“உழவின் வீழ்ச்சிக்கும் உணர்வுகளின் வறட்சிக்கும் உலகமயமாக்கல், தாராளாமயமாக்கல், கார்ப்பரேட்டுகளின் சதி என கை காட்டும் அதே நேரத்தில், நமது கலாச்சாரத்தின் கூறுகளில் படிந்திருக்கும் பண்டைய படிமங்கள், தோண்டிய தொன்மங்கள், முற்போக்கான பின்நவீனத்துவங்கள், பிற்போக்கான முன்நவீனத்துவங்கள் முதலியவற்றின் குறுக்குவெட்டுத் தோற்றத்தின் பின்புலமும் அதில் பொதிந்திருக்கும் நுண்மங்களின் நேர்வெட்டுத் தோற்றத்தின் முன்புலமும் செப்பேடுகளின் வழி நமக்குப் பக்கபலமாகப் பறை சாற்ற விழையும் செய்தி என்னவெனில், இச்சமூகக் கட்டமைப்பில் பெண்ணிய ஆணிய கோட்பாடுகளைச் சரிவிகிதத்தில் கரைத்து தலித் இலக்கியப் பார்வையைக் காத்திரமாகக் குழைத்துப் பெறப்படும் விளைவினை, வில்லை கொண்டு காணும் அணுகுமுறையை போதிக்குமாறு வெளிப்படுத்துவதே சிறந்த இலக்கியம்” என்றெல்லாம் அறிவுப்பூர்வமாக அருமையாக அழகாக முழங்கும் இலக்கியப் பிரசங்கிகளைச் சான்றோர் கவனத்திற்கு விட்டுவிட விழைகிறேன்.

people 312இத்தலைப்பில் யான் புகழ்பாட நினைப்பது நமது ஒறவுகளை! நட்பைப் போல் ஒறவுகளையும் தெரிவு செய்ய இயன்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்! இந்த உறவுக்காரர்கள் எனப்படுபவர்கள் தங்கள் வீச்சு உரைகளின் போது என்ன மாதிரியான உத்தியைக் கையாளுகிறார்கள் என அறிய முற்பட்டு தீவிரமாக அடித்தளத்தில் (Underground!) இயங்கி கள ஆய்வு மேற்கொண்ட போதுதான் அவர்கள் உட்கொள்ளும் சூரணத்தின் சூத்திரத்தைக் கண்டடைய முடிந்தது. அதை இங்கே விளக்கித் தருவதை தமிழ் கூறும் நல்லுலகிற்கு என்னால் ஆன பங்களிப்பாகவே கருதுகிறேன்! அச்சோ… பரவாயில்ல… இதுக்கெல்லாம் எதுக்கு புளகாங்கிதம் அடைஞ்சுகிட்டு…. நன்றியெல்லாம் சொல்லி…..

 தேவையான பொருட்கள் :

 படு சுமாரான தன்னம்பிக்கை புத்தகம் – 1 (மட்டுமே!)

 நடமாடும் மனித கடவுள் வழிபாடு அல்லது புதிய வழிபாட்டு முறை – 1

 ஆங்கிலம் – கால் கிலோ; சுக்கு நூறாக நொறுக்கப்பட்டது

 பழமொழிகள், பொன்மொழிகள் – தேவைக்கு ஏற்ப

 அதாவது…., நானெல்லாம்….., வாழ்க்கையில…. - போன்ற சொற்கள் சில

 (மேதாவித்தனதைக் காட்ட இவை மிகவும் உதவுமாம்)

 யூ டியூப் Ted talk மற்றும் ஆன்மீகச் சொற்பொழிவு காணொளிகள் – இஷ்டம் போல்

பிறரது முடிவுகள், எண்ணங்கள், கொள்கைகள், ரசனைகள் எவ்வளவு உயரியதாக சிறப்பானதாக பக்குவப்பட்டதாக இருப்பினும் அவற்றை இரண்டே வார்த்தைகளில் ‘முட்டாள்தனம்… தப்பு’ என்று கூறும் அசட்டுத்தனம் எக்கச்சக்கமாக நிரம்பி வழிதல் அவசியம். இதையெல்லாம் விட முக்கியமான பொருள் ஒன்று உண்டு இவர்களுக்கு…. அதான்… அதேதான்… பலி ஆடுகளாகிய நாம்! மேற்கூறிய அனைத்தையும் அவர்களின் மண்டைக்குள் (மூளை இருப்பதற்கான அறிகுறி தென்படாததால் காலியாக இருக்கும் இடத்தில்) போட்டுக் குலுக்கி எடுத்துக் கிடைக்கும் சொற்பொழிவால் நம்மைத் திக்குமுக்காடச் செய்வார்கள்.

