கொரோனா நச்சுக் கிருமியினால் பரவக்கூடிய COVID-19 தொற்றுநோய் உலகம் முழுவதிலும் பெரும் அச்சுறுத்தலையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கக்கூடிய இந்நிலையிலும், தொற்றுநோய் பரவும் மையங்களாக சிறைகள் மாறிவிடும் ஆபத்து இருப்பதனால், விசாரணைக் கைதிகளை முன் ஜாமீனில் வெளியே விடுவதற்கு இந்திய அரசின் உச்சநீதிமன்றம் வழிகாட்டி இருக்கக்கூடிய இந்தச் சூழ்நிலையிலும், தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் இந்தியா முழுவதுமே முடங்கி இருக்கக்கூடிய இந்தச் சூழ்நிலையிலும், பல்லாயிரக்கணக்கான வலசைத் தொழிலாளர்கள் வாழ வழியின்றி பள்ளி முகாம்களில் அடைபட்டுக் கிடக்கக்கூடிய இந்தச் சூழ்நிலையிலும்கூட, கொடுங்கோன்மை குணம் பொருந்திய இந்திய அரசின் அரசியல் அடக்குமுறையிலிருந்து, இந்தியாவின் ஆகச்சிறந்த அறிவு ஆளுமைகளில் ஒருவரான ஆனந்த் டெல்டும்டேவை கொரோனா போன்ற எந்த ஒரு கிருமியாலும் தடுத்திட இயலவில்லை.
ஆனந்த் டெல்டும்டே (Anand Teltumbde), புதிய தாராளவாத - முதலாளித்துவ - இந்துத்துவ ஆட்சியாளர்களால் 'மிக ஆபத்தான நபர்' ஆக ஏன் அறியப்படுகிறார்?
2018-ஆம் ஆண்டு பீமா கோராகான் (Bhima Koregaon) எனுமிடத்தில் ஏற்பட்ட கலவரத்திற்கு சம்பாஜி பிடே (Sambhaji Bhide), மிலிந்த் எக்போதே (Milind Ekbote) எனும் இரண்டு இந்துத்துவ செயல்பட்டாளர்கள் காரணமெனக் கருதி அவர்கள் இருவரின்மீது தனது விசாரணையை குவிமையப்படுத்தியது காவல் துறை. ஆனால், காவல் துறையின் இந்த விசாரணை முறையில் முறைகேடு இருப்பதாக வலதுசாரி சங் பரிவார அமைப்புகளிலிருந்து உடனடியாக ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. முன்னே கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு மாறாக, பீமா கோராகனில் ஆண்டுதோறும் கூடும், முற்போக்கு அம்பேத்கரிய அமைப்புகளின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பான எல்கர் பரிஷத் (Elgar Parishad) என்ற அமைப்பையும், அதன் செயல்பாட்டாளர்களையும் வேண்டுமென்றே தவறான முறையில் குற்றம் சாட்டியதோடு, அவர்கள் மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
மாவோயிஸ்ட் புரட்சிகர அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதை யாவரும் அறிவர். அவ்வாறு இருக்கும்போது, அடித்தட்டு தலித் சிந்தனையாளர்களின் ஒரு கூட்டியக்க நிகழ்வை, தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பின் நிகழ்வாக சித்தரிக்க வேண்டியது ஏன்?
இந்தப் பிரச்சனையை ஆரம்பத்திலிருந்தே கூர்ந்து கவனித்துவரும் ஒருவரால், சட்ட வழிமுறைகளையும், அரசு அமைப்பையும் தன்னுடைய குரோத வக்கிரத்தனமான இந்துத்துவ நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொண்டு, தலித்துகளையும் அம்பேத்கரியவாதிகளையும் முடக்கும் நோக்கத்திற்காகவே இத்தகைய மோசடி வேட்டைகள் செய்யப்படுகின்றன என்பதனை தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
நாடு முழுவதும் உள்ள முற்போக்குவாதிகளையும் அரசியல் சமூக களச் செயல்பாட்டாளர்களையும் கைது செய்வதை நியாயப்படுத்துவதற்கும், கைது நடவடிக்கைக்கு ஒட்டுமொத்த பொதுமக்களின் ஆதரவைத் திரட்டுவதற்கும் வாய்ப்பாக, 'மாவோயிஸ்டுகள்' என்ற பதத்தைக் கைவிட்டு, 'நகர நக்சலைட்டுகள்' (urban naxal) என்ற புதிய பதத்தைக் கண்டறிந்து அதைத் தொடர்ந்து பயன்படுத்தத் தொடங்கினார்கள்.
