யார் எவ்ளோ பெரிய ஆளானாலும்.. அவனுக்குள்ள ஒரு சிறுவன் இருப்பான். அவன சரியா கண்டு பிடிக்கறவன்கூட அவன் எந்த வித ஈகோவும் இல்லாம சேர்ந்துக்குவான். அந்த சிறுவனுக்கு ஒரு வடிவம் இருக்கு. அந்த வடிவம் செல்லப் பெயர்களால் பூத்திருக்கிறது.
கர்ண கொடூர வினை ஆற்றிக் கொண்டிருப்பவரிடம் அவருடைய சிறுவயது செல்லப் பெயரைச் சொல்லி அழைத்துப் பாருங்கள். பனி போல அமிழ்ந்து விடுவார். தன்னையும் மீறி சிறு புன்னகை வருவதை அவரே நினைத்தாலும் தடுக்க முடியாது. எத்தனை பெரிய கோபக்காரனையும் அவனுடைய செல்லப் பெயர் மாயக் கயிறாகி அவனைக் கட்டுப்படுத்தும். (விதிவிலக்குகள் உண்டு) . அவன் நினைவுகளில் ஒரு சிறுவனின் உயரம் அந்தப் பெயரின் வழியே அவனைச் சட்டென திரும்பி பார்க்கச் செய்யும்.
தன்னைத் தானே நோக்கும் மிக நெருக்கமான தருணம் செல்லப் பெயர்களால் விளம்பப் படுகிறது. செல்லப்பெயர்கள் நம்பிக்கை விதைக்கும்.
நண்பர்களே.... யோசித்துப் பாருங்கள்.
உங்களுக்கும் ஒரு செல்லப்பெயர் இருந்திருக்கும்.
அதை உங்கள் வீட்டில்... தெருவில்... ஊரில் உங்களுக்கு நெருக்கமானவர்கள் கூப்பிட்ட காலங்கள் அப்படியே நினைவினில் மிதப்பதை உணர்ந்திருப்பீர்கள் தானே. பொதுவாகவே எல்லாருக்குமே இந்த செல்லப்பெயர் இருக்கும். அது ஒரு வாழ்வியல் இயல்பு. முறையான பெயர் வைப்பதற்கு முன் இந்தப் பெயர் அப்படியே பேச்சு வாக்கில் போகிற போக்கில் சூட்டப்பட்டிருக்கும். எப்போதிருந்து இப்படி அழைக்கிறார்கள் என்று யோசித்தால் சரியான கணக்கு தெரியாது. அது அதுவாக நிகழ்ந்திருக்கும். அதன் வழியே அந்தப் பெயருக்குரியவர் தன்னை சிறுபிள்ளையாகவே உணர்வார்.
எப்போதும் செல்லப் பெயரால் அழைக்கப்படுபவர் ஏதோ ஒரு சூழலில் சொந்தப் பெயரால் அழைக்கப்பட்டால் கோபித்துக் கொள்வார். வெளிக்காட்டாவிடினும்.. உள்ளே ஒரு வகை உறுத்தல் இருக்கும். என்ன இன்னைக்கு இந்தப் பேர்ல கூப்பிடுறார் அப்பா என்று மகளுக்கு தோன்றும். என்ன இன்னைக்கு அண்ணன் இப்பிடி கூப்டார் என்று தம்பிக்கு தோன்றும்.. இந்த தோன்றுதல் பொது. செல்லப்பெயர் தவிர்க்கப் படுகையில் சொந்தப் பெயரில் துக்கம் படிவத்தை உணர்ந்தவர் உணர்வார்.
செல்லப் பெயர்களால் அழைக்கப்படுவதை மனம் இயல்பாகவே விரும்புகிறது. எதிர்பார்க்கிறது. ஊருக்கே ராஜாவானாலும் வீட்டுக்குள் குழந்தையாக திரியத்தான் எந்த மனமும் விரும்பும். அதை உறுதிப்படுத்துவது அவர்களுக்கான செல்லப் பெயர்களே. மிக மெல்லிய கோட்டில் ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்பு வரிசை போல இந்த செல்லப்பெயர்கள். காணும் போதெல்லாம் அழகு கூடும் சொல் பழக்கம் அது. சகோதர சகோதரிகளுக்குள் இந்த செல்லப் பெயர்கள் தனித்துவ அழகு கொள்ளும். அழைப்பு மணியை அணைக்கும் பட்டாம் பூச்சி போல.. அந்தப் பெயரில் ஆலிங்கனம் மேவிடும்.
