"இறப்பின் வலிமையை விட கொடியது, இழப்பிற்குப் பின் ஆறுதல் கூறுவதற்கு ஆளில்லா தனிமை" அந்தக் கொடுமையை இன்று ஈழத்திலுள்ள அனைத்துக் குடும்பங்களும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.

 50 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டு மூன்று லட்சம் மக்கள் முள்வேலி சிறைச்சாலையில் அடைப்பட்டு கிடக்கும் போதும், கண்டன அறிக்கைகள் கூட வெளியிடாமல், வெறும் கருத்துகளை மட்டுமே பதிவு செய்து கொண்டிருக்கிறது உலகம். 
 செஞ்சோலைப் பள்ளியின் மீது குண்டு வீசியது சிங்களம், அறிக்கை வெளியிட்டார்கள். போர் நடத்தப் போகிறோம், சர்வதேச உதவி அமைப்புகளும், ஊடகங்களும் வெளியேற வேண்டும் என்றது சிங்கள அரசு. முனகலைத் தவிர வேறெதுவும் இல்லாமல் வெளியேறினார்கள்.

 போர் நடைபெற்ற ஒன்றரை ஆண்டுகளில் முன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் போர்ப்பகுதிகளில் தங்கியிருந்ததை குறைத்து 70 ஆயிரம் மட்டுமே இருந்ததாக கூறி பட்டினிப்போட்டது சிங்கள அரசு. மருந்து மற்றும் அடிப்படை தேவைகளை தடுத்து நிறுத்தியது.

 மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சுயவிருப்பத்துடனேயே தங்களுடனே இருப்பதாக புலிகள் கூறினார்கள். மக்களை புலிகள் சிறைவைத்திருப்பதாய் கூறியது சிங்களம். ஐநாவும் உலக நாடுகளும் உண்மையை கண்டறிய ஆர்வம் காட்டவில்லை, வழக்கம்போல் இரண்டு தரப்பையும் இணைத்து கண்டன அறிக்கை வெளியிட்டு கடமையை முடித்துகொண்டது.

 மே 17 க்குப் பிறகு ஒற்றைத்தரப்பு மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், ஐந்து மாதமாக அப்பாவி பொதுமக்கள் ராணுவச்சிறைகளில், எந்தக் கேள்வியும் இன்றி புலிகளை தரம்பிரித்தல் என்ற போர்வையில் சித்ரவதை செய்ப்படுகின்றனர். பெண்கள், குழந்தைகள், முதியவர் என்ற பாகுபாடின்றி தொடர்ந்து கொடுமைபடுத்தப்படுவதை எதிர்த்து, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உலக நாடுகள் மவுனம் காக்கின்றன அல்லது நடிக்கின்றன.

 இன அழிப்பும், சிறைபிடிப்பும் வேண்டுமானால் இனவெறியன் ராஜபட்சேவினால் நிகழ்த்தப்பட்டிருக்கலாம். ஆனால், உலகம் அதற்கான அனுமதியையும், ஆதரவினையும் அவனுக்கு வழங்கியது.
 
 உலகின் மோசமான இனவழிப்பான யூத இனவொழிப்பினை ஹிட்லர் நடத்தியபோது, உலகம் அதனை அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. கம்யூனிசத்தை வீழ்த்தக்கூடிய சக்தியாகவே ஹிட்லரைப் பார்த்தனர். இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் தோல்வியுற்ற பிறகே நாஸிக்களின் படுகொலை முகாம்களை கண்டு பதறியது உலகம்.
 
 ஆனால் இலங்கை இனவழிப்பு அவ்வாறானதல்ல, பெரும்பாண்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்ற காரணத்தினால் ஒரு இனவெறியன் தன் நாட்டில், ஐந்து தசாப்தமாக உரிமைக்காகப் போராடும் சிறுபான்மை மக்கள் மீது போர்த்தொடுப்பதற்கு உலக நாடுகள் ஆயுதமும், ஆதரவும் வழங்கின. இன்று போரில் எஞ்சி சிறைபிடிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலைக் கூட வழங்க முடியாமல் கையாலாகத்தனமாய் அறிக்கை மட்டுமே வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

 ஆயுதமோ அரசியலோ புலிகள் ஒரு இறையாண்மையுள்ள அரசை தங்கள் மக்களுக்காக ஏற்படுத்தியிருந்தார்கள். புலிகள் அரசை தீவிரவாதத்தின் பெயரால் உலக நாடுகள் தடை செய்து வேட்டையாடின. அன்று புலிகள் அரசில் சுதந்திரமாய் வாழ்ந்த மக்கள் இன்று சிங்கள அரசின் சிறைச்சாலைகளில்.
 
