பொருளாதாரத்தில் பின் தங்கிய, வேறு இட ஒதுக்கீட்டின் கீழ் வராத உயர் ஜாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 (திங்கள் கிழமை) கூடிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை இசைவு அளித்தது. சட்ட வரைவு அன்று சாயங்காலம் தான் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சுற்றுக்கு விடப்பட்டது. மறுநாளே (செவ்வாய்கிழமை) அதற்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. புதன்கிழமையன்று மாநிலங்களவை ஒப்புதல் அளித்தது. ஒரு அரசியலமைப்புச் சட்டத் திருத்ததை பாராளுமன்றம் இவ்வளவு எளிதாக, விரைவாக எப்படி நிறைவேற்றியது? இதற்கான பதில் உயர் சாதியினரின் நிரந்தரமான அரசியல் அதிகாரத்தில் இருக்கிறது. அதனால் தான் இந்த சட்டத்திருத்தத்திற்கு மக்களவையில் வெறும் 3 எதிர் வாக்குகளும், 323 ஆதரவு வாக்குகளும் கிடைத்தன. மாநிலங்களவையில் 7 எதிர் வாக்குகளும், 165 ஆதரவு வாக்குகளும் கிடைத்தன.

இது ஜாதியற்ற இட ஒதுக்கீடா அல்லது உயர் ஜாதி இடஒதுக்கீடா?

’உயர் ஜாதியினர், முன்னேறிய ஜாதியினர்' போன்ற சொற்கள் கொஞ்சம் குழப்பத்தை விளைவிக்க கூடியன. எனவே அந்த சொற்கள் எப்படி பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்று முதலில் பார்ப்பது பயனளிக்கும். பாராளுமன்றத்தால் முன்மொழியப்பட்ட இந்த அரசியலமைப்பு சட்டத்திருத்தம், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் குறைந்தபட்சம் பாதி மாநில சட்டசபைகளில் நிறைவேற்றப்பட வேண்டும். பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைத் தவிர்த்து விட்டு, பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினரின் முன்னேற்றதிற்காக சிறப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கான முழு அதிகாரத்தையும் அரசுக்கு இச்சட்டம் கொடுக்கிறது.parliament 392இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் வரும் எந்த விதிமுறைகளும் திட்டங்களும், பொது பிரிவில் இருப்பவர்களுக்கே பொருந்தும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மண்டல் கமிஷன், மேற்சொன்ன பொதுப்பிரிவினை 'சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் முன்னேறியவர்கள்' என்று குறிப்பிடுகிறது. பொதுவில் 'உயர் ஜாதியினர்' என்று குறிப்பிட்டாலும், அதில் பார்ப்பனர்கள் மட்டுமே அடக்கம் இல்லை. பொதுப் பிரிவில் வரும் யாவரையும் உள்ளடக்கும். ஜாட், மராத்தா, காபு போன்ற ஜாதிப் பிரிவினர்களும் அதில் வருவார்கள்.

இந்த சட்டத்திருத்தத்தில் மதம் குறிப்பிடப்படவில்லை. அதன்படி OBC பிரிவில் வராத சிறுபான்மையினரான இஸ்லாமியர்களும் இந்த இட ஒதுக்கீட்டில் வருவார்கள். இந்த 10% இட ஒதுக்கீட்டிற்குள் யார் யார் வருவார்கள் என்பதை நிர்ணயிக்கவில்லையென்றாலும், அரசு விதித்திருக்கும் நிபந்தனைகள் இதன் கீழ் யாரெல்லாம் வருவார்கள் என்ற யூகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 8 இலட்சத்திற்கும் கீழ் ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்கள், 5 ஏக்கருக்கு குறைவாக விவசாய நிலம் வைத்திருப்பவர்கள், 1000 சதுர அடிக்கு குறைவாக வீடு வைத்திருப்பவர்கள் இந்த இடஒதுக்கீட்டில் வருவார்கள்.

இந்த இட ஒதுக்கீட்டின் நிபந்தனைகள் தாராளமாக இருப்பதால், இதில் போட்டியிடும் பெரும்பான்மையினர் உயர்ந்த ஜாதியை சேர்ந்த இந்துக்களாகவே இருப்பார்கள். எனவே , அரசு இதில் மதத்தை கொண்டு வராமல் ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு என்று கூறினாலும் இது உயர் ஜாதியினருக்கான ஒதுக்கீடாகதான் இருக்கும்.

இந்த நகர்வை எது தெளிவுபடுத்துகிறது? 

மண்டல் கமிஷன் கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகையில் பிற்படுத்தப்பட்டவர்களின் சதவிகிதம் 52% ஆகும். பட்டியலின, பழங்குடியின மக்கள் தொகை 22.5% என்பதால், மீதமுள்ள 25.5 விழுக்காடு உயர்சாதியினர். மற்ற பிரிவினர்களை விட குறைவான எண்ணிக்கையில் இருக்கும் உயர்சாதியினரின் ஆதரவைப் பெற அரசியல் கட்சிகள் துடிக்கின்றன.

