தரல்இன்குலாப்
269,மதுரை மீனாட்சிபுரம்,
ஐயஞ்சேரி சாலை,
ஊரப்பாக்கம் - 603210
காஞ்சி மாவட்டம்
பெறல்
செயலர்,
தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றம்,
சென்னை.
அன்புடையீர்,
வணக்கம்.
எனக்களிக்கப்பட்ட கலைமாமணி விருதைப் பின்வரும் காரணங்களால் திருப்பி அனுப்புகிறேன்.
தமிழீழத்தில் நடைபெறும் தமிழினப் படுகொலைக்கு எதிரான தமிழக மக்களின் போராட்டத்தில் முத்துக்குமார் உள்ளிட்ட இளைஞர்கள் உயிர்த்தியாகம் செய்வது தொடர்கிறது. உண்மையான மக்கள் அரசு இங்கு இருக்குமேயானால், இவற்றால் துணுக்குற்றுத் தமிழினத்துக்கு நியாயம் செய்திருக்கும். ஆனால் தமிழின ஒழிப்பை முன்னின்று நடத்தும் சிங்களப் பேரினவாத அரசுக்கு, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இன்றும் வஞ்சகமாக உதவிக் கொண்டிருக்கிறது. வன்முறையில் நம்பிக்கை அற்றதாகப் பீற்றிக் கொள்ளும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள், தமிழக இளைஞர்கள் மேற் கொண்ட உயிர்த்தியாக அகிம்சைப் போராட்டத்தைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை.
அகிம்சைப் போராட்டங்களைப் பொருட்படுத்தாத வல்லாதிக்க மரபு காங்கிரசுடையது. தமிழ் நாடு என்ற பெயர் சூட்டக் கோரிய தியாகி சங்கரலிங்கனார் உண்ணா நோன்பிருந்து உயிர்துறந்தது காங்கிரஸ் ஆட்சியின் போதுதான். 1965-இல், இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக உணர்வுகொண்ட தமிழர்கள் தீக்குளித்து உயிர்துறந்தபோதும், துப்பாக்கிச் சூடு நடத்தி ரத்தவெறி தீர்த்துக் கொண்டது காங்கிரஸ் ஆட்சிதான். இந்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி திலீபன் யாழ்மண்ணில் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த போதும் பொருட்படுத்தாது, ஈழத்தமிழர்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்ததும், தமிழ்ப் பெண்களை வல்லாங்கு செய்து கொடுமைப்படுத்தியதும் இதே காங்கிரஸ் ஆட்சிதான்.
இன்று இலங்கையில் போர்நிறுத்தம் கோரித் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் காலவரம்பற்ற உண்ணா நோன்பைமேற் கொண்டிருக்கிறார். அவர் எல்லா நலத்துடனும் நீடுழி வாழவேண்டும். தமிழகச் சட்டமன்றமும் தமிழக மக்களும் ஒருமித்து நடத்திய அனைத்து அறப் போராட்டங்களையும் கண்டு கொள்ளாது, சிங்களப் பேரினவாத அரசுக்குப் படை, கருவி, நிதி முதலியவற்றை வழங்கியது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுதான். இது குறித்துத் தமிழக அரசு மேற்கொண்ட செயல்பாடுகள் அனைத்தும், நடுவணரசின் தமிழின விரோத நடவடிக்கைகளுக்கு உதவுவதாகவே முடிந்தன. இந்திய அரசே தமிழகத்தில் நிகழ்ந்த உயிர்த்தியாகங்களைப் பொருட்படுத்தாதபோது, ராஜபக்சே அளவிலான சிங்கள பாசிஸ அரசு, கலைஞரின் உண்ணா நோன்புப் போராட்டத்தை ஏற்று நியாயம் வழங்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? கலைஞர் அவர்களின் இந்தப் போராட்டத்தின் பயனாக, முன்பு கலைஞர் அவர்களே முன்வைத்த இலங்கை அரசுடனான அரசியல் (ராஜீய) உறவைத் துண்டிக்கவேண்டும் என்ற கோரிக்கையையாவது இந்திய அரசு நிறைவேற்றுமா? கலைஞர் அவர்களின் இந்தப் போராட்டம் தமிழகத்தில் மூண்டெரியும் சிங்களப் பேரினவாத எதிர்ப்பையும், இந்திய அரசின் துரோகத்துக்கு எதிரான தமிழ் உரிமை உணர்வையும் மடை மாற்றத் தான் பயன்படும். இன்று கலைஞர் செய்ய வேண்டியது தேர்தலைப் பற்றிக் கவலைப்படாது காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறுவது தான்.
மனிதன், தமிழன், படைப்பாளி என்றவகையில் இந்தக் கொடுமைகளுக்கு எதிராகச் செயல்பட வேண்டிய கடமை எனக்கும் இருக்கிறது, இந்த வகையில் 2006-ஆம் ஆண்டு, தமிழக அரசின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் வழங்கப்பட்ட ‘கலைமாமணி’ விருது, எனக்குக் கௌரவமாக அல்லாமல் முள்ளாகக் குத்திக் கொண்டிருக்கிறது. இதைத் தமிழக அரசிடமே திருப்பித் தருவதுதான் எனது மனித கௌரவத்தைத் தக்க வைத்துக் கொள்வதாக அமையும்.
தமிழக இளைஞர்கள் நிகழ்த்திய உயிர்த்தியாகங்களுடன் ஒப்பிடும்போது இது நிரம்பச் சாதாரணமானது. அதனால் இம்மடலுடன் எனக்களிக்கப்பட்ட கலைமாமணி விருதுக்கான தங்கப்பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றைத் தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றச் செயலாளர் அவர்களுக்குப் பதிவு அஞ்சலில் திருப்பி அனுப்புகிறேன்.
இங்ஙனம்,
இன்குலாப்
கைபேசி: 9444284281
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டிலேயே பெரியார் பட்டம் வந்து விட்டது!
- தமிழ்நாடு வரவு செலவு அறிக்கை 2023 குறித்து ஓர் ஆய்வு
- தேசிய மய வங்கிகளின் மேலாளர் பதவிகளில் 92 சதவீதம் பார்ப்பன உயர்ஜாதியினரே!
- சாதியும் தொழிலும் பின்னிப் பிணைந்தவை!
- திராவிட மாடலைப் பறைசாற்றும் ‘பட்ஜெட்’
- அய்.அய்.டி.களில் ‘சனாதனம்’
- சேலம் மாநாடு எழுச்சி; மக்கள் பேராதரவு, களப்பணிகளில் தோழர்கள் உற்சாகம்
- எலெக்ஷன் கூத்து
- பெரியார் முழக்கம் மார்ச் 23, 2023 இதழ் மின்னூல் வடிவில்...
- இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படைக் கட்டமைப்பை உடைப்பதால் ஏற்படும் ஆபத்துகள்
- விவரங்கள்
- இன்குலாப்
- பிரிவு: கட்டுரைகள்