உச்சநீதிமன்றம், தானாக முன்வந்து விசாரிக்கும் வழக்கொன்றில் (SUO MOTU WP(C).No.1/2020), 23.03.2020 அன்று, சிறைகளில் கொரோனா பரவும் அபாயமும், இறப்புக்கான வாய்ப்பும் இருப்பதால், அனைத்து கைதிகளுக்கு இடையேயும், முடிந்த அளவு மிக அதிக இடைவெளியைக் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டுமென்றும், நோய்த் தொற்று அறிகுறிகள் கொண்ட சிறைக் கைதியை முதன்மை மருத்துவமனைக்கு இடமாற்றுவதில் தாமதம் ஏதும் இருக்கக் கூடாது எனவும், ஒவ்வொரு சிறையிலும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையுடன், தயார்நிலை மற்றும் செயல்பாட்டுக்கானத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமென்றும், சிறைகள் மற்றும் காவலில் வைக்கும் இல்லங்கள் தொடர்பான உத்தரவுகள் மிகக் கவனமாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய, மாநில அளவில் கண்காணிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டுமெனவும் ஆணையிட்டது.

மேலும், ஒவ்வொரு மாநிலமும், யூனியன் பிரதேசமும், உயர் அதிகாரமளிக்கப்பட்டக் குழு (High Powered Committee) ஒன்றையமைத்து, குற்றத்தின் தன்மை, கைதிக்கு எத்தனை ஆண்டுகள் தண்டனையளிக்கப்பட்டுள்ளது, விசாரணைக் கைதியின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தின் தீவிரம் மற்றும் வேறு சம்பந்தப்பட்டக் காரணிகளின் அடிப்படையில், எந்த வகை கைதிகளைப் பரோலில் அல்லது இடைக்கால பிணையில் குறிப்பிட்ட காலத்திற்கு விடுதலை செய்யலாம் என முடிவெடுக்க வேண்டுமெனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உதாரணமாக, தண்டத் தொகையுடனோ அல்லது தண்டத்தொகை இல்லாமலோ, ஏழு அல்லது அதற்குக் குறைவான ஆண்டுகளைத் தண்டனையாகக் கொண்ட வழக்குகளில், தண்டனை பெற்ற அல்லது விசாரணைக் கைதிகளாக உள்ளவர்கள் மற்றும் அதிகபட்ச தண்டனைக் காலத்தை விட குறைவான ஆண்டுகள் தண்டனை பெற்றவர்கள் ஆகியோரை பரோலில் அல்லது இடைக்கால பிணையில் விடுதலை செய்வது குறித்து இந்த உயர்மட்டக் குழு முடிவெடுக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதேபோல், In re Inhuman Conditions in 1382 Prisons, (2016) 3 SCC 700 வழக்கில் வழங்கப்பட்ட ஆணையின்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள விசாரணைக் கைதி மறுஆய்வுக் குழு (Under Trial Review Committee), ஒவ்வொரு வாரமும் சந்தித்து, அந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

இந்தப் பின்னணியில், தமிழகத்தில் கடந்த 10 நாட்களில், 3900க்கும் மேற்பட்ட கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், தொற்றினைத் தடுப்பதற்காக, புதிதாக வரும் கைதிகளுக்கு தனிச் சிறைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அரசின் இந்த முயற்சிகளை பியூசிஎல் பாராட்டுகிறது. ஆனால், நீதிமன்ற ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள உயர் அதிகாரமளிக்கப்பட்டக் குழு அமைக்கப்பட்டதாகவோ, பிற ஆணைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தோ எந்தவிதமான அதிகாரப் பூர்வமானத் தகவலும் இதுவரைக் காணக் கிடைக்கவில்லை.

தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் 2018 இந்தியச் சிறை புள்ளிவிவர அறிக்கையின்படி, 31 டிசம்பர் 2018 வரையில், தமிழகத்தில் 138 சிறைகள் இருந்தன. மொத்தம் இருந்த 13,674 கைதிகளில், 634 பேர் பெண்கள், 132 பேர் வெளிநாட்டினர், 43 பேர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். மொத்தக் கைதிகளில், 3694 பேர் தண்டனை பெற்றவர்கள் மற்றும் 9235 பேர் விசாரணைக் கைதிகள். தண்டனை பெற்றவர்களில் 10 பேர் மரண தண்டனைக் கைதிகள்; 1396 பேர் ஆயுள் தண்டனை கைதிகள்; 1051 பேர் 1-6 வருட சிறைத் தண்டனைப் பெற்றவர்கள். விசாரணைக் கைதிகளில், 1-5+ வருடங்கள் சிறையில் இருந்தவர்கள் 833 பேர். இந்த அறிக்கை வந்து ஓராண்டுக்கு மேலாகியும் சிறைகள் மற்றும் சிறைக் கைதிகள் பற்றிய அதிகாரப் பூர்வமான, தற்போதைய விவரங்கள் அரசின் இணையதளங்களில் அல்லது கொள்கைக் குறிப்புகளில் காணக் கிடைக்கவில்லை.

இந்தச் சூழலில், பியூசிஎல் கீழ்காணும் கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன்வைக்கிறது.

