அறிமுகம்
உலக அளவில் காற்று மாசு ஒரு பேரிடராக உருமாற்றம் பெற்று வருகிறது. பூமிப் பந்தில் தீங்கு விளைவிக்கும் இம்மாற்றம் ஒரு தீவிரப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதைக் கட்டுப்படுத்த முடியாமல் மத்திய-மாநில அரசுகள் திணறி வருகின்றன. நீர், நிலம், காற்று, காடுகள் ஆகியவை இயற்கை வளங்களாகக் கருதப்படுகின்றன. அவற்றால் மனித மற்றும் விலங்கினங்கள் பயன்பெற்று வருகின்றன. இயற்கை வளங்களைப் பயன்படுத்த முடியாத அளவுக்கு அவற்றில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகளால் மாற்றங்கள் ஏற்பட்டு மனித வாழ்வு, உயிரினங்களுக்குத் தீங்கிழைக்கின்ற தன்மையை ‘மாசுபாடு' என்று வழங்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இதைப் பொல்யூஷன் (Pollution) என்று அழைக்கிறோம். மனிதனின் வாழ்விற்கு ஆரோக்கியமான உணவும், மாசு இல்லாத காற்றும் சுத்தமான குடிநீரும் இன்றியமைதாவையாகும். இன்றியமையாத இம்மூன்றும் இக்காலத்தில் மாசுபாட்டிற்கு உள்ளாகியுள்ளன. இந்தியா உட்பட உலக நாடுகளிலுள்ள பெருநகரங்களில் காற்று மாசு என்பது தீராத பிரச்சினையாக உள்ளது. காற்று மாசுபாட்டில் சிக்கித் திணறிக்கொண்டிருக்கும் இந்தியாவின் தலைநகர் தில்லிவாழ் மக்களின் உயிர்க் கொல்லியாக மாறிவரும் காற்று மாசின் புகை முகத்தை அடையாளம் காட்டுவதாக இக்கட்டுரை அமைகிறது.
காற்று மாசின் வகைகளும் சுற்றுச் சூழலும்
மாசுபாட்டின் வகைகளாக, காற்று மாசு, நீர் மாசு, நில மாசு, ஒலி மாசு மற்றும் ஒளி மாசு ஆகியவற்றைக் குறிப்பிடலாம். நீர் மற்றும் நில மாசுபாடு அந்தந்த நீரும் நிலமும் சார்ந்த எல்லைகளுக்கு உட்பட்டது. அவற்றால் ஏற்படும் நன்மை தீமைகள் அக்குறிப்பிட்ட இடங்களையே பாதிக்கும். ஆனால், காற்று மாசு அப்படியில்லை, குறிப்பிட்ட எல்லைக்குள் அடங்காதது. எல்லை தாண்டி தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.
தொழிற்சாலைப் புகை, வாகனப் புகை, முறையற்ற கழிவு மேலாண்மை, மக்கள்த் தொகைப் பெருக்கம், நகரமயமாக்கல், கட்டுமானக் கழிவுகள், காடழிப்பு, அதிகப்படியான இயற்கை வளங்களைப் பயன்படுத்துதல் போன்றவை மாசுபாட்டிற்கான அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. காற்றில் கலக்கக்கூடிய நுண்ணிய நச்சுக்களால் மாசுபாடு ஏற்பட்டு மனித ஆரோக்கியம், விலங்குகள், மற்றும் உணவுப் பயிர்கள் பாதிப்புக்குள்ளாகின்றன. காற்று மாசுவால் காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல், நீர் ஆதாரங்கள் குறைதல் மற்றும் விலங்குகள், தாவரங்கள் எனும் பல்லுயிர் இழப்பு போன்ற சுற்றுச் சூழல் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. நீர், காற்று, நிலம் ஆகிய மூன்றும் அதிக மாசுபாட்டிற்கு ஆட்படுகின்றன. காடுகளும் மாசுபடுகின்றன என்று சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.
உயிர்க்காற்று என்னும் பிராண வாயு
‘நாம் வாழும் பூமியைச் சூழ்ந்துள்ள வளி மண்டலத்தில் 79% நைட்ரஜனும், 20% பிராண வாயு என்னும் ஆக்ஸிஜனும், 3% கரியமில வாயுக்களும் உள்ளன. (இ. முருகராஜ், தினமணி, 14.3.2019). காற்றானது பல வகையிலும் இன்றியமையாதது. மனித மற்றும் பல்லுயிர் வாழ்விற்குக் காரணமான காற்று பூமியின் மேற்பரப்பில் உலவும் ஆக்ஸிஜன் என்னும் உயிர்க்காற்று ஆகும். இந்த உயிர்க் காற்றின்றி மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள் உயிர் வாழ முடியாது. எனவேதான் காற்று ‘பிராண வாயு' என்றழைக்கப்படுகிறது. பிராண வாயுவான காற்றின் நன்மைகளைச் சங்கப் பாடல் ஒன்று இவ்வாறு பதிவு செய்கிறது.
