திராவிட இயக்கம் கடந்த 100 ஆண்டுகளாக சாதி ஒழிப்புக்காக பேசி வந்திருக்கிறது, போராடி இருக்கிறது. சாதி ஒழிக்கப்பட்டு விட்டதா? இல்லையே... பின், திராவிட இயக்கம் சாதித்தது என்ன?

"ஆணுக்குப் பெண் சமமானவள் அல்ல. பெண் படிக்கக் கூடாது, ஆணுக்கு சேவை செய்வதே பெண்ணின் பிறப்புக் கடமை" என ஆர்.எஸ்.எஸ் மோகன் பகவத் பேசினால், அவரது தொண்டர்கள், இந்துத்துவ ஆதரவாளர்கள், பெண்கள் உள்பட மோகன் பகவத் பேசியதை ஆதரிப்பார்கள். சொன்னது சரி தான், அது தான் நம் பண்பாடு என நீட்டி முழங்குவார்கள்.

justice party leadersபெண் இரட்டைக் குழந்தை பெற்றால், அவளின் மார்பகம் குழந்தையைப் பொறுத்து வெவ்வேறு விதமான பால் சுரக்கும் என இந்து மத குரு ஜக்கி வாசு தேவ் பேசினால், அவரின் தொண்டர்கள் அதை கேள்விக்கு உள்ளாக்க மாட்டார்கள். அவர்கள் மருத்துவர்களாக இருந்தாலும் கூட, அது தொடர்பாக அறிவியல் அறிவு கொண்டவர்களாக இருந்தாலும் கூட ஜக்கியின் கருத்து அறிவியல் பூர்வமானதா என யோசிக்க மாட்டார்கள்.

இஸ்லாமியர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் அல்ல. அவர்களைப் பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என பாஜக அமைச்சர்பேசினால், அடுத்த நொடியே பாஐக தொண்டர்கள் அமைச்சர் பேசியதை செயல்படுத்தத் தொடங்கி விடுவர். இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்பைக் கக்கத் துவங்கி விடுவர். அறிவியல் பார்வையோ, தர்க்கமோ, கேள்வி கேட்கும் மனப்பாங்கோ, ஜனநாயகத் தன்மையோ துளியேனும் இருக்காது.

சாதி நல்லது, அதைப் படைத்தது கடவுள். சாதிப் பிரிவினை மனிதகுல வளர்ச்சிக்கு உகந்தது. அதனால் தான் கடவுள் அதைப் படைத்திருக்கிறார் என்று இன்று சொன்னாலும், அதை நம்பக்கூடியவர்கள் தான் நம்மில் பெரும்பாலானோர். இதுகாறும் அதை நம்பியவர்கள் தானே நாம். எதிர்த்து கேள்வி கேட்டவர் எவர்?

சாதியை உருவாக்கியது கடவுளாக இருப்பினும் அதை எதிர்ப்பேன் என்று ஈட்டிக்கு தன் நெஞ்சைக் காட்டியது திராவிட இயக்கம்.

சாதி என்பது மன நோய் என்றார் அண்ணல் அம்பேத்கர். சாதி ஒழிப்பு பல களங்களில் நடைபெற வேண்டுமென்றர். சட்ட நடைமுறைகளில், அரசியலில், சமூகத்தில், அதிகாரப் பகிர்வில், திருமண முறைகளில், குழந்தை வளர்ப்பில், தனி மனித வாழ்வில்,... என பல்வேறு முனைகளில் போரிட்டால் ஒழிய சாதியை ஒழித்திட இயலாது.

சாதியினால் பயன் அடைபவர்களும் சாதியினால் பாதிக்கப்படுபவரோடு இணைந்து சாதிக்கு எதிராக பயணப்பட்டால் ஒழிய சாதி ஒழியாது.

சாதி ஒழிய வேண்டுமெனில், அதற்கான முன் நிபந்தனை மனமாற்றம் ஏற்பட வேண்டும். யாருக்கு மனமாற்றம் ஏற்பட வேண்டும்? சாதியைப் பாதுகாப்பவர் தொடங்கி சாதியினால் பாதிக்கப்படுபவர் வரை மனமாற்றம் ஏற்பட வேண்டும்.

இந்த மனமாற்றத்தைத் துவக்கியது தான் திராவிட இயக்கத்தின் சாதனை. பல ஆயிரம் ஆண்டுகாலமாய் நடைபெறாத மனமாற்றத்தைக் கடந்த 100 ஆண்டுகளாய் நடத்திக் காட்டியது தான் திராவிட இயக்கத்தின் சாதனை.

சாதி என்ற மனநோய் ஆதிக்க சாதியினருக்கும் உண்டு. பார்ப்பனருக்கு உண்டு. சாதியினால் பாதிக்கப்பட்டோர்க்கும் உண்டு. திராவிட இயக்கத் தலைவர்களுக்கும் உண்டு. திராவிட இயக்கத் தொண்டருக்கும் உண்டு.

