ஈழச் சிக்கல் நாளுக்கு நாள் கடும் நெருக்கடிக்குள்ளாகி வருவதாகவே தோன்றுகிறது. என்னதான் சிங்கள இனவெறி அரசும், ராணுவமும் போராளிகளின் இறப்பு பற்றி பொய்ச் செய்திகள் பரப்புவதாகக் கொண்டாலும், ஒரு இனம் தன் விடுதலைப் போராட்டத்தில் தனக்கு ஆதரவாக எந்த பின்புலனும் இன்றி, சுற்றிலும் எதிர் நடவடிக்கைகள் சூழ எத்தனை காலம்தான் தாக்குப் பிடிக்க முடியும் என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

Rajapakse and Manmohan Singhஇந்த நிலையில் ஈழ மக்களுக்கு ஆதரவாகவும் துணையாகவும் நிற்க வேண்டியது தமிழக மக்கள், தமிழக அரசியல் கட்சிகளின் தலையாய கடமையாகும். இந்தத் தருணத்தில் நமது சிந்தனைக்காகவும் பொது மக்களுக்குத் தெளிவூட்டும் முகமாகவும் சில கருத்துகள்:

ஈழ மக்கள் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் விடுதலைக்காகப் போராடி வருகிறார்கள். வியட்நாம் விடுதலையை, நமீபிய, அங்கோலா, தென்னாப்பிரிக்கா விடுதலையை, கொசாவோ, கிழக்கு திமோர் விடுதலையை, அவ்வளவு ஏன், இந்தியத் துணைக் கண்டத்திலேயே பாகிஸ்தானுக்கு எதிரியான பங்களாதேஷ் விடுதலையை ஆதரித்த தில்லி அரசு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க மறுக்கிறது. அங்கீகரிக்க மறுப்பது மட்டுமல்ல, தமிழீழ மக்களைக் கொன்று குவிக்கும் சிங்கள இனவெறி அரசுக்கு ராணுவ உதவிகளையும், படைப் பயிற்சிகளையும் அளித்து ஈழ மக்களுக்கு எதிராகச் செயல்படுகிறது.

இச்சிக்கலில் நுண் அரசியல் சார்ந்த விழிப்பற்று மேலோட்டமான அணுகுமுறை கொண்ட சிலர் தில்லி அரசு, தொடக்கத்தில் தமிழீழத்துக்கு ஆதரவாகத்தான் இருந்தது. ராஜீவ் மறைவுக்குப் பிறகுதான் தன் நிலைப்பாட்டினை மாற்றிக் கொண்டது என்பதாக கருத்து கொண்டுள்ளனர். இது தவறு.

ராஜீவ் மறைவுக்கு முன்னும் பின்னும் தில்லி அரசு ஒரே நிலைப்பாட்டைத்தான் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதைத் தெளிவுபடுத்திக் கொள்ள இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை அண்டை நாடுகளுடனான அதன் அணுகுமுறைகள் பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தானும், சீனாவும் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்கள் என தில்லி கருதுகிறது. இதனால், என்னதான் அந் நாடுகளோடு நல்லுறவு, நட்புறவு என்று பேசிக் கொண்டாலும், உள்ளூர இந்தியாவின் செயல்பாடுகள் அந்நாடுகளுக்கு எதிரானதாகவே இருக்கிறது. இதற்கு அப்பால் அண்டை நாடுகளாக உள்ள நேபாளம், பூட்டான், பங்களாதேஷ், மாலத்தீவுகள் ஆகியன குட்டி நாடுகள். இவை பற்றி இந்தியாவுக்கு அச்சமில்லை. எல்லாம் தன் கட்டுக்குள் தன்னை மூத்த சகோதரனாக ஏற்றுக் கொள்ளும் நிலையில் உள்ள நாடுகள் என்கிற நம்பிக்கையில் கொள்ளப்படுபவை.