‘வளி பொரு மின்னொடு வான் இருள் பரப்பி
விளிவு இன்று கிளையொடு மேலமலை முற்றி
தளி பொழி சாரல் ததர் மலர் தா அய்’ (பரிபாடல், வையை - 12 : 1-3 )
‘காற்றினால் மோதப்பட்ட மேகம் மின்னலையும் இருளையும் மாறி மாறிப் பரப்பித் தன் இனத்துடன் போய் மலையை அடைந்து அதனைச் சூழ்ந்து, இடைவிடாமல் மழை பெய்தது’ என்பது இப்பாடல் அடிகள் தரும் திரண்ட கருத்தாகும். ‘மேகம் நகர்வதும் ஒன்றாகி அடர்ந்து மழை பொழிவதும் காற்றால், அக்காற்றை மாசுபடுத்தும் பொழுது தூய மழை நீரும் நோய் பரப்பும் பாதக நீராக மாறுகிறது' என்கிறது குரானின், 25-48-ஆவது வசனம். ‘காற்று வீசாவிடில் இவ்வுலகம் நாற்றத்தில் நலியும், அழியும்’ என்று அறிவிக்கிறார் வக்கீஉ (ரஹ்) என்னும் அறிஞர்.
நன்மை விளைவித்த அதே காற்று இன்று ‘காற்று மாசு’ எனும் தீங்கு விளைவிக்கும் ஒன்றாக மாறியிருப்பது காலத்தின் கோலம். இயற்கை நமக்குக் கொடையாக வழங்கிய காற்றை மாசுபடுத்தினால் அதனால் விளையும் மோசமான பாதிப்புகளை நாம் அனுபவிக்க வேண்டி வரும். காற்று மாசைக் கட்டுப்படுத்தவில்லையெனில் நாமெல்லாம் பெரிய அளவிலான பாதிப்பைச் சந்திக்க நேரிடும் என்று உலகச் சுகாதார அமைப்பு எச்சரிக்கின்றது.
காற்று மாசு எனும் உயிர்க்கொல்லி
மக்களால் கையாளப்படும் பல்வேறு எரிபொருள்ப் பயன்பாடு மூலம் காற்று மாசு அதிகரிக்கிறது. தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் புகை, நிலக்கரியைப் பயன்படுத்தி மின்னுற்பத்தி செய்யும் நிலையங்கள் வெளியிடும் புகை, மோட்டார் வாகனப் புகை, பெயிண்ட் பயன்பாடு, கேசத்தில் தெளித்துக்கொள்ளும் ரசாயன ஹேர் ஸ்பிரே ரகங்கள், வார்னிஷ் உள்ளிட்டவற்றில் இருந்து வெளியாகும் வேதிப்பொருள்கள் காற்றில் பரவி நச்சுத்தன்மையை அதிகரிக்கச் செய்கின்றன. (பா. ராஜா. தினமணி, 24.3.2018) காற்றில் கலந்திருக்கும் இந்த நச்சு என்னும் மாசு உலக அளவில் மிகவும் மோசமான உயிர்க்கொல்லியாக உருவெடுத்துள்ளது.
காற்று மாசு : சர்வதேச சர்வே
சர்வதேச அளவில் முப்பது கோடிக் குழந்தைகள் காற்றுமாசு நிறைந்த பகுதிகளில் வசிப்பதாக யூனிசெப் நிறுவனம் தெரிவிக்கிறது. உலக அளவில் காற்று மாசினால் ஆண்டுதோறும் சுமார் 65 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என்று சர்வதேச எரிசக்திக் கழகம் எச்சரித்துள்ளது. இந்திய அளவில் காற்று மாசுபாடு காரணமாக ஆண்டுக்கு 12 லட்சம் பேர் உயிரிழப்பதாக ‘கிறீன்பீஸ் இந்தியா’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவன அறிக்கை தெரிவிக்கின்றது. ‘பி.எம். 10 எனப்படும் காற்று மாசுக்குத் தொழிற்சாலை மாசு 26 சதவீதமும், வாகனங்கள் மூலம் ஏற்படும் மாசு 27 சதவீதமும், விறகு அடுப்பு மூலம் ஏற்படும் மாசு 19 சதவீதமும், சீரற்ற சாலைகள் மூலம் ஏற்படும் மாசு 15 சதவீதமும், தொழிற்சாலைப் பகுதிகளால் ஏற்படும் மாசு 7 சதவீதமும், குப்பை எரிப்பு மூலம் ஏற்படும் மாசு 5 சதவீதமும் தான் காரணம்' என்று அதே ‘கிறீன்பீஸ் இந்தியா’அமைப்பின் நிபுணர்கள் கூறுகின்றனர்.
