ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள், இந்தி நடிகரின் திரைப்படத்திற்குத் தடை, செல்போனில் பாலியல் வக்கிரங்கள், ஆவி உலகவாதிகளுக்கும், திரையுலகவாதிகளுக்கும் மோதல், சாமியார் ஆசிரமங்களில் நீலப்படங்கள் என்ற இப்படிப்பட்ட “அதிமுக்கியமான செய்திகளின்” ஆராவாரத்தில் நாட்டின் சுதந்திரத்தையே உருக்குலைக்கும் நிகழ்வுகள் அமலுக்கு வந்தது அடங்கிப் போனது. அது இந்தியாவிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் தென் கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியன் அமைப்பிற்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் அமலுக்கு வருவது குறித்த ஏற்பாடுகள்தான். இதில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஆன ஒப்பந்தம் குறித்த பெரும்பாலான அம்சங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டன. ஒரு சில அம்சங்களில் மட்டும் இந்திய அரசுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஆசியன் அமைப்பு என்றழைக்கப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் ஆன ஒப்பந்தம் கடந்த ஜனவரியிலிருந்து அமலுக்கு வந்துவிட்டது.

உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டு வரும் 20 ஆண்டுகளாக, சுதந்திர வர்த்தகத்தின் மூலம் போட்டி அதிகரிக்கும், இதனால் அந்நிய மூலதனம் பெருகும், புதிய வேலைவாய்ப்புகளும், பொருளாதாரமும் அதிகரிக்கும் என்று தொடர்ந்து முன்னாள் நிதியமைச்சர்கள் துவங்கி இன்னாள் அமைச்சர்கள் வரை கூறி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த வாதங்கள் கேட்பதற்குத் தான் இனிமையாக உள்ளன. யதார்த்தமோ முற்றிலும் நேர் எதிரானது. உலகிலுள்ள அனைத்து நாடுகளும் பொருளாதாரத்திலும், வளர்ச்சியிலும் சமமாக இருந்தால் தான் சுதந்திரமான போட்டியும் ஏன் நேர்மையான வணிகமும் கூட சாத்தியம். உலக வங்கியின் அறிக்கைபடி, சோமாலியா, எடிட்ரியா, எத்தோப்பியா போன்ற குறைந்த வளர்ச்சி நாடுகளின் ஆண்டு சராசரி வருமானமே 1000 டாலராகும். (அதாவது 48,000 ரூபாய்) இது நம் நாட்டின் தனி நபரின் ஆண்டு வருமானத்தை விட குறைவானதாகும். இந்த நாடுகள் எப்படி அமெரிக்காவுடனும், ஐரோப்பியாவுடனும் போட்டி போட முடியும்? ஒரே ஓடையில் ஆடும், ஓநாயும் எப்படி நீர் அருந்த முடியும்? மாண்புமிகு அமைச்சர்கள் தான் இதற்கு பதில் அளிக்க வேண்டும்.

politicians_380சரி, சுதந்திர போட்டி சாத்தியமில்லை. வர்த்தக ஒப்பந்தங்கள் ஒரு நாட்டின் சுதந்திரத்தை எப்படி பாதிக்கும் என்று கேட்கலாம். கிழக்கிந்திய கம்பெனி வர்த்தகம் என்ற பெயரில் வந்து தான் நாட்டை அடிமைப்படுத்தி 200 ஆண்டுகள் ஆண்டதை மறந்துவிட முடியுமா? அன்று ஒரு நாட்டை காலனியாக்குவதற்கு படையைக் கொண்டு வந்து நிறுத்தி ஆண்டனர். இன்றைய சூழலில் அது சாத்தியமில்லை என்பதால், கடன் உதவி, வர்த்தக ஒப்பந்தங்கள் என்ற வழிமுறைகளைக் கையாளுகின்றனர். இத்தகைய அபாயத்தை உள்ளடக்கித் தான் வர்த்தக ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், கீரிஸ், இத்தாலி, சுவீடன் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட 27 உறுப்பினர் நாடுகளையும் நார்வே, ரசியா, ஜியார்ஜியா, பெலாரஸ் உள்ளிட்ட 20 தேர்வு உறுப்பினர் நாடுகளையும் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்துடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சு வார்த்தைகள் 2000ல் துவங்கின என்றாலும் 2006ல் தான் லிஸ்பனில் இதற்கான உத்தி வகுக்கப்பட்டது.

