நிரந்தர வேலைவாய்ப்பின்மைக்கு மாற்று வழியாகப் பார்க்கப்படும் தொழில் முனைவு என்பது இந்தியா போன்ற பாரம்பரிய கலாச்சாரத்தை உலகிற்குப் பறைசாற்றும் நாடுகளுக்குப் பொருந்துமா என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. ஒரு நாட்டின் வளர்ச்சியை வேலையின் தரம், வருமானத்தின் நிலைப்புத் தன்மை, உற்பத்தித் திறன், திறன் மேம்பாடு, புதுமை, தொழில் உருவாக்கம் மற்றும் சமூகத்தினை உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றைக் கொண்டே மதிப்பிட முடிகிறது.
இந்தியா உலக அரங்கில் வேகமாக வளர்ந்து வரும் மிகமுக்கிய பொருளாதார நாடாகப் பார்க்கப்படுகிறது. உலக பொருளாதார வளர்ச்சியில் 2.9% பங்கினைக் கொண்டு வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அதேவேளையில், இந்தியாவின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 4.2% எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புள்ளிவிவரங்கள் நமக்கு விளக்கும் பாடம் என்னவென்றால், இந்தியாவில் இளைஞர்களின் வேலையின்மை ஒட்டுமொத்த வேலையைவிட அதிகமாக உள்ளது என்பதுதான். எனவே, வேலை இல்லாதவர்கள் அனைவரும் தொழில் முனைவோராக மாறவேண்டும் என்ற எளிய அணுகுமுறை சமூகத்தில் போதுமானதாக இல்லை.
அதேசமயம், தொழில் முனைவு என்பது வேலைவாய்ப்பின்மைக்கான மாற்று அல்ல என்பதும், தொழில் முனைவு என்பது நெறிசார்ந்த விடயம் என்பதும் அறிந்து கொள்வது அவசியம். மேலும், இந்தியாவின் மக்கள்தொகை வளத்தை மனித மூலதனமாக மாற்றுவதும், அதேநேரத்தில் சிறந்த தரமான மனிதவளத்தை மேம்படுத்துவதும் இன்றைய வளர்ச்சிக்கு அவசியமாகிறது. இதனை எவ்வாறு மேற்கொள்வது என்பதற்கான விடையும் நம்மிடம்தான் உள்ளது என்பதனைச் சற்று பின்நோக்கிப் பார்த்தோம் என்றால் இயல்பாகப் புரியும்.
நம் மனித இனமானது பல்வேறுபட்ட பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டும், பல்வேறு நாகரிக மேம்பாட்டினையும் கடந்து நாம் காணும் இன்றைய வளர்ச்சியை எட்டிப்பிடித்துள்ளது. இத்தகைய மனித முன்னேற்றத்தைப் பழைய கற்காலம் மற்றும் புதிய கற்காலம் என வரலாட்டாளர்கள் வகைப்படுத்துகின்றனர். இதில் புதிய கற்காலமே மனித இனத்தை அதிகப்படியான வளர்ச்சியை நோக்கியும், நாகரிக மாற்றத்தின் உச்சத்தினைத் தொடுவதற்கும் வழிவகை செய்தது. நாமும் கூட அந்த வகைபாட்டில்தான் பயணிக்கின்றோம். சமுதாயக் கட்டமைப்பிற்குத் தன் வாழ்வியல் முறையிலிருந்து அதிக மற்றும் அரிய பல கண்டுபிடிப்புகளைப் புதிய கற்கால மனிதனே வழங்கியுள்ளான். அந்தக் கண்டுபிடிப்புகளானது ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டும் வந்துள்ளது. இதில் இந்தத் தொழில் முனைவு என்பது மனிதனின் வாழ்வியல் சார்ந்ததா அல்லது ஏதும் தனிப்பட்ட வாழ்வாதார முன்னெடுப்பாக இருந்ததா அல்லது இருக்கப் போகிறதா என்பதைப் பின்வரும் பகுதிகளில் காண்போம்.