உலகம் முழுவதும் 10 பேரில் 9 பேர் மாசடைந்த காற்றைச் சுவாசிப்பதாகவும், இதனால் ஆண்டுதோறும் சுமார் 70 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என்றும் உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. (தினமணி, தில்லிப் பதிப்பு, 3.5.2018) குளிர் மற்றும் பனிக் காலங்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் நடைப்பயிற்சி உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். நச்சுக் காற்றைச் சுவாசிப்பது புகை பிடிப்பதற்குச் சமமானது என்று கருதப்படுகிறது. மாசடைந்த காற்றைத் தொடர்ந்து சுவாசித்தால் மனிதனின் சராசரி ஆயுள் காலம் குறைவதாக மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
காற்றின் வழியாக மிக எளிதில் நோய்கள் பரவுவதாகவும், எடை குறைந்த குழந்தைகள் பிறக்கக் காற்று மாசு காரணமாக இருப்பதாகவும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கின்றது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நுரையீரல் வளர்ச்சியும் இயக்கமும் குறைந்து நிமோனியா காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
நச்சுக் காற்று : பகையாகும் புகை
நகரக் குப்பைக் கிடங்கு எரிப்புப் புகை, அலுமினியம், நெகிழி, ரப்பர் கலந்த கழிவுப் பொருட்களைத் திறந்த வெளியில் எரிப்பது முதலான செயற்கையான செயல்களால் காற்று மாசுபடுகிறது. தொழிற்சாலைகள் வெளியிடும் புகையினால் உண்டாகும் நைட்ரஜன் மற்றும் கந்தக ஆக்சைடு, பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலைகளிலிருந்து வெளிவரும் வீரியமிக்க ஹைட்ரோ கார்பன், வாகனங்களிலிருந்து வெளிவரும் கார்பன் மோனாக்சைடு மற்றும் புகை, ஹைட்ரோ கார்பன், உலோகம் பிரித்தெடுக்கும் ஆலைகளிலிருந்து வெளிவரும் உலோகத் துகள்கள், ரசாயனத் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கரிமச் சேர்மங்கள் ஆகியவை காற்றில் அதிகமாகக் கலக்கும் போது நச்சுத் தன்மையாக மாறி மாசுபட்டை ஏற்படுத்துகின்றன எனக் கருதுகிறார் பாறப்புறத் இராதாகிருஷ்ணன். (தினமணி- 11.4.2017)
நுகர்வுக் கலாச்சாரம், தனி வாகனப் பெருக்கம், சரக்கு வாகனப் புகை, குறைவான பொதுப்போக்குவரத்துப் பயன்பாடு, மின் உற்பத்தி நிலையங்கள், எரிபொருள் உற்பத்தி, கட்டிடங்களை இடிப்பது மற்றும் கட்டுமானப் பணிகளால் ஏற்படும் தூசுகள், சிமெண்ட் தூசி, புதிய கட்டுமானங்கள், கட்டுமானத்தின் போது செயற்கைப் பொருட்களைப் பயன்பட்டுத்துவது, பெயிண்ட், வெடிப்பொருட்கள், பூச்சிக் கொல்லிகள் உள்ளிட்டவற்றாலும் காற்று மாசுபாடு அடைகிறது. புத்தாண்டு, கேளிக்கைக் கொண்டாட்டங்களின் போது பட்டாசு வெடித்தலும் காற்று மாசுவுக்குக் காரணமாகிறது. மெட்ரோ உருவாக்கம், தொழில்மயம் மற்றும் நகரமயம் முதலான பணிகளுக்காக மரங்களை வெட்டுவதால் பசுமை இழப்பு எற்படுகிறது. நகரில் ஆங்காங்கே உள்ள ஏரி, குளங்களை ஆக்கிரமித்து கட்டிடமயமாக்குவதால் சுற்றுச்சூழல் பதிப்பு எற்படுகிறது. இத்தகைய இழப்புகளும், பாதிப்புகளும் காற்று மாசுவுக்கு வழிவகுக்கின்றன.
அதிக கிலோமீட்டர் ஓடும் என்ற காரணத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட அளவை விடக் கூடுதலான அளவு உயவு எண்ணை (Lubricating Oil) கலந்த கலப்பட எரிபொருளை நிரப்பி இயக்கும் வாகனங்களிலிருந்து வெளிவரும் கரும்புகையின் அடர்த்தி அதிகரிப்பு காற்று மாசுபாட்டுக்குக் காரணமாகிறது எனக் கருதுகிறார் மாதவன்.
