panai maram 6401. பனைமரம்

1.1.பனைமரத்தின் சிறப்பு

‘கடையாயர் நட்பிற் கமுகனையர் ஏனை

இடையாயார் தெங்கின் அனையர்- தலையாயார்

எண்ணரும் பெண்ணைபோன்(று) இட்டஞான்றிட்டதே

தொன்மை யுடையார் தொடர்பு.’ (216)

இதற்குரிய உரையில் கமுகு, தென்னை, பெண்ணை இவற்றைப் பற்றி பதுமனார் கூறுவதைக் காண்போம்.

/கமுகுக்கு நாள்தோறும் இறைக்கவும் மேற்றலையில் குற்றமாய புழுக்கடியும் பார்த்துப் பேணினாற்போல் இவனுக்கு நாள் தோறும் செய்யும் ……..அருஷதஞ் செய்ய வேண்டும். அது ஒழிந்தால் கமுகு தலைகெட்டு விழுந்தாற்போல இவனும் விழுமளவும் தீனகு விசாரிப்பான் என்றவாறு.

இடையாயார் தெங்கின் அனையர்- தெங்கிற்குத் தலையாலே தண்ணீர் சுமந்து அடியிலே வார்க்கப் பின் தலையாலே நீரைத் தருதலால் இவர்க்கும் முன்பு நன்மை செய்தால் பின்பு வரும்.

எண்ணரும் பெண்ணை போன்று இட்டஞான்று இட்டதே தொன்மையுடையார் தொடர்பு- எண்ணுதற்கரிய பனையும் ஒரு நாள் விதையிட்டாற் பின்பு பாதுகாக்க வேண்டாம். பின்பு பயன்பட்ட காலத்திலே சென்று பயன் கொண்டாற்போல அறிவும் , ஒழுக்கமும் பெருமையும் முயற்சியும் ஒழியாமல் தொன்றுதொட்டு வரும் பழைமையை யுடையார் உறவை விடாது கொள்ளுதல் நன்று என்று உரைப்பாருமுளர்./ - (பக்கம் 35, பதுமனார் உரை நாலடியார் உரைவளம் இரண்டாம் பாகம்.)

நட்பில் கமுகிற்கு நாள்தோறும் நீர் இறைப்பது முதலிய அதிக பராமரிப்பு தேவைப்படுகிறது என்பதும், தென்னைக்கு அது வளரும் வரை நீர் இறைத்தால்தான் வளர்ந்தபின் பயன் தரும் என்பதும், பனைமரமோ வித்திட்ட பிறகு குறைந்த நன்மையைச் செய்தாலுங்கூட அது பெரும்பயனைத் தரும் என்பதும், இவற்றைப் பேணியிருந்தாலன்றி அல்லது பேணி வளர்த்ததைப் பார்த்தாலன்றிக் கூற முடியாச் செய்திகள்.

கமுகு, தென்னை, பனை மரங்கள் அவர்களால் (நாலடிப் பாடல் காலத்து மக்களால் ) வளர்க்கப்பட்டிருக்கின்றன என்பதோடு, பனைமரத்தை வித்திட்டு வளர்க்கும் செய்தி இதில் கிடைக்கப் பெறுவதைக் காண்க. பனங்கிழங்கு முதலானவை வேண்டி பனங்கொட்டைகளை முளைக்க வைக்கும் பழக்கம் இன்றளவும் நம் தமிழ்நாட்டில் பல பகுதிகளிலும் காணப்படுகிறது.

இப்பாடலைக் கொண்டு நாம் கண்டடையும் முடிவு இதுதான்… அக்காலச் சமூகத்தில், கமுகு, தென்னையைவிட பனை மரமே மிகவும் உயர்வாகக் கருதப்பட்டுள்ளது.

1.2. ஊர்நடுவில் பனைமரம்

‘நடுவூருள் வேதிகை சுற்றுக்கோட் புக்க

 படுபனை அன்னர் பலர் நச்ச வாழ்வார்’ (96)

என்ற பாடல் வழி பனை மரத்தை விரும்பி வளர்த்துள்ளனர் என்பது நமக்கு அறியலாகிறது. அதிலும் பெண்பனையைப் பெரிதும் போற்றி வளர்த்துள்ளனர். ஆண்பனை மக்கள் புழக்கம் இல்லா இடங்களில் மட்டுமே இருக்கும் (இடுகாட்டுள் ஏற்றுப்பனை 96) என்பதும் நமக்கு அறியக் கிடைக்கும் செய்தி. பெண்பனையானது இருக்கும் இடத்தில் அதைச் சுற்றிலும் திண்ணை (வேதிகை) போன்ற கட்டை கட்டி வைப்பார்கள் என்னும் செய்தி புதுமையான ஒன்றாய் இருக்கிறது.

