"பல்லார்டு இதே சிறையில் தங்கியிருந்தபோது, காந்தியிடமிருந்து டாக்டர் பி.ஆர்.அம்பேத்கருக்கு ஒரு தந்தி வந்தது; எரவடா சிறையில் தம்மை வந்து பார்க்கும்படி காந்தி அவரைக் கேட்டுக் கொண்டிருந்தார். டில்லியிலிருந்து திரும்பியதும் அவ்வாறே அவரைச் சந்திப்பதாக காந்திக்கு டாக்டர் அம்பேத்கர் தந்தி மூலம் தெரிவித்தார். மறுநாள் ரங்கூனைச் சேர்ந்த டாக்டர் பாமாவிடமிருந்து டாக்டர் அம்பேத்கருக்கு ஒரு தந்தி வந்திருந்தது. தந்தியில் பின் கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது: சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது இந்தியத் தலைவர்களைச் சந்திப்பதற்காக பர்மா பிரிவினை எதிர்ப்புத் தலைவர்கள் அடுத்த வாரம் டில்லிக்குச் செல்லுகிறார்கள். பர்மாவின் அரசியலமைப்பு நிலை குறித்து உங்களுடனும் ஏனைய தலைவர்களுடனும் விவாதிப்பதற்கு அவர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். எனவே, பிப்ரவரி 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் தூதுக் குழுவினரை டில்லியில் சந்திக்கும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறோம். அன்பு கூர்ந்து உங்கள் டில்லி முகவரியை தந்தி மூலம் தெரிவியுங்கள்; அங்கு உங்களைச் சந்திக்க இது ஏதுவாக இருக்கும். யு சிட் ஹிலய்ங், 80, ஹெர்மிடேஜ் சாலை, ரங்கூன், யு சிட் ஹிலய்ங் மற்றும் டாக்டர் பா. மா. "நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் டாக்டர் அம்பேத்கரின் அலுவலகத்துக்கு ஏராளமான தந்திகள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன. இத்தகைய தந்திகளில் ஒன்று எர்ணாகுளம் தியா யுவஜன் சமாஜிட மிருந்து வந்திருந்தது; தாழ்த்தப்பட்ட மற்றும் சுதேச சமஸ்தானங்களைச் சேர்ந்த மக்களின் உரிமைகளுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் வட்டமேசை மாநாட்டில் அவர் வீரதீரத்துடன் போராடியமைக்காகப் பாடுபடும் தலைவருக்கு அதில் மிகுந்த நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தது.

ambedkar 2 350இதன்பேரில் டாக்டர் அம்பேத்கர் உடனே பம்பாயிலிருந்து டில்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்; வைசிராய் கூட்டியிருந்த வட்டமேசை மாநாட்டுப் பிரதிநிதிகளின் பூர்வாங்கக் கூட்டத்தில் கலந்து கொள்ளவே அங்கு விரைந்தார். டில்லியிலிருந்து திரும்பியதும் காந்திக்கு ஒரு தந்தி அனுப்பினார்; பிப்ரவரி 4 ஆம் தேதி அவரைச் சந்திக்க இயலும் என்று தந்தியில் குறிப்பிட்டிருந்தார். பிப்ரவரி 3 ஆம் தேதி டாக்டர் அம்பேத்கருக்கு அனுப்பிய தந்தியில் "உங்கள் தந்தி இப்போதுதான் கிடைத்தது. நாளை 12.30 மணிக்கு சந்திக்கலாம்" என்று காந்தி தெரிவித்தார். 1933 பிப்ரவரி 4 ஆம் தேதி எரவாடா சிறையில் காந்தியைச் சந்திக்க டாக்டர் அம்பேத்கர் விரும்பியதால், டில்லியில் பர்மியத் தூதுக் குழுவினரை அவரால் சந்திக்க இயலவில்லை.

பிப்ரவரி 4ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு டாக்டர் அம்பேத்கர் எரவாடா சிறைக்குச் சென்றார்; எஸ். என்.ஹிவ்தர்கர், டோலஸ், உபஷாம், கோவ்லி, கோர்பதே, கேசவராவ் ஜெதே ஆகியோர் அவருடன் சென்றனர். மகிழ்ச்சி பொங்க காந்தி எழுந்திருந்து அவர்களை அன்புடன் வரவேற்றார். சிறிது நேரம் கழித்து உரையாடல் ஆலயப் பிரவேசப் பிரச்சினைக்குத் திரும்பிற்று. டாக்டர் சுப்பராயன் மற்றும் ரங்கசாமி அய்யர் ஆகியோரின் மசோதாக்களுக்கு ஆதரவு அளிக்கும்படி டாக்டர் அம்பேத்கரை காந்தி கேட்டுக்கொண்டார். தீண்டாமை ஒரு சாபக்கேடு என்று சுப்பராயனின் மசோதா கண்டிக்காததால் அதனை ஆதரிக்க இயலாது என்று டாக்டர் அம்பேத்கர் பட்டவர்த்தனமாகக் கூறி விட்டார். ஆலயப் பிரவேசத்தை பொதுஜன வாக்கெடுப்பு ஆதரித்தால், தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு ஆலயங்கள் திறந்து விடப்படும் என்று மட்டுமே அது தெரிவித்தது; ஆலயங்களிலுள்ள தெய்வங்களை வழிபட அவர்களுக்குள்ள உரிமை குறித்து அது எதுவும் கூறவில்லை.

சாதி அமைப்பு முறையில் சூத்திரர்களாக இருக்க தாழ்த்தப்பட்ட மக்கள் விரும்பவில்லை என்று அவர் காந்தியிடம் தெளிவுபடக் கூறினார். தம்மை ஓர் இந்து என்று நேர்மையாகக் கூறிக்கொள்ள இயலாது என்பதையும் தெரிவித்தார். தாழ்த்தப்பட்ட நிலையில் உள்ளவன் என்று என்னை ஏளனம் செய்யும் ஒரு மதத்தைப் பற்றி நான் ஏன் பெருமிதம் கொள்ள வேண்டும் என்று கேட்டார். இதே நிலைமை தொடர்ந்து நீடிக்குமானால் ஆலயப் பிரவேசத்தால் எனக்கு எந்த நன்மையும் இல்லை என்று கூறி ஆதங்கப்பட்டார்.

என்னைப் பொறுத்தவரையில் சாதி அமைப்பு முறை மோசமானதல்ல என்றார் காந்தி. அவர் மேலும் கூறினார். ''தீண்டத்தக்க இந்துக்கள் தங்கள் பாவங்களுக்குக் கழுவாய் தேடிக்கொண்டு, இந்து மதத்தைத் தூய்மைப்படுத்த வாய்ப்பளியுங்கள். இந்த விஷயத்தை அலட்சியப்படுத்தாதீர்கள். சனாதனிகளும் அரசாங்கமும் இந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுமானால், சமுதாயத்தில் தீண்டத்தகாதவர் மேல்நிலைக்கு வருவார்கள்".

காந்தி தெரிவித்த இந்தக் கருத்து டாக்டர் அம்பேத்கருக்கு உடன்பாடில்லை. அரசியல், பொருளாதார, கல்வித்துறைகளில் தீண்டத்தகாதவர்கள் முன்னேறினால் ஆலயப் பிரவேசம் தானாகவே நடைமுறைக்கு வரும்"1

1.கீர், பக்கங்கள் 226-227

தொகுப்பு: முனைவர் எ.பாவலன்

Pin It