காற்று மாசு : நடைமுறையும் நடவடிக்கைகளும்
காற்று மாசுபாடு தில்லி மாநகரத்துக்கு மட்டுமல்லாமல் அது ஒரு சர்வதேசப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. வட இந்தியாவில் டெல்லி உட்பட, கயா, ஸ்ரீநகர், ஜோத்பூர், வாரணாசி, பாட்னா, குருகிராம், குவாலியர், கான்பூர், ராய்ப்பூர், அகமதாபாத், ஆக்ரா, லக்னோவ், ஜெய்ப்பூர், அமிர்தசரஸ், ஃபரிதாபாத், முசாஃபர்பூர், பாட்டியாலா ஆகிய நகரங்களும் காற்று மாசு படிந்த நகரங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்தியா உட்பட உலகின் பல நாடுகள் காற்று மாசு எனும் சவாலான பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றன. அதிக மக்கள்த் தொகை கொண்ட சீனா, இந்தியா ஆகிய நாடுகள் அதிகக் காற்று மாசு உள்ளவை என்று உலக சுகாதார அமைப்பின் அறிக்கை தெரிவிக்கின்றது.
தெற்காசியாவில் நகரமயமாதலால் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றி உலக வங்கி ஆய்வு மேற்கொண்டதில் பெரும்பாலான பெரு நகரங்கள் காற்று மாசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பெருநகரங்களில் டெல்லியில்தான் காற்று மாசு அதிகம் உள்ள நகரமாகக் கண்டறியப்பட்டுள்ளது. ‘டெல்லி’ நாட்டின் தலைநகர் என்ற பெருமைக்கு நிகராகப் பல்வேறு பிரச்சினைகளையும் அது தன்னகத்தே கொண்டுள்ளது. டெல்லியில் காற்று மாசு என்பது ஆண்டுதோறும் நிரந்தரமாக நீடிக்கும் பிரச்சினையாக இருந்து வருகிறது. குறிப்பாகக் குளிர்காலத்தில் உச்சம் தொடும் இப்பிரச்சினையால் டெல்லிவாசிகள் அதிகம் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தூசு கலந்த காற்று அடர் கருமை நிறமாக மாறி அருகில் வருபவர் யார் என்றுகூட அடையாளம் தெரியாத நிலை உருவாகியுள்ளது.
டெல்லிக் காற்றில் படிந்துள்ள நுண்துகள்கள் அதிகமாக உள்ளதாக உலக வங்கியின் அறிக்கை தெரிவிக்கின்றது. உலகின் பிற நகரங்களைக் காட்டிலும் டெல்லி நகரின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு (AQI) அனுமதிக்கப்பட்ட அளவை விட மிகவும் மோசம், கடுமை என்ற நிலையே நீடிப்பதாக உலக சுகாதார மையம் உள்ளிட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ’புகைசூழ் நகரம்’ என்னும் இன்னொரு முகத்துடன் சர்வதேச அரங்கில் டெல்லி வலம் வருகிறது.
நாட்டின் தலைநகரான டெல்லிவாழ் மக்கள் காற்று மாசின் கோரப் பிடியில் சிக்கி மூச்சுத் திணறி வருகின்றனர். குறிப்பாகக் குழந்தைகள், முதியோர் மற்றும் கர்ப்பிணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லிவாசிகள் சுத்தமான காற்றைச் சுவாசிக்கக் காற்று சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அவற்றில் உள்ள பில்டர்கள்கூடக் கருப்பு நிறமாக மாறிவருகின்றன என்று பயனாளிகள் கூறுகின்றனர். கட்டுக்கடங்காத காற்று மாசுவைக் கட்டுப்படுத்தக் கோரிப் பொதுமக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளனர். மூச்சைப் பறிக்கும் டெல்லிக் காற்று மாசு நெருக்கடியிலிருந்து தற்காலிகமாகத் தப்பிக்க 40 சதவீத டெல்லிவாழ் மக்கள் வெளியூர்களுக்குச் சுற்றுலா மேற்கொண்டுள்ளனர். காண்புத்திறன் குறைவதால் தில்லிவாசிகள் கடுமையாக அவதிக்குள்ளாகியுள்ளனர். சுவாசக் கோளாறு, கண்களில் நீர்க்கசிவு, தொண்டை எரிச்சல், தோல் வறட்சி, நுரையீரல் புற்றுநோய், பக்கவாதம், இதயக் கோளாறு, ஆஸ்துமா முதலான சுகாதாரச் சீர்கேடுகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. காற்று மாசால், தில்லிவாழ் மக்களின் ஆயுள் காலம் குறைகிறது என்று அம்மாநில உயர் நீதிமன்றம் கவலைப்படுகிறது. டெல்லியில் காற்று மாசு தொடர்பான நோய்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் ஒன்பது ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக அந்த மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (தினகரன்- தில்லிப் பதிப்பு, 17.1.2026). உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஆஸ்துமா, நிமோனியா, நுரையீரல் தொற்று மற்றும் காசநோய் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர் என்று அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது. காற்று மாசால், சுவாச நோய்களால் ஏற்படும் மரணங்கள் ஆண்டுதோறும் ஏறுமுகத்தில் இருப்பது டெல்லியின் பொது