ஆய்வுச் சுருக்கம்:

 தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் பல்கிப் பெருகி வளர்ந்து வரும் சிற்றிலக்கிய வகைப் பிள்ளைத்தமிழாகும். இவ்விலக்கியங்கள் பாவலர்கள் மட்டுமே உய்த்துணரும் வகையில் யாக்கப்பட்டுள்ளன. பாமரனும் இலக்கிய இன்பத்தை உய்த்துணர வேண்டுமாயின் நூலைக் கற்றுணர்ந்த உரையாசிரியரின் துணை தேவையானதாகின்றது. அவ்வாறு கூறும் உரையும் நூலாசிரியரின் மனநிலைப் பிரதிபலிக்குமா? உரையாசிரியரின் தற்சார்பு இல்லாமல் இருக்குமா? என்றால் கேள்விக்குரியதே!. ஆகவே சில உரையாசிரியர்கள் தாங்கள் இயற்றிய நூலுக்குச் சில குறிப்புகளை, அருஞ்சொற் பொருட்களை மட்டும் ஆங்காங்கே கூறிச்செல்கின்றனர். பாவலர் அருள். செல்லத்துரை தான் இயற்றிய “இயேசுபிரான் பிள்ளைத் தமிழ்” நூலுக்கு உரையையும் தானே கூறிச்செல்கிறார். அவரது உரைநயத்தை எடுத்துரைப்பதே இவ்வாய்வின் சுருக்கமாக, நோக்கமாக அமைகின்றது. 

அறிமுகவுரை:

 தாம் விரும்பும் கடவுளரையோ அரசரையோ வள்ளலையோ குழந்தையாகப் பாவித்து அவர் தம் குழவிப் பருவத்தைப் பத்துப் பருவங்களின் வழிப் புலப்படுத்துவது பிள்ளைத் தமிழ் இலக்கியமாகும். இதனைக் “குழவி மருங்கினும் கிழவதாகும்” (தொல்-1030) என்பதன் வழித் தொல்காப்பியம் எடுத்துரைக்கின்றது. பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், மாணிக்கவாசகர் போன்றோரது பாடல்களில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்ட பிள்ளைத்தமிழ் பருவங்களானது, இன்று தனியொரு இலக்கிய வகையாக வானுற வளர்ந்துள்ளதை நம்மால் மறுக்க முடியாது.

 அடிவரையறை இல்லாத யாப்பு வகைகள் ஆறனுள் ‘உரை’ என்பதைத் தொல்காப்பியர் இரண்டாவதாகச் சுட்டுகிறார். மேலும், அவ்வுரையின் வகைகளைப்,

 “பாட்டிடை வைத்த குறிப்பினானும்

 பாவின்று எழுந்த கிளவியானும்

 பொருள் மரபில்லாப் பொய்மொழியானும்

 பொருளோடு புணர்ந்த நகைமொழியானும்

 உரைவகை நடையே நான்கென மொழிப” 1

என்றவாறு பட்டியலிடுகிறார். மூல நூலாசிரியரின் மனவுணர்வினை, நுட்பத்தினை உணர்ந்து உரையாசிரியர் தம் உரையினை உரைப்பர். ஆனால் இவ்வாய்வுக்கு எடுத்துக் கொண்ட இயேசுபிரான் பிள்ளைத்தமிழ் நூலுக்கு மூலநூலாசிரியரே உரையாசிரியராகவும் விளங்குகிறார். உரை என்பதை நூல் முழுமைக்கும் வழங்காமல், கீழ் வருமாறுக் கூறிச்செல்கிறார்.

  1. அருஞ்சொற் பொருள் தருதல்
  2. குறிப்புரை தருதல்
  3. மேற்கோள் சுட்டல்
  4. ஒப்புமை காட்டல்
  5. இலக்கணக் குறிப்புக் கூறல்
  6. பல்துறைப் புலமை

இவ்வாறு பன்முகப் பார்வை கொண்ட ஆசிரியரின் உரை நயத்தை எடுத்துரைப்பதே இவ்வாய்வின் நோக்கமாக அமைகின்றது.