            இதில் ஒரு வியக்கத்தக்க சமன்நிலை இருப்பதைச் சமீபத்தில் நாசா சுட்டிக் காட்டியுள்ளது. ‘உங்கள் அப்பா வழியில் இருக்கும் ஒவ்வொரு அறுவையருக்கும் போட்டியாக அம்மா வழியிலும் ஒருவர் இருப்பார்’. இங்கு ஒரு சித்தப்பா என்றால் அங்கு ஒரு மாமா. போட்டி பலமாக இருக்கும். போட்டி நமக்கும் அவர்களுக்கும் அல்ல… அவர்களில் யார் சிறப்பாக நம்மைக் கொலையாய்க் கொல்கிறார்கள் என்பதில். இவ்வகை ஜந்துக்களின் குணநலன்களை ஆராய்தல், அப்பாவிப் பெருமக்களின் உயிர்ச்சேதத்தைக் குறைத்துப் பலர் தப்பித்துக் கொள்ள வழிவகுக்கும். இப்போது உங்களை அறுவைக் களத்திற்குக் கனத்த இதயத்துடன் வரவேற்கிறேன்! வாங்க… அந்த கொடுமைய என்னோட சேர்ந்து நீங்களும் ரசிங்க…(!)

            நமது முன்னோர்கள் செய்த பாவங்களின் பலனாக சில நேரங்களில் அவர்கள் இருக்கும் இடத்தில் நாமும் சஞ்சரித்துத் தொலைய வேண்டிய சூழல் ஏற்படலாம்… ஏற்படும். நாம் உண்டு, நாம் மட்டுமே உண்டு என்று நாம் பாட்டுக்கு அமர்ந்திருப்போம். இப்போதுதான் அந்தப் பிரதான அறுவையருக்கு நாக்கு நம நமவென்று வரும். வெற்றிலையை உலகில் தடை செய்துவிட்ட காரணத்தால் நமது வாழ்க்கையைப் போட்டுக் குதப்புவார்கள். “அப்புறம்….?” என்று தொடங்கும் அந்த நொடியிலேயே தலை கை கால் தெறிக்க ஓடி விடும் உத்தியை அறிந்திருந்தீர்கள் எனில் உங்கள் முன்னோர்கள் புண்ணியமும் செய்திருக்கிறார்கள் என்று உணர்க.

            முதற்கட்டத் தாக்குதலாக உங்களின் கல்வி நிலை ஆராயப்படும். நீங்கள் Oxford அல்லது Harvardல் ராக்கெட் சயன்ஸ் படித்துக் கொண்டிருந்தாலும் கூட, “பாப்பநாயக்கம்பட்டியில ஒரு அருமையான காலேஜ் இருக்கு… அங்க சிவில் சேர்ந்திருக்கலாம்ல… அங்க படிச்சவனெல்லாம் பெரிய இடத்துக்குப் போயிட்டான்” (‘அது உயர்ந்த கட்டிடம் ஒன்றில் பாவம் சித்தாள் வேலைதானே’ என்றெல்லாம் உண்மையை நினைத்துப் பார்க்கக் கூடாது!) என அக்க்க்கர்ர்ர்றையோடு ஓர் அரை மணி நேரம் உங்கள் அறிவுக்கண் அறிவுக் காது அறிவு மூக்கு ஆகியவற்றைத் திறக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருப்பர். நீங்கள் அறிவிற் சிறந்தவர் என்பதால், அவரது முயற்சியில் குறுக்கிட்டால் அது அவர்களுக்கு இன்னும் உத்வேகத்தை அளிக்கும் என்பதை உணர்ந்து, குறுநகை பூத்தவாறே வாடி வதங்கிக் கொண்டிருப்பீர்கள் என்பது உலகம் அறிந்ததே.