1. உச்சநீதிமன்ற ஆணையின்படி, மாநில அளவிலான உயர் அதிகாரமளிக்கப்பட்டக் குழு (High Powered Committee) அமைக்கப்பட்டிருப்பின், அது குறித்த விவரங்களைப் பொதுச்சமூகத்திடம் அரசு பகிர்ந்து கொள்ள வேண்டும். இதுவரை அப்படிப்பட்டக் குழு அமைக்கப் படவில்லையெனில், உடனடியாக உயர் அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவினை அமைத்து, அதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. நிலைமை சீராகும் வரை, உலக சுகாதார நிறுவனத்தால் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வகையான முதிய கைதிகள் மற்றும் இதய நோய், அதிக ரத்த அழுத்தம், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் சிறுநீரக நோய், எய்ட்ஸ் உள்ளிட்ட தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கும் குறைவான அனைத்துக் கைதிகளையும் எந்த நிபந்தனையுமின்றி உடனடியாகப் பிணையில் விடுவிக்க வேண்டும்.

3. குழந்தைகள் உள்ள பெண் கைதிகள், குடும்பம் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட கைதிகள் அனைவரும் உடனடியாகப் பிணையில் விடுவிக்கப்பட வேண்டும்.

4. ஏழு வருடங்கள் அல்லது அதற்குக் குறைவான காலம் தண்டனை பெற்றவர்கள், எந்த வழக்கிலும் அதிகபட்ச தண்டனைக் காலத்தை விடக் குறைவான காலமே தண்டனை பெற்றவர்கள், அதிகபட்சமாக 7 வருடங்கள் தண்டனை அளிக்கக்கூடிய வழக்குகளில் விசாரணைக் கைதிகளாக உள்ளவர்கள் ஆகியோரை பிணையில் விடுவிக்க வேண்டும். உயர் அதிகாரமளிக்கப்பட்டக் குழு உடனடியாகக் கூடி இது குறித்து அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும்.

5. மாவட்ட அளவிலான விசாரணைக் கைதி மறுஆய்வுக் குழுக்கள் (Under Trial Review Committees) உடனடியாகக் கூடி, In re Inhuman Conditions in 1382 Prisons, (2016) 3 SCC 700 உச்சநீதிமன்றத் தீர்ப்புகளில் வரையறுக்கப்பட்ட அனைத்து வகையான கைதிகளையும், உரிய வழிமுறைகளைப் பின்பற்றி விடுதலை செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6. அரசாணை G.O. (Ms) No.64, Home (Prisons-IV) department, dated 01.02.2018 {As amended as per G.O (Ms) No.302, Home (Prisons-IV) department, dated 03.05.2018} இன் படி, 10 ஆண்டுகள் சிறைவாசம் முடித்த ஆயுள் தண்டனைக் கைதிகள் மற்றும் 5 வருடங்கள் சிறைத் தண்டனையை முடித்த, 60 வயதைத் தாண்டிய முதிய ஆயுள் தண்டனைக் கைதிகள் ஆகியோரை, அரசாணையில் உள்ள விதிகளின்படி அரசு விடுதலை செய்ய வேண்டும். நிரந்தரமாக விடுதலை செய்வதில் தாமதம் ஏற்படுமாயின், அவர்களை இடைக்கால பரோலில் விடுவிக்க அரசு உடனடியாக வழிசெய்ய வேண்டும்.

7. அரசாணை G.O.Ms.No.1155, Home (Prison-IV) Department dated 11.09.2008 {as amended by G.O.Ms.No.1121, Home [Prison IV] dated 24.12.2009} இன் படி, 7 வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்த ஆயுள் கைதிகள், 5 வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்த 60 வயதுக்கு மேற்பட்ட முதிய ஆயுள் கைதிகள் ஆகியோரை, அரசாணையில் உள்ள விதிகளின் படி அரசு விடுதலை செய்ய வேண்டும். நிரந்தரமாக விடுதலை செய்வதில் தாமதம் ஏற்படுமாயின், அவர்களை இடைக்கால பரோலில் விடுவிக்க அரசு உடனடியாக வழிசெய்ய வேண்டும்.

8. தண்டனைக் காலத்தை விட மிக அதிக காலம் சிறையில் வாடும் அனைத்து கைதிகள் மற்றும் மிக நீண்ட காலம் காலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழுதமிழர் உள்ளிட்ட அனைத்து கைதிகளையும் நீண்ட கால பரோலில் அனுப்ப அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

9. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நீண்ட காலம் சிறையில் உள்ள அனைத்து சிறைக் கைதிகளையும், இடைக்கால பரோலில் விடுவிக்க அரசு உடனடியாக வழி செய்ய வேண்டும்.

10. சிறையில் எஞ்சி உள்ளவர்களுக்கு உடல்நலப் பரிசோதனை, ஆரோக்கியமான உணவு, தகுந்த இடைவெளியில் தங்குமிடம், கொரோனா தடுப்பு வழிமுறைகள் ஆகியவற்றை அரசு உறுதி செய்ய வேண்டும். கொரோனாத் தொற்றின் அறிகுறிகள் இருப்பின், கைதிகளை உடனடியாக தகுந்த முதன்மை மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்று சிகிச்சையளிக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட முடிவுகள், மேல் நடவடிக்கைகள் குறித்து பத்திரிகைச் செய்திகளை அரசு வெளியிட வேண்டும். அரசின் உரிய இணைய தளங்களிலும் விவரங்கள் பகிரப்பட வேண்டும். அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21 இன் படி, கண்ணியமாக வாழ்வதற்கான உரிமை கைதிகளுக்கும் உண்டு என்ற புரிதலுடன், மனிதநேயத்தோடு இந்தக் கோரிக்கைகளை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL) கோருகிறது.

- கண. குறிஞ்சி, மாநிலத் தலைவர் & க.சரவணன், மாநிலப் பொதுச் செயலர், பியூசிஎல்.