இயேசுபிரான் பிள்ளைத்தமிழ் - அழகும் அமைப்பும்

 நமக்குக் கிடைக்கப்பெற்ற பிள்ளைத்தமிழ் நூல்களைப் பகுத்துப் பார்த்தோமானால் செம்பாதி சமயம் சார்ந்த பிள்ளைத்தமிழ் நூல்களாகவே காணக்கிடைக்கின்றன. அவற்றுள்ளும் சைவ சமயம் சார்ந்த நூல்கள் மிகுதியாகவும் வைணவம், கிறிஸ்தவ சமயம் சார்ந்த நூல்கள் சற்றுக் குறைவாகவும் உள்ளன. அவ்வகையில் அருள். செல்லத்துரை இயற்றிய இயேசுபிரான் பிள்ளைத்தமிழ் நூலில் இயேசுபிரானின் பிறப்பு, அவர் நிகழ்த்திய அற்புதங்கள், உபதேசங்கள் முதலிய கருத்துகளைக் காண முடிகின்றது. காப்புப் பருவம் முதல் சிறுதேர்ப் பருவம் ஈறாகக் பத்துப் பருவங்களையும் பருவத்திற்குப் பத்துப் பாடல்கள் வீதம் மொத்தம் நூறு பாடல்களையும் இந்நூல் கொண்டுள்ளது. இந்நூலின் காப்புச் செய்யுளானது,

 “பாக்களை வழங்கியென் சிந்தையில் வளர்ந்து

 பதமலர்த் துணையருள் காப்பே”- (காப்புப் பருவம்)

என்றவாறு இந்நூலை முழுமை செய்ய இறைவனான இயேசுபிரானிடம் காப்பு வேண்டுவதாகப் புதுமையுடன் யாக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்புடையதாகும். காப்புப் பருவம் எழுசீர் ஆசிரிய மண்டலத்தாலும் தால், முத்தம், சிற்றில் பருவங்கள் பன்னிருசீர் ஆசிரிய மண்டலத்தாலும் செங்கீரை, சப்பாணி, வருகை, அம்புலி, சிறுபறை, சிறுதேர்ப் பருவங்கள் பதினான்குசீர் ஆசிரிய மண்டலத்தாலும் இயற்றப்பட்டுள்ளன.

அருஞ்சொற்பொருள் தருதல்:

 ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் அருஞ்சொற்பொருளைச் சொல்லுக்குச் சொல் என்றவாறும் (சான்றாக – கங்குல்-இரவு, காழகம்-வயிரம், மஞ்சு-மேகம்) சில இடங்களில் வாக்கிய அமைப்பு முறையிலும் குறிப்பிட்டுச் சென்றிருப்பது ‘எண்ணமெலாஞ் செலும் ஏதனின் தோட்டம்’ (பா-27)என்ற பாடலிலுள்ள ‘ஏதனின் தோட்டம்’ என்பதற்கு ‘முதல் தாயும் தந்தையுமான ஏவாளும் ஆதாமும் வாழ்ந்த தோட்டம்’ என்று பொருள் உரைக்கிறார். மேலும், ‘ஒட்டிய மாதுளம் முத்தெல்லாம்’ (பா-38) என்ற பாடலடிக்குத் தன் கணவரோடு ஒட்டியிருக்கும் மனைவியின் உள்ளம்போல் ஒட்டியிருக்கும் மாதுளம் பழத்தின் முத்துக்கள் என்று பொருளுரைத்திருப்பது இவரது உரைச்சிறப்பினை எடுத்துரைப்பதாய் அமைகின்றது.

குறிப்புரை தருதல்

 “சிலம்புங் கழலும் நோதருமால்

 சிறியேம் சிற்றில் சிதையேலே ” (பா-78)

 சிலம்பும் கழலும் உன் மெல்லிய கால்களை வருத்தும் எனவே சிற்றிலைச் சிதைக்காதே என்பதே பொருளுரை. இதற்கு, ‘எம் சிற்றில் சிதைவதைக் காட்டிலும் உன் கால்கள் நோகும் என்றே வருந்துகிறோம்’என்று ஆசிரியர் குறிப்புரையைச் சுட்டிச் சென்றுள்ளார். மேலும்,

 “ஓங்கலிடை யெழுந்துவருஞ் சூரியனு நின்னொருமை

 ஓவ்வொருநா ளும்பு கல்வான்” (பா-81)