            இரண்டாம் கட்டமாக வேலை, திருமணம், குழந்தை, இத்தியாதி இத்தியாதி….. சம்பந்தப்பட்ட (இப்பகுதியில்தான் அந்தக் கால் கிலோ ஆங்கிலம் அநியாயத்திற்குக் கை கொடுக்கும். எவ்வளவு மோசமான சமையலையும் கொத்தமல்லி கறிவேப்பிலை சரி செய்துவிடும் என்ற மூட நம்பிக்கையைப் போல!) தத்துப்பித்துவங்களை ஆங்கிலக் கலப்பில் கொட்டுவார்கள். அம்மொழியின் பேருதவி இல்லாவிட்டாலும் அவர்களை நாம் அர்ர்ர்றிவுஜீவி என்று ஏற்றுக்கொள்வோம் என்பது அவர்களுக்குத் தெரிவதே இல்லை.

‘வாழ்க்கைனா சில compromise பண்ணத்தான் செய்யணும். அதெல்லாம் கல்யாணம் பண்ண பிறகு பிடிச்சுப் போகும். நாங்கல்லாம் பிடிச்சா கல்யாணம் பண்ணோம்? (இதையும் எப்படி இப்படி வெக்கமே இல்லாமல் பீற்றுகிறார்களோ?) இப்பிடியே இருந்துட்டு நேரா அறுபதாம் கல்யாணம் பண்ணப்போறியா? ஹிஹிஹி(நகைச்சுவையாம்!)’, ‘மனசுக்குப் பிடிச்ச மாதிரி நீ நெனச்சதெல்லாம் உடனே கெடச்சுட்டா அப்புறம் கடவுள் எதுக்கு?(இப்போ மட்டும் அவர் எதுக்கு?)… வாழ்க்கைங்குறது… வழ வழ கொழ கொழ’, ‘ஏன் இவ்ளோலாம் படிக்குற? Hardwork பண்ணாத… Smart work பண்ணு’…. இப்படியெல்லாம் கேட்கும் போது ‘அடடா! அடடா! இவர்கள் இங்கு இருக்க வேண்டிய ஆளே இல்லை’ (ஆமா.... இப்போது ஏன் உங்களுக்கு மனநல மருத்துவமனை நினைவுக்கு வருகிறது?) என்ற எண்ணம் எழுவதைத் தடுக்க இயலாதுதான்.

இவ்வகைப் பேச்சுக்கள் முந்தைய பிரிவில் உள்ளதைப் போல் அரை மணி நேரம் எல்லாம் நீளாது. வெறும் இரண்டே மணி நேரம்தான். தாம் பணிபுரியும் பன்னாட்டு நிறுவனத்தில் முந்தைய நாளோ வாரமோ மாதமோ தாம் கேட்டுக் களித்த ‘ஊக்கமளிக்கும் உரைகள்’ (Motivational talks), தாமும் அவ்வாறெல்லாம் பேசலாம் அல்லது ஆத்து ஆத்துன்னு ஆத்தலாம் என ஊக்கமளித்துத் தொலைத்ததன் விளைவைத்தான் நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டால் பரவாயில்லை. பெருச்சாளிகள் எல்லாம் போட முனைவதுதான் கலி முத்திவிட்டதற்கான அறிகுறி. இவர்கள் ‘சிறந்த அறுவையர்’ பட்டம் வாங்குவதற்குப் பயிற்சி பெறவா என் பெற்றோர் என்னைப் பெற்று சீராட்டிப் பாராட்டி வளர்த்து விட்டிருக்கிறார்கள்?

