் அசிஸ்டென்ஸ்’ என்கிற குழு உருவாக்கப்பட்டது. ஆனால், பல மாநிலங்களிலிருந்தும் சரியான ஒத்துழைப்பு வரவில்லை. இந்தியாவிலுள்ள 19 மாநிலங்களிலிருந்து (தலித் மக்கள் கணிசமாக வசிக்கும்) இந்தத் திட்டத்திற்கு, தங்களுடைய நிதிப் பங்களிப்பு பற்றி இன்று வரை கணக்கு காட்டப்படவில்லை.
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் இந்தத் திட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படாததால், தலித் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு மட்டுமே மூன்று லட்சத்து எழுபத்தி அய்யாயிரம் கோடி ரூபாய். 2007 - 2008ஆம் ஆண்டுகளுக்கான ஆண்டுத் திட்டத்தில் மட்டும் தலித் மக்களுக்கான இழப்பு 20,280 கோடி ரூபாய். இன்றைக்கும் தமிழ்நாட்டில் ஓராண்டுக்கான தலித் மாணவ, மாணவிகளுக்கான 20,000 பொறியியல் இடங்கள் காலியாகவே இருக்கின்றன. காரணம், குறைந்த பட்ச கட்டணமே தாங்க முடியாத அளவுக்கு இருப்பதுதான். தலித் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை கிடைப்பது பிரச்சனையாக இருப்பதும் மற்றொரு காரணம்.
எடுத்துக்காட்டாக, ஆண்டு பட்ஜெட்டில் தலித் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அரசாங்கம் ஒதுக்க வேண்டிய 16 சதவிகித நிதி, 2007 2008க்கான நிதி ரூபாய் 32,816 கோடிகள். ஆனால், ஒதுக்கப்பட்டுள்ளதோ 12,535 கோடிகள்தான். பொருளாதார நிபுணர் எம். தங்கராஜ், “சிறப்பு உட்கூறுத் திட்டம் தலித் மக்களின் ஏழ்மையை, வாழ்க்கை நிலையைப் போக்குவதற்காகக் கொண்டு வரப்பட்ட அற்புதமான திட்டம். ஆனால், சாதிக் காழ்ப்புணர்ச்சி கொண்ட அரசாங்க அதிகாரிகளால் அதற்கு முட்டுக்கட்டைப் போடப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டமும் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டமும் சரியாக நடைமுறைப்படுத்தப் பட்டிருந்தால், தீண்டாமையும் தலித் மக்களின் வறுமையும் எப்போதோ ஒழிந்து போயிருக்கும்'' என்கிறார்.
மொத்த மக்கள் தொகையில் கால் பங்கு இருக்கக் கூடிய தலித் மக்களின் பெரும்பான்மைத் தொழில் விவசாயம்தான் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் நிலமின்மை, தீண்டாமை, குறைந்த கூலி, வன்கொடுமை என்று எல்லா ஒடுக்குமுறைகளையும் அனுபவித்து உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் தலித் மக்களின் மேம்பாட்டுக்காகச் செயல்பட வேண்டிய அரசுத்துறைகள் என்று எட்டு துறைகளைச் சொல்லலாம். அவை காவல் துறை, நீதித்துறை, ஊரக வளர்ச்சித் துறை, மருத்துவத் துறை, கல்வித் துறை, வருவாய்த் துறை, வேளாண் துறை, பொதுப்பணித் துறை போன்றவை.
முக்கியமான இந்த எட்டு துறைகளில் பட்டியல் சாதியினரின் பங்கு, ஒதுக்கீட்டின் படி அமைந்திருக்கிறதா என்றால் இல்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 12 லட்சம் உள்ள அரசுப் பணியாளர்களில் 90 சதவிகிதத்தினர் இந்தத் துறைகளிலேயே பணியாற்றுகின்றனர். ஆனால் இவற்றில் எதிலும் பணியாளர் பட்டியல் முறையாக வெளியிடப்படுவதில்லை. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை அப்பட்டியல் வெளியிடப்படவேண்டும் என்பது விதிமுறையாக இருப்பினும் அவை வெளியிடப்படவில்லை. காரணம், அது வெளியானால் குட்டு வெளிப்பட்டு விடும் என்பதே.
பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்த எட்டு துறைகளிலும் தலித் மக்கள் இரண்டு லட்சம் பேர் இருக்க வேண்டும். ஆனால், இவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் குறைவாகவே இருக்கிறது. அப்படியானால் ஒரு லட்சம் தலித் மக்கள் இதில் மட்டும் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். கல்வித் துறையில் 500 விரிவுரையாளர் பதவி, பட்டியல் சாதியினருக்காக
அறிவிக்கப்பட்டும் கடந்த 10 ஆண்டுகளாக இன்னும் வழங்கப்படவே இல்லை.
வருவாய்த்துறையை எடுத்துக் கொண்டால், மாவட்ட வருவாய்த் துறை அதிகாரி, வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி ஆகிய பணியிடங்களில் தலித் மக்கள் 10 சதவிகிதத்துக்கும் குறைவாகவே உள்ளனர், வட்டாட்சியர் பதவிகளில் 5 சதவிகிதத்துக்கும் குறைவாகவே உள்ளனர். மதுரை மாவட்டத்தில் மட்டும் 700க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் வருவாய்த் துறையில், பட்டியல் சாதியினரின் எண்ணிக்கை வெறும் 39 தான். ஊரக வளர்ச்சித் துறையின் முக்கிய பதவிகளில் பட்டியல் சாதியினரின் பங்கு 3 சதவிகிதத்துக்கும் குறைவே!
2.82 லட்சம் பணியாளர்களைக் கொண்ட சத்துணவுத் துறையில் பட்டியல் சாதியினருக்கு வழங்கப்பட வேண்டிய 19 சதவிகிதப் பங்கு வழங்கப்படவில்லை. மக்கள் நலத்துறையிலோ உதவி மருத்துவர் பணியிடங்களில் மட்டும் 120 பதவிகள் வழங்கப்படவில்லை. இந்த முக்கியமான எட்டு துறைகளிலும் தலித் மக்களின் பங்கு குறைவாக இருப்பது ஒரு புறம் என்றால், அவர்களுக்கெல்லாம் ஒரு சங்க அமைப்பு கூட இல்லை. அதற்கான விழிப்புணர்வும் தலித் மக்களிடம் இல்லை. பார்ப்பனர்களும் ஆதிக்க சாதியினரும் தன் சாதிக்காரர்களை முடிந்த வரைக்கும் உள்ளே இழுத்துப் போடுவதில் காட்டும் முனைப்பை தலித் மக்கள் காட்டுவதில்லை (சங்க அமைப்புக்கான அங்கீகாரத்தை அளிக்காமல் இருப்பதிலும் கூட தீண்டாமை உணர்வு நிலவி வருவது உண்மை).
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 70,000 தலித் மாணவ, மாணவிகள் +2 தேர்வுகளில் தேர்ச்சி பெறுகின்றனர். ஆனால், பொறியியல் கல்லூரிகளிலோ 5000 இடங்களுக்கும் குறைவாகவே அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. இதற்கு முக்கியமான காரணம், கல்வி உதவித் தொகை அவர்களுக்குக் கிடைக்காததே. தமிழ்நாட்டில் சிறப்பு உட்கூறுத் திட்டத்தின் படி வரவேண்டிய 2000 கோடி ரூபாய்க்குப் பதிலாக 400 கோடிக்கும் கீழாகவும், மய்ய அரசின் பங்காக வரவேண்டிய 40,000 கோடி ரூபாயில் கால் பங்குக்கும் கீழாகவும்தான் ஆண்டு திட்ட நிதியில் ஒதுக்கப்படுகிறது. இதைத் தட்டிக் கேட்கவோ வழக்குப் போடவோ யாருமில்லை. இது, தலித் மக்களுக்கு அரசாங்கம் செய்து வரும் பச்சைத் துரோகம். அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோரின் ஒதுக்கீட்டு அளவான 50 சதவிகிதத்தைத் தாண்டி 90 சதவிகிதம் வரை அவர்கள் பெற்றுள்ளனர். இந்த அளவானது பட்டியல் சாதியினருக்கான 19 சதவிகிதத்திலும் அவர்கள் ஊடுருவி இருப்பதையே காட்டுகிறது.