புதிய கற்கால மனிதன் விலங்கு வாழ்க்கை முறையிலிருந்து மனிதனாக நிமிர்ந்து நின்றான். இரண்டு கால்களை நடக்கப் பயன்படுத்திக் கொண்டான். நெருப்பும் சக்கரமும் கண்டுபிடித்தான். உணவினை வேகவைத்து உண்டான் என்பதுபோக, அவனது வாழ்வியல் தொடர்கதையில் கிடைத்ததை உண்டான். பின்பு தனக்கான உணவினையும் இன்னபிற தேவையானவற்றையும் கண்டறிந்ததன் மூலம் அதனை உருவாக்கி வெற்றியும் கண்டான். அந்தப் பயணத்தின் மையப்புள்ளி என்னவென்றால், தனக்கான உணவைக் கண்டறிந்து, உணவினை உருவாக்கத் தொடங்கிய மனிதன் நிலப்பரப்பில் தனக்கான வரையறையை மேற்கொள்ளவும் தொடங்கினான். அதற்கான முன்னெடுப்பில் நிலப்பரப்பின் வகையறிந்து உற்பத்தியில் ஈடுபட்டான்.
அங்குதான் சமூகக் கட்டமைப்பில் அனைவரும் உற்பத்தி வளையத்தில் இணைய வேண்டும் என்றும், அனைவரும் முக்கியமானவர்கள் என்றும் உணரத் தொடங்கினான். அதன்மூலம் தனக்கான நிலப்பரப்பில் உற்பத்தி செய்யப்பட்டவை தனது தேவைக்குப் போக மீதமுள்ளவற்றைப் பிறருக்கு அளித்தான். மேலும், தனக்குத் தேவையானவற்றைப் பிறரிடமிருந்து பெற்று முதல் வணிக செயல்பாட்டையும் தொடங்கி வைத்தான். பின்னாளில் அது பண்டமாற்று முறை என்றும் அறியப்பட்டது. காலப்போக்கில் இந்தப் பண்டமாற்று முறையில் பண்டங்களின் தேவை மற்றும் பங்களிப்பு சேர்ந்து பண்டங்களுக்கு இடைமாற்றியாகவும், பண்டங்களின் மதிப்பினை நிர்ணயம் செய்யும் கருவியாகவும் ‘பணம்’ என்ற பொருளை உள்ளீடாகக் கொண்டு வந்தான் மனிதன். அதன்பிறகு பண்டமாற்று முறைக்குப் பதிலாக பணமாற்று முறை நடைமுறைக்கு வந்தது.
தனக்குத் தேவையானவற்றைப் பெறுவதற்காக ஏதோ தன்னால் முடிந்தவற்றை உற்பத்தி செய்து மற்றவர்களுக்கு வழங்கிவந்த மனிதன், பின்னாளில் பணத்திற்காக அனைத்தையும் மாற்றும் முறைக்கு மாறினான். அதன்மூலம் ஒருசாரார் உற்பத்தியிலிருந்து விலகி, தனது உழைப்பினைப் பணத்திற்கு வழங்கும் நிலைக்கு வந்தனர். அப்போதுதான் வேலைக்குப் பணம், அதாவது ‘சம்பளம்’ என்ற நிலை உருவானது. எனவே அதற்கு முன்பு வாழ்ந்தவர் அனைவரும் தொழில் முனைவுக் கூறுகளோடு வாழ்ந்து வந்தது புலப்படுகிறது.
மேலும், பணத்திற்காகப் பொருட்களை மாற்றிக் கொள்ளும் பணமாற்று முறைக்கு வந்த காரணத்தினால் மனிதக் குழுக்களில் சிலர் பணத்திற்காக உற்பத்தியை கைவிட்டு வேலை செய்யும் இடத்திற்கு வருகின்றனர். அதற்கு முன்பு வேலை செய்தவர்கள் கூட பொருட்களுக்காகவும் உணவிற்காகவும் மட்டுமே வேலை செய்திருக்கிறார்கள் என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளும் உண்டு. பின்னர் நாளடைவில் இந்தக்குழுக்கள் பெருகி, பணத்தை வேலை செய்து ஈட்டுபவர்கள் என்றும், அவர்களுக்காக பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் மற்றும் அதனை விற்பவர்கள் என்றும் அதன் தேவைக்குத் தகுந்தாற்போல குழுக்கள் விரிவடையத் தொடங்கியது.