இப்பகுதியின் உச்சக்கட்ட பொறுமையிழப்பு இனிதான் இனிதே(அவர்களுக்கு இனிது!) துவங்கும். சிக்குண்ட அடிமையாகிய நீங்கள் இவ்வளவு நேரமும் பொறுமையாக…. இல்லை! இல்லை! அமைதியாக இருப்பதைக் கண்டு அவர்களுக்கு அளவு கடந்த உற்சாகத்தோடு ஒரு வலிய சந்தேகமும் பிறக்கும் - ‘இவளுக்கு நாம் கூறுவது முழுதாகச் சென்று சேரவில்லையோ?’. எனவே வாழ்வில் தாம் சந்தித்த சவால்கள், சிந்தித்த சிக்கல்கள் (‘அடடே! சிந்திக்கும் ஆற்றல் பெற்றிருக்கிறார்களே?’ என்றெல்லாம் திகைப்படைய வேண்டாம். மோனை சரியாக வருவதற்காக மட்டுமே எழுதப்பட்டது ஆகையால் இது வழுவமைதி!), சுற்ற வைத்த சூழல்கள், தங்கள் பிள்ளைகளின் மேன்மை போன்ற இன்னபிற தலைப்புகளில், சிறிதும் நாணமே இல்லாமல் எல்லாவற்றையும் பறைசாற்றி விளக்கி எடுத்துக் கூறி நம்மை உய்விக்கும் பொறுப்பை பேருவகையோடு ஏற்றுக் கொள்வார்கள்.

நம்மை மட்டம் தட்ட, கொஞ்சமும்…. இம்மி அளவு கூட கூச்சமோ வெட்கமோ தயக்கமோ இல்லாமல் தமது பிள்ளைகளின் இமாலய உயர்வை(!) உதாரணம் காட்டும் இந்தப் பெருந்தன்மை எல்லாம் யாருக்கு வரும்? தமது பிள்ளைகளிடம் தம்மால் இயற்கையான முறையில் உரமூட்டப்பட்டு விளைந்த (!) புத்திசாலித்தனம், உலகியல் விஷயங்களில் அவர்களது மதிநுட்பம், உலகமே வியந்து கொண்டிருக்கும் (அல்லது அவ்வாறு நம்பப்படும்) அவர்களது திறமைகள், நேற்றுப் பிறந்த குழந்தை முதல் நாளை தமது இன்னுயிரை நீங்க இருக்கும் முதியவர் வரை வியனுலகத்தார் அனைவரும் வியக்கும் அவர்களது நன்னடத்தை - இவை பற்றிய சிறு குறிப்பு, மத்திம குறிப்பு, பெரு குறிப்பு ஆகிய அனைத்தும் பிரசங்கத்தில் கட்டாயம் இடம் பெறுதலே சிறப்பு என்னும் ஸ்கேன்டினேவியப் பழமொழி இவர்களுக்கு நன்கு அறிமுகம் போலும். தமது ஞானம் ஞாலத்தை விடப் பெரிது என்ற அவர்களது நினைப்பு நமக்குள் உண்டாக்கும் விந்தையையும் மருட்சியையும் கட்டுபடுத்துவதற்கான நேரம் இது.

            இவ்வளவு நேரமும் கூட, ‘சரி… அடிச்சுட்டுப் போங்கடா…’னு விட்டுரலாம். ஆனால் ‘நமது வாழ்நாள் முழுவதுக்குமான மொத்த பொறுமையையும் ஒரே நாளில் ஒரே சமயத்தில் காலி செய்வது’ போன்ற உன்னத லட்சியங்களுடன் திரியும் அறுவையர்கள் இப்போதுதான் பிரம்மாஸ்திரத்தைக் கையில் எடுப்பார்கள். ‘ஆன்மீகச் சொற்பொழிவு’! அதிலும் வேண்டுமென்றே ஒரு பகுத்தறிவாதியிடம் சென்று தங்கள் கால்வேக்காட்டுத்தனத்தை வெளிப்படுத்துவதில் என்னதான் ஆனந்தமோ? இவர்களுக்கு அவ்வப்போது வழிபாட்டுத் தெய்வங்கள் மாறிக் கொண்டே இருக்கும்… அது அப்போதுள்ள சந்தையைப் பொறுத்தது. அவர்கள் ஒவ்வொரு முறையும் (ஏமாறும் கதை) முக்தி அடைந்துவிட்ட அந்தப் பேரனுபவம் மிகுந்த பக்திப் பரவசத்தோடு பரிமாறப்பட்டுக் கொண்டிருக்கும்.