நாடு முழுவதும் இருந்த அறிவுப் பெருந்தகைகளையும் சமூக –அரசியல் களச்செயல்பாட்டார்களையும் வேட்டையாட 'நகர நக்சலைட்டுகள்' என்ற இந்த ஒற்றைச் சொல்லாடலே போதுமானதாக இருந்தது. ஒருவரின் செயல்பாட்டில் இடதுசாரி சிந்தனையின் அறிகுறிகள் தென்பட்டாலே அவரை ’நகர நக்சலைட்டு’ எனக்கூறி அந்த சதி வளையத்திற்குள் சிக்க வைத்தார்கள்.
நாட்டின் முதன்மையமைச்சர் நரேந்திர மோதி அவர்களைப் படுகொலை செய்வதற்கு இடதுசாரி அமைப்புகள் திட்டமிட்டிருக்கிறார்கள் என்றொரு சதிக் குற்றச்சாட்டை இட்டுக்கட்டி உருவாக்கி, நாடு முழுவதும் அதனை தலைப்புச் செய்திகளாக ஆக்குவதற்கும் இந்தச் சொல்லாடல் அவர்களுக்கு வழிவகுத்துக் கொடுத்தது. திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இந்த சதிக் குற்றச்சாட்டின் பெயரில், போற்றுதலுக்குரிய தொழிற்சங்க வழக்குரைஞர் சுதா பரத்வாஜ் (Sudha Bharadwaj), ஆங்கிலப் பேராசிரியர் சோமா சென் (Shoma Sen), வழக்குரைஞர்கள் சுரேந்திரா காட்லிங் (Surendra Gadling), வருணன் கன்சால்வ்ஸ் (Vernon Gonsalves), சமூக செயல்பாட்டாளரும் ஆய்வறிஞருமான மகேஸ் ராவத் (Mahesh Raut), இதழியலாளர் அருண் ஃபெரைரா (Arun Ferreira), இதழாசிரியர் சுதீர் தவாலே (Sudhir Dhawale), அரசியல் கைதிகளின் உரிமைகளுக்காகப் போராடிய களச்செயற்பாட்டாளர் ரோனா வில்சன் (Rona Wilson), முதுபெரும் தெலுங்குக் கவிஞர் வரவர ராவ் (Varavara Rao) உள்ளிட்ட பலரையும் சிறைக்குள் தள்ளியிருக்கிறது மோடி அரசு.
இந்தப் பட்டியலில் மேலும் இரண்டு களச் செயற்பாட்டாளர்களின் பெயர்களும் இருந்தது. இதழியலாளரும் களச் செயற்பாட்டாளருமான கௌதம் நவ்லாகாவும் (Gautam Navlakha), ஆனந்த் டெல்டும்டேவும்தான் (Anand Teltumbde) அந்த இருவர். அவ்விருவரும் தேசிய விசாரணை ஆணையத்தின் முன்பு ஏப்ரல் 14 செவ்வாயன்று நேரில் சரணடையுமாறு ஏற்கனவே கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இவர்கள்மீது சொல்லப்பட்ட அற்பத்தனமான மிகைப்படுத்தப்பட்ட சதிக்குற்றச்சாட்டின் தன்மையென்பது எவரையும், எங்கேயும் விசாரணையின் பேரில் துன்புறுத்துவதற்கு காவல் துறைக்கு அனுமதி வழங்கியது. ஐதராபாத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் கே சத்யநாராயணன் (Dr K. Satyanarayana) அவர்களது வீட்டையும், புதுதில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அனி பாபு (Hany Babu)) அவர்தம் வீட்டையும் காவல்துறை சோதனையிட்டதும், ஏதேனும் தகவல்கள் கிடைக்குமா என்று அவர்களுடைய கணிப்பொறிகளில் சோதனை செய்யப்பட்டதும் இந்த அடிப்படையில் தான். இந்தக் கைது நடவடிக்கைகள் இத்துடன் முடியப் போவதில்லை என்பது நம் கவலையை மேலும் அதிகப்படுத்துகிறது.