எங்கே, எப்படி, எதனால், யாரால் இதைப் போன்ற விதிமீறல்கள் நிகழ்கின்றன? உச்ச நீதிமன்றம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 சதவிகிதத்திற்கு மேல் ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்று உத்தரவிடும்போது, தமிழக அரசு வரிந்து கட்டிக் கொண்டு ‘50 என்ன நாங்கள் 69 சதவிகிதம் தருவோம்’ என்று அறிவிக்கிறது. ஆனால், தலித் மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 18 லிருந்து 19 சதவிகிதமாக உயர்த்துங்கள் என்று கேட்டால் அதற்கு பதிலில்லை. பட்டியல் சாதியினரில் ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேர்களை கல்லூரிப் பட்டப்படிப்பு படிக்க வைப்பதற்கு 2000 கோடி ரூபாய்தான் தேவை. ஆனால் இம்மக்களுக்கு பட்ஜெட்டில் 250 இல் ஒரு பங்கு நிதி கூட ஒதுக்கப்படுவதில்லை என்பதே நிதர்சனம்.
சிறப்பு உட்கூறுத் திட்டம் என்பது, பட்டியல் சாதி மக்கள் பிறரிடம் கையேந்தும் திட்டமோ, கோரிக்கை வைக்கும் திட்டமோ இல்லை. அது உழைக்கும் மக்களின் தன்மான உரிமைக் குரல். அந்த உரிமைக்காக பட்டியல் சாதியினர் ஒன்றிணைந்து போராட வேண்டும். ‘திட்டம் கிடக்கட்டும் ஒரு புறம், அதை நடைமுறைப்படுத்த வேண்டியது நாம் தானே? அவர்களுக்கு ஏதும் கொடுக்க வேண்டியதில்லை. அவர்களுக்காகப் போராடவும் யாருமில்லை. அப்புறம் யார் கேள்வி கேட்பது?’ என்கிற சாதி இந்து ஆணவ மனப்பான்மை, அரசியல் கட்சிகளிடமும் அதிகார வர்க்கத்திடமும் நீக்கமற நிறைந்திருப்பதால்தான் தலித் மக்களுக்கு தாகம் தீர்க்க வந்த பெருமழையாக இருக்க வேண்டிய சிறப்பு உட்கூறுத் திட்டம், இன்று வரை ஒரு கானல் நீராகவே இருக்கிறது.
புறக்கணிக்கப்படுதலும், சுரண்டப்படுதலும், இழிவுபடுத்தப்படுதலும் வெவ்வேறானவை அல்ல. இம்மூன்றும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டே கூரிய ஆயுதமாக ஒடுக்கப்பட்ட மக்கள் மீது ஆதிக்கவாதிகளால் தொடர்ந்து ஏவப்படுகிறது. சாதியைக் கொண்டாடுகிறவர்களே எங்கும் நிரம்பியிருக்கிறார்கள். சாதிப் பாகுபாட்டை ஆதரிக்காதவர்கள் கூட, அதை அழிக்கும் வழியாக முன்மொழிவது இட ஒதுக்கீடு போன்ற உரிமைகளை ரத்து செய்ய வேண்டுமென்ற அற்பமான தீர்வைதான். சாதி சான்றிதழ்களும் தலித் மக்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச நலத்திட்டங்களும் சாதியை செழித்தோங்கச் செய்வதாக வாதிடும் போது, அறிவின்மை சமத்துவக் கொள்கைக்கு குழி பறித்துக் கொண்டிருக்கிறது.
இன்று அய்.அய்.டி. மாதிரியான கல்வி நிறுவனங்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுவதற்கும், தலித் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை நிறுத்த அரசே முன்மொழிந்ததற்கும் பின்னால் இருக்கும் சதி மிக மிக வலுவானது. இப்படித்தான் ஒவ்வொரு உரிமையும் பறிபோய் கொண்டிருக்கின்றன. ஆனால் நாம் மிக மந்தமாகவே இதற்கெல்லாம் எதிர்வினை ஆற்றியிருக்கிறோம். நம் பதற்றம் எதிராளிகளின் ஆத்திரத்துக்கு முன் ஒன்றுமேயில்லை. எத்தகைய உரிமை மீறல் நடந்தாலும் வெறும் நாட்கணக்கில் மட்டுமே நீடிக்கிறது நம் கோபம். ஆதிக்கவாதிகள் ஒவ்வொரு ஒடுக்குமுறைக்குப் பின்னும் தன்னிச்சையாக அடுத்ததற்கு தயாராவது போல நாமும் தயாராகிறோம். அநீதிகளை ஏற்றுக்கொள்ள பழகியிருக்கும் நமது அடிமை மனம், அநீதிகளை எதிர்க்கத் தேவையான வலுவைப் பெறவில்லை.