ஆனால் இலங்கை அப்படியல்ல. அது இந்தியாவை மூத்த சகோதரனாக ஏற்றுக் கொள்ளும் நாடல்ல. அதே வேளை அது இந்தியாவுக்கு எதிரான அதற்கு நிகரான சம பலமுள்ள நாடும் அல்ல. இதனால் இலங்கை, இந்தியாவின் இளைய சகோதரனாக இருக்க விரும்பாமலும், அதற்கு சவாலாக விளங்கவும், பலமில்லாமலும் சண்டிப் பிள்ளைப் போக்கைக் கடைப்பிடித்து, இந்தியா தனக்கு எல்லா நிலையிலும் உதவ வேண்டும். இல்லாவிட்டால் இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தானிடமிருந்தும், சீனாவிடமிருந்தும் உதவிகள் பெறுவோம் என்று பேரம் பேசி அச்சுறுத்தி இந்தியாவிடமிருந்து பல்வேறு உதவிகளையும் பெற்று தன் அரசை நடத்தி வருகிறது.

பிற சிறு நாடுகளைப் போல சிங்கள அரசையும் பலவீனப்படுத்த இந்திய அரசுக்கு திட்டம்தான். இந்த அடிப்படையிலேயே சிங்கள அரசுக்கு எதிராக, ஈழப் போராளிக் குழுக்களுக்கு தமிழக, இந்திய மண்ணில் தில்லி அரசே போர்ப் பயிற்சி அளித்தது. ஆனால் இந்தப் போராளிக் குழுக்களில் புலிகள் அமைப்பு ராணுவ ரீதியிலும், அரசியல் ரீதியிலும் பலமான அமைப்பாக, தமிழீழ விடுதலையில் உறுதிமிக்க அமைப்பாக உருவெடுக்கவே இந்திய அரசு விழித்துக் கொண்டது.

புலிகள் வென்றால், தமிழீழம் மலர்ந்தால், அதன் தாக்கம் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என அஞ்சிய தில்லி அரசு புலிகள் அமைப்பை மறைமுகமாக ஒடுக்கி ஒரு கட்டுக்குள் வைக்கும் முனைப்பில் இறங்கியது. இதன் விளைவுதான் திம்பு பேச்சு வார்த்தை, ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம், இந்தியப் படை ஈழம் சென்றது, அதன் அட்டூழியங்கள், திலீபன் உண்ணாவிரதம், மறைவு, புலேந்திரன் குமரப்பா உள்ளிட்ட பல போராளிகள் மடிய நேர்ந்தது எல்லாம். இவை அனைத்துமே ராஜீவ் மறைவுக்கு முன் நேர்ந்தவை என்பதை மறந்து விடக்கூடாது. எனவே, பிரச்சனையை ராஜீவ் மறைவுக்கு முன், மறைவுக்குப் பின் என்று பார்க்காது, இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை நோக்கில் பார்க்க வேண்டுவது முக்கியம்.

ஆக இந்திய அரசு, இலங்கை அரசு பாகிஸ்தான் பக்கம், சீனாவின் பக்கம் அதிகம் சாய்ந்து விடாமல், அதைத் தனக்கு நெருக்கமாக வைத்துக் கொள்ள அதற்கு வரம்பு கடந்த உதவிகளைச் செய்து வருகிறது. இப்படிப்பட்ட உதவிகளின் ஒரு அம்சம்தான் சிங்கள அரசுக்கு ராணுவ உதவிகள், படைப் பயிற்சிகள் அளித்தல் எல்லாமும். ஆனால், இலங்கை அரசு இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி இந்தியாவிடமிருந்து உதவிகள் பெறுவதுடன், பாகிஸ்தான் சீனாவிடமிருந்தும் ஆயுத உதவிகள் பெற்று, சாதுர்யமாகத் தன் தமிழின அழிப்பு வேலையைச் செய்து வருகிறது.

இதுவே தற்போதுள்ள நிலை. எனவே இந்த நிலையை மாற்றி - அதாவது தில்லி அரசின் வெளியுறவுக் கொள்கையை மாற்றி, தமிழீழ மக்களைக் காப்பாற்ற தில்லி அரசு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளச் செய்ய வேண்டுவதே தற்போது தமிழக மக்கள், தமிழக அரசியல் கட்சிகள் முன் உள்ள மிக முக்கியக் கடமையாகும்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இருபத்தைந்து முப்பது வருடமாய் நாமும், தமிழீழத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள், மாநாடுகள், போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மறியல் என்று என்னென்னவோ நடத்திக் கொண்டுதானிருக்கிறோம். தில்லி அரசே, ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள இன வெறி அரசுக்கு ராணுவ உதவிகள் செய்யாதே, ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்று என வாய் கிழிய கத்திக் கொண்டுதானிருக்கிறோம். ஆனால் தில்லி அரசு எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் அதுபாட்டுக்கு அதன் காரியத்தைச் செய்து கொண்டுதானிருக்கிறது.