‘இவர்தான் கடவுள்…. இவர் மட்டுமே கடவுள்’ என்று ஒவ்வோரு முறையும் வெவ்வேறு கார்ப்பரேட் (ஆ)சாமிகளைக் கை காண்பிக்கையில், நமக்கு வேறு அப்போதுதான் மிகச் சரியாக அவர்களது பழைய பிதற்றல்களும் நினைவில் வந்து போகும். ஆனாலும் உணர்ச்சிவசப்பட்டுச் சந்தேகம் என்ற பெயரில் எதையாவது கேட்டு வைக்காதீர்கள். ஏனெனில் அட்டவணை போட்டு ஒவ்வொன்றையும் அலசி ஆராயத் துவங்கி தமது தற்போதைய பிடிமானமே சிறந்தது என்பதை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டு நமது ஜீவ சமாதிக்கான ஆயத்தங்களை மேற்கொள்வார்கள். இந்த அறுவையர்களின் இருப்பு ஒன்றே போதுமானது…. கடவுளை மறுக்க… இவர்களிடம் இருந்து நம்மைக் காப்பாற்ற இயலாத அவர் என்ன கடவுள்? இனி நாம் சாத்தானைத்தான் இறைஞ்சி வேண்டி, தப்பிக்கும் பொருட்டு, நம்மை இழுத்துச் செல்லச் சொல்ல வேண்டும். வாழ்க்கையில் இரண்டு கொடிய தெரிவுகள் உங்கள் முன் வைக்கப்படுகிறது எனில் எப்போதும் சற்றும் யோசிக்காமல் குறைந்த கொடுமையைத் தெரிவு செய்ய வேண்டும். அதற்காக இவர்கள் சாத்தானைக் காட்டிலும் மோசமான கொடுமைக்காரர்கள் என்று நான் கூறுவதாக எல்லாம் நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளக்கூடாது.

            பகுத்தறிவாளர்கள் தங்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்டவர்கள் பூசிவிட்ட திருநீற்றை அவர்களின் பாசத்திற்காக அழிக்க மனமில்லாமல் அப்படியே விட்டிருப்பார்கள். அவர்களுக்காக அவர்களுடன் கோவிலுக்குக் கூட சென்று வருவார்கள். மனதின் தெளிவும் உறுதிப்பாடும் தரும் நிதானம் எல்லா இடங்களிலும் எல்லாரிடத்தும் தம்மை நாத்திகவாதியாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பைத் தராது. மக்களோடு மக்களாகக் கரைந்து போகச் சொல்லும். இதைக் கூடப் புரிந்து கொள்ளாது, “ஹா…ஹா…ஹா…. என்னமோ அன்னைக்குப் பெருசா பெரியார், அண்ணா, திராவிடம், சே, கம்யூனிஸம்னு பேசுன… நெனச்சேன்… தெரியும்… நீ எப்பிடியும் எறங்கி வருவேன்னு..” என்று வெற்றிக் கனியை எட்டிப் பிடித்து விட்டதாக நினைத்துச் சிரிப்பவர்களைப் பார்க்கும் போதெல்லாம் பரிதாபமே மேலிடுகிறது.

“தர்க்க ரீதியாக ஆராய்ந்து வாதிட்டு உங்கள் நம்பிக்கைகளைக் கடுமையான விமர்சனத்திற்கும் கேலிக்கும் உட்படுத்தி உங்களை நோகடிக்கவோ புண்படுத்தவோ கூடாது என்ற பக்குவத்தைப் பகுத்தறிவாதம் எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. உங்களுக்கெல்லாம் எந்த விதமான பக்குவத்தையும் எந்தக் கடவுளும் சொல்லித் தரப் போவதில்லை” என்றெல்லாம் அவர்களிடம் சொல்ல எத்தனித்துப் பல முறை அம்முயற்சி கைவிடப்பட்டிருக்கிறது. ‘எறங்கி வருவே…’ இவ்வார்த்தையில் தங்களை அறியாமலேயே அவர்கள் தோற்றுவிட்டதைப் பிரகடப்படுத்திவிட்டார்கள். நாம் நமது உயரிய கொள்கைகளோடு ஒரு படி மேலே இருந்ததை(இருப்பதை) ஒப்புக்கொள்கிறார்கள் என்றுதானே பொருள்.