ஆனந்த் டெல்டும்டே இவ்வாறு வக்கிரமாகக் குறி வைக்கப்படுவது ஏன்?
கொரோனா தொற்றுநோயின் மையமாக சிறைகள் ஆகிவிடக்கூடாது என்பதற்காக விசாரணைக் கைதிகளை முன்ஜாமீனில் வெளியிட உச்சநீதிமன்றம் வழிகாட்டியிருக்கும் இந்தச் சூழ்நிலையிலும் ஆனந்த் டெல்டும்டேவையும், கௌதம் நவ்லாகாவையும் ஆளும் மத்திய அரசு சிறைக்குள் அடக்க நினைப்பது ஏன்?
இதற்கான காரணத்தை சட்டமேதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் பெயரன் பிரகாஷ் அம்பேத்கர் (Prakash Ambedkar) ஏற்கனவே குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. அறிவுப்பெருந்தகை ஆனந்த் டெல்டும்டே அவர்கள், சட்டமாமேதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்திற்காகவே அவர் குறிவைக்கப்படுகிறார் என்று பிரகாஷ் அம்பேத்கர் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் அறிவு வாரிசுகளையும், உறவு வாரிசுகளையும் தாக்கி அழிப்பது என்பது 'சங்பரிவாரங்கள்' என்று அழைக்கக்கூடிய வலதுசாரிக் கொள்கைகளோடு இயங்கும் பல்வேறு இந்து மத அமைப்புகள், பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் மறைமுகமான திட்டமாகும். ஆனந்த் டெல்டும்டே அவர்கள் பீமா கோராகான் நிகழ்விலும் கலந்து கொள்ளவில்லை; அதன் ஒருங்கிணைப்புக் குழுவிலும் அங்கம் வகித்தவரில்லை. அவ்வாறு இருக்க, மோடியரசின் நரக வேட்டைக்கு அவர் ஏன் ஆளாகிறார்?
அதற்கு மிக முக்கியமான காரணம், அறிவுப்பெருந்தகை ஆனந்த் டெல்டும்டே முன்னெடுக்கும் அரசியல், புதிய தாராளவாத - முதலாளித்துவ - இந்துத்துவ ஆட்சியதிகார அமைப்புகளுக்கு வெறுப்பையும், பேராபத்தையும் ஏற்படுத்தியதனால்தான் இவ்வாறு அவர் வேட்டையாடப்படுகிறார் என்பதே.
இந்துத்துவ ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் எதிர்த்து சமூக-அரசியல் வழியிலும் பொருளாதாரக் கொள்கைகளின் வழியிலும் போரிட வேண்டிய கட்டாயத்தை, பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வழியில் நின்று தொடர்ந்து உரக்கப் பேசி வருபவர் ஆனந்த் டெல்டும்டே அவர்கள்.
ஒருபுறம், சங்பரிவார அமைப்புகளின் சமூக விரோத பார்ப்பனிய மைய அரசியலை அம்பலப்படுத்திக் கொண்டே வருகிறார்; மறுபுறம், மக்கள் விரோத முதலாளித்துவ - தாராளவாத - இந்துத்துவ வலதுசாரி ஆட்சியின் பொருளியல் கொள்கைகளை கடுமையாகத் தாக்கிக் கொண்டே வருகின்றார்.
புதிய தாராளவாத - இந்துத்துவ ஆட்சிக் காலத்தில் சமத்துவத்தை சிந்தித்தல் (Republic of Caste: Thinking Equality in the Time of Neoliberal Hindutva) என்ற தலைப்பில் அண்மையில் அவரது நூலொன்று வெளியாகி இருப்பதே இதற்கு ஆதாரம். சாதியொழிப்பின் மூலமும் ஜனநாயக சோசியலிசத்தின் மூலமும் இந்தியாவில் ஜனநாயக வழிப்பட்ட சமூக - பொருளாதாரத்தை ஏற்படுத்துதல் எனும் சட்டமாமேதை அம்பேத்கர் அவர்களின் அரசியல் தொலைநோக்குப் பார்வையை கரம்பற்றி தொடர்ந்து சமூக-அரசியல் களத்தில் இயங்கி வருபவர் ஆனந்த் டெல்டும்டே.
பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் தெளிவான சோஷலிசப் பார்வையை ஆனந்த் டெல்டும்டே அவர்கள் தனது ஆக்கங்களில் குறிப்பிடுகிறார்:
"இந்தியாவில் சமூக-அரசியல் மற்றும் பொருளாதார நீதி ஏற்பட வேண்டுமெனில், அதற்கு இந்தியாவிலுள்ள தொழிற்சாலைகளையும் நிலங்களையும் நாட்டுடமை ஆக்குவதில்தான் உண்மையான தீர்வு அடங்கியுள்ளது என்பதனை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். ஆனால், பின்னாட்களில் அமையயுள்ள ஓர் அரசின் பொருளாதாரக் கொள்கையானது, சோஷலிச பொருளாதாரக் கொள்கையாக இல்லாதபோது சமூக, பொருளாதார, அரசியல் நீதியினை நடைமுறைப்படுத்துவது எவ்வாறு சாத்தியம் என்பது எனக்கு விளங்கவில்லை" (டிசம்பர் 17, 1946).
இந்தியாவில் சோசியலிசத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, 'சாதி ஒழிப்புப் போராட்டத்தின்' முக்கியத்துவத்தை வலியுறுத்தக்கூடிய பாபாசாகேப் அவர்களின் சிந்தனைகளை அதே கட்டுரையில் டெல்டும்டே மற்றொரு இடத்தில் குறிப்பிடுகிறார்:
"இந்தியாவில் சோசலிசத்தைப் படைப்பதற்கான புரட்சி வென்ற பின்னாலே, சாதியடிப்படையிலும் மத அடிப்படையிலும் நாம் ஒதுக்கப்பட மாட்டோம், சமத்துவத்தோடு நடத்தப்படுவோம் என்ற நம்பிக்கை ஒருவருக்கு ஏற்படாதவரை, அவர்கள் சோசியலிசத்திற்கான புரட்சியில் ஈடுபட மாட்டார்கள். சோசலிசத்தை முன்னெடுக்கும் தலைமைகள் தங்களுக்கு ”சாதிச் சமூக அமைப்பின் மீது நம்பிக்கை இல்லை” என்று சொல்வதால் மட்டுமே அத்தகையதொரு நம்பிக்கையை விதைத்திட முடியாது. மாறாக, இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகனின் உள்ளத்திலும் தனிமனித சமத்துவ உரிமையையும், சகோதர உணர்வையும் மிக ஆழமாக ஏற்படுத்துவதன் மூலம்தான் அத்தகைய நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்".
தலித் சமூகப் பின்னணியிலிருந்து வந்திருக்கும் ஆனந்த் டெல்டும்டே சாதியொழிப்பின் தேவையைப் பேசுவதோடு சோசியலிசத்தைப் பற்றியும் தொடர்ந்து பேசி வருவது, பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் தலித் கூட்டமைப்பை உருவாக்க வழிவகுக்கின்றது. உழைக்கும் மக்களின் இத்தகைய கூட்டமைப்பு, தடையற்ற முதலாளித்துவ சுரண்டலுக்கு சவாலாக பல நேரங்களில் மாறி விடுகிறது.