லிஸ்பனில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையம் உலக வர்த்தகத்தில் போட்டியிடுவதற்காக ‘உலகமயமாகும் ஐரோப்பா’ என்ற புதிய சர்வதேச வர்த்தக உத்தியை அறிவித்தது. லிஸ்பன் உத்தி என்று அழைக்கப்படும் இதன்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகத்தை உலகம் முழுவதும் விரிவுபடுத்துவது, உலகின் தெற்கு நாடுகளிலிருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்வது, மற்றும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் மூலமாக ஐரோப்பிய தரங்களை ஒரே மாதிரியாக அமல்படுத்துவது ஆகும்.

லிஸ்பனின் உத்தியின் மூலமாக ஐரோப்பிய தேசங்கடந்த தொழிற்கழகங்கள் மற்றும் பன்னாட்டுக் கம்பெனிகளின் போட்டியிடும் திறமையும் வர்த்தக திறமையும் அதிகரிக்கும் என்று ஐரோப்பிய ஆணையம் விளக்கமளித்துள்ளது. இதுவரை ஐரோப்பிய ஒன்றியம் ஆனது சிலி, தென் ஆப்பிரிக்கா, மெக்சிகோ, மத்திய தரைக்கடல் நாடுகள், கரிபியன் நாடுகள் மற்றும் பசிபிக் நாடுகளுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.

2005ல் நடைபெற்ற இந்தியா-ஐரோப்பிய உச்சி மாநாட்டில் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்திற்கு இணக்கமான கருத்து முன் வைக்கப்பட்டது. அதன் பிறகு 5 சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. 2008ம் ஆண்டின் இறுதியில் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு ஒப்பந்தத்தின் ஒரு சில அம்சங்கள் தொடர்பாக மட்டும் இறுதி கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஐரோப்பியாவிற்கு இந்தியா 9வது பெரிய வர்த்தக கூட்டாளி ஆகும். ஐரோப்பியாவின் வர்த்தகத்தில் 2 சதவீதத்திற்கும் குறைவாக இந்தியா மேற்கொள்கிறது. இருப்பினும், இந்தியாவின் மிகப் பெரிய சந்தையைக் குறி வைத்தே ஐரோப்பியா இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் உள்ளவை உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தங்களாகும். இவை கடும் எதிர்ப்புக்குள்ளாகி நிராகரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். டிரிம்ஸ் (TRIMs – Trade Related Investment Measures) டிரிம்ஸ் எனப்படும் வர்த்தகம் தொடர்பான முதலீட்டு நடவடிக்கைகளுக்கான ஒப்பந்தம். டிரிப்ஸ் எனப்படும் அறிவு சார் சொத்துடமை தொடர்பான வர்த்தக ஒப்பந்தம் (Trade Related Intellectual Properties). காட்ஸ் எனப்படும் சேவைகளுக்கான வர்த்தகம் தொடர்பான பொது ஒப்பந்தம் (General Agreement on Trade in Services) போன்ற ஒப்பந்தங்களுக்கு ஏற்பட்ட உலகளாவிய எதிர்ப்பு, இது சம்பந்தமாக உலக வர்த்தக அமைப்பின் மாநாடுகளில் நடந்த பேச்சு வார்த்தைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாதது போன்ற காரணங்களினால் கொள்ளைப்புற வழியாக சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் மூலமாக திணிக்கப்படுகின்றன.

முதலீடு தொடர்பான ஒப்பந்தத்தின்படி இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களின் மீதான சுங்கவரிகளை இரத்து செய்ய வேண்டும். அரசு உதவி மற்றும் மான்யங்கள் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்படக் கூடாது. இது இந்திய சந்தையை எந்தவித தங்கு தடையின்றி ஐரோப்பாவின் தேசங்கடந்த தொழிற்கழகங்கள் ஆக்கிரமிப்பதற்கு சாதகமானது. நாட்டின் உள்நாட்டுத் தொழில்கள் ஐரோப்பியாவின் பராகசுர கம்பெனிகளுடன் போட்டியிட முடியாமல் அழிந்துவிடும்.

ஐரோப்பியா ஒன்றியத்துடன் சுதந்திர வர்த்தகம் மேற்கொண்டால் இந்தியாவிற்கு என்ன வகை பாதிப்புகள் ஏற்படும் என்பதை ஆய்வு செய்த ஐ.நாவின் வர்த்தக வளர்ச்சி தொடர்பான அமைப்பானது பாதிப்புகளைப் பட்டியலிடுகிறது.

• சுதந்திர வர்த்தகம் அமலாக்கப்பட்டால் சர்வதேச சந்தையில் சுங்கவரியின் மூலம் பாதுகாக்கப்படும் இந்திய உற்பத்தியாளர்கள் கடும் போட்டியைச் சந்திக்க நேரிடும். இதனால் நாட்டின் வறுமை மேலும் கடுமையாகும். ஏனெனில் பல துறைகளின் உற்பத்தியானது பல இலட்சம் சிறு குறு உற்பத்தியாளர்களைச் சார்ந்தே உள்ளது.