            சரி… இவை எல்லாவற்றையும் விட்டு விடுங்கள். தங்களுக்கு இருப்பது நகைச்சுவை உணர்வுதான் என ஆழமாக நம்பும் இவர்கள் அதை நம்மிடம் வெளிப்படுத்துவதும் அதற்காக நாம் மாவு கட்டு போடும் அளவிற்கு விழுந்து உருண்டு புரண்டு சிரிக்க வேண்டுமென எதிர்ப்பார்ப்பதும்…. உஸ்ஸ்ஸ்ஸப்ப்பாஆஆஆ…. பசுமையாக வளமாகப் பச்சைப் பசேலென விளங்கும் தூஷண இலக்கியத்தை ஒழுங்காகக் கற்காததனால் ஏற்படும் அந்த கையறு நிலை இருக்கிறதே! அதையெல்லாம் அனுபவித்தால்தான் புரியும். இந்த அறியாமை குறித்து ‘நான் சரியாக வளர்க்கப்படவில்லையோ?’ என்ற ஐயம் இந்த 28 வயதிலும் மேலிடுவதுதான் கொஞ்சம் நாணக்கேடாக இருக்கிறது. உச்சபட்சமாக ‘என்ன கூந்தலுக்கு இப்பிடி என்னைக் கழுத்தறுக்கிறார்கள்?’ என்றுதான் தோன்றுகிறது. தூஷண நிகண்டு இப்போது கடைகளில் கிடைக்கும்தானே? “அச்சச்சோ! என்னம்மா இப்படி? பொறுமை.. பொறுமை” என்று சொல்லும் என் நலம் விரும்பிகளுக்கு எனது பதில் – “கழுத்தறுபட்டது நானு…. சும்மா இருங்க அங்கிள்/ஆன்டி”. நலம் விரும்பிகள் அல்லாதோர்… (அதாவது பெரும்பாலான உறவுகள்) இது குறித்து வெகுண்டெழத் தேவையில்லை, கிளம்பலாம்.

            ‘ஏதோ நேரில் பார்க்கும்போது மட்டும்தானே… கொஞ்சம் சகித்துக் கொள்ளேன்’ என்று கூறி சமாதானப்படுத்த முயல்பவர்கள் இதையும் வாசித்து விடுங்கள். அம்மாவிடம் ஒரு முத்தம் வாங்கி அவள் செய்த சர்க்கரைப் பொங்கலில் கொண்டாட்ட மனநிலையைப் பெற்று இன்புற்றிருக்கும் நம் பிறந்தநாளில் தொ(ல்)லைபேசியில் அழைத்து, “வாழ்த்துக்கள்! என்ன கேக் வாங்குன? ஐபேக்கோ தானே? இன்னிக்கு என்ன பிளான்? எங்கெல்லாம் போற? என்ன சினிமா? என்ன கலர் டிரஸ்? ஏன் ஸ்டேட்டஸ் வைக்கல? போட்டோ எடுத்து அனுப்பு” என்று பண்பலைத் தொகுப்பாளர்களுக்குச் சவால்விடும் சொல்லாற்றல் வாய்க்கப் பெற்றிருக்கும் இவர்கள் மீது தூய ஆவி ஒன்றை ஏவி கையில் சிடி ஒன்றைத் திணிக்க மனசு துடியாய்த் துடிக்கும். பிறந்தநாள், ‘பிறந்து தொலைத்த நாள்’ ஆகிவிட்டிருக்கும் இவர்களது அலப்பறையில். ‘ரொம்ப வெட்டியாக இருக்கிறார்கள் போலும்’ என வெறுப்படைந்து ஒன்றுக்கும் பதில் சொல்லாமல் விட்டால் ‘வாழ்க்கையை ரசிக்கத் தெரியல… உன் கண்ணோட்டமே தப்பு….’ என நமது அறியாமையைச் சுட்டிக் காட்டி நம்மை மேம்படுத்தும் பணியை மேற்கொள்வதால் இவர்கள் மீதான மருவாதை விண்ணை முட்டுவதை தடுக்க முடிவதில்லை. ஆனாலும் பொறுமையாக அவர்களின் அடுத்த சொற்பொழிவுக்குப் பயந்து “‘Mango Carribean iceland’னு ஒரு கேக்… செம்மையா இருக்கு… அடுத்த முறை அதை வாங்கிப் பாருங்க…” என கூறவும் “அ…ஆங்… அத நான் ஏற்கனவே சாப்பிட்டுருக்கேன்… சூப்பர்.. என்ஜாய்” என்பார்கள். அதை எப்படி இவர்கள் சாப்பிட்டிருக்க இயலும். அம்மா மாம்பழம் நறுக்கிக் கொண்டிருந்ததையும் ஸ்டார் மூவிஸில் ஓடி கொண்டிருந்த “Pirates of the Carribean” படத்தையும் சேர்த்து அந்தப் புதிய வஸ்துவை இப்போதுதானே நான் உருவாக்கினேன்.