சுகாதாரக் கட்டமைப்பிற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது என்றும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தார்மீகக் கடமைகளில் அரசுகள் தவறும் தருணங்களில் நீதிமன்றங்கள் 32 மற்றும் 226 ஆகிய பிரிவுகளின் கீழ் தலையிட இந்திய அரசியலைப்புச் சட்டம் அதிகாரம் அளித்துள்ளது. காற்று மாசுபாட்டில் சிக்கித் தவிக்கும் தில்லியின் காற்றின் தரத்தை மேற்குறித்த பிரிவுகளின்கீழ் உச்சநீதிமன்றம் நேரடியாகக் கண்காணித்தது. விவசாயக் கழிவுகள் எரிப்பதை ஒழுங்குபடுத்தவும், காற்று மாசுபாட்டைக் குறைக்க மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை உறுதி செய்யவும் உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுத்தது. (தினமணி- தில்லிப் பதிப்பு, 17.1.2027)
நிலமை மோசமடைந்ததைக் கருத்தில் கொண்ட அரசு, பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவித்தது. கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதித்தது. ஐம்பது சதவீத ஊழியர்களை வீட்டிலிருந்தே பாணியாற்றக் கோருதல் முதலான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. காற்று மாசு அபாயம் தொடர்ந்தால் மனிதன் வாழத் தகுதியற்ற ‘பனி பூமி’ யாக டெல்லி மாறக் கூடும் என அமெரிக்க வளிமண்டல ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அச்சுறுத்தும் காற்று மாசுவால், நீண்டகால நோய்ப் பாதிப்புக்களை டெல்லிவாசிகள் அனுபவிக்க நேரிடும் என்று மருத்துவர்களும், வானிலை மற்றும் சுற்றுச் சூழல் வல்லுனர்களும் கணித்துள்ளனர். வரலாறு காணாத காற்று மாசுப் பிரச்சினையில் டெல்லி சிக்கித் தவித்து வருவது உலக நாடுகளுக்கு அபாய எச்சரிக்கை மணியை ஒலித்துள்ளது. விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. (தினகரன், தில்லிப் பதிப்பு, 13.11.2016). வாகனங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலைகள் ஆகியன வெளிவிடும் நச்சுப் புகைகளே தில்லிக் காற்று நச்சுத்தன்மை அடையப் பிரதானக் காரணம் என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. (தினமணி, தில்லிப் பதிப்பு, 20.11.2017). தில்லிக் காற்று மாசுவைத் தடுப்பது தொடர்பான உறுதியான செயல்த் திட்டம் தாக்கல் செய்யாத தில்லி அரசுக்குத் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்தது. (தினமணி, தில்லிப் பதிப்பு, 5.12.2017). இவை எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு, காற்று மாசுவைக் கட்டுப்படுத்தத் தில்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
காற்று மாசுவைக் கட்டுப்படுத்த, ’காற்று மாசுபாடு கட்டுப்பாடு’ திட்டத்தைத் தில்லி அரசு கொண்டுவந்துள்ளது. அதன்படி, 2028-ஆம் ஆண்டுக்குள் மாசுபாட்டை முழுமையாகக் கட்டுப்படுத்திக் காற்றை மீட்டெடுக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக மாசுபாடு அதிகமுள்ள 62 இடங்களில் மூடிய நிலையில் தண்ணீர் ஸ்பிரே அமைப்பு உருவாக்கவும், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகள் கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றைப் புதிதாக உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லி முழுவதும் சாலைகளில் தூய்மைப் பணிக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். பொதுப்பணித்துறை மற்றும் மாநில தொழில்துறை மற்றும் உள்க்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம், டெல்லி மேம்பாட்டு ஆணையம், புது டெல்லி மாநகராட்சி மன்றம், மாநகராட்சி மற்றும் கண்டோன்மெண்ட் வாரியம் உள்ளிட்ட பல நிறுவனங்களின் தூசு கட்டுப்படுத்தும் திட்டங்கள் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டு அங்கீகாரம் அளிக்கப்படும் என்று மானில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கூறியுள்ளார். இருப்பினும், டெல்லிவாசிகள் நச்சுக் காற்றைச் சுவாசிப்பது நிரந்தரமாக நீடிக்கும் பிரச்சினையாகவே உள்ளது.
காற்று மாசுக்கான காரணிகள்
டெல்லியில் நான்கு காரணிகளால் காற்று மாசு ஏற்படுவதாக அமெரிக்க ஆய்வறிக்கை ஒன்று இவ்வாறு பதிவு செய்கிறது.
- பனிக் காலத்தில் காற்று மாசு அதிகமாகக் காணப்படுகிறது. காற்றில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால், கலைய வழியின்றி காற்றுடன் புகை தங்கிவிடுகிறது.