தற்காலத்தில் நானறிந்தவரை பனைமரத்தைச் சுற்றி கட்டை கட்டுவது எங்கும் இல்லை. அரச மரம் வேப்பமரத்தைச் சுற்றி கட்டை கட்டுவார்கள். குளக்கரைகளில் உள்ள மரங்களுக்கும் அல்லது மக்கள் கூடுமிடங்களில் உள்ள நிழல்மரங்களுக்கும் கட்டுவார்கள். பனை மரத்தடியில் சில நாட்டார் தெய்வங்கள் இருப்பதுண்டு. அதுபோன்ற இடங்களிலும் கூட பனை மரத்தடியில் மோடை கட்டி அதில் சாமியை வைத்திருப்பார்களே தவிர ஆட்கள் உட்கார்வதுபோல் சுற்றிலும் கட்ட மாட்டார்கள். பனை மரத்திற்குச் சுற்றிலும் கட்டை கட்டும் வழக்கம் இருந்திருக்கிறது என்பது நமக்குக் கிடைக்கும் செய்தி.

பனைமரம் அதன் பயன்கொடுக்குந் தன்மையால் மக்களால் எவ்வளவு போற்றப்பட்டு வந்துள்ளது என்பதற்கு இப்பாடல் சான்று.

1.3 நுங்கு வெட்டுதல்

நுங்கு வெட்டி அதைச் சீவி சூன்றெடுத்தலை,

‘தெண்ணீர்க் குவளை பொருகயல் வேலென்று

கண்ணில்புன் மாக்கள் கவற்ற விடுவனோ

உண்ணீர் களைந்தக்கால் நுங்கு சூன்றிட்டன்ன

கண்ணீர்மை கண்டொழுகுவேன்’ (44)

என்னும் பாடல் நுட்பமாகச் சொல்கிறது. பாடல் என்னவோ - கண்களைத் தோண்டி எடுத்துவிட்டால் நுங்கு சூன்றெடுத்த நுங்குமட்டைக் குழியைப் போல முகம் இருக்கும் - என்றுதான் சொல்கிறது. சூன்றெடுத்தலுக்கான குறிப்பு மட்டும்தானே இதில் இருக்கிறது? வெட்டி என்பது வலிந்து வருவித்ததோ என யாரேனும் கருதலாம். இந்த இடத்தில், நுங்கு பனை மரத்திலிருந்து பனம்பழமாகப் பழுத்தாலன்றித் தானாக விழாது என்பதையும் இணைத்தெண்ணியே நுங்கு வெட்டும் செயலை ஊகித்துணர வேண்டும்.

மரமேறி வெட்டினால் அல்லவா நுங்கு கைக்குக் கிடைக்கும்? நுங்கு கைக்குக் கிடைத்தாலல்லவா அதைக் குறுக்கில் வெட்டிச் சீவ முடியும்? சீவினாலல்லவா அதன் இளஞ்சுளைகளைச் சூன்றெடுத்துச் சாப்பிட முடியும்? பனைமரத்தின் பயன் கருதி அதைப் போற்றி வந்திருக்கும் அன்றைய சூழலில் பனையின் மிக முக்கிய பயனான நுங்கு வெட்டுதல் இக்குறிப்பில் இடம்பெறுகிறது என்பது வலிந்து கொள்ளுதலாகாது.

மேலும் ‘கள்ளார் கள்ளுண்ணார்’ (157) என்னும் குறிப்பிலிருந்து கள் இறக்கப்பட்டுள்ளதையும் அறிந்து கொள்ளலாம். இவையெல்லாம் பனை மரமேறும் தொழில் தொடர்பானவையே.

2. கரும்பு

‘தீங்கரும்(பு) ஈன்ற திரள்கா(ல்) உளையலரி

தேங்கமழ் நாற்றம் இழந்தாங்கு’ (199)

இப்பாடலில் , இனிப்பான கரும்பின் பூவுக்கு இனிய நறுமணம் இல்லை என்னும் குறிப்பு விளைநிலங்களில் கரும்பு உற்பத்தியைப் பற்றிய பதிவாக இருக்கிறது.

‘கடித்துக் கரும்பினைக் கண்டகற நூறி

 இடித்துநீர் கொள்ளினும் இன்சுவைத்தேயாகும்’ (156)

கரும்பினைக் கடித்துத் தின்றதோடு ஆலையில் இடித்துச் சாறெடுத்தனர் என்கிற குறிப்பும் மேற்கண்ட அடிகளில் காணக் கிடைக்கிறது. கரும்பும் இனிக்கிறது, கரும்புச் சாறும் இனிக்கிறது என்ற குறிப்பிலிருந்து கரும்பைத் தின்றும், கரும்புச் சாற்றைப் பருகியுமுள்ளனர் என்பதை அறிந்து கொள்கிறோம்.