சாதியற்ற சமத்துவ சமூகத்தைப் படைப்பதற்கு பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் முன்வைக்கும் தொலைநோக்குப் பார்வையானது, முதலாளித்துவ - புதுத் தாராளவாத - இந்துத்துவத்தை வெறிகொண்டு செயல்படுத்தி வரும் ஆர்.எஸ்.எஸ்- பாரதிய ஜனதா கட்சியின் சங் பரிவார அமைப்புகள் சாதிய ரீதியாகவும், வகுப்புரீதியாகவும் பாலின ரீதியாகவும் ஏற்படுத்தத் துடிக்கும் சமத்துவமற்ற சமுதாய தத்துவக் கண்ணோட்டத்திற்கு நேரெதிரானது. அத்தகையதொரு பிற்போக்குத்தனமான சமத்துவமற்ற சமூகத்தை உருவாக்குவதற்கு அவர்கள் பயன்படுத்தும் முதன்மையான ஆயுதம் என்பது, மதரீதியான சிறுபான்மையினர்களை குறிவைத்துத் தாக்கி, இந்தியாவில் மதரீதியான பிளவினை உண்டாக்கி சிறுபான்மையினர்களுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டு அதன்வழி அரசியல் இலாபம் அடைவதாகும்.
ஆர்.எஸ்.எஸ். வலதுசாரி அமைப்பானது அதன் தொடக்கக் காலத்திலிருந்தே பிரித்தானிய வல்லாதிக்கத்தின் கைக்கூலியாகவும் மனுவேதத்தை தூக்கிப் பிடித்தும் செயல்பட்டு வந்திருப்பதை வரலாற்றில் நுணுங்கிய பார்வையுடையோர் அறிவர். பிரித்தானிய காலனியாதிக்க அரசு, அதனுடைய தன்னலத்திற்காக, இந்திய நாட்டின் வளங்களையும், இந்திய மக்களையும் கொள்ளையடித்து சுரண்டிக் கொண்டிருந்த நேரத்தில், விழிப்புற்ற மக்கள் பெருந்திரளாகத் திரண்டு நாட்டின் விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்த காலத்தில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முன்னோடி என்று கருதப்படும் எம்.எஸ். கோல்வால்கர் (M.S. Golwalkar) வெளிப்படையாக இந்துக்களை நோக்கிக் கூறிய செய்தி மிகவும் பிரபலமானது.
”இந்துக்களே, பிரித்தானிய அரசை எதிர்த்துப் போராடி, உங்கள் ஆற்றலை வீணடிக்காதீர்கள். நம்முடைய எதிரிகள் பிரித்தானியர்கள் அல்ல; இசுலாமியர்களும் கிறித்துவர்களும் கம்யூனிஸ்ட்டுகளும்தான் நம்முடைய உள்நாட்டு எதிரிகள். அவர்களை எதிர்த்துப் போரிடுவதற்கு உங்கள் ஆற்றலைச் சேமித்து வையுங்கள்” என்றார் அவர்.
ஆனால், அந்நாட்களில் கோல்வால்கர் போன்ற சமூக-விரோத இந்துத்துவவாதிகளின் குரலுக்குச் செவி சாய்க்காமல்,, நாட்டுப்பற்று மிக்க இந்துக்கள் உட்பட பலரும் பிரித்தானியக் காலனியாதிக்கத்தை எதிர்த்து இரத்தமும் சதையுமாகப் போராடி இந்திய விடுதலையை அடைந்தனர் என்பது தனிச்செய்தி.
கோல்வால்கர் இன்னொரு தருணத்தில் ‘மநுதருமத்தின்’ புகழ்பாடும்போது,
"உலகின் முதல் மாபெரும் சட்ட நிபுணனான மநு (Manu), மக்கள் எவ்வாறு தங்கள் கடமையை உணர்ந்து வாழ வேண்டும் என தனது சாத்திரநூலில் வழிகாட்டுகிறான். உலகில் வாழும் மக்களெல்லாம் பிரம்மனின் தலையிலிருந்து தோன்றிய, இந்நிலத்தில் வாழும் பெருமை மிகுந்த ’மூத்த குடிகளான’ பார்ப்பனர்களின் புனிதமான கால்களை வணங்கி அவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.
இந்நிலையில், பார்ப்பனர்களின் வேத அதிகாரத்திற்கும் மேலாதிக்கத்திற்கும் நேரெதிராக இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 15-யில் ”மதம், சாதி, இனம், பாலினம், பிறப்பிடம் என்று எக்காரணத்தைக் கொண்டும் ஒருவரை பாகுபடுத்தக் கூடாது” என்று சட்டமுறை செய்திருப்பது வலதுசாரிகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.