 அமெரிக்காவில் செப்டம்பர் 11-ல் தீவிரவாதிகளின் இரட்டை கோபுரத் தாக்குதலால் ஏற்பட்ட உயிர்சேதத்தை கண்டுப் பதறிய உலகநாடுகள் தீவிரவாதத்திற்கெதிராய் ஒன்று சேர்ந்தன. ஆனால் இலங்கையில் மட்டுமே தேசிய விடுதலைக்காய் போராடிய இனத்தின் விடுதலைப்போரையும் தீவிரவாதத்தின் பெயரால் உலகநாடுகள் தடைசெய்தன.

 செப்டம்பர் 11 திடீரென ஏற்பட்ட நிகழ்வு. அதைத் தடுக்க உலகநாடுகளுக்கு போதிய அவகாசமில்லை. அதில் இறந்த மக்களின் எண்ணிக்கை 2781. ஆனால் அந்த செப்டம்பர் 11க்குப் பிறகான தவறான கொள்கையால் இறந்த ஈழ மக்களின் எண்ணிக்கை 50000. போர்நடைபெற்ற பதினெட்டு மாதங்களில் இறந்து போனவர்களின் பெயர்ப்பட்டியலைக்கூட தயாரிக்க முடியவில்லை, உயிர்சேதம் அதிகமாக இருக்கலாம் என உலகம் கதை சொல்கிறது. இரட்டை கோபுரத்தாக்குதலில் இறந்ததும் பொதுமக்கள்தான் ஈழத்தில் இறந்ததும் பொதுமக்கள்தான். ஒரே ஒரு வித்தியாசம் அவர்கள் ஆதிக்க வர்க்கத்தினர் வெள்ளை நிறத்தவர் இவர்கள் அடிமை வம்சம் கருப்பு நிறம்.

 முள்வேலிச் சிறைக்குள் இருக்கும் மூன்று இலட்சம் மக்களையும் சுதந்திரமாக நடமாட அனுமதித்தால் மீண்டும் போர் வெடிக்கும் என்கிறது சிங்களம். தமிழர்கள் உரிமை மறுக்கப்பட்டதாலேயே ஆயுதம் ஏந்தினார்கள். நிகழும் கொடுமைக்கும் சேர்த்து நாளை ஆயுதம் ஏந்துவார்கள். அவர்களுக்கான உரிமை வழங்குவதுதான் தீர்வே தவிர மொத்த தமிழ்மக்களையும் சிறைப்பிடிப்பதுவும், இனவழிப்பும் அல்ல.

 ஐநாவும், உலகநாடுகளும் மவுனமாய் அறிக்கை மட்டுமே வெளியிட்டுக் கொண்டிருப்பதன் மூலம் ஒரு நாடு தன்னாட்டிற்கு உள்ளேயிருக்கும் சிறுபான்மை இனத்தை தீவிரவாதத்தின் பெயரால் அழிப்பதற்கு அனுமதி வழங்கியதாகவே கருத முடியும்.
 
 நாளை இதையே பின்பற்றி இந்தியா அஸ்ஸாமியர்களையும், நாகர்களையும் மலைவாழ் மற்றும் காஷ்மீர் பொதுமக்களையும் வேட்டையாட முடியும். திபெத்தியர்களே இல்லாத் திபெத்தை சீனாவால் உருவாக்க முடியும். பாகிஸ்தான் சீக்கியர்களும் இந்துக்களும் இல்லாத பாகிஸ்தானை உருவாக்கும்

 நடந்தது, நடந்துக்கொண்டிருப்பது ஈழ இனத்திற்கு மட்டுமல்ல, இது ஒரு முன்னோட்டம். இதற்கெதிராய் அனைத்து மனிதாபிமான சக்திகளும் இணைந்து போராடி ஈழத்தில் சிறைவைக்கப்பட்ட மக்களுக்கு வாழ்க்கையையும், நடந்த படுகொலைகளுக்கு நீதியும் பெற்றுத் தர வேண்டும்

 இல்லையெனில் போலித்தேசியத்தின் பெயரால், ஊழல் அரசியல்வாதிகளின் சுயநலத்திற்காய், அந்தந்த நாட்டிலுள்ள சிறுபான்மை இனங்கள் வேட்டையாடப்படும்.

- வெ. தனஞ்செயன்

Pin It