- காற்றில் புழுதி களப்பதால் புகை முட்டம் அதிகரிக்கிறது.
- விவசாய நிலங்களில் பயிர்க் கழிவுகள் மற்றும் குப்பைகள் தீவைத்து எரிக்கப்படுவதால் ஏற்படும் புகை.
- தீபாவளிப் பண்டிகையின் போது ஏற்பட்ட புகையால் காற்று மாசு அடைந்தது.
காற்று மாசுவால் கொசு உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் டெங்கு மற்றும் சிக்கன் குனியா பாதிப்புகளும் குறந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறியிருப்பது ஆறுதலான செய்தி.
ஐந்து அம்ச மாசுக் கட்டுப்பாட்டு உத்திகள்
தலைநகர் டெல்லியில் நீண்டகாலமாக இருந்துவரும் காற்று மாசு நெருக்கடியைச் சமாளிக்கச் சாலைகளிலும், கட்டிடங்கள் மீதும் ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் தெளிக்க டெல்லி அரசுக்கு 2016-இல் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் யோசனை தெரிவித்திருந்தது. காற்று மாசைக் கட்டுப்படுத்தப் பழைய டீசல் வாகனப் பதிவு ரத்து, பட்டாசுகள் வெடிக்கத் தடை முதலான கட்டுப்பாடுகளை விதிக்கவும் டெல்லி அரசு ஆலோசனை செய்தது. பின்னர் செயற்கை மழை பொழிவித்தால் மாசு மட்டுப்படும் என எண்ணி அதற்கான முயற்சியில் ஈடுபட்டது அரசு. உரிய நிபுணத்துவம் இல்லாமை மற்றும் திட்டமிடல் குறைபாடுகளால் அது தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து இப்போது ஐந்து அம்ச மாசுக் கட்டுபாடு உத்திகளைக் கையாள டெல்லி அரசு முடிவெடுத்துள்ளது. அவை :
- தூசி மற்றும் திடக் கழிவுகளை அறிவியல் ரீதியாக நிர்வகித்தல்
- மாசுபடுத்தும் தொழில்களுக்கு எதிரான நடவடிக்கை
- வாகன உமிழ்வைக் குறைத்தல்
- டெல்லியைப் பசுமையாக மாற்றுவதற்கான நீண்டகால முயற்சி
- டெல்லியை ஆரோக்கியமானதாக மாற்றுவதற்கான நீண்டகால முயற்சி
மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நகரம் முழுவதும் மின்சாரப் பேருந்துகளை இயக்கும் திட்டத்தைக் கையிலெடுத்துள்ளது தில்லி அரசு.
காற்று மாசைக் குறைப்பதற்கான மாற்று வழிகள்
காற்று மாசுவைக் குறைப்பதற்கான மாற்று வழிகளாக பின்வருவனவற்றை முன்வைக்கலாம்.
- நல்ல ஆக்ஸிஜனைத் தரவல்ல மரங்களை அதிக அளவில் வளர்ப்பது.
- காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி வறட்சியை ஏற்படுத்தும் நச்சுத் தன்மை கொண்ட சீமைக் கருவேல மரங்களை அரவே அழித்துவிடுவது.
- வாகனங்கள் உமிழும் புகையைக் கட்டுப்படுத்துவதற்கான விதிகளை மேலும் கடுமையாக்குவது.
- கரியமில வாயுவை வெளியேற்றும் என்ஜின்கள் தாரித்து வாகனங்களில் பொருத்துவது.
- மாசு எற்படுத்தாத மின் வாகனப் பயன்பாட்டுக்கு முன்னுரிமை தந்து ஊக்குவிப்பது.
- நகரக் குப்பைகளைத் தீயிட்டு எரிக்காமல் மாற்று வழிகளைக் கையாண்டு மக்கச் செய்தல்.
- காற்று மாசுவை அரசால் சரி செய்வது சவாலான செயல் என்பதைக் கருத்தில் கொண்டு அதை ஒரு தேசியப் பேரிடராக அறிவித்தல்.
- காற்று மாசுவைக் கட்டுப்படுத்த அரசோடு மக்களும் கைகோர்த்து ஒத்துழைப்பு நல்கல்.
- காற்று மாசு என்பது தனிமனிதப் பிரச்சினை அல்ல, அனைவரது உயிர் சார்ந்த பொதுப் பிரச்சினை என்னும் விழிப்புணர்வு எல்லோருக்கும் ஏற்படல் .
- காற்று மாசு ஒரு உயிர்க் கொல்லி என்பதைத் தாமதித்தேனும் விழித்துக்கொள்வது அவசியம்.
பயிர்க்கழிவு எரிப்பு : புகையா ? புகைச்சலா ?