• வர்த்தகத்தின் துவக்க நிலை மதிப்பீடானது, ஐரோப்பா இந்தியாவுடன் மேற்கொள்ளும் வர்த்தகம் 56.8 சதவீதம் வளரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியாவின் ஏற்றுமதியோ 18.7 சதவீதம் தான் வளர வாய்ப்புள்ளது.

• இந்தியாவைப் பொறுத்த வரை ஜவுளி மற்றும் தோல் துறைகளில் உற்பத்தி பொருட்களிலும் குறிப்பிடத்தக்க அளவு தான் ஏற்றுமதி வளர்ச்சி அடையும். ஆனால் ஐரோப்பாவைப் பொறுத்த வரை ஆட்டோ மொபைல் மோட்டார் வாகனங்களும், அதன் உதிரி பாகங்களும் 700 சதவீதம் வளர்ச்சி அடையும். அதாவது 82.5 சதவீதம் இந்திய இறக்குமதி சந்தையில் இடம் பிடிக்கும்.

• ஐரோப்பிய வரிகள் அதன் உற்பத்திப் பொருட்களுக்கு குறைவான அளவில் விதிக்கப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில் சர்வதேச சந்தையில் போட்டியிடுவதற்கு தகுந்தாற்போன்று இந்தியாவில் உற்பத்திப் பொருட்களின் விலையைக் குறைக்க வேண்டும்.

• இந்திய சந்தைக்குள் ஐரோப்பிய சரக்குகள் புழக்கம் தாராளமயமாக்கப்படுவதால் நிகர நட்டம் 250 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகமே ஒப்புக் கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.

• இந்திய சந்தைக்குள் வெள்ளமாக பெருகும் ஐரோப்பிய பொருட்களுடன் உள்நாட்டு பொருட்கள் போட்டியிட முடியாது. அது உற்பத்தியையும், வேலை வாய்ப்பையும் எதிர்மறையாகப் பாதிக்கும். இதற்கான முன் உதாரணம். ஏற்கனவே ஆப்பிரிக்காவில் உள்ளது. 1999ல் ஐரோப்பியாவுடன் தென் ஆப்பிரிக்கா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டது. இதனைத் தொடர்ந்து 2004ல் விவசாயப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டது. அந்த ஆண்டிலிருந்தே ஐரோப்பியாவிலிருந்து இறக்குமதி அதிகரித்த முகமாக உள்ளது. பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், பருப்பு, தானிய வகைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளும் அந்நாட்டில் குவிந்துவிட்டன. இதனால் தென்ஆப்பிரிக்காவில் விளையும் உணவுப் பொருட்களுக்கு சந்தையில்லாததால் உணவு உற்பத்தி பாதிக்கத் துவங்கியது. உதாரணமாக ஐரோப்பியாவிலிருந்து இறக்குமதியாகும் வெள்ளரி உள்நாட்டில் உற்பத்தியானவற்றை 50 விழுக்காடாக குறைத்துவிட்டது, வேலை வாய்ப்பில் 25 சதவீதம் குறைந்துவிட்டது.

ஏற்கனவே, உலகமயமாக்கல், பொருளாதாரக் கொள்கை அமலாக்கம் துவங்கியதிலிருந்து வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு வரி விலக்கு மற்றும் ஏராளமான வரிச் சலுகைகள் அளித்து வருவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இப்போ ஐரோப்பிய கம்பெனிகளும் இதே வரிசையில் வருவதால் அரசு வருவாய் இழப்பு பல நூறு கோடி டாலர்களைத் தாண்டும் என “ஏஜன்ஸ் ஐரோப்பா” என்ற ஐரோப்பிய அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

சேவைத்துறை ஒப்பந்தமானது உலக வர்த்தக அமைப்பின் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளால் பேச்சு வார்த்தைகளில் கடுமையாக எதிர்க்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது. இப்போது முன்னைவிட பல புதிய துறைகள் சேர்க்கப்பட்டு ஒப்பந்தத்தின் மூலமாக துழைக்கப்பட்டுள்ளது.