நாம் மேலே பார்த்தபடி ஒரு காசு இல்லை ரெண்டு காசு இல்லை, ஆண்டுதோறும் நமக்கு வந்து சேர வேண்டிய தொகை சுமார் அய்ம்பதாயிரம் கோடி ரூபாய். சாதி இந்துக்கள் அவர்களுக்கு சேர வேண்டிய உரிமைகளை வெகுவாக அனுபவித்து வருவதோடு, நம்முடைய பங்கையும் மற்ற திட்டங்களுக்கு மடை திருப்பி அனுபவிக்கிறார்கள். தலித் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், சமூகப் போராளிகளும், எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் விழிப்போடு இருந்தும் இந்தக் கொள்ளையை ஏன் தடுத்து நிறுத்த முற்படவில்லை? நமக்கான பொருளாதார வளத்தை நாம் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தின் மூலமும், போராட்டத்தின் மூலமுமே மீட்டெடுக்க முடியும். வேறு வழியில்லை!
நம் வளங்களும், அறிவும், உடலுழைப்பும் சூரையாடப்பட்டுதான் இன்று ஆதிக்க சாதியினரும் ஆட்சியாளர்களும் செழித்தோங்கி இருக்கிறார்கள். ஒரு நாடு தன் மக்களுக்கு செய்ய கடமைப்பட்டிருக்கிற நியாயமான உரிமைகளையே நாம் கோருகிறோம். இட ஒதுக்கீடோ, வெறும் பணியிடங்களோ உதவித் தொகை அல்ல; அது உரிமை. இந்நாட்டை ஆள்வதில் நமக்கான பங்கு. அது இந்த நாட்டு குடிமக்கள் என்ற இருத்தலுக்கான ஆதாரம் அது. இதெல்லாம் அவசியமில்லை என்று ஒவ்வொரு உரிமையையும் நாம் புறக்கணிப்பது, நம் வாழ்வுரிமையையும் சுயமரியாதையையும் துச்சப்படுத்துவதற்கு சமம்.
பொருளாதார மேம்பாடு, ஒடுக்கப்பட்ட ஒருவருடைய வாழ்வில் என்ன மாதிரியான மாற்றங்களைக் கொண்டு வரும் என்பதை ஆராய்ந்தே அம்பேத்கர் இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கி, அதில் தலித் மக்கள் மேம்பாட்டுக்கான நலத்திட்டங்களை வகுத்தார். அதைவிட அதிகமான நலத்திட்டங்களையும் உரிமைகளையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் நிலையில் தான் இன்னும் இந்த ஜாதி நாடு இருக்கிறதே ஒழிய, நமக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட உரிமைகளை திரும்பப் பெறும் தகுதி அதற்கு துளியளவும் இல்லை.
‘இப்போதெல்லாம் பார்ப்பன ஆதிக்கம் எங்கேயிருக்கிறது? அவர்களும் இன்றைய சூழலில் தலித்துகளைப் போலத்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்' என்ற நச்சுப் பிரச்சாரத்தைக் கிளப்புகிறவர்கள் செய்ய வேண்டிய காரியமொன்றிருக்கிறது. அது அதிகாரத்திலும் பதவியிலும், பொறுப்பிலும் இரும்பாலான இருக்கையைப் போட்டு திடமாக அமர்ந்திருக்கும் ஒவ்வொரு பார்ப்பனரையும் சாதி இந்துவையும் எழுப்பிவிட்டுப் பாருங்கள். அவர்கள் காலடியில் நம் உரிமைகளும், நமக்கு நியாயமாக வந்து சேர வேண்டிய அத்தனை நலன்களும் நசுங்கிக் கொண்டிருக்கும். அதை மீட்டெடுப்பதைத் தவிர, தலித் மக்களுக்கு வேறொரு கடமை இல்லை.