என்ற பாடலடியில் ‘புகல்வான்’என்ற சொல்லை விளக்க விரும்பும் ஆசிரியர்,

புகல்தல் - விரும்பிச் சொல்லுதல்

இயம்புதல் - இசைக்கருவி இயக்கிச் சொல்லுதல்

நவிலுதல் - நாவினால் ஒலித்துப் பயிலுதல்

செப்புதல் - வினாவிற்கு விடை சொல்லுதல்

கிளத்தல் - இன்னதென்று குறிப்பிட்டுச் சொல்லுதல்

 என்றவாறு குறிப்புரை வழங்கியுள்ளார். புகல்தல் முதல் கிளத்தல் ஈறாக உள்ள சொற்கள் ஒருபொருட் குறித்த பல சொற்களேயாயினும் அதன் நுண்ணிய வேறுபாட்டைக் குறிப்புரையாகத் தந்திருப்பது போற்றுதற்குரியதாகும்.

மேற்கோள் சுட்டல்:

 உரையாசிரியர்கள் பலநூற்புலமை பெற்றவர்களாக இருக்க வேண்டு;ம். அப்புலமை அவர்தம் மேற்கோள் காட்டும் நூல்களின் வழித் தெளிவுறும். இதனை,

 ‘முரசுகட்டில் படுத்தவனின் முன்னின்று விசிறியவன்’

 ‘ஆடிடுமோர் பூங்கொடிக்கு அணித்தேரைக் கொடுத்து நடந்தான்’

 ‘அரசிழந்த நிலையிலும் அண்டிவந்த புலவனிடம்

 அளித்திடத்தன் தலைவணங்கி’ (பா-82)

என்ற சிறுபறைப் பாடலடிகளில் முறையே, தகடூரெறிந்த சேரமான் பெருஞ்சேரலிரும்பொறைத் தன் முரசு கட்டிலின் மீது அறியாது துயி;ன்ற மோசிகீரனார்க்குக் கவரி வீசியதையும் பாரி தன் நெடுந்தேரை முல்லைக் கொடிக்குப் படர நிறுத்தியதையும் தன்னை நாடிப் பரிசில் பெற வந்த புலவனுக்குத் தன் தலையைக் கொடுத்துக் கொடை பெற்றுச் செல்லுமாறு தலை வணங்கிய கிள்ளி வளவனையும் சங்கப் பாடல்களின் வழி மேற்கோள் காட்டியுள்ளார்.

‘வண்டுடுத்தே உற்றறியும் உலகியலைச் சுமப்பதற்கோ உவந்திந்த மண்ணிற் பிறந்தாய்” (பா-15)

 என்று தொடங்கும் பாடலுக்கு,

 “ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல

 நாணுடைமை மாந்தர் சிறப்பு”2 - (1012)

என்ற திருக்குறளையும்,

 “குறும்பின் னகையுங் குறுநடையுங்

 குறுகு றுக்குள் கண்ணொளியும்” (பா-71) என்ற பாடலடிகளுக்குப்,

 “படைப்புப் பல படைத்து பலரோடு உண்ணும்

 உடைபெருஞ் செல்வ ராயினும் இடைப்படக்

 குறுகுறு நடந்து சிறுகை நீட்டி

 இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்

 நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்…”3 (புறம்-88)

என்ற புறநானூற்றுப் பாடலையும் ‘பெறும் பேறவற்றுள் பெறும் பேறாய்’ என்ற வரிக்கு,

 “பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த

 முக்கட்பே றல்ல பிற” 4- (61)

 என்ற குறளையும் மேற்கோளாகச் சுட்டிச் செல்கிறார்.

ஒப்புமை காட்டல்:

 பண்டைக் காலந்தொட்டே உரையாசிரியர்கள் தாம் உரை கூற விளையும் நூலுக்கு உரை விவரிக்கும் போது அந்நூலுக்கு முந்திய அல்லது அதற்கு இணையான வேறொரு நூலிலிருந்து ஒப்புமை காட்டுவதை மரபாகக் கைக்கொண்டிருந்தனர்.

 “கண்ணின் ஒளிவிண் மீனொளியோ

 கண்ணோ கயலோ கருவண்டோ

 சோலை மலரோ சுடர்பொன்னோ” (பா-24)

என்ற பாடலடிகளுக்குப் பாரதியாரின்,

 “சுட்டும்விழிச் சுடர்தான் கண்ணம்மா!