கல்வி துவங்கி, விமானம், இரயில்வே, தரை போக்குவரத்து, தண்ணீர், சுகாதாரம், சுற்றுலா, வங்கி, சில்லரை வணிகம், செய்தித்துறை, பொழுதுபோக்கு, விளையாட்டுத் துறை, நூலக சேவை, சட்டம், கணிப்பொறி, ஆராய்ச்சி, ரியல் எஸ்டேட், தபால் துறை, தொலை தொடர்புத் துறை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சேவைத்துறைகளுக்கு கதவு திறந்துவிடப்பட்டுள்ளது. இதில் சில்லரை வணிகமும் வங்கித் துறை குறி வைக்கப்பட்டு முழுமையாக அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ சில்லரை வணிகத்தைச் சார்ந்து பல கோடிக்கும் மேலானவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவில் உற்பத்தி வணிகம் மற்றும் விநியோகம் ஆகியவற்றில் 97 சதவீதம் அமைப்பு சாராத துறையில் தான் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். 2007ல் சில்லரை வணிகத்தின் கிடைக்கும் 8 பில்லியன் வருவாயானது 2010ல் 22 பில்லியனாக உயர வாய்ப்புள்ளது. இதனால் சில்லரை வணிகத்தைக் குறி வைத்து ஐரோப்பியாவின் பெருங்கம்பெனிகளான கேரிபோர், மெட்ரோ, டெஸ்கோ, அஹோல்டு, வால்மார்ட் மற்றும் ஐக்கியா போன்றவை காத்திருக்கின்றன. இங்கிலாந்து அரசு சில்லரை வணிகத்தைத் திறந்து விடுவது அவசியமென வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தத்தின் உள்ள அறிவுசார் சொத்துடமை குறித்த கடுமையான பிரிவுகள் அமல்படுத்தப்பட்டால் உயிர்காக்கும் மருந்துகள் மட்டுமின்றி பொது தொகுப்பு மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படும். இந்திய காப்புரிமைச் சட்டத்தின் படி மருந்துகளின் உற்பத்தி முறைக்கு மட்டுமே காப்புரிமை அளிக்கப்பட்டு வந்தது. உற்பத்தி பொருளுக்கு அதாவது மருந்துகளுக்கு அல்ல. ஆனால் 2005ல் நமது நாடு உலக வர்த்தக அமைப்பில் ஒப்பந்தமான வர்த்தகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமையில் கையெழுத்திட்டது தான். இந்த ஒப்பந்தத்தின்படி நமது நாட்டின் காப்புரிமை சட்டத்தை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள், மருந்து தயாரிக்கும் பன்னாட்டுக் கம்பெனிகள் மற்றும் தேசங்கடந்த தொழிற்சாலைகளின் நலன்களுக்கேற்ப திருத்த வேண்டும். அதாவது 2004 டிசம்பர் 31ம் தேதிக்குள் காப்புரிமை சட்டத்தில் உள்ள உற்பத்தி முறைக்கான காப்புரிமையை நீக்கிவிட்டு உற்பத்தி பொருளுக்கான காப்புரிமை அளிக்க வேண்டும்.

குறிப்பிடத்தக்க முக்கியமான ஆன்ட்டிபயோட்டிக் மருந்துகளின் விலை 200லிருந்து 700 விழுக்காட்டு வரை உயரும். இதனால் உதாரணமாக காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும், ஒரு பாரசிட்டமால் மாத்திரையின் விலை தற்போது 60 பைசாவிற்கு விற்கிறது. இது ரூ.350க்கு விற்கப்படும். நடுத்தர வர்க்கத்தினருக்கு காய்ச்சல் வந்தால் கூட ஒரு முறை சிகிச்சைக்கு அவர்கள் மாத சம்பளத்தையே செலவளிக்க வேண்டி வரும். ஏழை மக்களுக்கு இதுவும் சாத்தியமில்லை.

காப்புரிமை சட்டத்திருத்தத்தின்படி எல்லா மருந்துகளுக்கும் காப்புரிமையானது 20 ஆண்டுகள் வரை நீடிக்கும். பழைய சட்டத்தில் 7 ஆண்டுகள்தான். இந்த ஒப்பந்தத்தில் 11 ஆண்டுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதுவரை விரைவில் வரவிருக்கின்ற அபாயத்தைக் கண்டோம். இனி வந்துவிட்ட அபாயத்தைப் பார்ப்போம். புருனை, கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட 10 தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியனுடன் செய்து கொண்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஜனவரியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, மிளகு, மீன், தேங்காய், சமையல் எண்ணெய், தேயிலை, காபி, இரப்பர் ஆகியவை இறக்குமதியாக துவங்கிவிட்டன. பிலிப்பைன்சிலிருந்து இறக்குமதியாகும் தேங்காய் எண்ணெயினால் கேரளாவிலுள்ள 40 இலட்சம் தேங்காய் வியாபாரிகள் பாதிக்கப்படுவர். எவ்வளவோ எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டாலும் விடாப்பிடியாக மத்தி, கனவாய், கானாங்கெளுத்தி, ஷீலா, வஞ்சரம் போன்ற 177 வகை மீன்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஐரோப்பிய ஒப்பந்தத்தின்படி 40 வகை மீன்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இனி மீனவர்கள் விற்பதற்கென சந்தை இருக்காது. அவர்களும் விவசாயிகளைப் போல தற்கொலைக்கு தள்ளப்படுவார்கள். இவை அனைத்துமே சுங்கவரி இல்லாமல் இந்தியாவில் இறக்குமதியாகப் போகின்றன. இதனால் விவசாயிகள், மீனவர்களின் சிறு உற்பத்தியாளர்கள் என்ன ஆவார்கள்?