இதனால் காலப்போக்கில் பணத்தைப் பிரதானப்படுத்தி அதனை ஈட்டும் நபர்கள் மிகமுக்கியமான இடத்திற்கு வரும் சூழலும் ஏற்பட்டது. மேலும், இது பிரபலமானதற்கு இதில் தொழில் முனைவோரைப் போன்று பணம் ஈட்டுவதில் நம்பகமற்ற தன்மை இல்லாமல் இருப்பதும் ஒரு காரணமாகப் பார்க்கப்பட்டது. இதன் விளைவாக விற்பவர்கள் எனவும், வாங்குபவர்கள் எனவும் அவர்களுக்கான தொழில் தர்மங்களும் சமூகத்தில் வழங்கப்படலாகின.
காலப்போக்கில் மக்கள்தொகை பெருக்கத்தின் விளைவாக பணத்திற்காக வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலையில்லாத நிலை ஏற்பட்டது. அதன் காரணமாகத்தான் வேலைவாய்ப்பின்மைக்கு மாற்றாகத் தொழில் முனைவு பார்க்கப்படுகிறதா என்கிற கேள்வி எழுகிறது. வேலைவாய்ப்பின்மையின் முக்கியமான பிரச்சனைகளை உணர்ந்த அரசுகளும், இன்னபிற அமைப்புகளும் "வேலை செய்பவர்களாக இருக்காதீர்கள், வேலை வழங்குபவராக இருங்கள்; உங்கள் தொழிலுக்கு நீங்கள்தான் முதலாளி" என்பது போன்ற விளம்பர முன்னெடுப்புகளை மக்கள் மத்தியில் விதைக்கத் தொடங்கினர்.
காலமாற்றத்தினாலும், நாகரிக வளர்ச்சியிளினாலும் நம் மரபணுவில் உள்ள தொழில் முனைவுத் தன்மையை மீட்டெடுக்க வேண்டிய தருணத்தில் நாம் அனைவரும் உள்ளோம். ஏன் என்றால் நம் முன்னோர்கள் அனைவருமே தொழில் முனைவோர்தான், உற்பத்தியாளர்கள்தான், விவசாயிகள்தான் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள்தான்; இவை அனைத்தும் நம் மரபில் உள்ளவைகள்தான்.
மேலும், தொழில் முனைவு என்பது நம்மிடையே கோடிகள் கொண்டவர்கள் மட்டுமே செய்வது என்பதும், சம்பளத்திற்காகப் பணிக்குச் செல்பவர்கள் செய்யக்கூடாது என்பதும், வேலை கிடைக்காதவர்கள் நிலையான வருமானம் பெறுவதற்காகச் செய்வதும் அல்ல, அரசாங்கம் மற்றும் நிரந்தரத் தனியார் வேலைகளோடு ஒப்பிடுகையில் நம்பகத் தன்மை கொண்டதும் அல்ல என்பன போன்ற கருத்துக்களைப் புறந்தள்ளிவிட்டு, தொழில் முனைவு என்பது நமது இயல்பு வாழ்க்கை எதுவாகினும் சரி, அது பாதிக்கப்படாமல் நாம் முன்னெடுக்கும் சிறு நடவடிக்கையும் இதில் சேரும் என்ற கருத்தியலை வளரும் தலைமுறையினருக்கு விதைத்து, நவீன தொழில் முனைவுக் கோட்பாடுகளை அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
கடந்த காலத்தில் ஒரு குடும்பத்தில் வேலை பார்ப்பவர் என்றால் பெரும்பாலும் ஆண்களாகத்தான் இருப்பர். பின்னாளில் அது ஆண், பெண் என்ற பேதமற்றுப் போனது. தற்போதைய சூழ்நிலையில் ஒரு குடும்பத்தில் கணவன் மற்றும் மனைவி இருவர் பொருள் ஈட்டினாலும், மூன்றாவதாக ஏதோ ஒரு தற்சார்பு பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற மனநிலை நம்மிடையே வளர்ந்து வந்துள்ளது. அதற்குக் காரணம் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் போதுமான பொருளாதாரப் பின்துணை இல்லாமையே. தற்போதே இந்த நிலை என்றால், இனிவரும் காலங்களில் பொருளாதார உந்துதலுக்கு ஆட்படா வண்ணம் மனிதர்களால் மாறிவரும் உலகைத் தன்வசப்படுத்த இயலாது.
எனவே வளரும் தலைமுறையினரிடையே மூன்றாவது தற்சார்பு பொருளாதாரம் குறித்த தன்முனைவுக் கருத்துக்களை அதிகம் விதைக்க வேண்டும். அதன்மூலம் ஒரு குடும்பத்தில் ஏதோ ஒரு தொழில் முனைவு நிகழ்வு நடைபெற வித்திட வேண்டும். பணத்திற்காக வேலையை மட்டுமே தேர்ந்தெடுப்பது என்பது ஒரு வழிப்பாதையைத் தெரிவு செய்வது போன்றது.
தொழில்புரிவதற்கு அதிக அளவில் முதலீடு செய்து தொழில் தொடங்க வேண்டும் என்பதை விடுத்து, தன் குடும்பத்திற்குத் தேவையான காய்கறிகளைத் தாங்களே விளைவிப்பது, ஆடைகளை உருவாக்குவது மற்றும் வடிவமைப்பது, வாகனங்களை பழுதுபார்ப்பது, இறைச்சிக்காக கோழிகள், மீன்கள் மற்றும் ஆடுகளை வளர்ப்பது, செல்பேசிக்கான மென்பொருட்களை உருவாக்குவது, நிதி அறிக்கைகளைக் கணினிபடுத்துவது, வீட்டில் இருந்தபடியே வரிகள் மற்றும் மின்கட்டணம் செலுத்துதல் போன்ற பிற கட்டணங்களைச் கட்டி மக்களுக்கு உதவி செய்து அதன்மூலம் பணம் ஈட்டுவது என்பன போன்றவைகளும் தொழில் முனைவுதான் என்பதை அனைவரும் உணரும் நிலை ஏற்படுத்த வேண்டும்.
வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் உலகின் அதிக இளைஞர் சக்தியையும், அறிவை மூலதனமாகக் கொண்ட முதல் நாடு என்ற பெருமை கொண்ட நம் இந்தியாவில் இதுபோன்ற தொழில் முனைவு பெருக வேண்டும். அதன்மூலமே ஒருங்கிணைந்த மற்றும் உள்ளார்ந்த வளர்ச்சி என்ற இலக்கை நாம் அடைய முடியும். இதனை அடிப்படையாகக் கொண்டுதான் நம் நாட்டினை உலக அரங்கில் வல்லரசு நாடுகளின் வரிசையில் இடம்பெறச் செய்ய முடியும். மேலும், சமத்துவ பொருளாதாரம் கொண்ட முதல் நாடு இந்தியா என்ற பெருமையை அடைய முடியும்.
எனவே நாம் அனைவரும் மரபின் அடிப்படையில் உற்பத்தியாளர்கள்தான். அதனை மேம்படுத்தும் விதமாக நம்மைச் சுற்றியுள்ள வாய்ப்புகள் மற்றும் நாம் இருக்கும் இடத்தில் உள்ள சூழல்களை மூலதனமாகக் கொண்டு நமக்குத் தேவையான ஏதோ ஒன்றை உற்பத்தி செய்வதன் மூலம் நம் செலவுப் பட்டியலில் மீதப்படுத்தும் தொகைதான் நம் தொழலின் முனைவின் மூலம் ஈட்டிய பணம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இதற்காக நம் தேவை அறிந்து, அதற்கான உற்பத்தி முறைகள் மற்றும் உத்திகளைத் தெரிந்துகொள்ளும் பயிற்சிகளை கற்றுத் தேர்ந்து, அதனை வளரும் இளந்தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கவேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் நம்மை ஒருநாள் மீண்டும் தற்சார்பு பொருளாதாரத்திற்கு இட்டுச் செல்லும். அதன்மூலம் ஒருங்கிணைந்த மற்றும் உள்ளார்ந்த வளர்ச்சி ஏற்படும். அதன்மூலம் ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமத்துவ பொருளாதாரம் கொண்ட சமுதாயம் உருவாகும் என்பது திண்ணம்.
- முனைவர் வீ. கிருஷ்ணகுமார், உதவிப் பேராசிரியர், முதுகலை வணிகவியல் மற்றும் ஆராய்ச்சித் துறை, ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி, போடிநாயக்கனூர்.