அண்டை மாநிலங்களான அரியானா, பஞ்சாப் பகுதிகளில் எரிக்கப்படும் பயிர்க் கழிவுகள் காரணமாக டில்லியில் 32 சதவீத காற்று மாசுவுக்குக் காரணம் என்று மத்திய காற்று மாசு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. (தினமணி- தில்லிப் பதிப்பு, 28.10.2018). டெல்லி தலைநகர் வலயப் பகுதிகளில் செயல்படும் செங்கல் சூளைகளும் காற்று மாசுக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. டெல்லியைவிட அவ்விரண்டு மாநில நகரங்களில் மோசமான காற்று மாசு இருந்திருக்க வேண்டும். ஆனால், அப்படியொரு நிலைமை அங்கில்லை என்று ஆங்கிருந்து வரும் தரவுகள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பசுமைத் தீர்ப்பாயத்தில் தில்லி அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ‘டில்லியில் காற்று மாசு அதிகரிக்க ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் பயிர்க் கழிவுகள், வேளாண்மை எச்சங்கள்தான் காரணம்' என்று தெரிவித்தார். இதற்குத் தீர்ப்பாய அமர்வு, ‘டில்லியில் காற்று மாசு அதிகரிக்கப் பயிர்க் கழிவுகள் எரிப்பது மட்டுமே காரணமாக இருக்க முடியாது. தற்போது டில்லியில் காற்று வீசவில்லை. அப்படியிருக்கும் போது அண்டை மாநிலங்களிலிருந்து தில்லிக்கு எப்படிப் புகை வரும். தூசி, பிளாஸ்டிக் கழிவுகள் எரிப்பு, திறந்த வெளியில் கட்டுமானப் பொருட்களைக் கொட்டுவது, வாகன மாசுக்கள் ஆகியனவும் காற்று மாசுவுக்குக் காரணமாக உள்ளன. (தினமணி, தில்லிப் பதிப்பு, 5.11.2016) எனத் தெரிவித்துள்ளது.
நில அமைப்பு முறையில் டெல்லியின் மேற்கு எல்லைப் பகுதிதிகளான ராஜஸ்தான், வடமேற்கு எல்லையான அரியானா ஆகிய பகுதிகளிலிருந்து எரிக்கப்படும் பயிர்க்கழிவுப் புகை காற்றின் திசை வேகத்தில் கிழக்கு நோக்கி நகர்ந்து டெல்லிக்குள் ஊடுருவிப் புகை மண்டலத்தை ஏற்படுத்துவது இயல்பு. 25.11. 2025-இல் வெடித்துச் சிதறிய எத்தியோப்பிய ஹேலி குப்பி (Hayli Gubbi) எரிமலையிலிருந்து கிளம்பிய சாம்பல் புகை மேகங்கள் இயற்கையான காற்றுத் திசை வேகத்தினால் கிழக்கு ஆப்பிரிக்கா, செங்கடல், வளைகுடா நாடுகள் வழியாகப் பல நாடுகளுக்கும் பரவியதே இதற்குச் சான்று. ஆனால், டெல்லியின் முறையே வடக்கு மற்றும் தெற்கு எல்லைப் பகுதிகளான பஞ்சாப் மற்றும் உத்திரப் பிரதேசப் பகுதிகளிலிருந்து வெளிவரும் பயிர்க்கழிவு எரிப்புப் புகை திசை மாறி டெல்லியை ஆட்கொண்டு மாசுபடுத்துகிறது என்று கூறுவது இயல்புக்கு மாறானது.
‘தில்லி மற்றும் என்.சி.ஆர் பகுதிகளில் நிலவும் காற்று மாசு பிரச்சினைக்கு அண்டை மாநில விவசாயிகள் மட்டுமே காரணம் எனக் குற்றம் சாட்டுவது சரியல்ல' என்று பாஜக, காங்கிரஸ், பிஜு ஜனதா தளக் கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் பேசிப் பதிவு செய்துள்ளனர். (தினமணி, 20.11.2029). ‘டெல்லி காற்று மாசுபாட்டிற்குப் பயிர்க் கழிவுகள் எரிப்போ, வாகன உமிழ்வோ கிடையாது தீபாவளிப் பட்டாசுகளே காரணம்' என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் மேனகா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். (தினகரன், தில்லிப் பதிப்பு- 6.1.2026). இந்நிலையில், ‘தலைநகரில் காற்று மாசுபாடு ஒருசில மாதங்களுக்குக்கு மட்டுப்படுத்தப்பட்ட பிரச்சினை அல்ல. அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஆண்டு முழுவதும் முயற்சிகள் தேவை' என்று தில்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார். (தினமணி, 11.1.2026)
அரியானா, பஞ்சாப் முதலான அண்டைமாநில விவசாயிகள் ஏற்கனவே எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கிடையே இப்போது அவர்கள் மீதான இந்தக் காற்று மாசுப் பிரச்சினை அவர்களுக்கு மேலும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. விவசாயிகளால் வெளிவரும் புகையை விட அவர்கள் மீதான புகைச்சலாகவே இது கருதப்படுகிறது.