இந்த ஒப்பந்தங்கள் எந்தப் பின்னணியில் அமல்படுத்தப்படுகின்றன என்பது மிகவும் அதிர்ச்சியை அளிக்கக்கூடிய ஒன்றாகும். கார்னிஜ் என்ற அமைதிக்கான அறக்கட்டளையின் ஆய்வு அறிக்கைபடி நாட்டில் நாளொன்றுக்கு ஒரு அமெரிக்க டாலருக்கும் குறைவாக வருவாய் ஈட்டுபவர்கள் 800 மில்லியன் ஆகும். யுனிசெப்பின் தகவலின்படி, நாட்டின் 5 வயதிற்குட்பட்ட மொத்த குழந்தைகளின் எண்ணிக்கையில் சரி பாதி பேர் சத்தின்மையால் அவதிப்படுகின்றனர். மனித வளர்ச்சியில் 177 நாடுகளில் இந்தியா 128 இடத்தில் தான் உள்ளது. அமைப்பு சாராத்துறையின் தொழில் முனைவோருக்கான தேசிய ஆணையம் நாட்டின் வலிமையான தொழிலாளர்கள் 457 மில்லியனில் 92 சதவீதம் பேர் உத்திரவாதமில்லாத வேலைகளில் போராடிக் கொண்டிருக்கின்றனர். திட்டக் கமிஷன் கணக்கீட்டின்படி 2020ற்குள் வேலை வாய்ப்பின்மையைச் சற்று குறைக்க வேண்டுமானால் கூட வேலையில்லாதவர்களில் புதியவர்களுக்கும், பழையவர்களுக்கும் சேர்த்து 2 கோடி வேலைகளாவது உருவாக்கப்பட வேண்டும். ஆனால் ஒப்பந்தங்கள் வேலைவாய்ப்பைக் குறைக்கப் போகின்றன என்பது உறுதி.

இந்த இரண்டு ஒப்பந்தங்கள் குறித்தும் ஆய்வுகளை மேற்கண்ட ஐ.நாவின் சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகளுக்கான குழு, உலகமயமாக்கல் கொள்கைகளினால் மக்களிடையே வறுமை மற்றும் உணவு உத்திரவாதமின்மையும் மிகவும் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் மேலும் வறுமையைத் தீவிரமாக்கும் என்று கவலை தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தங்களை மறுபரிசீலினை செய்யுமாறும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

ஒரு நாட்டின் சுதந்திரமும், இறையாண்மையும் அதன் சுய சார்பான பொருள் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஆனால் சுதந்திர வர்த்தகம் என்ற பெயரில் நாட்டின் தொழில்கள், பொருளாதாரம், சேவைத் துறைகள், வாழ்வாதாரம் ஆகியவற்றை ஆக்கிரமிக்க தாராளமாக கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளது. அன்று வர்த்தகம் என்ற பெயரில் உள்ளே நுழைந்த ஒரே நாட்டைச் சேர்ந்த ஒரே கம்பெனி 200 ஆண்டுகளுக்கு மேலாக அடிமைப்படுத்தி நம்மை ஆண்டது. இன்றோ இங்கிலாந்தைப் போன்று வலிமையும், செல்வாக்கும் வாய்ந்த கிட்டத்தட்ட 57 நாடுகளின் 70,000ற்கும் மேலான பன்னாட்டுக் கம்பெனிகள் நாட்டில் நுழைய இருக்கின்றன. இவை திரும்பிச் செல்லும் என்பதற்கு எந்தவித உத்திரவாதமும் இல்லை. எந்த‌ நேர‌டி ஆட்சியுமில்லாமல் மீண்டும் ந‌ம்மை ஆள‌ப் போகிறார்க‌ள்.

- ஆ.சேது ராமலிங்கம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It