சாதி எனும் மனநோய் இருப்பதால் தான் திராவிட இயக்கத் தலைவரான வைகோ, மற்றொரு திராவிட இயக்க தலைவரான கலைஞர் கருணாநிதியை சாதிய ரீதியாக விமர்சனம் செய்தார். சாதி எனும் மனநோய் இருப்பதால் தான் வைகோவால், அவர் வீட்டில் வேலை செய்த தாழ்த்தப்பட்ட சாதித் தொழிலாளியை "அவன்" என்று ஒருமையில் லட்சக்கணக்கான மக்கள் பார்க்கும் தொலைக்காட்சியில் பேச முடிகிறது. அதைத் தொலைக்காட்சியில் பார்த்த லட்சக்கணக்கான மக்களுக்கும் சாதி எனும் மனநோய் இருப்பதால் தான் அவர் சொன்னது தவறு என யாருக்கும் உரைக்கவில்லை.

ஆர்.எஸ்.பாரதியைக் கண்டிக்கிறேன் என்ற பேர்வழிகள் கலைஞர் கருணாநிதியைச் சின்ன மேளம் என்றும், ஊர் ஊராகத் தவில் அடித்தவர் என்றும், தேவதாசியாக இருந்தவர்கள் என்றும் ஒப்பிட்டுப் பேச முயல்பவர்கள், அவர்கள் அறியாமலே ஆர்.எஸ்.பாரதியைக் கண்டிக்கிறேன் என்ற வகையில் கலைஞர் கருணாநிதியை அவர் பிறந்த சாதி கொண்டும், தொழில் கொண்டும் இழிவுபடுத்த முனைய முற்படுகையில், இழிவுபடுத்தப் படுத்தப்படுவது கலைஞர் கருணாநிதி அல்ல, நான் தாம், நாம் தான் என்பதை அறியாமல் இருக்கிறார்களே, அது தான் மன நோயின் அறிகுறி.

ஆர்.எஸ்.பாரதிக்கும் சாதியுணர்வு உண்டு. அதனால் தான் திராவிட இயக்கம் தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பிச்சை போட்டது என ஆர்.எஸ்.பாரதியால் பேச முடிகிறது. ஆனால் பிச்சை எனப் பேச முடிந்த ஆர்.எஸ்.பாரதியால் அந்தக் கருத்தில் நிலைத்து நிற்க இயலவில்லை. தவறாய் பேசிவிட்டேன், வருந்துகிறேன் எனப் பின்வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டது.

இந்த நிர்ப்பந்தம் வெளியில் இருந்து வரவில்லை. திராவிட இயக்கத்தின் உள்ளே இருந்து வந்தது. எந்தத் தொண்டன் ஆர்.எஸ்.பாரதிக்கு ஓட்டு போட்டானோ அந்தத் தொண்டனிடம் இருந்து நிர்ப்பந்தம் வந்தது. யாரும் ஆர்.எஸ்.பாரதி வீட்டு முன் போய் போராடவில்லை. திமுக தலைமையோ, திராவிட இயக்கத் தலைவர்களோ ஆர்.எஸ்.பாரதியை வெளிப்படையாகக் கண்டிக்கவில்லை, மன்னிப்பு கேள், சொன்ன கருத்தைத் திரும்பப் பெறு எனச் சொல்லவில்லை.

இருப்பினும் ஆர்.எஸ்.பாரதி மன்னிப்பு கேட்டார். தொண்டர்களின் நிர்ப்பந்தம். சமூக வலைத் தளங்களில் ஆர்.எஸ்.பாரதியைக் கண்டித்தவர்களில் பெரும்பாலானோர் திராவிட இயக்க அடிமட்ட செயல்பாட்டாளர்கள். தலைமைப் பொறுப்பில் இருப்பவர் பேசினாலும் அது தவறெனில் அதைக் கண்டிக்கும் உரிமையைக் கற்றுக் கொடுத்தது.

இதைத்தான் திராவிட இயக்கம் சாதித்தது. ஜனநாயகப் பண்பை, கேள்வி கேட்கும் உரிமையை கற்றுக் கொடுத்தது தான் திராவிட இயக்கத்தின் சாதனை.

பேசிய அவருக்கே தெரியும் தான் பேசியது தவறென. சாதி என்ற மனநோயால் அவர் பாதிக்கப்பட்டு இருப்பதால்அவர் அப்படிப் பேசிவிட்டார். ஆர்.எஸ்.பாரதி போல் ஒரு பாஜக தலைவர் பேசி இருந்தால் என்ன நடந்திருக்கும்? தான் தவறாகப் பேசி விட்டேன் என அவர் மன்னிப்பு கேட்டு இருப்பாரா? அல்லது ஆர்.எஸ்.பாரதியை திராவிட இயக்கத்தவர் கண்டித்ததுபோல் பாஜக தொண்டர்கள் கண்டித்து இருப்பார்களா? இல்லவே இல்லை. மாறாக, தலைவர் பேசியது சரி எனத் தலை ஆட்டி இருப்பர். மலம் அள்ளும் தொழில் கடவுள் கொடுத்த வரம் எனப் பேசியவர்தானே இந்த நாட்டின் தேசத் தந்தை.

தாழ்த்தப்பட்ட மக்கள் மலம் அள்ளுவதைச் செய்வதை, இந்த (இந்து) சமூகத்தின் மற்றும் கடவுளின் மகிழ்ச்சிக்காகச் செய்யும் கடமையாகக் கருத வேண்டும். இதை கடவுளுக்குச் செய்யும் சேவையாகக் கருதி ஆனந்தத்துடன் செய்ய வேண்டும் என்றெல்லாம் உபதேசம் செய்தவர்தானே இந்த நாட்டின் தற்போதைய பிரதமர். அவர் சொன்னதை எதிர்த்து கேள்வி கேட்டவர்களில் அவர் கட்சியைச் சார்ந்த தொண்டர்கள் அடங்குவார்களா? மாறாக அவர் கட்சியினர் மோடி சொன்னதை ஏற்றுக் கொண்டனர். அதைத் தொழில் என்று சொல்லவே நா கூசுகிறது நமக்கு. மலம் அள்ளுவது தொழில் என்றால், மலம் அள்ளுபவர் தொழிலாளி எனவும், மலம் கழிப்பவர் முதலாளி எனவும் சொல்ல முடியுமா?

இதே கருத்தைத் திராவிட இயக்கத் தலைவர் சொல்லிவிட முடியுமா? சொல்லிவிட்டு அவர் தன்னைத் திராவிட இயக்கத் தலைவர் எனச் சொல்லிக் கொள்ள முடியுமா? இந்த மனமாற்றத்தை ஏற்படுத்தியதுதான் திராவிட இயக்க சாதனை.

அப்படி எனில் திராவிட இயக்கம் சாதியை முற்றிலும் ஒழித்து விட்டதா எனக் கேள்வி எழும். ஆம் என்று சொன்னால், பொய் சொன்ன குற்றத்திற்கு உள்ளாவேன். திராவிட இயக்கம் கற்றுக் கொடுத்த கேள்வி கேட்கும் அறிவை இழந்தவன் ஆகி விடுவேன்.

1935 இல் அம்பேத்கர் எழுதுகிறார், "இன்றைக்கும் சாதிக்கு ஆதரவாளர்கள் இருப்பது பரிதாபத்திற்கு உரியது, சாதியை ஆதரிப்பவர்கள் பல்வேறு காரணங்களுக்காக ஆதரிக்கின்றனர். சாதியைத் தொழில் அடிப்படையிலான பிரிவு என ஆதரிப்போர் உண்டு. இனம், குலம் என ஆதரிக்கப் பல காரணங்கள் சொன்னாலும் அவை அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றது. சாதி பொதுக்கருத்தை, பொது உணர்வைக் கொன்றுவிட்டது."

இந்துக்களுக்குச் சாதி தான் பொதுக்கருத்து, பொது உணர்வு, விசுவாசம் அனைத்துமே. விசுவாசத்தை, தர்க்கத்தை, பொதுக் கருத்தை, பொது உணர்வைக் கொன்ற சாதியைக் கொல்ல அம்பேத்கர் மனமாற்றத்தைப் பின்வருமாறு பரிந்துரைக்கிறார்.

Caste is not a physical object like a wall of bricks or a line of barbed wire which prevents the Hindus from co-mingling and which has, therefore, to be pulled down. Caste is a notion; it is a state of the mind. The destruction of Caste does not therefore mean the destruction of a physical barrier. It means a notional change.

சாதி செங்கற்களால் கட்டப்பட்ட சுவர் அல்ல. சாதி என்பது கருத்து. சாதி என்பது மனநிலை. சாதி என்பது மனநோய். சாதி ஒழிப்பு என்பது மன மாற்றம் - அம்பேத்கர்

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆசிட் தியாகராசனை தனக்குச் சமமாக மதித்து, உட்கார வைத்த சேர்வை சமூகத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டருக்கு வந்ததே அந்த மனமாற்றம் தான் அண்ணல் அம்பேத்கர் பரிந்துரைத்த சாதியை ஒழிக்கும் வழி.

இது தான் திராவிட இயக்கம் கடந்த நூறாண்டுகளில் சாதித்த சாதனை. இந்த சாதனை தொடக்கம் தான். சாதி என்ற கருத்தாக்கம் ஒழியும் வரை திராவிட இயக்கம் ஓயாது

பாறை புயற்காற்றுக்கும் அசைந்து கொடுப்பதில்லை. அதுபோல அறிவாளியும், புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் அசைந்து கொடுக்க மாட்டான் என்ற புத்தர் வழியில், இகழ்ச்சிக்கும் புகழ்ச்சிக்கும் அஞ்சாது சாதி என்னும் வக்கிரத்தை எதிர்த்து அது ஒழியும் வரை திராவிட இயக்கம் போரிடும். சாதிக்கு எதிரான மனமாற்றத்தைத் தொடங்கி வைத்து கோடான கோடி மக்கள் மனத்தில் ஆழப் பதிந்தவர் தந்தை பெரியார். அதைத் தொடர்கிறது திராவிட இயக்கம்

- சு.விஜயபாஸ்கர்

Pin It