கரும்பின் வேர்ப்பகுதி இனிப்பு மிக்கபகுதி என்றும், நுனிப்பகுதி இனிப்புச் சுவை குறைவாக இருக்கும் பகுதி என்றும், அவர்கள் தின்று நோக்கிக் கண்டனர். ‘நுனியிற் கரும்புதின்று அற்றே நுனினீக்கித் தூரில்தின்றன்ன’ (138) என்னும் பாடற்குறிப்பு அதைத்தான் சொல்கிறது. கரும்பை எப்போது தின்றாலும் நுனியில் இருந்து வேர்நோக்கித் தின்ன வேண்டும் என்றும் அவர்கள் பின்பற்றிய வாழ்வியல் வழக்கத்தைச் சொல்கின்றனர். இனிப்புச் சுவைக்குப் பின்பு சப்பென்று சுவை இருந்தால் இனிமை குறையும் என்பதால் சப்பென்றிருக்கும் நுனிக் கரும்பைச் சாப்பிட்டு முடித்த பின்னரே அடிக்கரும்பைச் சாப்பிட வேண்டும் என்பது எண்ணி வியக்க வேண்டிய குறிப்பு

‘கற்றறிந்தார் கேண்மை எஞ்ஞான்றும்

குருத்திற் கரும்புதின் றற்றே குருத்திற்கு

எதிர்செலத்தின் றன்ன’ (211)

என்ற பாடலடிகளும் இதனையே உறுதிபடுத்துகிறது.

(கரும்பு சாப்பிடும் முறையைப் பற்றிச் சொல்லும் போது ஒரு செய்தி நினைவிற்கு வருகிறது. காந்தியைப் பேட்டி எடுக்க வந்திருந்தார் பத்திரிகையாளர் லூயிபிஷர். உணவருந்தும்போது இலையில் மாம்பழம் பரிமாறப்பட்டிருக்கிறது. அவருக்கு அதை எப்படித் தின்பது என்பது தெரியவில்லை. அப்போது அருகில் இருந்த காந்தி மாம்பழத்தை கைகளில் வைத்துப் பிசைந்து கூழாக்கித் தோலில் துளையிட்டு உறிஞ்சி சாப்பிடவேண்டும் என்று செய்து காட்டிச் சொல்லிக் கொடுத்ததாக அவர் நூலில் குறித்திருக்கிறார். மாம்பழம் சாப்பிடும் முறைபோல கரும்பு சாப்பிடும் முறை இது.)

‘கரும்பாட்டிக் கட்டிச் சிறுகாலைக் கொண்டார்/ துரும்பெழுந்து வேங்காற்…’ (35)

இக்குறிப்பின் வழி அக்காலத்தில் கரும்பை ஆலையில் ஆட்டிச் சாறு எடுத்ததையும் அதைக் காய்ச்சி வெல்லம் (அக்காரம்) கட்டி உற்பத்தி செய்ததையும் மீதமுள்ள சக்கையை எரித்துள்ளதையும் அறிய முடிகிறது.

இதனையே

‘கரும்பூர்ந்த சாறு போற் சாலவும் பின்னுதவி மற்றதன் கோதுபோற் போகு முடம்பு’ (34)

என்னும் பாடல்வரியும் உறுதிபடுத்துகிறது.

இப்படிக் கரும்பிலிருந்து எடுக்கப்பட்ட சாறிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட அக்காரம் (வெல்லம்) அவர்களின் உணவு முறையில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்ததற்கும் குறிப்புகள் இருக்கின்றன. வெல்லத்தின் பயன்பாட்டைப் பற்றிக் கூறும் வகையில் அமைந்திருக்கிறது, ‘அக்காரம் யாவரே தின்னினும் கையாதாம்’ (112) அக்காரத்தை (வெல்லத்தை) யார் தின்னாலும் கசக்காது என்கிற இக்குறிப்பு. இந்த அக்காரம் கொண்டு பொங்கல் வைத்ததைப், ‘புலியுகிர் வான்புழுக்கல் அக்காரம் பாலோடு’ (206) என்னும் பாடற்குறிப்பின் வழி அறிகிறோம்.

ஒருவர் ஒருவர்க்கு இனிமையானவராய்த் தெரிவதை ‘அக்காரம் அன்னார் அவர்க்கு’ (374) என்ற இழிவுக் குறிப்பின் வழி அறிகிறோம். உனக்கு அவன்தான் சக்கர என்று வயதானவர்கள் சிலர் இழிவுபடச் சொல்வதை இப்போதும்கூட கேட்க முடியும்.

பொ.முத்துவேல்

Pin It