 சூரிய சந்திரரோ

 வட்டக் கரியவிழி கண்ணம்மா

 வானக் கருமை கொல்லோ?

 சோலைமலர் ஒளியோ உனது

 சுந்தரப் புன்னகைதான்?”5

என்ற பாடலடிகளை ஒப்புமை காட்டுகிறார்.

 “முகில்வான் கீழே சருக்கரையால்

 முழுதும் இயன்ற பந்தலின்மேல்

 புத்தம் புதுத்தேன் மழைசொரிய” (பா-25)

என்ற பாடலடிகளை விளக்க வந்த ஆசிரியர் ‘சருக்கரைப் பந்தலிலே தேன்மாரி பொலிந்தது போல்’ என்ற பழமொழியின் வழி ஒப்புமை கூறிச்செல்கிறார்.

இலக்கணக் குறிப்பு கூறல்:

 பாட்டுடைத் தலைவனான இயேசுபிரானின் அழகு, முகவடிவு, நடை முதலியவற்றைக் குறிப்படும் போது அரிய பல உவமை, உருவகங்களை எடுத்துரைத்துள்ளார்.

இயேசுபிரான் சீரடிகளைக் கூற முற்படும் போது,

 “எழுதுந் தூவல் முனைபோல

 இணைச் சீரடிகள் நடைபயில” (பா-72)

எழுதுகின்ற பேனாவின் கூரிய முனைபோல் இருக்கும் இணைச் சீரடிகள் என்கிறார். மேலும், ‘ஒன்றை அடுத்த சுழி உயர்வுறல் போல’ (பா-48) ‘பொன்னெழுத் தாலொரு பொத்தகம் ஒத்தவன்’ (பா-87) என்றவாறும் பல உவமைகளைக் கூறிச்செல்கிறார். இயேசு பிரானின் சிரிப்பினைக் கூற முற்படும் போது ‘வெள்ளரிப் பல் தனியழகாய் விளங்கச் சிரிப்பாய்’ (பா-72) என்கிறார். முத்துப்பல், முல்லைப் பல் என்பவைகளே பலரும் கையாளும் உவமை ஆனால் ஆசிரியரோ வெள்ளரிப்பல் என்று புதுவித உவமைகளைக் கையாளுகிறார்.

 இந்நூலில் அணிநயங்கள் பல அழகுற மின்னுகின்றன. சான்றாக,

 “முழுநில வழகோ முத்தமிழ்ப் பிழிவோ

 முக்கனி தருநறுஞ் சுவையோ

 எழுசுட ரெழிலோ வனமுகில் வனப்போ

 இன்மல ரிதழ்தருங் குளிரோ” (பா-2)

இப்பாடலில் இயேசுபிரானின் வனப்பினை வியந்து போற்றும் போது வியப்பணி (அதிசய அணி) பயின்றுள்ளதை எடுத்துக் கூறியுள்ளார்.

 “மனப்படு மொருபொருள் வனப்புவந் துரைப்புழி

 உலகுவாம் பிறவா நிலைமைத்தாகி

 ஆன்றோர் வியப்பத் தோன்றுவது அதிசியமே” 6 (அணி-54)

மனதில் பதிந்த ஒரு பொருளின் அழகைக் கண்டு மகிழ்ந்து உலக நடைமுறையைக் கடந்து சான்றோர்கள் வியக்கும்படி உயர்த்திக் கூறுவது அதிசயமாகும் என்று தண்டியலங்காரம் விளக்கமளிக்கிறது. இதன்படி பாட்டுடைத் தலைவனின் வடிவழகை, முழுநிலவு, முத்தமிழ், முக்கனி, நறுஞ்சுவை, எழுசுடர், முகில் முதலியவற்றுடன் ஒப்பிட்டுக் கூறும் போது அதிசயவணி புலப்படுத்தப்பட்டுள்ளது.

பல்துறைப் புலமை:

உரையாசிரியர்கள் மொழிப்புலமையும் அறிவியல் ஞானமும் பல்துறையறிவும், இலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த வாசிப்பும் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இவையனைத்தும் ஒருங்கே கைவரப் பெற்றவராக பாவலர் விளங்குகிறார்.