பட்டப்பெயர் பின்னாளில் நண்பர்களாலோ நமது செயல்பாட்டின் வழியாகவோ வந்திருக்கும். ஆனால் செல்லப் பெயர் கொஞ்சுதலின் வழியாக கொண்டாடுவதில் வழியாக பாசத்தின் வழியாக பற்றின் வழியாக அப்படி அப்படியே வந்திருக்கும். கெடா மீசைக்காரராக இருப்பார். அவர் வெளியே தான் புலி. வீட்டுக்குள் அந்தச் செல்லப் பெயரில் எலி போல அலைந்து கொண்டிருப்பார். அது ஓர் அழகு.
செல்லப்பெயர்கள் சிறுவயதில்தான் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றில்லை. எந்த வயதிலும்.. அது தன் கிரீடத்தை அடைந்திருக்கலாம். சிலருக்கு காதல் வந்த பிறகு கிடைத்திருக்கும். சிலருக்கு நல்ல நண்பன் வந்த பிறகு கிடைத்திருக்கும். சிலருக்கு வேலை செய்யும் இடத்தில் கிடைத்திருக்கும். சிலருக்கு கணவன் வந்த பிறகு கிடைத்திருக்கும். ஏன் பிள்ளைகள் வந்த பிறகு கூட கிடைத்திருக்கலாம்.
பேரன் பேத்தி வந்த பிறகும் மகன் மகளை செல்லப்பெயரால் அழைப்பதையே பெற்றோரும் விரும்புவர். அதில் கவனம் கூட இருக்காது. அது ஒரு பதியப்பட்ட இயல்பாகவே வந்து போகும். மகன்களும் மகள்களும் கூட அதையே தான் விரும்புவார்கள். ஏதாவது சந்தர்ப்பத்தில் அம்மா அப்பாவிடம் இருந்து அலுவலகப் பெயர் வந்து விட்டால் திக்கென தடுமாறவும் செய்வார்கள்.
செல்லப்பெயர்களின் வழியே உரிமை கோரப்படுகிறது. மற்றவர்கள் அலுவலக பெயரில் அழைக்கையில் ஒருவன் மட்டும் செல்லப் பெயரில் அழைக்கிறான் என்றால் அந்த ஒருவனுக்கு நெருக்கம் அதிகம் என்று அர்த்தம். அந்த ஒற்றை அழைப்பிலேயே நடந்து கொண்டிருக்கும் எந்த ஓர் உரையாடலும் மொத்தமாக அழைக்கிறவன் பக்கம் திரும்பி விடும். கவனித்ததுண்டா.
அதே போல சம்பந்தம் இல்லாதவங்க செல்லப் பேரை சொல்லி அழைத்தால் கோபம் வரும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
பேபி... குட்டி... குட்டிப்பா... குட்டிம்மா... பாப்பா... பாப்புக்குட்டி... அப்புக்குட்டி... ராஜா... ஸ்வீட்டி... புஜ்ஜி... பொன்னு... வாலு... பப்பி... சிஞ்சு... சக்கரை... கன்னுக்குட்டி... தம்பு... பப்பு... சின்ன குட்டி... தங்கம்... வைரம் என செல்லப் பெயர்களின் வரிசை நீளும். இதில் இந்த பாப்பா என்பதும் குட்டி என்பதும் பொது உடமை போல. பல வீடுகளில் இயல்பாகவே உலாவும்.
எனக்கு மாமா வீட்டில் குட்டி. பாட்டி வைத்ததோ மயிலு.
ஒருமுறை உங்கள் பெயரையும் சொல்லிப் பாருங்கள்.
எப்போதெல்லாம் மனம் எங்கோ மாட்டிக்கொண்டு இப்பெரும் உலகத்தில் தவிக்கிறதோ அப்போதெல்லாம் அந்தப் பெயர் மாயமாய் வந்து தழுவிக் கொள்ளும். ஒரு சிற்றொளியைப் போல உங்களைச் சுற்றிச் சுற்றி உங்களையே நிரப்பும்.
- கவிஜி