மேலும் உயர் ஜாதியினர் இந்திய சமூகத்தின் மீது எல்லைமீறிய செல்வாக்கு செலுத்துகின்றனர். உதாரணத்திற்கு, மக்களவையில் 1980 கள் முதல் அவர்களின் பிரதிநிதித்துவம் சரிந்தாலும், பெரும்பான்மையாக உயர் ஜாதியினரே இருக்கிறார்கள். நீதித்துறை, நிர்வாகத்துறை, கிரிக்கெட், தனியார் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தங்களின் மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட அதிகப்படியான பங்கு வகிக்கிறார்கள்.

இது இப்படி இருந்த போதிலும், சமீப காலத்திய இட ஒதுக்கீட்டாலும் பொருளாதார வளர்ச்சியாலும் வளர்ந்து கொண்டிருக்கும், முன்பு பின்தங்கியவர்களாகவும், மதிப்புமிகு வேலை இல்லாதவர்களாகவும் இருந்த பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைக்கும் சமூக மூலதனத்தை பெரும்பான்மையான உயர் ஜாதி சமூகங்கள், ஏற்றுக் கொள்ளவில்லை. கடந்த சில வருடங்களாக, ஜாட், மராத்தா, படேல் போன்ற சாதியினர் வேலைகளில் தங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரினர். மேலும் SC, ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் (SC, ST Act 1989) இருக்கும் பட்டியலின, பழங்குடியின சட்டப் பாதுகாப்பு வழங்கும் பிரிவுகளை எதிர்த்தும் கிளர்ச்சி செய்தார்கள். இது ஆளும் அரசிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த அதே நேரத்தில், மற்ற கட்சிகளுக்கு வலுவூட்டக் கூடிய ஒரு வாய்ப்பாக அமைந்தது.

EWS இட ஒதுக்கீட்டை மற்ற கட்சிகள் ஏன் எதிர்க்கவில்லை?

கடந்த 30 ஆண்டுகளாக உயர் ஜாதியினர் பாஜக ஆதரவாளர்களாக இருந்துவந்த போதிலும், கட்சியின் ஓட்டு வங்கியை விரிவுபடுத்த, OBC, SC வாக்காளர்களை ஈர்க்க நினைத்ததாலும், உயர்சாதியினர் பாஜகவிடம் இருந்து அந்நியப்பட்டு போய் விட்டார்கள். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மிக தீவிரமாக உயர் ஜாதி ஓட்டுக்களை பெற முயற்சித்ததில் இது வெளிப்படையாக தெரிந்தது.

பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் தலித் மக்கள் சார்ந்து கட்சியை கட்டமைத்திருந்தாலும், ஆட்சிக்கு வர உயர்சாதி வாக்காளர்களை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். உயர் ஜாதியினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பொலிட்பீரோவைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகளோ 10% EWS இட ஒதுக்கீட்டை எதிர்க்க தயங்குவதோடு மட்டுமல்லாமல், பொருளதாரத்தை அடிப்படையாக கொண்ட இட ஒதுக்கீட்டை முழுமனதாக ஆதரிக்கிறார்கள்.

மிக முக்கியமாக, 10% EWS இட ஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்புச் சட்டத் திருத்தும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள SC, ST, OBC இட ஒதுக்கீட்டை குறைக்காது என்ற ஒரு மாயத் தோற்றம் இருப்பதால் பெரும்பாலான கட்சிகள் இதை எதிர்க்கவில்லை. ஒருவேளை SC, ST, OBC இட ஒதுக்கீட்டில் நேரடியாக கை வைத்திருந்தால் பிஜேபிக்குள்ளும் எதிர்க்கட்சிகளும் கடுத்த எதிர்ப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். மாறாக உச்சநீதிமன்றம் நிர்ணயித்த 50% உச்சவரம்பை இந்த அரசு மீறு முயல்கிறது. இந்த இட ஒதுக்கீடு, நீதிமன்றத்தால் அனுமதிக்கப்படுமேயானால், மொத்த இட ஒதுக்கீடு அளவு கிட்டத்தட்ட 60 விழுக்காட்டைத் தொட்டுவிடும்.

விவாதமின்றி, அவசர கோலத்தில் அள்ளித் தெளிக்கப்பட்ட சட்டத்திருத்தம் என்ற நோக்கில் மட்டுமே பெரும்பான்மையான எதிர்க்கட்சிகள் இதை எதிர்த்தன. திமுக, ஆர்ஜேடி உள்ளிட்ட சிலர் மட்டுமே சாதி ரீதியான வரலாற்றுக் கொடுமைகளை சரி செய்வதற்காக இட ஒதுக்கீடு வடிவமைக்கப் பட்டது, அன்றி பொருளாதார நலனிற்காக வடிவமைக்கப்படவில்லை என கொள்கை ரீதியாக கேள்வி எழுப்பினார்கள். மீதி அனைவரும் அப்பட்டமான அரசியல் ஆதாயத்திற்காக அரசு இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வந்திருக்கிறது என்று குறை கூறிக்கொண்டே ஆதரிக்கிறார்கள்.

ரோஹன் வெங்கட ராமகிருஷ்ணன்

நன்றி scroll.in (2019, ஜனவரி 10 ஆம் தேதி வெளிவந்த கட்டுரை)

தமிழ் மொழியாக்கம்: சுமதி, ஆஸ்திரேலியா

Pin It