அவர்களின் இந்தக் கொண்டாட்டத்தில் எனக்கு ஒரு விஷயம் எப்போதுமே சிரிப்பை வரவழைக்கும்… கேக் முன் நின்றிருக்கையில் சுற்றி நின்று அனைவரும் வாழ்த்துப்பாடல் பாடும் போது எங்கு அல்லது யாரைப் பார்க்க வேண்டும் என்று புரிவதே இல்லை. இது போன்றே ஏராளமான சூழல்களைக் குறிப்பிடலாம்…. குடும்ப விசேஷங்களில் ‘என்னைக் கவனிக்கவில்லை…’, ‘சரியாக அழைக்கவில்லை (எனில் எதற்கு வருகிறார்கள்?!)…’, ‘என்னை மதிக்கவில்லை….(மிதிக்கவில்லை என்று நிம்மதி கொள்வதுதானே!)’, ‘எனக்கான மாரியாதையைச் செய்யவில்லை…(அப்போதாவது அவர்களது இடம் என்ன என்ற உண்மை விளங்க வேண்டாமா?)’, ‘ஏற்பாடுகள் ஏற்புடையதாய் இல்லை… என்னைக் கேட்டிருக்கலாம்’ என்று அடுத்த பிரசங்கத்திற்கான முன்னுரையை வாசிப்பார்கள்.

உடை, நகை, ஒப்பனை…. (‘ஒப்பனை செய்தால் இன்னும் அழகாகத் தெரிவாய்’ எனத் தொடங்கி ‘ஒப்பனை செய்துகொண்டால் மட்டுமே நன்றாக இருப்பாய்’ என வந்து நிற்கும் இந்தக் கருத்தியல் வன்முறை உவப்பானதாக இல்லை!) இன்னும் பல அற்புதமான (ஒழுங்காக வாசிக்கவும்… ‘அற்பமான’ இல்லை, அற்புதமான!) லௌகீக(!) விஷயங்களில், இவற்றைக் காட்டிலும் உருப்படியானது வாசிப்பு உலகம் என்று மாயையில்(!) உழல்பவர்களை வம்படியாகப் பிடித்து வைத்துத் தங்களுடனான தேவையில்லாத ஒப்பீடுகளில் ஈடுபடுவதை அதிகப் பிரசங்கித்தனம் என்று கொச்சைப்படுத்துவது கொரோனாவை வரவழைக்கும்.           

            தாங்கள் மிகவும் சுவாரஸ்யமாகவும் அறிவாகவும் பேசுவதாக நம்பிக் கொண்டிருக்கும் இந்தப் பிரசங்கிகளுக்கு நமது ஆழ்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு…… வாங்க இப்போவாவது ஒரே ஓட்டமா திரும்பிப் பாக்காம ஓடிருவோம்!

- சோம.அழகு