ஆனந்த் டெல்டும்டே ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி.யின் முதலாளித்துவ - புதுத்தாராளவாத - இந்துத்துவத்தை எதிர்த்துப் போராடும் ஓர் அறிவார்ந்த முற்போக்கு அம்பேத்கரிய சிந்தனைக் கூட்டமைப்பின் மதிற்சுவரைப் போல நின்று செயல்படுகிறார்.
சாதிய வேற்றுமை, மேல்-கீழ் வருக்க வேறுபாடு, ஆணாதிக்கம் ஆகியவற்றின் துணையோடு மிக பிற்போக்குத்தனமான ஏற்றத் தாழ்வுமிக்க ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கான நாசகாரத் திட்டத்தில் தொடர்ந்து முன்னேறிச் செல்வதற்கு, ஆனந்த் டெல்டும்டே போன்றவர்கள் எழுப்பும் அறிவார்ந்த முற்போக்கு மதிற்சுவற்றை உடைத்து எறிவது என்பது, ஆர்.எஸ்.எஸ்-யின் மேலான வழிகாட்டுதலோடு செயல்படும் மக்கள் விரோத இந்துத்துவ மைய அரசின் தவிர்க்க முடியாத தேவையாகி விடுகிறது.
மிருக பலத்தோடு அமைந்திருக்கும் இந்துத்துவ மைய அரசு, தற்போதைய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, இந்தக் காலகட்டத்திலேயே நம்மை ஓர் இருண்ட காலத்திற்கு கொண்டு செல்லத் துடிக்கின்றது. பீமா காரோகன் (Bhima Koregaon) வன்முறைக்குக் காரணமான இந்துத்துவ செயற்பாட்டாளர்களைக் காப்பாற்றி, வன்முறைக்கு காரணமென அம்பேத்கரியவாதிகளின் தலைமையிலான எல்கர் பரிசத் அமைப்பின்மீது பழி போடுவதற்காக, அந்த அமைப்பை மாவோயிஸ்ட்டுகளின் தூண்டுதலோடு இயங்கும் அமைப்பு என்று பொய்யானதொரு புரட்டுக் கதையை இட்டுக் கட்டுவதற்கும் இதுவே காரணமாகும்.
ஆனால், உண்மை ஒரு நாள் வெளிப்பட்டே தீரும். அவ்வாறு, உண்மையை உணர்ந்ததனால்தான், சமத்துவத்திற்காகப் போராடும் ஆனந்த் டெல்டும்டே போன்ற அறிவார்ந்த அம்பேத்கரிய முற்போக்குச் சிந்தனையாளர்களின்மீது பழிசுமத்த எண்ணும் மோடி-அமித்சா கூட்டுத் தலைமையிலான ஒன்றிய அரசின் கொடிய நச்சு நோக்கத்தையும் செயற்பாடுகளையும் நாட்டின்மீது பற்று கொண்டவர்கள் வெறுத்து, அவர்களின் மீதான குற்றச்சாட்டை மறுத்து அரசைக் கண்டிருத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்வையொட்டி, ஆனந்த் டெல்டும்டே திட்டமிட்டு கைது செய்யப்பட்டிருப்பது நாட்டிற்கே களங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனந்த் டெல்டும்டே போன்ற அறிவுப் பெருந்தகைகளை உடனே சிறையிலிருந்து விடுவிக்கக் கோரி குரல் கொடுப்போம். அத்துடன் பீமா கரோகன் வன்முறை வழக்கில் இட்டுக்கட்டிய சதித் திட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்ட அனைத்து சமூகச் செயற்பாட்டாளர்களையும் வழக்குரைஞர்களையும் சிந்தனையாளர்களையும் உடனே விடுவிக்கக் கோரி குரல் கொடுப்போம்.
கட்டுரையாளர்கள்: ஜிக்னேஸ் மேவானி, சட்டமன்ற உறுப்பினர், குஜராத் & மீனா கந்தசாமி, எழுத்தாளர், கவிஞர்.
தமிழில்: ப.பிரபாகரன்
ஆங்கில மூலம்: https://thewire.in/rights/anand-teltumbde-arrest-narendra-modi