ஐரோப்பிய நாடுகளில் புதிய மருந்துகளைப் பரிசோதனை செய்வதற்கு கடுமையான விதிகள் இருக்கின்றன. எலி, முயல் போன்றனவற்றில் பரிசோதனை மேற்கொள்வதற்கே இந்நாடுகளில் பெரிதாக கத்தித் தீர்ப்பார்கள். புதிய மருந்துகளை ஆய்வின்மூலம் உருவாக்கி அதன் நோய் தீர்க்கும் வலிமையைவிட பக்கவிளைவுகள் பற்றிய கிளினிக்கல் முறை ஆய்வின்றி அவற்றை இச்சந்தைகளில் விற்றுவிடமுடியாது. இங்கே மனிதர்கள் மீது பரிசோதனைப் பார்ப்பதற்கான செலவும் அதிகம் சட்டச்சிக்கலும் நிறையவே.

TabletsIT துறையிலிருந்து கட்டிடத்தொழில்வரைக்கும் வெளிநாடுகளுக்கு மிகக் குறைந்த சம்பளத்தில் இந்தியாவிலிருந்து போவது இந்திய ஏற்றுமதியின் ஒரு வகிபங்கு. இது எல்லோருக்கும் தெரிந்ததே. புதிய மருந்துவகைகளை மனிதரில் பரிசோதித்துப் பார்க்க ROCHE, NOVATRIS போன்ற சந்தைப்பலமிக்க சுவிஸ் மருந்துக்கம்பனிகள் பம்பாயிலும் டெல்லியிலும் தமது இந்திய முகவர்கள், இவர்கள் எல்லோருமே துறைசார் மருத்துவர்கள், புதிய மருந்துகளை குறிப்பாக வறிய மக்கள்மீது பரிசோதனைக்காக பயன்படுத்தின்றார்கள். படிப்பறிவற்ற தனது நோயின் பெயரையே எழுத்துக்கூட்ட முடியாதவர்களிடம் நான் இப்பரிசோதனைக்கு உட்பட சம்மதிக்கிறேன் என்று கையெழுத்து பெற்றுக்கொண்டு எந்த மக்களின் வரிப்பணத்தில் மருத்துவம் பயின்றார்களோ அந்த மக்கள்மீதே ஈவுஇரக்கமின்றி பரிசோதனைகளை நடாத்துகின்றார்கள்.

சாப்பாட்டுக்கே அல்லாடும் ஏழைகளிடம் இலவச மருத்துவம் புதிய மருந்துகளென கதைவிட்டு ஒன்றுமே அறியாத அப்பாவி மக்களை பரிசோதனைச்சாலை எலிகளாகவும் முயல்களாகவும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஒரு வறிய குடும்பத்தின் இளம்பெண் புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றபோது இதேபோல் ஆசைகாட்டி எக்கச்சக்கமான மருந்துகளை விழுங்கக் கொடுக்க இரண்டு மூன்று நாட்களாகவே அந்தச் சிறியபெண் தலைச்சுற்றலில் படுத்தே கிடந்திருக்கிறாள். இன்னொரு மருத்துவரிடம் போன இவளை பரிசோதித்துப் பார்த்த அவர் ஏற்கனவே இருக்கும் மருந்தே இந்நோய்க்குப் பொருத்தமாக இருக்க ஏன் வேறு மருந்துகள் தரப்பட்டன என கேள்வி எழுப்பியுள்ளார். அப்பெண்ணின் தாயிடம் அதுபற்றிக் கேட்டபோது, ‘புதிய மருந்துகளை இலவசமாகத் தருகிறோம் சம்மதக் கடிதத்தில் கையெழுத்து இடுமாறுக் கேட்டார்கள் நானும் கையெழுத்திட்டேன்’ என்று சொன்ன அவளிடம் அக்கடிதத்தில் என்ன எழுதியிருக்கின்றது எனக்கேட்க தனக்குத்தெரியாது என்று சொல்லியிருக்கிறார்.

அண்மையில் ஒரே நோய்கண்ட 37 குழந்தைகள் இறப்புப் பற்றிய சர்ச்சையில் சிகிச்சையளித்த மருத்துவரிடம் இதுபற்றிக் கேட்கையில் இக்குழந்தைகளுக்கு சிறப்பான சிகிச்சை எதுவென தீர்மானிக்கும் சமயத்தில் அக்குழந்தைகள் இறந்துபோனார்களே அன்றி பரிசோதனை மருந்துகளால் அல்ல எனச் சாதித்திருக்கின்றார். இதனை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அரசு என்ன செய்திருக்கும்? வழமைபோல் குரங்கின்வால் போல் நீண்ட பட்டங்களுடனான விற்பனர்களைக் கொண்ட கமிசன் உருவாக்கப்பட்டு பின்பு, பின்பென்ன முன்பே தெரிந்த பெறுபேறுதான். மருத்துவத்திலோ மருந்திலோ பிழையில்லை. பம்பாய் பெருநகரில் பாதிக்குமேற்பட்டவர்கள் மிக ஏழைகளாகவும் ஒருமுறை மருந்துக்கான செலவே ஒருமாதக்கூலியிலும் அதிகமாக இருப்பதால் இதுபோன்ற பரிசோதனைக்கு மிகவாய்ப்பான பிரதேசங்களாக இருப்பதும் அரசின் அனுசரனையும் ஆசீர்வாதமும் இருப்பதால் மருந்துக்கம்பனிகள் தங்கள் ஆய்வுக்கூடாரங்களை இங்கே நகர்த்தி வருகின்றன.

ஏழைகளின் உறுப்புக்கள் திருட்டு, இப்போது அவனின் நோய்கூட இந்தியாவின் வியாபார முதலாகிவிட்டது. சந்திராயனும் சுவிஸ் வங்கிக் கள்ளக் கணக்குகளும் ஜோர்ஜியோஆர்மானி, விசாச்சே, சனல் உடைகளும் செண்டுகளும் டிசைனர் ஜீன்ஸ்களும் இன்னும் என்னென்ன ஆடம்பரங்களெல்லாம் உள்ளதோ அவை அனைத்தையும் ஒரு கும்பல் தேடித்தேடி அனுபவிக்க மற்றவர்கள் மூச்சுக்காற்றையும் விற்க முடியுமானால் அதற்கும் விலைபேசுவார்கள். ராக்கற் விட்டு சந்திரனின் மண் எடுக்க பணம் உண்டு, வல்லரசு பந்தாவுக்கு பணம் உண்டு தன்நாட்டு மக்களின் நோய்க்கு மருந்து கொடுக்க பணமில்லை. அதையும் வெளிநாட்டவன் இலவசமாகக் கொடுத்து தன் சந்தைக்குப் பலம்தேட துணைபோகும் அரசும் முகவர்களாக பணம் பார்க்கும் மருத்துவமேதாவிகளும் நாங்கள் உதவிதான் செய்கிறோம் என்கிறார்களே மெடிக்கல் எதிக் என்று ஒன்று உண்டு அதற்குமேலாக மருத்துவத்துறையின் சத்திய வாக்கு எல்லாம் எங்கே போயிற்று? அடபோங்கப்பா சத்தியமும் எதிக்கும் , பணம் அது எப்பிடி வந்தா என்ன எதுக்கு வந்தா என்ன வந்தாச் சரி.

தகவல் மூலம் :- சுவிஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ARENA நிகழ்ச்சி 

-
தேவாஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It