கிராமங்களில் வேளாண் பயிர்க்கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் புகை ரசாயனக் கலப்பற்ற அதிக நச்சுத்தன்மையற்றதாகும். நகரக் குப்பைகளை எரிப்பதால் வெளிவரும் நச்சுப் புகை இதற்கு நேர் எதிரானது. அதே சமயம், அறுவடைக்குப் பின்னரான பயிர்க் கழிவுகளை அப்புறப்படுத்தக் கூலி கொடுக்க முடியாததாலும், பசுந்தாள் உரமாகப் பயன்படுத்தவும் அவற்றை விளை நிலத்திலேயே எரிப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். டெல்லியை மாசுபடுத்த வேண்டும் என்பது இம்மாநில விவசாயப் பெருங்குடி மக்களின் நோக்கமல்ல. நகரக் கழிவுகளால் கிராமங்கள் மாசுபடுவதாகக் கிராமவாசிகள் குறைகூறாத நிலையில், நகரங்களில் உருவாகும் நச்சுக் காற்றுக்கு அண்டை மாநிலங்களின் கிராம விவசாயிகள் மீது வீண்பழி சுமத்துவது வேதனையானது. இது ஒருவிதத் திசைதிருப்பும் நோக்கமாகவே தோன்றுகிறது.
‘காற்று மாசுவின் மூலத்தை ஏஐ (AI) என்னும் செயற்கை நுண்ணறிவின் மூலம் கண்டறிய முடிவு செய்துள்ள டெல்லி அரசு அதை நடைமுறைப்படுத்தினால், உண்மையிலேயே பயிர்க்கழிவு எரிப்பினால் வெளிவருவது வெறும் புகையா? விவசாயிகள் மீதான புகைச்சலா? என்பது புலப்படும்.
மொத்தத்தில், உயிர்க்கொல்லியாக மாறிவரும் காற்றின் உயிர் மூலத்தை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே எதிர்காலச் சந்ததிகள் நிம்மதியாக உயிர் வாழ முடியும்.
சான்றாதாரங்கள்
- அபுல் அமீன். மு.அ. ‘சுற்றுச் சூழல் மாசு' தினமணி, தில்லிப் பதிப்பு, .3.2019.
- இராதாகிருஷ்ணன் பாறப்புறத். ‘காற்றைக் காப்போம்' தினமணி, தில்லிப் பதிப்பு, 4.2017.
- பார்த்தீனியமான தேசிய மொழி - இந்தினேசியா வரலாறு, காக்கைச் சிறகினிலே, ஆகஸ்ட், பக். 19-22.
- சந்திரா. யாழ் சு. இலக்கியமும் சூழலியலும், மதுரை: மீனாட்சி புத்தக நிலையம்.
- சர்ஃப்ரஸ். அ. ‘மனிதப் பேரிடர் மாசு' தினமணி, தில்லிப் பதிப்பு, 11.2017.
- நடராஜ். ஆர். ‘மாசில்லாத காற்று... நோயில்லாத வாழ்வு!’ தினமணி, தில்லிப் பதிப்பு, 3.2025.
- நாராயணன். ஆர். எஸ். ‘ஆகாய ஆக்கிரமிப்புகள்' தினமணி, தில்லிப் பதிப்பு, 2.2016.
- -----------------------------.’உயிரை வளர்க்கும் உயிர்க் காற்று' தினமணி, தில்லிப் பதிப்பு, 9.2017.
- முத்து. நெல்லை. சு. ‘மெய்ப்பொருள் காண்பது அறிவியல்' தினமணி, தில்லிப் பதிப்பு, 1.2016.
- மாதவன். ‘காற்று மாசுபாட்டில் திணறும் தலைநகரம்’ காக்கைச் சிறகினிலே, ஜனவரி, 2026. பக். 304-306.
- முருகராஜ். இ. ‘ஆயுளைக் குறைக்கும் காற்று மாசு', தினமணி, தில்லிப் பதிப்பு, 3.2019.
- ராஜா. பா. ‘பகையாகும் புகை' தினமணி, தில்லிப் பதிப்பு, 3.2018.
- ஜெயராஜசேகர். தி. ’நெருக்கடியை உருவாக்கும் காற்று மாசு’, தில்லிப் பதிப்பு, 1. 2026.
- KumKum Desgupta, How to save our Fragile Ecosystem? Pay for it! Hindustan Times, 19.3.2017.
- Woodford Chris, 2015. Air Pollution.
- முனைவர் ச. சீனிவாசன் (தமிழக அரசின் சிறந்த நூல் மற்றும் நூலாசிரியர் விருதாளர்) பேராசிரியர் & தலைவர் தமிழ்த்துறை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி (தில்லிப் பல்கலைக்கழகம்) புது தில்லி-110 021, இந்தியா