தில்லி அரசுக்கு இந்தத் துணிச்சல், இந்த அகம்பாவம், அசட்டை எங்கிருந்து வருகிறது? யார் கொடுக்கிற தைரியத்தில் இது இவ்வாறு நடந்து கொள்கிறது. வேறு எந்த மொழி பேசும் மக்களுக்காவது இப்படி எதாவது ஒரு துயரம் நேர்ந்தால், தில்லி அரசு சும்மா இப்படி வேடிக்கைப் பார்த்துக் கொண்டுதான் இருக்குமா என்று யோசித்துப் பார்த்தால், நிச்சயம் இருக்காது. ஆனால், தமிழர்கள் பிரச்சினையில் மட்டும் அப்படி இருக்கிறது என்றால், அவை எல்லாவற்றுக்கும் காரணம் தில்லிக்கு ஆதரவு கொடுக்கும் தமிழகக் கட்சிகள்தான்.

அதாவது தமிழக மக்கள் எக்காரணம் கொண்டும் தில்லிக்கு எதிராகக் கிளர்ந்தெழ மாட்டார்கள். அப்படி கிளர்ந்தெழாத வேலையைத் தங்களை ஆதரிக்கும் தமிழ் நாட்டுக் கட்சிகள் பார்த்துக் கொள்ளும். தமிழ் நாட்டுக் கட்சிகள் தங்களுக்குள் எவ்வளவுதான் முரண்பட்டாலும், பகைமை பாராட்டிக் கொண்டாலும் தில்லிக்குத் தரும் ஆதரவை மட்டும் விலக்கிக் கொள்ளாது. ஆகவே தமிழ் நாட்டில் இப்படிப்பட்ட கட்சிகள் இருக்கும் வரை தங்களுக்கு எந்தப் பிரச்சனையுமில்லை. ஆட்சிக்கும் எந்த பாதிப்புமில்லை என்கிற மமதையில் அகந்தையிலேயே தில்லி ஆட்சியாளர்கள் இப்படி அசட்டையாக இருக்கிறார்கள். எனவேதான் இந்த நிலையை மாற்ற தமிழகக் கட்சிகள் ஒன்றுபட வேண்டும், ஒருமித்து குரல் எழுப்ப வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைக்கிறோம்.

தமிழகத் தலைவர்கள், தங்கள் தன்னலவாத கட்சி அரசியலுக்காக, கூட்டணிக்காக, அற்ப பதவி சுகங்களுக்காக, நம் கண்முன்னே ஒரு இனம், நம் சகோதர இனம், நமது தொப்புள் கொடியுறவு கொன்றழிக்கப்படுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வாளாயிருக்கலாமா என்று கேட்கிறோம். எனவே, கட்சி வேறுபாடுகளை மறந்து, கூட்டணி நிலைபாடுகளை ஒதுக்கி வைத்து, ஈழச் சிக்கலில் அனைத்து தமிழகத் தலைவர்களும் ஒன்றுபட்டு, ஓரணியில் திரண்டு குரல் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கூடவே, நம் தலைவர்கள் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம். நாளைய வரலாறு ஒரு இயக்கத்தின் தலைவர் எத்தனை சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களோடு வாழ்ந்தார், எத்தனை பேருக்கு அமைச்சர் பதவி வாங்கித் தந்தார் என்பதையெல்லாம் வைத்து மதிப்பிடாது. மாறாக அத்தலைவர் தன் இனத்துக்கு, தான் வாழ்ந்த சமூகத்துக்கு என்ன செய்தார் என்பதை வைத்தே மதிப்பிடும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஆகவே, நம் தலைவர்கள் என் கண்முன்னே என் இனம் அழிக்கப்படும் போது கூட்டணியாவது, மண்ணாங்கட்டியாவது, நாற்காலியாவது பதவியாவது என அதைத் தூக்கியெறிந்து விட்டு இன நலம் காக்க, ஈழத் தமிழர் உயிர்க்காக்க முன் வர வேண்டும். அதற்காக ஒன்றுபட்டுப் போராட வேண்டும்.

Pin It