 “தாவுதனி அச்செழுத்தல் தாளெல்லாம் நூலாகும்

 தமிழ் பேசும் நாடாப் பதிவும்

 விண்ணின்றும் பேச்சுவரும் விரும்புமிசைப் பாட்டுவரும்

 விரிதிரையின் காட்சி விரியும் …….

 மதிதோற்கக் கணக்கிடவும் வரலாற்றைப் படைத்திடவும்

 வகைவகையாய்ப் பொறிகள் வளரும்” (பா-52)

என்ற வருகைப் பருவப் பாடலில் அறிவியல் கருவிகளான,

தனி அச்சு எழுத்து – lino Type

நாடாப்பதிவு – Tape Recorder

விரிதிரைக் காட்சி – Cinima

கணக்குப் பொறிகள் – Calculater, Computer

முதலியவற்றைப் பட்டியலிட்டு விளக்கியிருப்பது இவரது உரைச்சிறப்பிற்குத் தக்க சான்றாக அமைகின்றது. இவை மட்டுமின்றி விவிலியக் கருத்துகளையும் பல இடங்களில் கோடிட்டுக் காட்டியுள்ளார். சான்றாக,

 ‘தட்டினால் திறக்கின்ற பெட்டகமே’ (பா-44) என்பதற்குக் “கேளுங்கள் அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும்: தேடுங்கள் அப்போது கண்டடைவீர்கள்:தட்டுங்கள் அப்போது உங்களுக்குத் திறக்கப்படும் ”7 என்று வேதாகமம் புதிய ஏற்பாட்டின் வழி உரை வகுத்திருப்பதைக் காணமுடிகிறது. இதனை,

 “தட்டுங்கள் திறக்கப்படும்

 கேளுங்கள் கொடுக்கப்படும்

 தேடுங்கள் கண்டடைவீர்கள்

 தேவன் வீடு சென்றடைவீர்கள்”. 8

என்று கவியரசு கண்ணதாசன் இயேசு காவியத்தில் கூறியுள்ளார். இலக்கியங்களில் இடம்பெற வேண்டிய மங்கலச் சொற்களைப் பன்னிருபாட்டியல்,

 “பொன்பூ திருமணி புனல் ஆரணம் கடல்

 செங்கதிர் திகிரி தேர்பரி எழுத்தே

 மாநிலம் கங்கை மலைபுகழ் அமுதம்

 கார்புயல் உலகம் களிரே அருந்ததி

 பார்மதி நாள்சீர் ……. ”9 (பன்னிரு-133)

என்றவாறு பட்டியலிடுகிறது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள மங்கலச் சொற்களை ஆசிரியர் பல இடங்களில் சுட்டிச் சென்றுள்ளார்.

தொகுப்புரை:

 பாவலர் எனும் சிறப்பினைக் கொண்ட அருள் செல்லத்துரையின் உரைச்சிறப்பினை அருஞ்சொற்பொருள் தருதல், குறிப்புரை தருதல், ஒப்புமை சுட்டல், இலக்கணக் குறிப்புக் கூறல், விவிலியக் கருத்துகளைக் கூறல், அவரது பல்துறைப் புலமை முதலியவற்றின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.

 அடிக்குறிப்பு

  1. தமிழண்ணல், (உ. ஆ)தொல்காப்பியம் (தொகுதி-4)நூ-1429, ப-74
  2. நாராயண வேலுப்பிள்ளை, (உ. ஆ)திருக்குறள், குறள்-1012
  3. புலியூர்க்கேசிகன், (உ. ஆ) புறநானூறு, ப-201
  4. நாராயண வேலுப்பிள்ளை, மு. கூ. நூல், குறள்-61
  5. இராமையா, (ப. ஆ) பாரதியார் கவிதைகள் ப-296
  6. சுப்பிரமணிய தேசிகர், (உ. ஆ) தண்டியலங்காரம் ப-124
  7. வேதாகமம், புதிய ஏற்பாடு, மத்தேயு (7;:7) ப-10
  8. கண்ணதாசன், இயேசுகாவியம் ப-19
  9. ச. வே சுப்பிரமணியன், தமிழ் இலக்கண நூல்கள் ப-260

முனைவர் செ.சாந்தி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி.